மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்

author
0 minutes, 11 seconds Read
This entry is part 13 of 15 in the series 21 மே 2017

 

 நூலாய்வு :

கோ. மன்றவாணன்

 

நவீன கவிதை வெளியில் தனக்கெனத் தனியாழ் மீட்டி, நம்மைப் பின்தொடர வைக்கிறார் கவிஞர் யாழி. “மகாசிவராத்திரியும் அவரின் சில தேநீர்க் கோப்பைகளும்” என்ற தலைப்பே மனதைக் கவர்கிறது. இவரின் முந்தைய நூல்களின் தலைப்புகளான “என் கைரேகை படிந்த கல்” மற்றும் “முத்த தாண்டவம்” ஆகியவையும் யாழியின் கவித்துவத்தையும் தனித்துவத்தையும் வெளிகாட்டுகின்றன.

 

பலூன்களைக் காற்றுப்பூக்களாகவும் பையன்களைப் பட்டாம்பூச்சிகளாகவும் ஆக்கி மலரச் செய்த முதல்கவிதையே தேனூறவும் தேனுறிஞ்சவும் வைக்கிறது. மேலும் பலூன்காரர் – குழந்தைகள் – பெற்றோர் ஆகியோரின் கூட்டு உளவியல் நுட்பங்களைக் கதையாகவும் கவிதையாகவும் கருத்தாகவும் சொல்கிறது. இந்தக் கவிதையைப் படித்தபோது தெருவில் பலூன்காரர் இசையெழுப்பிச் செல்வதுபோல் ஒரு பொய்நிகழ் தோற்றத்தை மனது உள்வாங்கியது.

 

“பேக் பைப்பர்” என்ற கவிதை சிறுவயதி்ல் படித்த பேக் பைப்பர் கதையை நினைவுபடுத்துகிறது. அதனால்தான் அந்தத் தலைப்பு போலும். மாய எதார்த்தவியல் கவிதையாக அது, மனதுக்குள் மாயவண்ண அலைகளை மாறி மாறி வீசச் செய்கிறது. அதிலுள்ள

 

இசைக்கத் தொடங்குகிறான்

இறுக்கங்கள் மெல்ல மெல்லத் தளர்ந்து

பூக்கத் தொடங்கிவிடுகிறது நகரம்

 

என்ற வரிகள், என் இறுக்கங்களை உடனே தளர்த்தி, என்னைப் பூக்க வைத்துவிட்டது. வாக்குக் கொடுப்பதும், செயல் நிறைவேறிய பிறகு வாக்குத் தவறுவதுமான அறம்பிறழ்தலுக்குக் கடைசியில் தண்டனை கொடுத்து முடிகிறது கவிதை.

 

அறிவாளியாவது எப்படி என்பது குறித்து எளிய வழியை- எள்ளல் மொழியில் சொல்லி இருக்கிறார். அறிவாளியையும் முட்டாளாக்கும் மதுவின் தீமையை கவிதையில் நகைச்சுவை ததும்பவும் நம்நினைவில் உறைக்கவும்  அழகாகக் கவிக்கதை ஆக்கியுள்ளார். அறிவாளிகள் பல ரவுண்டு குடித்தபிறகு, அவர்களின் உளறல்களைக் கேட்டால், உண்மையில் நாம்தாம் அறிவாளிகள் என்றாகும் என்கிறார்.

 

அவரின் உளறல்கள்

அதைப் பதிவேற்றிக்கொள்ளுங்கள்

அப்போது அவர் பின்னிருந்த ஒளிவட்டம்

உங்கள் உச்சிக்கு நகரும்

அவர் இருளுக்குள் புதைவார்

 

என்று கவிவரிகளில் மதுஎதிர்ப்பு வாள்சுழற்றுகிறார். இந்த எள்ளல் கவிதையை எந்தக் குடிகாரர் படித்தாலும் மனஇறுக்கம் தளர்ந்து மனதுக்குள் மகிழ்வார்.

