வெகுண்ட உள்ளங்கள் – 5

author
0 minutes, 7 seconds Read
This entry is part 6 of 14 in the series 28 ஜூன் 2020

கடல்புத்திரன்

ஐந்து

புதிய தோழர், அந்த இடத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றி  பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தான்.

“இவன், மானிப்பாய் எ.ஜி.எ. பிரிவைச் சேர்ந்தவன். எங்கட பிரிவிலே  இயங்க வந்திருக்கிறான்” அவனைப் பார்த்து “உனக்கும் அந்தப் பகுதி பிரச்சனையாயிராது” என்ற பிரபா. எல்லாரையும் பார்த்து “தெற்கராலியில், பலர் பேர் பதிந்து வேலை செய்யவில்லை. ஆதரவாளர் என்ற முறையிலே இயங்குகிறார்கள். அதனாலே நாங்கள் இவனை தற்போது நியமிக்கிறோம்.” எனப் பகிடியாகச் சொன்னான். தொடர்ந்தான். “அவ்விடத்து  கடல் துறை முக்கிய கேந்திரமாக இருப்பதால் சில செயற்பாடுகளை நாம் செய்ய கட்டாயமாக‌  வேண்டியிருக்கிறது. கூடிய சீக்கிரம் உங்களில் ஒருவனை  ஜி.எஸ்.ஆக   நியமிப்போம்” அன்டன் ஆட்கள் இருந்த பகுதியைப் பார்த்து பிரபா பேசுவதை எல்லோரும் கேட்டு கொண்டிருந்தார்கள். ‘ஈடுபட  இருக்கும் செயற்பாடு’களை அவன் விவரித்தான்.

“கரையில் வாலையம்மன் பகுதி நடத்திய வள்ளச் சேவையை இனி இயக்கங்கள் செய்வதாக முடிவெடுத்ததால் எம் சார்பிலும் படகு சேவையை நடத்தத் திர்மானித்திருக்கிறோம்” கூட்டம் அன்று முடிய லேட்டாகியது.

இருவருக்கும் பசித்தது. கடையிற்கு ஏறி பசியாற கையில் காசிருக்கவில்லை. சைக்கிளைக் கொடுக்க கனகனின் வீட்டுக்கு வந்தார்கள். இயக்கம் என அலைந்து திரிய வெளிக்கிட்ட பிறகு அவர்கள் பொதுவாக சரியாக சாப்பிடுவதில்லை. “டேய் பசிக்குதடா.மீன் குழம்பு ஏதும் இருக்கிறதா?” என்று அன்டன் கேட்டான். “நில்லு பார்த்துச் சொல்லிறன்” என்று விட்டு உள்ள போனவன் குழம்புச் சட்டியோடு பாணையும் எடுத்து வந்தான். “டேய் கையை கழுவிப் போட்டு வாங்கடா” என்று பாணை தட்டில் வைத்து குழம்பை ஊத்தி வைத்தான். தண்ணியை ஊத்தி அம்மா அடுப்பில் வைத்தார். “என்னடா சேதி? கூட்டத்தில் என்ன சொன்னாங்கடா” கனகன் அவசரமாகக் கேட்டான். “கொஞ்சம் பொறடா. சாப்பிட்டு விட்டு கதைக்கிறோம். ஆனா, பெரிய ஆச்சரியம். எல்லாம் காத்திருக்கடா” என்றான் அன்டன்,

“எங்க பகுதிக்கு புதிதாய் ஜி.எஸ்.ஒருத்தன் நியமிக்கப் பட்டிருக்கிறான்.யார் தெரியுமா?” என்று நகுலன் கேட்டான்.

“எனக்கென்னடா மூக்குச் சாத்திரமா தெரியும்? யாரும் பொதுவான ஆளாய் இருப்பான்.  ம் ! ,யார்? அந்த நரேனையா நியமிச்சிருக்கிறாங்கள்’

நரேன் சாதி அபிமானம் அற்றவன். சமயத்தில் சென்றியால் வரும் போது அன்டனை வாசிகசாலையில் இறக்கி விட்டுப் போறவன். பழக இனிமையானவன். ஆனால் அங்கே நிலவுகிற சமூகக் கட்டமைப்பால் அவன் வேற‌ சாதிக்காரன்’ அவர்கள் மட்டுமே எல்லாரையும் தோழர்களாக ஏற்றிருக்கிறார்கள். சாதி முறை நீண்ட காலம் நிலவிய தன்மையாலும், விழிப்புணர்ச்சி இளைஞர் மட்டத்திலே நின்று விட்டதாலும் சமூக மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் வெளியில் தென்படவில்லை. அவனை என்ன, வேறு அவ்விடத்து ஆட்களைக் கேட்டாலும் நரேனையே நினைப்பார்கள். ஒரு இயக்கத்துக்கு எல்லாப் பக்கமும் வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சமயங்களில் உதவிகள் திரட்டக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மளமளவென  இருவரும் சாப்பிட்டார்கள்.

கனகன்ரை அம்மா போட்டுத் தந்த தேத்தண்ணியை குடிச்ச பிறகு அவர்களுக்கு களைப்பு பறந்திருந்தது.இயக்க கெடுபிடிகளால் இரண்டு மூன்று நாட்களாக அப்பனும் தொழிலுக்குப் போகாதிருந்ததால் ஒருபுறம் வைத்திருந்த உலர்ந்த வலைக் குவியலில் போய் மூவரும் படுத்திருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று குளிமையாக வீச அப்படியே தூக்கம் வந்து விடும் போலிருந்தது.

அந்தப் பக்கம் வந்த கனகனின் அம்மா “காலங்கார்த்தாலே உங்கம்மாமார் தேடி வரப் போகினம், வீட்டப்  போங்கடா” என்று ஞாபகமூட்டினார்.

“இயக்கத்திற்கு ஒடிய பிறகு… எங்களைப் பற்றி கவலைப்ப படுகிறதை விட்டிட்டினமக்கா” என்றான் அன்டன்.

திடீரென அப்பகுதியில் இருவரும் பயிற்சி என்று போனதும் உடனே அவர்களின் அம்மாமார்  இருவரும் அந்த வீட்டுக்கே ஒடி வந்தார்கள். கனகன் இருப்பதைப் பார்த்துவிட்டு “தம்பி உனக்குத் தெரியாமல் இருக்காது. எங்கே தம்பி போயிருக்கிறார்கள்” என்று தவித்துக் கேட்டது அவருக்கு ஞாபகம் வந்தது. பிறகு கனகனே தபால்காரனாக அவர்களுக்கிடையில் வேலை பார்த்தான். ஒன்றரை மாதம் கழிய இருவரும் திரும்பி வந்தார்கள். லிங்கன் மற்றும் பலர் அப்பகுதிக்கு பரிச்சயமானார்கள்.

“யாரடா வரப் போகிறான். வேறு  ஊரைச் சேர்ந்தவனா?” என்று இடக்காக‌ அவன் கேட்டான்.

“லிங்கன்ரை சொந்தக்காரப் பெடியனடா” என்று அன்டன் சொல்ல நகுலன் சிரித்தான். ‘அதிலே ஒன்றும் ஆச்சரியமில்லையே என்ற கனகனுக்கு அவர்கள் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள் போலப் பட்டது.

அடுத்த நாள், லிங்கனும் நரேனும் அன்டனையும் நகுலனையும் தேடி வாசிகசாலைக்கு வந்தார்கள். இருவரின் சைக்கிள் பாரிலும் ஆளுக்காள் ஏறினர். லிங்கன் கையில் வைத்திருந்த புத்தகக் கட்டை அன்டன் வாங்கிக் கொண்டான்.

“அதிரடி நடவடிக்கை ஏதுமா? கனகன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்டான்.

சைக்கிள்கள் விரைந்தன.

சந்தியில் அவர்களுடன் இன்னும் பலர் சேர்ந்து கொண்டார்கள்.

தெற்குப் பக்கமாகவிருந்த ஒழுங்கையில் இறங்கி விரைந்த அந்தப் பட்டாளம் பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டை அடைந்தது. நூறு வருடங்களை கடந்துவிட்டிருக்கிற மூப்பின் அடையாளங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் காணப்பட்டன. பூச்சு கழன்று உப்பு சிறிது பூத்த சுவர். சுண்ணாம்புக் கல் அதிகமாகப் பாவிக்கப்பட்டு கட்டப்பட்ட பழைய உறுதியான வீடு.

அவ்வீட்டை நரேன் தெரிந்திருந்தான். முன்னாலுள்ள பாதை. அயலிலுள்ள இரண்டொரு வீட்டைக் கடந்தால் செம்மணத்தி பகுதியாலே கரையை நாடியே போகிறது. பனை மரங்களும் நெல் வயல்களும் இருமருங்கிலும் கணிசமாக இருந்தன. கரையில் ‘வி’புள்ளியில் சந்திக்கிற மற்றைய பாதையில் சிறிது வெளியைக் கடக்க செம்மணத்தி  பகுதி குடிமனைகளும்,வாசிகசாலையும் இருக்கின்றன.அன்டனும்,நகுலனும் அப்பகுதியைச் சேர்ந்த பெடியள்கள். அவர்களும் கனகன் படித்த பள்ளிக்கூடத்திற்கே வந்து படித்தார்கள்.ஒரே வகுப்பு..அப்படி பற்றிப் படர்ந்த‌ நட்பு.படிக்கிற போதே கனகன் சனி,ஞாயிறுகளில் அப்பனோடு தொழிலுக்கு போறவன்.இவனைப் போல அன்டனும் அண்ணனோடு தொழிலுக்கு போய் வந்து கொண்டிருந்தான்.. கரையிலேயும் சந்தித்துக் கொள்வார்கள். நகுலன் அன்டனோடேயே இழுபடுறவன்.கோயிற் திருவிழாக் காலங்களில் வீட்ட வந்து கதைத்துக் கொண்டிருந்து விட்டு ஒன்றாய்யே போவார்கள்.இரண்டு வீட்டார்களிற்கும் நன்கு தெரிந்த சொந்தப் பிள்ளைகளாகி விட்டார்கள்.

நரேன். அன்டன், குமார் மூவரும் பக்கத்திலிருந்த வீட்டுப் பக்கம் நடந்தார்கள். அவ்வீட்டுக்காரர்“யார் தம்பி நரேனா வா. வா” என வரவேற்றார். அவன் அவருக்கு தூரத்து உறவு. அவன்.  வீடு எடுக்கப் போறதைப் பற்றி முன்னமே தெரிந்து வைத்திருந்தார்.

“உங்கட‌ பழைய வீட்டை எடுக்கிறோம். அதன் திறப்பை தரமுடியுமா?” என்று அவன் கேட்டான்.

“குறை நினைக்க வேண்டாம் தம்பி அவயள் கொழும்பிலிருந்து வரவிருக்கினம்” தர மாட்டேன் என்பதை நாசூக்காக தெரிவித்தார். “அவயள் வரேக்கை எழும்பி விடுறம். நீங்க பயப்படத் தேவையில்லை. வீட்டைப்  பொறுத்த வரை  சேதம் ஏற்படாது. தாங்கோ” என்று நரேன் சிறிது அழுத்திக்  கேட்டான். அவர் மசிவதாகத் தெரியவில்லை. தட்டிக் கழிக்கவே அவர் முயன்றார் “உனக்குத் தெரியாததா? தரக் கூடியதாக இருந்தால் தராமல் இருப்பேனா?” தொடர்ந்தும் முரண்டு பிடிக்க நரேன், அன்டனை லிங்கனைக் கூட்டி வா’ என்று சொல்லி அனுப்பினான்.

அவர்கள் வீட்டை திறந்து விட்டிருந்தார்கள். ‘நரேன்’ எங்கே ?  என்று லிங்கன் தேடிக் கொண்டிருந்தான். அன்டன்  நிலைமையைச் சொன்னான். “தெரிஞ்சவையளா, அப்படியென்றால் வேற ஆளை அனுப்பியிருக்கலாம். சரி வா. நீங்க வீட்டை ஒதுக்கி துப்புரவாக்குங்கள். கவனம். சாமான்களை ஒரு அறையில் போட்டு பூட்டி விடுங்கள். கண்டிப்பாய் அதிலை ஜாக்கிரதையாய் இருங்கள்” என்று சொல்லி விட்டு வந்தான்.

“நரேன் நீ போ” என்று  அவனை  அனுப்பி விட்டு வீட்டுக்காரனுடன் கதைத்தான்.

“எங்கட தோழர்கள் தங்கி போறதுக்கு வீடு தேவைப் படுகிறது. சும்மா பூட்டிக் கிடக்கிற வீடு என்று எங்களுக்கு நல்லாய் தெரியும். திறப்பை தந்தீங்க என்றால் நன்றாயிருக்கும்” என்று கேட்டான்.

“அதில்லை தம்பி.அவயள் கொழும்பிலேயிருந்து வரவிருக்கினம்” வீட்டுக்காரர் நரேனுடன் கதைத்தது போல முயன்றார். “பரவாயில்லை. நாங்க வீட்டை திறந்து விட்டோம். நீங்க ஒருக்கா வந்து வீடு ஒதுக்கிறதை பார்த்தால் மட்டும் போதும். உங்க பொறுப்பிலே இருக்கிறதாலை கேட்கிறோம். எங்கேயோ இருக்கிற வீட்டுக்காரர் ஒருவேளை உங்களை கேட்டால் நீங்கள்.இயக்கம் மிரட்டி சாவியை வாங்கி விட்டது என்று சொல்லலாம். உங்க பாதுகாப்புக்காக தான். இனி உங்க இஷ்டம்.” லிங்கனின் முடிவான பேச்சு அவரை கலக்கி விட்டது. பேசாமல் திறப்பை எடுத்துக் கொடுத்தார். அவர்களோட கூட வந்தார். முக்கிய சாமான்களை தனியறையில் வைத்து பூட்டிவிட்டு அந்த ரூம் சாவியை நரேன் அவரிடம் கொடுத்தான்.

“உங்களுக்கு பிரச்சனை வார போது எங்கட பெடியளிடம் கூறுங்கள். உடனே நடவடிக்கை எடுப்போம். கொஞ்ச காலம் மட்டுமே தேவைப்படும் என நினைக்கிறேன்” என்று லிங்கன் ஆதரவாக சொன்னான். அவர் வீட்டிலேயிருந்து அவர்களுக்கு டீ வந்தது. நரேனுக்காக செய்வது போல அனுப்பினார்.

“ஆள் பரவாயில்லை  அன்டன்” என்று லிங்கன் சொல்லிச் சிரித்தான்.

“டேய் வீடு ஒன்று எடுத்து விட்டோம்” என்று வீட்ட‌ வந்த அன்டனைப் பார்த்து கனகன் சிரித்தான். அவனுக்கு அந்த விசயம் தெரிந்ததேயிருந்தது. “வா, அண்ணன் வீட்ட போவம்” என்று கூட்டிக் கொண்டு போனான்.

Series Navigationபண்டைத்தமிழரின் விருந்தோம்பல்பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *