செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்

This entry is part 3 of 14 in the series 30 ஏப்ரல் 2017

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி), புதுக்கோட்டை

ஓர் உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதே சுற்றுச் சூழல் எனலாம். அது காற்று, ஒலி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற உயிரினங்களையும் அந்த உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகளையும் உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை இருவகைப்படுத்தலாம். அவையாவன : 1. இயற்கைச் சுற்றுச்சூழல் 2. மனிதன் உருவாக்கிய சுற்றுச்சூழல் என்பனவாகும்.
இயற்கைச் சுற்றுச் சூழலில் நீர், நிலம், வானம், உயிரினத் தொகுதிகள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை இடைவிடாது இயங்குவதால் மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

மனிதன் உருவாக்கிய சுற்றுசூழல்களை மூவகைப்படுத்தலாம். அவையாவன,

1. மனிதக் குழுமக் கூறுகள் (மதம், இனம், மொழி உள்ளிட்டவை மனிதக் குழுமக் கூறுகளாகும்.)

2. கட்டுமானக் கூறுகள் (கிராமங்கள், நகரங்கள், சாலைகள், தொடர்வண்டி, இருப்புப் பாதைகள் போன்றவை கட்டுமானக் கூறுகளாகும்.)

3. நிறுவனத் தொகுதிக் கூறுகள் (பொருள் உற்பத்தி செய்யப்படும் விவசாயம், தொழிற்சாலை சார;ந்த பொருள் உற்பத்திக் கூறுகளும் கல்வி, வாணிபம் போன்றவையும் நிறுவனத் தொகுதிக் கூறுகளாகும்.) என்பனவாகும். இச்சுற்றுச்சூழல் குறித்த பல்வேறுவிதமான பதிவுகள் செவ்விலக்கியங்களில் காணப்படுகின்றன.

தொல்காப்பியத்தில் சுற்றுச்சூழல்

உலகில் தோன்றும் அனைத்துவகைப் பொருள்களுக்கும் நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து அமையும். உலகினை நிலமாகவும், அதைச் சார்ந்து அமையும் வளிமண்டலத்தை ஆகாயமாகவும் அதைத் தழுவி வருவதைக் காற்றாகவும், அதிலிருந்து உருவாவதைத் தீயாகவும் அவற்றிலிருந்து மாறுபட்ட வடிவத்தை நீராகவும் முன்னோர்கள் பகுத்துரைக்கின்றனர். தொல்காப்பியம் இதனை,

‘‘நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’’ (தொல். பொருள்., மரபியல் நூற்பா, 635)

என்று எடுத்தியம்புகின்றது. இதற்கு, ‘‘நிலம் நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீருக்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும்’’ என்றும் ‘‘இயற்கை என்பதனால் செய்து கோடல் பொறாமை அறிந்து கொள்க. நிலம் என்பதனால் பொருள் தோற்றுவதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க’(தொல். இளம்பூரணர் உரை, பக்., 4-9) என்று குறிப்பிடுகிறார;. இன்றைய அறிவியலறிஞர்கள் குறிப்பிடுகின்ற வரையறையை தொல்காப்பியர் எடுத்துரைத்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

நிலம்

உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு அடிப்படையாக விளங்குவது முதற்பொருளாகும். இம்முதற்பொருளை விளக்கவந்த தொல்காப்பியர்,

‘‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’’ (தொல்., பொருள்., அகத்., நூற்பா, 4)

என்று எடுத்துரைக்கின்றார். உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை ஈட்டுவதற்கு அடிப்படையாக விளங்குவது நிலமே ஆகும். ஒரு நாட்டின் அனைத்து வளங்களையும் தீர;மானிப்பது நிலம் என்பதால்தான் தொல்காப்பியர; நிலத்தை முதற்பொருள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலங்களை,

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’(தொல்., பொருள்., அகத்., நூற்பா, 5)

என்று குறிப்பிடுகின்றார்.

வெப்பமாசுபாடு

வெப்ப மாசுபாட்டை, ‘அனல் மாசுபடுதல்’ என்றும் அழைக்கலாம். இம்மாசுபாடு நன்னீர் வாழிடங்களாகிய குளம், ஏரி, ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள கார்பன்டை ஆக்சைடுகளினால் வெப்பநிலை உயர்கிறது. இவ்விளைவு புவி வெப்பமாதல் அல்லது பச்சை வீட்டு விளைவு எனப்படும். அணுக்கரு, எண்ணெய் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் வெப்பத்தைக் குளிரச் செய்வதற்கு நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் இயந்திரங்களிலிருந்து வெதுவெதுப்பான நீர் வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளினால் அனல் மாசுபாடு ஏற்படுகின்றது. வெப்ப மாசுபாட்டினால் வெளியேற்றப்படும் வெது வெதுப்பான நீர்க்கழிவுகளின் நச்சுத்தன்மை நீரில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றது.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் இயல்புக்கு மீறிய வெப்பம் இருக்கின்றது. இந்த வடிகால் நீர் சுத்தப்படுத்தப்படாமல் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்த் தேக்கங்களைச் சென்று அடைகின்றது. வடிகால் நீரில் உள்ள வெப்பநிலை உயர்வதுடன் உயிரினங்களுக்கு கேடு ஏற்பட்டு நீரின் தரமும் பாதிக்கப்படுகின்றது.

காகித ஆலை, மரக்கூழ் ஆலை, சர்க்கரை ஆலை, துணி ஆலை போன்ற தொழிற் கூடங்களில் இயந்திரங்களின் வெப்பத்தைத் தணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நீரானது மீண்டும் 60c முதல் 90c வெப்பநீராக வெளியேறி நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றது.

இத்தகைய வெப்ப மாசுபாட்டால் குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர்வற்றிப் போக அந்நிலம் வறண்ட தன்மையோடு விளங்குவதால் அதனைப் பாலை எனப் பெயரிட்டு ஐந்தாவது ஒரு நிலமாக கணக்கில் கொண்டனர். இங்கு மழை இல்லாததாலும், வெப்பத்தின் அதிகரிப்பால் நிலத்தடி நீர்குறைவதாலும் உண்ண உணவின்றியும், எத்தொழிலையும் செய்வதற்கான வழியின்றியும், தவிக்கும் மக்கள் பிறரிடம் வழிப்பறி செய்து வாழ்ந்துள்ளதாக சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர் ஒழுகிச் சென்று சிறு குழியில் நிரம்பியது, கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றி குழியும் காய்ந்தது. இதனால் நீருண்ண வந்த பெரிய யானை நீர் இல்லாதது கண்டு வருத்தமுற்றுச் சென்றதாகக் கூறுவதை,

“…………………………… பல்வயின்

பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்

நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய

கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி

நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறிது

பெருங்களிறு மிதித்து அடியகத்து“ (அகம் 155: 6-11)

என்னும் அகநானூற்றுப்பாடல் வரிகள் தெளிவுபடுத்துகிறது. அதோடு கோடைக்காலத்து வெப்பத்தின் காரணத்தினால் காடே தன் அழகை இழந்து நிற்பதாக முள்ளியூர்ப் பூதியார் தன்பாடலில் கூறியிருக்கிறார். மேலும்,

“காடுகவின் அழிய உரைஇ, கோடை

நின்றுதின விளிந்த அம்பணை“ (அகம் 173:13-14)

இவ்வரிகள் மூலம் அதனை அறிந்துகொள்ளலாம்.

அதுபோல, கலித்தொகையிலும் காட்டில் நீர் வற்றிப்போய் நிலமே நன்கு வெம்மையுடன் இருப்பதை விளக்குகின்றது ஒருபாடல். அதாவது நீர் அற்ற சுனைகள் உடைய காட்டுவழியில், நீர் உண்ணுதலை விரும்பிய உடல் வருந்தின யானைகள் நீரற்ற வெம்மை உடைய சுனை என்பதை அறியாது, ஒருசேரக் கைகள் பதித்துத் தொட்டுப் பார்த்தன. அப்போது கைகள் சுடப்பட்டு, யானைக்கூட்டங்கள் வெவ்வேறாக மலைச்சாரல் தோறும் ஓடின. இதனை,

“………………………………….அறுசுனை முற்றி

உடங்குநீர் வேட்ட உடம்பு உயங்கு யானை

கடுந்தாம் பதிபு ஆங்குக் கை தெறப்பட்டு

வெறிநிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி“ (கலி.12:3-6)