 

“கடலைக் குடித்தவன்” என்ற கவிதையைப் படிக்கும் போது- ஒளிவட்டம் சுழலும் ஆளுமைகள், தாம் தவறாகச் சொன்னதையே உண்மையென நம்ப வைக்கத் தொடர்ந்து முயல்வதை நையாண்டி செய்வதோடு, அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் முகத்திரைகள் கிழிவதைப் படம்பிடிக்கிறார். பிதற்றித் திரிகிற; பீலா விடுகிற பெரும்புள்ளிகள் பலரும் படிக்க வேண்டிய கவிதை இது.

 

(கடலைக் குடித்துவிட்டவனின்)

பிரதாபங்களைப்

பக்கமிருந்து கேட்டவர்கள்

எதிரில் குழுமி  இருந்தனர்

அவன் பின்

அலையடித்துக் கொண்டிருந்தது

ஒரு பெருங்கடல்

 

இதைப்போலவே… “கடவுளெனத் தன்னை அறிவித்துக்கொண்டவன்” என்ற கவிதை யாரோ ஓர் இலக்கிய ஆளுமையை எதிர்ப்பதற்காக எழுதப்பட்டிருப்பதுபோல் ஓர் உள்நோக்கம் தெரிகிறது. ஒரு முகாமைச் சார்ந்திருப்பதால் எதிர்முகாமைச் சாடும் கட்சித்தனம் வெளிப்படுகிறது. யாழி இதை மறுக்கக் கூடும். “நீங்களே கற்பனை செய்துகொண்டால் நான் அதற்கு என்ன செய்ய முடியும்?” என்றும் அவர் பதிலளிக்கலாம். ஒருவரைச் சுட்டுவதுபோல் உள்ள சில குறியீட்டுச் சொற்களைத் தவிர்த்துக் கவிதையைப் பொதுமைப்படுத்தி இருக்கலாம். எனினும் அந்தக் கவிதையில்…..

 

“பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது

எல்லாரிடத்திலும்

கடவுள் இருப்பதை அறியாத

அந்தக் கடவுளை”

என்ற வரிகள் அபாரம்….  அருமை… அதி அற்புதம்!

 

கட்டுடைத்தல் என்ற கவிதை நயமானது.

 

ரத்தம் உறைந்த அலகோடு

பறக்கிறது

ஒரு பறவை.

 

துவாரத்தின் வழியே

தெரிகிறது பெருவெளி

 

இலக்கியத்தில் கட்டுடைத்தல் இல்லை என்றால் புதுமை பிறக்காது. புதுவெளி தெரியாது என்பதை உணர்த்தியும்- கட்டுடைத்தல் அவசியம் குறித்து அழகாகச் சொல்லியும்- நெடிதுயர்ந்த மரபரணின் செங்கற்களைப் பெயர்க்கவும் வைக்கிறது இக்கவிதை.

 

“காணாமல் போன வானம்” என்ற கவிதையில் கற்பனை நட்சத்திரங்கள் இருபொழுதுகளிலும் ஜொலிக்கின்றன.

 

கழுகு, சர்ப்பம், அரவம், இசை, இசைசார்ந்த கருவிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சி, புத்தன், சிலுவை, ஆணி, பூக்கும் நிலம், பூத்தல், பறவை, கடவுள், உயிர்த்தெழுதல், கடல், வெளவால், கல்லறை, மரம், இரவு போன்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன. அந்தச் சொற்களைத் தாண்டி அடுத்தடுத்து யாழி பறந்துயர வேண்டும். இருப்பினும் பல கவிஞர்களுக்கு இவை தவிர்க்க முடியாமல் போய்விடுகின்றன. தனித்தனிக் கவிதையாகப் படிக்கும்போது இந்த இடரோ இடறலோ நேராது. இருப்பினும் இவற்றைத் தவிர்க்க முயலும்போதுதான் புதுப்புது படிமங்கள் காட்சிதரும். பிறர்யாரும் சொல்லாத சொற்சேர்க்கைகள் உருவாகும். கவிஞர்கள் தங்களைத் தாங்களே அடுத்தடுத்துக் கட்டுடைத்து முன்னேறுவதுதான் நவீனத்தின் ஊற்று.  ஊற்றெடுக்கட்டும் யாழியிடமிருந்து அதிநவீனம் அனுதினமும்.

