.குரு அரவிந்தன்
ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.’ நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
கனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து தமிழர் கலாச்சார நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இவரது ஓவியங்கள் இடம் பெறத் தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் பலரின் பார்வையும் இவரது நவீன ஓவியங்கள் மீது திரும்பியிருந்தன. மிக அற்புதமாக ஓவியம் வரைவதில் வல்லவர் மட்டுமல்ல, நவீன யுகத்திற்கு ஏற்ப கணனியின் பாவனை மூலம் இவர் தனது ஓவியங்களுக்கு மெருகூட்டுவதில் வல்லவர். எனது நண்பர் பி. விக்னேஸ்வரனின் ‘வாழ்ந்துபார்க்கலாம்’ என்ற நூலுக்கான அட்டைப் படத்தை டிஜிட்டல் முறையில்தான் வடிவமைத்திருந்தார். இது போன்ற பல நூல்களுக்கு இவர் அட்டைப்படம் வரைந்திருக்கின்றார். மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இவரது ஓவியக் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற போது அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதும் சிறிதுமாகச் சுமார் 40 ஓவியங்கள்வரை அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் ஏதாவது நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்திருந்தால் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அதைப்பற்றி நான் பாராட்டுவேன். நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை இவரது அட்டைப்படம் அப்படியே எடுத்துச் சொல்லும் வகையில் இவரது ஓவியங்கள் கதை சொல்லும். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கணையாழி இதழின் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு மலரின் அட்டைப்படமாக ஓவியர் கருணாவின் ஓவியமே இடம் பெற்றிருந்தது.
கனடாவில் வசித்த இயூஜின் கருணா அவர்கள் கரவெட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய தலைமை ஆசிரியரான காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு, இளைப்பாறிய ஆசிரியை நெஜினா வின்சென்ற் ஆகியோரின் அன்பு மகனாவார். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடன் உரையாடியபோது, ஓவியக்கலை பற்றி, குறிப்பாக நூல்களுக்கு அட்டைப்படம் வரைவது பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்திருந்தார். ஒரு நூலின் நீளம், அகலம் மட்டுமல்ல எத்தனை பக்கங்கள் என்பதும், எத்தகைய தாளில் அச்சடிக்கப்படுகிறது என்பதும் அவசியம் என்பது போன்ற பல நுணுக்கமான விடயங்களைத் தனது அனுபவத்தின் மூலம் தெளிவு படுத்தியிருந்தார். தாய்வீடு பத்திரிகையில் ஓவியம் பற்றிய தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார். ஓவியக் கலை அருகிவரும் இக்கால கட்டத்தில் அனுபவம் மிக்க இவரது இழப்பு எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு. (திருக்குறள்-336)
குறள் சொல்லும் நிலையாமையைப் புரிந்து கொண்டு அமைதி காண்போம். இனிய நண்பரின் ஆத்மா சாந்தியடைய நாங்களும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பிரார்த்திப்போம்.
- தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )
- முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது
- மயக்கமா இல்லை தயக்கமா
- பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு
- ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்
- காஷ்மீர் – அபிநந்தன்
- விளக்கு விருது வழங்கும் விழா
- சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்