என்றும், மேலும் பலவகைப்பட்ட வளங்களையும், உணவுகளையும் விளைவித்துக் கொடுத்து, எல்லோரையும் நுகர்விக்கும் பயன்மிக்க நிலம் தற்போது வெப்பத்தால் ஈரத்தன்மை அற்றுப் போகும்படி, குற்றத்தைச் செய்யும் சினத்துடன் ஞாயிறு தன்னுடைய கதிர்களைச் சொரிந்த, மாறுதல் இல்லாத வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், மலை குளிர்ந்திருக்கும் என்று கருதிக் குளிர்ச்சியை விரும்பி, பசிப்பிணியால் வருந்திய பெரிய யானைக்கூட்டங்கள் மலையை நாடித்தங்கின,

ஆனால், சிறந்த மலையும் கூட வெம்மையின் காரணத்தால் வெம்பி, மண்பிளந்து நின்றன, தெளிந்த நீர் நிலைகளும் நீர்வற்றித் துகள் உண்டாகும்படி ஆயின, இங்ஙனம் செறிந்த அழலைச் சொரிகின்ற வெய்யகாடு என்பதனை,

‘‘பல்வளம் பகர்பு ஊட்டும் பயன்நிலம் பைது அற,

செல்கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்

தணிவுஇல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணிகொள்ளும்

பிணிதெறல் உயக்கத்த பெருங்களிற்றினம் தாங்கும்

மணிதிகழ் விறல் மலை வெம்ப, மண்பக

துணிகயம் துகள்பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்’’ (கலி 20:1-6)

என்னும் கலித்தொகைப் பாடல் வரிகள் பாலைநிலத்தினது வெயிலின் கொடுமையை விளக்கியுள்ளது. மேற்கண்ட பாடல்கள் வழி மனிதர;கள் மட்டுமல்ல விலங்குகள்கூட வெப்பத்தால் நன்கு பாதிப்பை அடைவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புவிவெப்பமடைவதனால் ஈரமான பகுதிகள் வறண்ட பகுதிகளாகவும், அதேபோன்று வறண்ட பகுதிகள் ஈரமான பகுதிகளாகவும் மாற்றமடையலாம். படிவு வீழ்ச்சி நிலைமைகளை நோக்குகின்றபோது சுமார் 1960 களிலிருந்து இன்றுவரை பூகோள ரீதியாக அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. வடதென் அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகள், வடஐரோப்பா, வட மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் 1900 – 2005 இற்கும் இடையில் மழைபொழிவின் அளவானது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதேவேளை மத்தியதரைக்கடற் பிராந்தியம், தென்ஆபிரிக்கா, தென் ஆசியாவின் சில பகுதிகள் என்பவற்றில் குறைந்துள்ளது. உலக ரீதியாக 1970 களிலிருந்து வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

வெப்ப மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள் (Control)

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தம் செய்து அதனைக் குளிர்வித்து அதன் தன்மையை மேற்குறித்த கருவிகளைக் கொண்டு அளவீடு செய்து பின்னர் அந்நீரை வெளியேற்றலாம்.

தொழிற்சாலைகளில் வெளியேறும் நீரின் வெப்பத்தை குளிர்க் கோபுரங்கள் (CoolingTowers) மூலம் தணித்து வெளியேற்றலாம். குளிர்க் கோபுர முறை என்பது வடிகால் மூலமாக வெப்பம் மிகுந்த நீரைக் குளிர வைக்கும் முறையாகும். குளிர வைக்கப் பயன்படும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வெப்ப நீரானது அடுத்தடுத்த நீர்வழிப்பாதைக்கு அனுப்பிக் குளிர வைக்கப்படுகின்றது.

குளிர்க் குளங்கள் (Coolingponds)

இம்முறையில் குளிர்நீர்த்தேக்க நிலையின் மீது, செலுத்தப்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வெப்பநீரானது, வெப்பச் சிதறலால் ஆவியாகி வளிமண்டலத்தினைச் சென்று அடைகின்றது. இம்முறை எளிய முறையாகும். தொழிற்சாலைகள், அணு உலைகள் போன்றவற்றின் அருகில் செயற்கை ஏரிகளை (Artificial lakes) உருவாக்கி நீராவியாதல் முறையில் வெப்பம் சிதறடிக்கப்பட்டு வெப்ப மாசுபாடு தடுக்கப்படுகிறது.

பழந்தமிழர்கள் குளங்களை அதிகமாக்கி நீரைத் தேக்கி வெப்பமாசுபாட்டைக் குறைத்தனர். நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதால் நீர் நிலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.

நீரைத் தேக்கும் வழிகள் பற்றிய குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. நீரின் இயல்பானது ‘குழித்துழி நிற்பது’ (நாலடியார்.31) என்பதால், அந்நீரை குழிகள் (குளம்) அமைத்துத்தேக்க வேண்டும். ‘நீரான் அறிப மடுவினை‘ (நான்.80) என்ற பாடல் குளம் அமைத்து தேக்கும் நீர் ஒரு ஆறு உள் அடங்கும் அளவிற்கு இருக்கவேண்டும். (நான்.54) என்றும் நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறது. இதன் மூலம் பழந்தமிழர், குளம் தொட்டு வளம் பெருக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது புலனாகுகிறது.

மேலும், ‘‘நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே’’(புறம்.18.27) ‘‘மடு, குளம் (பெரும்.288, மதுரை.710, குறிஞ்சி.63, மலைபடு.47) “அறையும்பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை தெண்ணீர்ச்சிறுகுளம்….”(புறம்.118) (இப்பாடல் எட்டாம்நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த தோற்றமுடைய கரையுடைய குளம் கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.)

‘நீர்அறம் நன்று நிழல் நன்று‘(சிறுபஞ்சமூலம்.61)

‘‘குளம்தொட்டு காவு”(சோலை) – (பதிற்றுப்பத்து 64)

‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது’ (இனியவை நாற்பது) குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பது அறச்செயல் என்று குறிப்பிடுகிறது.

நீர் உணவுப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. அது மட்டுமின்றித் தானும் ஒரு உணவாகப் பயன்படுகிறது என்கிறார் வள்ளுவர்.

‘‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை’’ (12)

என்ற குறட்பா மேற்காணும் கருத்தினை தெளிவுறுத்துகிறது. உணவாகவும், உணவைத் தயாரிப்பதற்கு அடிப்படையாகவும் நீர் முதன்மையானதாக விளங்குகின்றது. இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்தனர். மழைநீரைச் சேகரிக்கப் பல குளங்களை அமைத்தனர்.

ஆனால் மழைநீரைச் சேமிப்பதோ, ஆறு குளத்தைப் பராமரிப்பதோ இன்றைய பொருளாதார மையமிட்ட உலகில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வர எதிர்காலநிலை அச்சம் தருவதாக மாறிவிட்டது. இப்பின்னணியில்தான் வள்ளுவர் கூறிய, நீரின்றி அமையாது உலகு (20) என்ற கூற்றும், துப்பாயதூஉம் மழை என்ற கூற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்கால சூழலியல் சிந்தனையை எடுத்துரைக்கின்றது.

மேலும் ‘மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு’ (211) என்றும் ‘நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்’ (17) என்றும் மழையின் இன்றியமையாத் தன்மையை வள்ளுவர் பல பாக்களில் குறிப்பிடுகிறார். ஏனெனில், உற்பத்தியாகும் உணவு, மழை மற்றும் நிலத்தின் பயனும் மனித உழைப்பின் கனியுமாகும். ‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று புறநானூறும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் வான்சிறப்பு, உழவு என்ற தலைப்புகளில் தனித்தனி அதிகாரங்கள் படைத்திருக்கிறார். அதிலும் வான் சிறப்பு அதிகாரம் முறை வைப்பில் கடவுள் வாழ்த்தின் பின்னர் வைக்கப்பட்டிருப்பது சிந்தனைக்குரியதாகும். மழை நீர் உலகத்தார்க்கு அமிழ்தம் என்பது வள்ளுவரின் கருத்தாகும். மழைக் காலங்களில் பெய்யும் மிகுதியான மழைநீரை நீர்த் தேக்கங்கள், அணைகள், குளங்கள் போன்றவற்றின் மூலம் சேமித்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். நிலத்தடி நீரின் கொள்ளளவை உயர்த்தியும் நீரைச் சேமிக்கலாம். நீர்வளம் பாதுகாக்கப்படுவதால் வறட்சி ஏற்படாது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

ஆழிப்பேரலைகள் (சுனாமி)

கடற்தளத்தில் ஏற்படும் பூகம்பம், நிலச்சரிவு, எரிமலை ஆகியவற்றால் உருவாகும் தொடர் இராட்சத அலைகளே சுனாமி (ஆழிப்பேரலைகள்)ஆகும்.

சுனாமி என்ற சொல் ஜப்பானிய மொழியில் துறைமுக அலைகள் என பொருள்படும் (சுனாமி – அலைகள்). ஆழ்கடலில் உருவாகும் இவ்வலைகளுக்கு இடையேயான இடைவெளி 150 கி.மீட்டர் ஆகும். இவ்வலைகள் மணிக்கு 900 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. அவை கரையை நெருங்கும்போது அதன் வேகமும் இடைவெளியும் குறைவதால் அதன் உயரம் அதிகமாகி கரையை அதிவேகத்தில் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் தொடர் அலைகளுக்கிடையேயான இடைவெளி நேரம் 5 நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை வேறுபடும். இவ்வலைகள் மணிக்கு 750 கி.மீட்டர் வேகத்திலும் 100 மீட்டருக்கு அதிகமான உயரத்திலும் கரையைத் தாக்குகின்றன.

கடலுக்குள் சுனாமி அலைகள் கடந்து செல்வதைக் கப்பலிலோ, படகிலோ பயணிப்பவர்களால் உணர முடியாது. விமானத்தில் இருந்து பார்த்தாலும் சுனாமி அலைகளைக் காண இயலாது.

ஆழிப்பேரலைகளிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். உலகைக் காக்க சூழல் காப்பில் கவனம் செலுத்தினர். ‘‘கடலும் கானலும் போல புல்லிய சொல்லும் பொருளும்” (பரிபாடல்.15.11-12) என்ற பாடல் ‘கடலும் கடற்கரைச்சோலைகளும் சொல்லும் பொருளும் போன்றன’ என்கிறது. பொருளில்லாத சொல் பயனற்று, மொழிவளத்தைப் பாதித்துவிடுவது போல கடற்கரைச் சோலைகளில்லாத கடலும் பயனற்று ஊர்களின் வளத்திற்கு பாதிப்பைத்தரும் என்கின்றன. பழந்தமிழர்கள், கடற்கரைச் சோலைகளின் சிறப்புணர்ந்த காரணத்தினால்தான் அச்சோலைகளிலுள்ள மரங்களில் தெய்வம் உறைவதாக் கருதி வணங்கி வழிபட்டுள்ளனர்

‘‘தொன்று உறை கடவுள்” (அகம்.3-4)”

‘‘மன்ற மராஅத்த பேஎம் முதிர்கடவுள்” (குறுந்தொகை.87.1)

‘‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ” (கலித்தொகை.101.14-15)

“நல்அரை மராஅத்த கடவுள்” (மலைபடுகடாம்.395).

“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கி மடற்குடம்பை” (நற்றிணை.303.3-5)

இப்பாடல்கள் பழந்தமிழர், மரங்களைக் கடவுளாக வழிபட்டுப் போற்றிப் பாதுகாத்தமையைக் கூறுகின்றன. கடற்கரைச் சோலைகளில் தாழை (கைதை, கண்டல்), நெய்தல், ஞாழல், புன்னை, பனை, அடப்பங்கொடிகள் போன்றவை ஒன்றோடொன்று இணைந்தே வளரக் கூடியன. இவை நெருங்கி வளர்வதால் அப்பகுதி கரிய சோலை போல் அடர்ந்திருக்கும். ‘‘வெண்கோட்டு அருள் சிறைத்தா அய் கரைய கருங் கோட்டுப் புன்னை” (67.4-6)என்ற பாடல் வெண்மையான மணல் குவிந்த கடற்கரை மேட்டில் கரிய அடிப்பகுதியையுடைய புன்னை மரங்கள் சிறை போல் எழும்பி இருக்கும் என்கிறது.

‘‘மணி ஏர் நெய்தல் மாமலர் நிறைய, பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ்தாழ் தாழைப் பூக்கமழ், கானல்”(நற்றிணை.78.2-4)

‘‘அடும்புஅமல் அடைகரை” (பதிற்றுப்பத்து.51).

‘‘தயங்குதிரை பொருத தாழை” (குறுந்தொகை.226.5)

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ படப்பை நின்ற முடத்தாட் புன்னை”(அகம்.180.12-13)

‘‘தெரிஇணர் ஞாழலும் தேம்கமழ் புன்னையும் புரி அவிழ் பூவின கைதையும்” (கலி.127.1-2)

போன்ற பாடல்கள் கடற்கரைச் சோலைகளில் புன்னை மரங்களோடு, அடப்பங்கொடிகளும் தாழை மரங்களும் எப்பொழுதும் பிண்ணிப்பிணைந்து இணைந்தே வளர்ந்திருக்கும் என்கிறது.

ஆழிப் பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா நல் ஊர்களை பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஆழிப்பேரலையின் தாக்கத்திலிருந்து கடற்கரைகளையும் ஊர்களையும் காப்பதற்குப் பழந்தமிழர்கள் தாழை முதலான மரங்களின் தன்மையறிந்து அவற்றை வளர்த்துள்ளனர். ‘கண்டவாயில் ‘என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச் சிறப்பிக்கப்படுகிறது. இதன் சிறப்பே ஆழிப் பேரலையினால் பாதிக்கப்படாததுதான். இவ்வூர் உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையுடையது. இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காணப்படும்.

பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை ,புன்னை மரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் என அழைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாக பேரலைகளைத் தாக்குப்பிடிக்க வல்லது. எனவேதான், தாழை சூழ்ந்தசோலைகளை நாட்டுவேலி, பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயர்களில் அழைத்துள்ளனர்.

இம்மரங்கள் சோலைகளில் எழும்பி நிற்கும் காட்சி மதில்கள் சூழ்ந்த அரண்மனைக் கோட்டையை ஒரு புலவருக்கு நினைவுபடுத்துகின்றது. ‘‘அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல்” (கலி.135.3-5) என்ற பாடல் வரிகள் பேரலைகளை போர்க்களிறுகளோடு ஒப்பிட்டு அக்களிறுகளைத் தடுக்கும் அரண்மனைக் கோட்டைகளாகக் கடற்கரைச் சோலைகளைக் காட்டுகிறது. ஆவேசத்துடன் பெருகிவரும் பேரலை இத்தகைய மரங்கள் சூழ்ந்த சோலைகளில் மோதியவிடத்து சிறுநுரை என மாறி இல்லாமல் போய்விடும் என்பதை ‘‘பெருநீர்க்கல் பொரு சிறுநுரை மெல்ல மெல்ல இல்லாகுமே”(குறுந்.290.4-6) என்ற வரிகள் காட்டுகின்றன. இவ்வாறு, பேரலை சிறுநுரையாக மாறுவதற்கு தாழையின் மடங்கிய தன்மையே காரணம் எனப் பல பாடல்கள் சான்று பகர்கின்றன. ‘‘வணங்கிய தாழை”(அகம்.128.1-2) என்ற பாடல் வரிகள் காக்கும் கடல் அருள் மறந்து அழிக்கமுற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலேயே இயலும் என்று கூறுகிறது. ‘‘திரைமுதிர் அரைய தடந்தாட் தாழை” (அகம்.131.3-5) என மற்றொரு பாடலும் தாழையின் வளைந்த தன்மையின் சிறப்பை உறுதி செய்கிறது. கடலின் அண்மையில் மட்டுமின்றி ஆற்றங்கரை ஓரங்களிலும் இச்சோலைகளை வளர்த்துள்ளனர்.

கூறும் வையை ஆற்று வருணனையில் வையைக் கடலோடு ஒப்பிடப்படுகிறது. வையை ஆறானது பெருகி, ஊருக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் ஆற்றங்கரைகளில் ஞாழல், புன்னை, தாழை முதலான மரங்களை வளர்த்துள்ளனர். இவை வளர்ந்து பெரிய சிறையின் சுவர் போல எழும்பிநிற்கும் (பரிபாடல்.77).

இம்மரங்களில், ஞாழல்மரம் வலுவானதல்ல. வெள்ளநீரின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க ஞாழல் மரங்களினால் இயலாது. ஆனால், புன்னை, தாழை இவையிரண்டும் உறுதியானவை, வலுவானவை. பேரலைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடியவை. கடற்கரை சார்ந்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் இத்தகைய மரங்களே வளர்க்கப்படவேண்டும் (பரிபாடல்.12-6) என்று மரங்களின் தன்மையை பரிபாடல் எடுத்துரைத்து அவற்றை மிகுதியாக வளர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. தாழையின் சிறப்பை சிலப்பதிகாரம் ‘‘தாழைச்சிறைசெய்வேலி” (166) என்கிறது.

‘‘புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” (நற்றிணை.23.9-10) -வளைந்த தாழையைக் ‘கண்டல்’ என நற்றிணைப் பாடல் கூறுகிறது. தாழை மரங்களுடன் புன்னை, ஞாழல் மரங்களும் இணைந்து வளர்ந்து நெய்தல் சார்ந்த ஊர்களை காத்து நிற்பதால் இவற்றை கண்டல் வேலிகள் என பழந்தமிழர் குறித்துள்ளனர். “தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல்வேலி நும்துறை” (நற்.54.9-11) – இவ்வாறு கடற்கரைச்சோலைகளைக் கண்டல்வேலிகள் என்று குறிப்பிடுவதுபோல ஆழிப்ரேலையை, ‘‘உயர்திரை நெடுநீர்”, ‘‘பெருநீர்”, ‘‘வரம்பு இல் வௌ;ளம்” ‘என்ற தொடர்களால் தமிழர் குறித்துள்ளனர். பதிற்றுப்பத்து ஆழிப்பேரலையை ‘‘வரம்பு இல் வெள்ளம்” (33) என்கிறது. நற்றிணைப் பாடல் ஆழிப்பேரலையை “உயர்திரை நெடுநீர்”(9) என்ற தொடரால் குறிக்கிறது.

இப்பேரலைகளை தாக்குப்பிடிப்பனவாதலால், கண்டல்வேலிகள் ‘‘பெருநீர் வேலி” என்றழைக்கப்பட்ட செய்தியைக் குறுந்தொகை (345.5-7) கூறுகிறது. இப்பெரு வௌ;ளமாகிய ஆழிப்பேரலையைத் தாக்குப்பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74) பாடலும் தெளிவாகக் கூறுகிறது. பொதுவாக மரங்கள் மணல் அரிப்பைத் தடுக்கவல்லன. தாழையோ தன் வளையும் தன்மையால் பேரலை, பெருங்காற்றையும் தாக்கு பிடிப்பதால் அப்பகுதியில் மணல்அரிப்பு ஏற்படாததோடு அப்பகுதி உயர்ந்து மலை போல் காணப்படும்.
“குன்று போல் எக்கர்” (கலி.127)
“ஓங்கல் வெண்மணல்”(குறுந்.311)
முதலான பாடல் வரிகள் மணலைக் கடலலைகள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதினால் மணல்மேடு தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே சென்று, அதில் உள்ள பனைமரங்களை மிகச் சிறியன என ஆக்கும் “அடும்பு இவர் மணற்கோடு ஊர. நெடும்பனை குறியஆகும்” (அகம்.248.4-6) என்கின்றன. “ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை” (குறுந்தொகை.311-5) உயர்ந்து கொண்டேவரும் வெண்மணலினால் உயரம் குறைந்து கொண்டே வரும் புன்னை எனக் குறுந்தொககையும் கூறுகிறது.
கடலின் அண்மையில் சோலைகளை பாதுகாத்தது போல சோலையடுத்த பகுதிகளில் நாவல் முதலான மரங்களை வளர்த்துள்ளனர். “பொங்குதிரை பொருத வார் மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி” (நற்றிணை.35.1-2) – கடற்கரை சார்ந்த பகுதியில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளனர். எனவே தான் கண்டல்வேலிகளை உடைய ஊரில் வாழ்வோர் தம் ஊரை அழியாநல்ஊர், எனப் பெருமையோடு கூறிக் கொண்டுள்ளனர். அழியாத புகழை உடையது கண்டல் வேலிகளை உடைய ஊரே என்கிறது அகநானூறு.

தாழைக்கு குமரி என்ற பெயருமுண்டு. இத்தாழை மரக் கண்டல் சோலைகள் சூழ்ந்திருந்ததால் தான் தென்னிந்தியப் பகுதிக்கு குமரி என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது. இம்மரங்கள் கடற்கரை சார்ந்த புகுதிகளில் உள்ள புலால் நாற்றத்தைப் போக்கவும் வல்லன. ஞாழல், புன்னை மரங்களிலிருந்து மலரும் புதிய மலர்களின் நுண்ணிய மகரந்தப்பொடி கடற்கரை எங்கும் வீசிக்கொண்டிருக்கும். இதனால் புலால் நாற்றம் நீங்கி புதுமலர்களின் மணம் காற்றில் நிறைந்து அப்பகுதி கமழ்ந்து கொண்டிருக்கும் என்கிறது கலிப்பாடல். இதை நற்றிணையும், அகநானூறும் சிறப்பித்துப் பேசுகின்றன. கடற்கரைச்சோலைகள் நாட்டைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அந்நாட்டைப் புலால் நாற்றத்திலிருந்தும் காக்கவல்லன என்று குறிப்பிடுகின்றன.

இக்கடற்கரைச்சோலைகளில் உள்ள மரங்களின் நிழல்களில் நெய்தல் நில மகளிர் தங்கி இளைப்பாறுவதும், மீன்களை உலர்த்துவதும் உண்டு. இனிய நிழலை விரும்பி வரும் பெண்கள் வேலைமுடிந்த பின்னர் இங்குதான் ஓய்வெடுப்பர் என்கிறது ஒரு பாடல்.

கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும். கடல்நீர் சூரியனின் வெப்பத்தினால் ஆவியாகி அவ்விடத்தில் வெற்றிடம் ஏற்படும். அவ்வெற்றிடத்தை நிரப்ப கடற்கரையிலிருந்து காற்று கடலை நோக்கிச் செல்லும் இதனால் கடற்கரை பகலில் மிகுந்த வெப்பமுடையதாக இருக்கும். வியர்வை பெருகி நீர்த்தாகம் ஏற்பட்டு உடலில் வறட்சி தோன்றும். ஆனால், கடற்கரைச் சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் சோலைகள் இக்குறையைப் போக்குகின்றன. இதன் அருமை உணர்ந்தே அகநானூறு ‘‘புன்னை பூத்த இன்நிழல்” (91.2) என்றும் ‘‘வெண்மணல் ஒருசிறை புதுவது புணர்ந்த பொழிலே”(96.1-3) என்றும் பாராட்டுகிறது. நிழலோடு நாவிற்குச் சுவையான பழங்களையும் இச்சோலைகள் தர வல்லன. நாவின் வறட்சியைப் போக்க இனிய பழங்களும் இச்சோலைகளின் மூலம் கிடைக்கும்.

கடற்கரையோரங்களில் காற்று முகமாக காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் இத்தகைய புன்னை உள்ளிட்ட மரங்களை வரிசை வரிசையாக நட்டு வளர்த்தல் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும். இவை சராசரியாக 50மூ காற்றின் வேகத்தை குறைக்கிறது. கடலோர பகுதிகளில் மண்ணின் பிடிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது கடலோர குடியேற்றபகுதிகளை அழிவிலிருந்து காக்கின்றது. நிலத்தடி நீரை தக்க வைத்து, நீர் மட்டத்தை அதிகரிக்க செய்கிறது. வன விலங்குகள், பறவைகளுக்கு உறைவிடமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் உணவையும் அளிக்கிறது.

செவ்விலக்கியங்கள் சூழல் குறித்த விழிப்புணர்வை நமக்கு அளிப்பதோடு அவற்றைப் பாதுகாக்கும் முறையையும் எடுத்துரைக்கின்றன. நிலவளம், காட்டு வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழவேண்டும் என்று செவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ள சூழல் குறித்த பதிவுகள் வலியுறுத்துகின்றன. இயற்கையை அழிக்காது, செவ்விலக்கியங்கள் கூறும் நெறிநின்று சூழலைப் பாதுகாத்து இனிமையான வாழ்வை வாழ்வோம்.

Series Navigationஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …எங்களை ஏன் கேட்பதில்லை?
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *