சோம.அழகு
எனக்கு முந்தைய தலைமுறையினரை ஆச்சி தாத்தா ‘எப்படி கொஞ்சியிருப்பார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் சித்தப்பாக்களிடமும் மாமாக்களிடமும் கேட்டேன். “புஜ்ஜிமாவாது…..மண்ணாவது…….ஒங்க தாத்தா ஆரம்பிக்கும் போதே, ‘ஓல வெளக்குமாரால சாத்துவேன்….ராஸ்கல்’ னு தான் ஆரம்பிப்பா….. கொஞ்சுனாங்களாம்! ம்கும்….” – நடராஜன் சித்தப்பா. “இப்போவே நாக்குல எச்சி ஊறுதே….. அந்த வாழக்காய சீவி பஜ்ஜிமாவுல போட்டு…..”- உணவு ரசிகர் நடராஜன் மாமா. “பஜ்ஜிமாவு இல்ல மாமா….புஜ்ஜிமா” என்று தெளிவுபடுத்த, “சின்ன புள்ளைல ஒரு நாள் நானும் அண்ணனும் மாடியில யாருக்கும் தெரியாம முட்டை பூர்ஜி சாப்டுட்டு இருந்தோமா…..உன் அம்மா வந்துட்டா….அடை தோசைனு ஏமாத்தி அவளையும் சாப்பிட வச்சோம்”- பூமிநாதன் மாமா. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!!!!!! இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.
குழந்தையைக் கொஞ்சுவதற்கென்று இது போன்ற வார்த்தைகளை எங்கேய்யா புடிக்கிறீங்க? இவ்வாறாகக் குழந்தைகளைக் கொஞ்சுகையில் அனைவரின் உள்ளும் உறங்கும் பல குரல் மன்னனைக் காணலாம். குழந்தை வளர்ப்புக்கான பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படும் முதல் வார்த்தையே இதுதான் போல! புஜ்ஜிமா – சங்க கால இலக்கியங்கள் எவற்றிலும் இவ்வார்த்தை இருக்க வாய்ப்பில்லை என்பதால் ‘கூகுள்’ செய்தேன். ‘முட்டை புஜ்ஜிமா – சமையல் குறிப்பு’ என்று ஒரு வலைப்பக்கம் வெறுப்பேற்ற சொல்லாராய்ச்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு ‘புஜ்ஜிமா’க்கள் மற்றும் உறவினர்கள் படும் அவஸ்தையை ஆராயத் தொடங்கினேன்.
எட்டு மாதத்தில் குழந்தை, “அம்ம்ம்மா…..அப்ப்ப்பா….அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவீஈஈஈ…” என்று பாடவில்லையெனில் Speech Therapyதான். ஒரு வயதில் ஒரு வழியாகத் தத்தித்தத்தி நாக்கு சுழல ஆரம்பித்துவிட்டது என கண்டுபிடித்ததுதான் தாமதம், பேச்சுப் பயிற்சிக்காகவும் உறவினர்களிடம் பீற்றுவதற்காகவும் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ள திருக்குறள் ‘கடவுள் வாழ்த்து’, ஆத்திச்சூடி, ரைம்ஸ் ஆகியவை எழுத்தாணியால் நாக்கின் மூலம் மூளைக்கு ஏற்றப்படும். இரண்டாம் வயதில் குழந்தையின் விரல் தசைகளுக்குப் பொருட்களைப் பிடித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்குமா இருக்காதா போன்ற தேவையில்லாத அறிவியலெல்லாம் எதற்கு? கையில் பேனாவைத் திணித்து A (கவனிக்க! ‘அ’ இல்லை! ‘A’ !) எழுத வைத்துவிட்டால் ராக்கெட் சயன்ஸின் முதல் படியில் அடி எடுத்து வைத்தாகிவிட்டது ! பிள்ளைக்கு இரண்டேகால் வயசாச்சு! பெத்தவங்களா கொஞ்சம் பொறுப்பா இருங்க ! ப்ளே ஸ்கூல் எல்லாம் உங்களை நம்பித்தானே திறக்கப்பட்டிருக்கிறது.
மழலைகளின் உறவினர்களில் என்னைப் போன்ற சில பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் நிலையை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்வது நாளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும்.
நான்கு ஐந்து பிள்ளை பெற்றவர்களெல்லாம் அதனதன் போக்கில் வளர விட்டு அமைதியாய் இருந்தார்கள். ஒன்று இரண்டைப் பெற்றுக் கொண்டு இவர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே! அய்யோயோயோயோ…..!
தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் அறிவு, குறும்பு, வளர்ச்சி என ஒவ்வொன்றையும் ரசித்து வியக்கவும் மகிழவும் பெற்றோருக்கும் ஆச்சி- தாத்தாவுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், பொசுக்கென்று, “நீயும் உருகி உருகி ரசிக்கத்தான் வேண்டும்” என்று நிர்பந்திக்கிறார்கள். ‘நிர்பந்தம்’ என்ற வார்த்தையைச் சற்று மிகையாக நினைப்பவர்கள் தொடர்ந்து வாசித்தால் இவ்வார்த்தை மிகவும் மென்மையானதாகவும் சிறியதாகவும் இருப்பதை உணர்வார்கள்.
“சாயங்காலம் 5 மணியாச்சுன்னா போன்ல அவ தாத்தாகிட்டயும் அப்பாகிட்டயும் எங்களப் பத்தி ஒரே கம்ப்ளெய்ன்ட்தான்” – தனது 6 மாதப் பேத்தியைப் பற்றி அத்தை கூறியது. “அப்படியா? இப்போவேவா? பேச ஆரம்பிச்சுட்டாளா? அப்படி என்ன சொல்றா?” நான் கேட்க, “அது……தாத்தாவும் பேத்தியும் பேசுறது அவங்களுக்கு மட்டும்தான் புரியும்” என்று சமாளித்து நழுவினாள். இயல்பாக விட்டால் நாம் அனைவருமே குழந்தைகளின் மழலையை ரசிப்போம். ஆனால், ‘கா’, ‘ஊ’, ‘ஞே’ சத்தத்திற்கெல்லாம் தேவையில்லாமல் கோனார் உரை போட்டுக் கடுப்பேற்றுகிறார்கள் மை லார்டு!
“புஜ்ஜீ……’A’ போட்டுக் காமி…..அவங்க உன்ன Good girl சொல்வாங்க (நாம் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்கான ஆணை இது!) வா…..அம்லு…” என அண்ணி என் முன் கார்டூன் ஒட்ட, குத்துமதிப்பாக மூன்று கோடுகளை வரைந்து விட்டு ஓடினாள் வர்ஷினி குட்டி. அந்தக் கோடுகளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்த்தால் ‘A’ கிடைக்கும் என நான் போராடிக் கொண்டிருக்க…. “சமத்து!” என்று அவளை வாரி அணைத்து முத்தமிட்டு, என்னிடம் “அவ செம sharp. டக்குனு pickup பண்ணிருவா” என்று அண்ணி பெருமிதம் பொங்கக் கூற, “ஹி…ஹி….” என வேண்டா வெறுப்பாக வாய் வலிக்க சிரித்து வைத்தேன். நிஜமாகவே அந்த நிமிடம் எனது வாயைச் சுற்றி உள்ள தசைகள் என் பேச்சு கேட்கவே மாட்டேன் என்றது. மூளை ‘சிரித்துத் தொலை’ என்று சொல்ல, முகத்தசைகள் என் மனதுடன் சேர்ந்து கொண்டு ஒத்துழையாமை போராட்டம் நடத்தியது.
Pre.K.G படிக்கும் தனது பேரனின் கலரிங் புக்கைப் பெருமிதத்தோடு காண்பித்துக் கொண்டிருந்தார் பெரியப்பா. தனது பால்யத்தைத் தொலைக்க வைக்கும் பெற்றோர், பள்ளி மற்றும் சமூகத்தின் மீதான கொலைவெறி அப்பக்கத்தில் ரத்தக்கறையாய் படிந்திருப்பது போலத் தோன்றியது எனக்கு. சிவப்பு க்ரேயானைக் கொண்டு அவன் கோபத்தைக் கிறுக்கலாகக் காட்டியிருந்தான். அது ஆப்பிள் என்று பெரியப்பா சொல்லித்தான் தெரிந்தது. வரைகோடுகளையோ எல்லைக்கோடுகளையோ அவன் மதித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை வளர்ந்த பிறகு தனது கனவின் எல்லைகள் பிறரால் நிர்ணயிக்கப்படப் போவதை உணர்ந்த வெறுப்பாக இருக்குமோ? இப்படியாக ஐம்பது பக்கங்கள். யானை, கரடி, மான், ஆலமரம், பட்டம் என ஒவ்வொரு பக்கத்திற்கும் பெரிய மனதுடன் இந்த அறிவிலிக்கு (நாந்தேன்!) விளக்கம் தந்துகொண்டிருந்தார்கள் பெரியப்பா. அது மட்டுமல்லாது, ‘மார்டன் ஆர்ட்’ ஓவியங்களுக்குத் தரும் விளக்கம் போல அவன் எந்தச் சூழ்நிலையில், எவ்வளவு நேரத்தில், என்ன மனநிலையில் அவற்றைப் படைத்தான்(!) என அக்கறையாகப் புளி போட்டார். அவன் வாங்கிய முதல் ‘Very Good’ க்கு ஐபேக்கோ ஐஸ்கிரீம் கேக் வாங்கிக் கொண்டாடியதை நினைவுகூர்ந்து பூரித்தார். “ஆப்பிளுக்கு அவன் பயன்படுத்தியிருக்கும் சிவப்பு நிறம் அவன் மனதினுள் புதைந்து கிடக்கும் பொதுவுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு…..ஒரு குட்டி மார்க்ஸ் தெரியுராருல்ல…” – இப்படிச் சொல்லிவிடுவாரோ எனப் பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்.
குழந்தைகளுக்கும் நம்மைப் போல் தலைக்கு மேல் வேலை இருக்கின்றன. பொம்மைக்குத் தலை வாருவது, உடை மாற்றுவது, குதிரை பொம்மைக்கும் யானை பொம்மைக்கும் நடக்கும் சண்டைக்கு நடுவராவது, செப்புச் சாமான்களில் சமைத்ததை அவர்களது கண்களுக்கு மட்டுமே தெரியும் விருந்தினர்களுக்குப் பரிமாறுவது – இப்படி ஏகப்பட்ட வேலைகள். அவர்களைப் பிடித்துக் கொணர்ந்து நம்முன் நிறுத்தி வக்கிரமான வரிகளுக்கு ஆட/பாட சொல்லும் செல்ல வன்முறைகளெல்லாம் இ.பி.கோ. வில் வராதா? க(கொ)டுமையான பயிற்சியின் பின் தொலைக்காட்சியில் தோன்றும் குழந்தைகள் அல்லாது உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் இருக்கும் உறவினர்களின் இரண்டரை வயது குழந்தையைப் பொறுத்தமட்டில்……..பாடுவது என்றால் பாடல்வரிகளை மூச்சு வாங்கியபடியே ஒப்பிப்பது; ஆடுவது என்றால் பாடலின் 5 நிமிடங்களுக்கும் ஒரே நடன அசைவுடன் அரங்கேற்றம் செய்வது, என்று பிள்ளைத்தமிழ் இலக்கணம் வரையறுக்கின்றது.
“ம்ம்ம்….சூப்பரா பண்றாளே குழந்தை….” என்று ஒப்புக்காகக் கஷ்டப்பட்டு பாராட்டுவதாயினும் ஒற்றை வரியில் முடித்தால் கலையையும் குழந்தையையும் ரசிக்கத் தெரியாத ஜடமாக முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது. எனவே, “சரணத்துல சரஸ்வதியையே வீணை வாசிக்க வச்சுட்டாளே….சமத்து” என அனைத்து ரியாலிட்டி ஷோ தெய்வங்களையும் துணைக்கு அழைக்க வேண்டும்.
இக்காலத்துச் சுட்டிகள் நிரம்பத் திறமையுடையவர்கள்; அவர்களை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் வேண்டும். ஆனால் தற்காலத்தின் அளவுக்கு மீறிய கவனிப்பு சரியானதா எனத் தெரியவில்லை.
சற்றே கூன் விழுந்த முதுகும் காதில் பாம்படமுமாய் கால்கள் நீட்டி நிலவில் அமர்ந்து வடை சுடும் பாட்டியைப் பார்த்து , “ அய்யே ! அது பாட்டியுமில்ல…..வடயுமில்ல. Moon ல இருந்த volcanoவுல உள்ள lava cool ஆகி solid ஆனதுக்கப்புறம் உள்ள impact. அது பேரு Maria…” என 7 வயதுக் குழந்தை விளக்கும்போது சத்தியமாக என்னால் ரசிக்க இயலவில்லை. 10 வயது வரை அந்த நிழல், வடை சுடும் பாட்டியாகத்தானே தெரிய வேண்டும். பிள்ளைகள் அறிவாளிகளாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் வளர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அந்த புத்திசாலித்தனத்திற்கு விலையாகக் குழந்தைமையைக் கேட்பதுதான் தவறு. 7 வயதில் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்காவிட்டால் இன்னும் 2 மணி நேரத்தில் நடக்க இருக்கும் நாசா கருத்தரங்கில் குழந்தையால் சிறப்புரை ஆற்ற முடியாமல் போய்விடுமா ?
மயிலிறகு குட்டி போடும், ஒரு முறை முட்டினால் கொம்பு முளைக்கும், வெற்றிலை போட்டால் மாடு முட்டும், நகத்தில் பூ விழுந்தால் புதுத்துணி கிடைக்கும், விழுந்த பல்லைப் புதைத்து வைத்தால் பல் மரம் முளைக்கும்……..என இவற்றையெல்லாம் நம்பாமல் குழந்தைப் பருவம் எவ்வாறு முழுமை பெறும்? சில அதிமேதாவிகள் பல் மரத்திற்குப் பதிலாகக் குழந்தைக்கு Tooth Fairyயையும் மரப்பாச்சிக்குப் பதிலாக Barbieயையும் அறிமுகப்படுத்துவார்கள். களியையும் கடலைமிட்டாயையும் அந்நியமாக்கி குழந்தைகளை Dark Choclate with nutsஐ சப்புக் கொட்ட வைக்கிறோம். ‘கிழக்கு’ என்று கூட ஒரு திசை உண்டு என்பதைத் தங்களுக்குப் பணிவன்புடன் நினைவுபடுத்திக் கொள்கிறேன். உச்சிக்குடும்பனும் உளுவத்தலையனும் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுவது என்று நிறுத்தப்பட்டதோ அன்றே அவர்களின் குழந்தைமையைச் சிதைக்கும் ‘நற்பணி’ துவங்கிவிட்டது.
பிள்ளைகள் வயதுக்கு மீறி பெரியத்தனமாகப் பேசுவதை “விவரம் ஜாஸ்தி…” என ஒற்றை வரியில் கடந்து விடுகிறோம். இப்படிப்பட்ட அதிமேதாவிச் சமர்த்தர்களைப் பெற்றதில் பெற்றோருக்குத் தாங்க முடியாத பெருமை வேறு ! மனதாரச் சொல்லுங்கள்….இந்த அதிகப்பிரசங்கித்தனத்தை ரசிக்க முடிகிறதா ? சுட்டியின் குறும்புகள் என நினைத்து பெற்றோர் கூறுவது பெரும்பாலும் சகிக்கவே முடியாதவையாக இருக்கும். முன்னெல்லாம் உறவினர் வீட்டிலிருந்து கிளம்பும்போது பெற்றோர் குழந்தைகளிடம் ,”வீட்டுக்கு வாங்க னு சொல்லு…” என்று சொல்லிக் கொடுக்க, குழந்தைகளும் மழலை மாறாது “வீத்துக்கு வாங்க…” என்று குயிற்றும். இப்போதோ, “ இவங்க எதுக்கு வன்னும் ? இது என் வீது…” என்று மழலை மாறுவதற்கு முன்பே திமிருகிறார்கள். இதில் என்ன கூத்து என்றால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தோ ஆத்திரப்பட்டோ கடிந்து கொள்ளாமல், அதை ரசித்து ரசித்து சிரித்துத் தொலைக்கிறார்கள். கடந்த தலைமுறையினருக்கெல்லாம் இந்தத் திமிர்ப் பேச்சுக்கு நிச்சயம் வாரியலடி கிட்டியிருக்கும்.
குழந்தைகள் கூடி விளையாடுவதில் உள்ள அழகே தனிதான். இப்போது எங்கே விளையாடுகிறார்கள்? 5 மணிக்குப் பள்ளிப் பேருந்தில் தூங்கிக்கொண்டே செல்லும் குழந்தைகளைப் பார்க்கும்போது பரிதாபத்தையும் தாண்டி வயிற்றெரிச்சல் உண்டாகிறது. சமூகத்தின் மீது எரிச்சல் வருகிறது. பிள்ளைகளைச் சக்கையாகப் பிழிந்து இவ்வளவு அசதியாக்கும் பள்ளிகளின் மீது கோபமும் பாடத்திட்டத்தின் மீது வெறுப்பும் ஏற்படுகிறது. விடுமுறை நாட்களில் இப்பிள்ளைகள் விளையாடும் அழகைப் பார்க்க வேண்டுமே ! வீட்டில் ஒரு எலிப்பொந்தைத் தேர்வு செய்து மடிக்கணிணியுடன் உள்நுழையும் பிள்ளைகள் சாப்பாட்டிற்கு மட்டுமே வெளியே வருவார்கள்.
இவ்வாறான சிந்தனைகள் தோன்றுவதற்கு 50 வயதிற்கு மேல் ஆகவேண்டும் என எண்ண வேண்டாம். 25 வயது என்றால் Tablet, ipo/ad, Instagram போன்ற தண்டக் கருமாந்திரத்தையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு தலைமுறை இடைவெளி எனப் பிதற்ற வேண்டுமா என்ன ?
- சோம.அழகு
- அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
- அசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி
- சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது
- உயிரோட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5
- புஜ்ஜிம்மா…….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
- தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
- தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்
- சமையல்காரி
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
- அம்பலம்