 

மொட்டு, இதழ்கள், மலர், வண்டுகள், சூல்பைகள், முட்கள், மணம் ஆகிய மலர்வார்த்தைகளைக் கொண்டே பெண்வதையை உயிர்உருக்கச் சொல்லி உள்ள கவிதை “மெல்லினம்”. உணர்த்தல்தான் கவிதையின் மெய்யழகு. துயர்பேசும் இக்கவிதையில் அந்த மெய்யழகு மெய்சிலிர்க்க வைக்கலாம் சிலருக்கு!

 

கடல் பற்றிய கவிதை ஒன்றில்…

 

“ஆடையிலிருந்து உதிர்ந்த

மணல்துகளில்

ஒளிந்திருக்கும் கடல்”

என்ற வரி ஒலித்துக்கொண்டே இருக்கிறது என் சங்குக் காதுக்குள்.

 

புதுக்கவிதை வளர்ந்த காலத்தில் இதிகாச நிகழ்வுகளைச் சுட்டிக் கவிஎழுதும் போக்கு இருந்தது. அதை நவீன கவிதையிலும் கொண்டுவருகிறார் யாழி பல இடங்களில்.

 

இத்தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை “நானும் சிவமே” அது அட்டைப்படத்துக்காக எழுதப்பட்ட கவிதைபோல் உள்ளது.

 

நூல்தலைப்புக்குரிய கவிதையான “கோப்பைகளில் வழியும் இரவு”, பிறமொழிகளில் மொழிபெயர்க்கத் தகுதி வாய்ந்த கவிதைதான். தன்சோகம் குறித்து எழுதும் இத்தகைய கவிதைகள் யாழ்மிழற்றிப் பிறருக்கு ஆறுதல் அளிக்கலாம். நம் கவிஞர்கள் தன்சோகம் குறித்த கவிதைகளை அதிகம் எழுதுகிறார்கள். கவிஞர்களுக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது.

 

எழுத்துப் பிழைகள் மிகச்சிலவே. அவை தூரம் தூரமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளன. ஆனால் அவை கண்ணை உறுத்தவில்லை. கருத்தைத் திரிக்கவில்லை. ஆனால் ஒற்றுப்பிழைகள் உள்ளன. “மகாசிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்” என்ற தலைப்பில்கூட ஒற்றுப்பிழை இருக்கிறது. தேநீர்க் கோப்பைகள் என எழுத வேண்டும்.

 

வாழ்க்கைத் தத்துவங்களைக் கதையாகவும் காட்சியாகவும் விவரிக்கின்ற கவிதைகள் பல இத்தொகுப்பில் மருந்திடுகின்றன. “அப்படியே தானிருக்கிறது அம்மரம்” என்ற கவிதை ஓர் எடுத்துக்காட்டு. இருப்பினும் அக்கவிதை பலரும் சொல்லிச் சென்ற விதம்தான்.

 

கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் நுண்ணோட்டங்களைக் கவிதை மின்னோட்டங்களாக்கிப் பாய்ச்சுகிறார் கவிஞர் யாழி.

 

நவீன கவிதை என்றாலே புரிபடாத கவிதை என்று சொல்வார்கள் பலர். போகிறப் போக்கைப் பார்த்தால் புரியாத கவிதை எதுவோ அதுதான் நவீன கவிதை என இலக்கணம் வகுத்துவிடுவார்களோ என்னவோ? ஆனால் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாமும் மெனக்கிடல் இல்லாமல் புரிகின்றன.

 

இந்தத் தொகுப்பை இரவில் படித்தால் அரைமணி நேரத்தில் முடித்துவிடலாம். அதன்பின் கவிதைகள் எழுப்பும் சலனங்கள் உங்கள் இரவை மகாசிவராத்திரியாக மாற்றிவிடும்.

 

யாழி – நீ

வாழி!

 

 

 

 

Series NavigationSangam Kalai Vila on Saturday June 10th in Staten Island, NYமரபிலக்கணங்களில் பெயர்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *