ஸர்மிளா ஸெய்யித்
புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
2016 செப்டம்பர் 23ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில் “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது” என்றது. (பத்வா இல. 008/F/ACJU/ 2009). அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த பத்வா, நிகாப் அணியாத பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லவைத்தது. அதே ஜம்மியத்துல் உலமாதான் 2019 ஏப்ரல் 29 அன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா/ நிகாபைத் தடை செய்யும் அரசின் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.
2016 இல் நிகாப்/ புர்கா பெண்கள் மீது கடமை என விதிப்பதற்கு ஜம்மியத்துல் உலமாவுக்குத் தூண்டுதலாக இருந்தவை அல்குர்ஆன் வசனங்களா? சுன்னாவா? அல்லது இரண்டுமேவா? இஸ்லாத்தின் எந்த அடிப்படையில் இந்த வழிமொழிதலை ஜம்மியத்துல் உலமா நிறைவேற்றியது? இப்போது திரையை விலக்கச் சொல்லிப் பெண்களைக் கேட்பது இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உட்பட்டா அல்லது இல்லையா என்பதைக்கூட ஜம்மியத்துல் உலமா தெளிவுபடுத்தவே இல்லை. ஜம்மியதுல் உலமா போன்ற ஆண்களை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குப் பெண்களை கட்டியாழ வேண்டுமேயொழிய இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது என்பதை மீள்வாசிப்புச் செய்வது, தெளிவுபடுத்துவது என்பதிலெல்லாம் எந்த அக்கறையுமில்லை என்பது தெளிவாகிறது. அப்படியிந்திருந்தால், பெண்களுக்கு நிகாப்/ புர்கா அவசியம் என்று குர்ஆன் வலியுறுத்தியிருந்தால் இன்று ஜம்மியதுல் உலமா இந்தத் தீர்மானித்திற்கு வந்திருக்கவே கூடாது. பெண்கள் மீது மார்க்கம் கடமையாக்கிய ஆடை அணிவதற்கான உரிமைக்காகத் துணிந்து நின்றிருக்க வேண்டும்.
IS தீவிரவாதிகளின் ஊடுறுவல் குறித்து 2014 இலேயே புலனாய்வுத் துறைக்கு அறிவித்தோம் என்று ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின்னராக, சகல மதத்தலைவர்களுக்கும் நடந்த கூட்டமொன்றில் ஜம்மியத்துல் உலமா தெரிவிக்கிறது. இந்த எச்சரிக்கையை ஏன் பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கவில்லை? கொடிய இந்த சக்திகளிடமிருந்து மக்கள் அவதானமாக இருப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை ஏன் செய்யவில்லை? விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தினை எதிர்த்து மக்களைத் திரட்டிக் கொண்டு செயற்படத் தெரிந்த ஜம்மியத்துல் உலமாவினால் தீவிரவாதிகளின் ஊடுறுவலை புலனாய்வுக்கு அறிவித்துவிட்டுச் சும்மா இருக்க மட்டும் முடிந்தது ஏன்?
இஸ்லாமிய அடிப்படைவாதச் சிந்தனைகளின் தாக்கம் இலங்கையில் IS தீவிரவாதிகள் ஊடுறுவியதன் பிற்பாடு வந்த ஒன்றல்ல. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையே கூட அடிப்படைவாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்ட சுயாதிக்க நிறுவனம்தான். நோய் எதிர்ப்பு சக்தியற்ற சமூகத்தை உருவாக்கிய பொறுப்பு ஜம்மியத்துல் உலமாவுக்கும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியற்ற உடலைத் தாக்குவது எப்படி வைரஸ் கிருமிகளுக்கு இலகுவானதோ அப்படித்தான் IS தீவிரவாதம் இலங்கை முஸ்லிம்களிடையே பரவலாக்கம் அடைவதும் எளிதாக இருந்திருக்கிறது. கோமா நிலையில் இருந்த அரசு, இந்த பரவலாக்கத்திற்கு இன்னொரு காரணம்.
முஸ்லிம்களிடையே தீவிரவாத சக்திகள் உருவாகுவதை அரசு வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறது. முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களைப் பலியெடுக்கும்/ களையெடுக்கும் கனவுதான் அரசின் நீண்டகால எதிர்வினைகளற்ற கோமா நிலையின் பிரதிபலன். இஸ்லாமிய தீவிரவாதத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் விதமான வன்முறைகளும், தாக்குதல்களும் கடந்த பல ஆண்டுகளாக சிங்கள அடிப்படைவாத சக்திகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டு வந்திருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதமும் சிங்கள அடிப்படைவாதமும் அதிகார மையங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே பார்த்துவிட்டோம்.
இப்படி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் பல்வேறு கூறுகளாக வெளிப்பட்டன. அதிலொன்றுதான் பெண் உடல் மீதான கட்டுப்பாடு.
புர்கா/ நிகாபை அணியச் சொல்லிக் கேட்பதும், களைந்துவிடச் சொல்வதும் இரண்டுமே பெண் உடல் மீதான கட்டுப்பாட்டையே காட்டுகின்றன. ஜம்மியதுல் உலமா என்கிற இந்த அமைப்புக்குப் பெண்களின் உடையைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தை யார் அளித்தது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இந்த நிறுவனத்தையும் இதில் உள்ள ஆண்களையும் அழைத்துப் பெண்களின் உடை தொடர்பான ஒரு தீர்மானத்தை இயற்றுவதன் மூலமாக நீண்டகாலத் தாகத்தினை நிறைவேற்றியிருக்கிறது பேரினவாத அரசு. இது சிங்களப் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களில் நீண்டகாலமாக இருந்த ஒன்று.
இன்னொரு புறம் சிங்கள மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும் அரசியல் அமைப்பைக் கொண்ட இலங்கை அரசு அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த விரும்புகிறது. ஒருவன்/ள் விரும்பிய மதத்தையும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும் என்ற சுதந்திரத்தினை அரசியலமைப்பினூடாக உறுதிசெய்திருந்தபோதும், தந்திரமாக முஸ்லிம்களின் அடையாள அழிப்பை அவர்களைக் கொண்டே செயல்படுத்தி வெற்றி காண்பதற்கு ஈஸ்டர் தாக்குதலை ஒரு துருப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் நேரடியாக சம்பந்தபட்ட குண்டுதாரிகள் யாருமே புர்கா/ நிகாப் உடையில் தோன்றியிருக்கவில்லை. சந்தேகமின்றி அவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள். அரசும் ஜம்மியத்துல் உலமாவும் கூட்டாக இணைந்து பெண்களைப் பலியாக்கியுள்ளனர்.
புர்கா/ நிகாப் தடை தொடர்பாக அரச வர்த்தமானியில் தரப்பட்டுள்ள விவரணங்களில், அடையாளத்தை மறைக்கும் எல்லா வகையான திரைகளுக்கும் தடை என்பதுடன், “காதுகள் தெரியும்படியாக” என்பதையும் வலியுறுத்துகிறது. புர்கா/ நிகாப் எனப்படும் முகத்திரைகளுக்குத் தடை என்று சொல்லப்பட்டபோதும் காதுகள் தெரியும்படியாக எனும்போது சாதாரண ஹிஜாப் கூட அணியமுடியாதபடியே இந்த விதி உள்ளது. அனைத்துப் பொது இடங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வதனூடாக முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற, குற்றவுணர்வுக்குள்ளாக்கும் சூழ்நிலையை வலிந்து ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவைச் சீண்டியுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றமும் சட்டமும் ஒரு சமூகத்தின் மீதான சந்தேகமற்ற அத்துமீறல்.
மூன்று தசாப்தகாலப் போர் அனுபவங்களிலிருந்து பார்த்தோமானால் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைக் குண்டுதாரிகளாகப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் புர்கா/ நிகாப் அணிந்து தாக்குதல்களைச் செய்திருக்கவில்லை. புர்கா/ நிகாப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதெல்லாம் கட்டுக் கதைகள். குண்டுகளை வெடிக்கச் செய்யும் தற்கொலையாளி எந்த உடையிலும் அதனைச் செய்துவிடமுடியும். பிக்கினி உடையில்கூட அது சாத்தியம்.
ஆக மொத்தத்தில் இங்கே, மதவெறியும், அரச பயங்கரவாதமும் பெண்ணுடலைக் கட்டியாழ்வதில் வென்றிருக்கிறது.
புர்கா/ நிகாப் அரசியல் குறித்து நீண்டகாலமாகப் பேசியும் எழுதியும் விமர்சித்தும் வந்துள்ளேன். பெண்கள் தீர்மானிக்கும் சக்திகளாக இல்லாத பொம்மைகளாக ஆண்களால் சமைக்கப்பட்டிருந்ததும், மத அடிப்படைவாதம் பெண்கள் மீது திணிக்கும் கலாசார இறுக்கத்தைக் குறித்துமே அந்த விமர்சனங்கள். அவை எவ்வளவு மெய்யானவை என்பதை காலம் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.
இதுவரை காலமும் முஸ்லிம் பெண்களின் நலன்களில் எதுவித அக்கறையையும் வெளிப்படுத்தியிராத அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு பெண்கள் சார்பாக தீர்மானிக்கும் எந்த உரிமையும் கிடையாது. பெண் கத்னா, திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் போன்றவற்றில் வெளிப்பட்ட நிலைப்பாடுகள் இவர்கள் பெண்களின் நலன்களில் அக்கறையற்றவர்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள். உண்மையகாகவே முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்களின் அக்கறையை வெளிப்படுத்தவும் விரும்புவதாக இருந்தால் தடை செய்யவேண்டியது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையையே. பதிலாக முற்போக்குச் சிந்தனைகளையும், மாற்றுக் கருத்துக்களையும் உள்வாங்கக்கூடிய பெண்களின் பிரதிநிதித்துவத்துடனான, பெண்களின் உரிமைகளைக் கௌரவங்களை மதிக்கும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் நெகிழ்வுத்தன்மையுடன் சமகாலத்திற்கு ஏற்ற வகையில் மீள்வாசிப்புச் செய்யக்கூடிய மார்க்க அறிஞர்களையும், கற்ற சமூகத்தையும் சேர்ந்தவர்கள் இணைந்த ஓர் அமைப்புக் குறித்து முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.
- கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி
- “கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை
- அளவளாவல். புத்தகம் பகிர்தல்
- அதனாலென்ன…
- ‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’
- Pusher Trilogy
- Ushijima the Loan Shark
- பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்