தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

This entry is part 10 of 13 in the series 6 செப்டம்பர் 2020

ஸிந்துஜா 

தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் !

– 9 குளிர், 10 வேண்டாம் பூசனி  

தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் !

ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்களா அல்லது அவரால்தான்  அவர்களைக் கண்ட்ரோலில் வைக்க முடியவில்லையா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன அடாவடியாக ஒரு பேச்சு ! ஆளைத் தூக்கிவாரிப் போடச் செய்யும் நடமாட்டம் !  தி.ஜா.வின் நுணுக்கமான பார்வையிலும், அவருக்குக் கை வந்த லாகவமான பேச்சிலும் வெளிப்படும் இப் பேரிளம் 

பெண்கள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் போதே திடீரென்று காலை வாரி விட்டாற் போன்ற செயல்களிலும் இறங்கி விடுகிறார்கள். 

குளிர் என்ற கதையில் வரும் கிழவிக்கு எழுபத்திஐந்து வயது. தள்ளாதவள்தான். தனியே குடியிருப்பவள். கதை சொல்லி அவளுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். கதை ஆரம்பிக்கும் போது கிழவி – வெளியிலிருந்து வருபவள் –  மற்ற குடித்தனக்காரர்களைக் கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லித் தட்டுகிறாள்  கிழிசல்  புடவையைச் சுற்றிக்  கொண்டு நிற்கும் அவள் “ஐயோ குளிர் தாங்க முடியலையே ! கதவைத் திறக்க இப்படி அழும்பு  பண்றேளே, எல்லாருமா சேந்து. கேள்வி முறையே கிடையாதா? 

கடையிலே போய் நாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வரதுக்குள்ளேயும் இப்படி அடம் பண்றேளே. இப்படி நெஞ்சை வழிச்சுத் துடைச்சிப்பிட்டு உட்கார்ந்திருக்கேளே” என்று நிர்க்கதியாக நிசியில் கதறுகிறாள். ஹ்ம்ஹூம். ஒரு பிராணி வந்து திறக்கக் காணோம். 

இதற்கு நாலைந்து நாள்கள் முன்னால்தான் கோயிலுக்குப் போய்விட்டு ஒன்பதரை மணிக்குக் கிழவி வந்து இதே மாதிரி கூப்பாடு 

போடுகிறாள். ஆனால் பயனில்லை. அவள் இறைஞ்சுவது யார் காதிலும் விழவில்லை. யார் நெஞ்சையும் தொடவில்லை. கதவைப் பிடித்துக் கொண்டு ஓயாமல் ஆட்டியதில்  சங்கிலி விழுந்து ஓசையிட. கதவு  அதிர்கிறது.அப்போது “வரேண்டி இரு ” என்று குரல் வந்து, பின்பு படார் என்று தாழ்ப்பாள் திறக்கிறது. உள்ளே போன கிழவி “ஐயோ ஐயோ இப்படி அடிக்கிறாளே!’ என்று கூக்குரலிடுகிறாள். கிழவியின் அலறல் கேட்டுக் கதைசொல்லி தன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு அங்கே ஓடிப் போய்ப் பார்க்கிறார். 

குடியிருக்கிற இன்னொரு கிழவி இந்தக் கிழவியின் தலைமயிரை ஒரு கையால் கவ்விக் கொண்டு விளக்குமாற்றால் முகத்திலும் தலையிலும் பிடரியிலும்  வயிற்றிலும் காலிலும் அடித்துத் துவைக்கிறாள். விடாமல் அவள் இப்படி அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கதைசொல்லி “ஏய், நிறுத்து, நிறுத்து” என்று கத்திய பின் அடிப்பவள் நிறுத்தி விட்டுப் போய்ப்

படுத்துக் கொள்கிறாள். இதற்குள் நடையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூடி விடுகின்றனர். கதைசொல்லி அந்த அடித்தவளைப் பார்த்துத் திட்ட அவள் எழுந்து வந்து “வேணும்னா நீர் என்னை அடியும் ” என்று எகிறுகிறாள். பக்கத்திலிருப்பவர்கள் கதைசொல்லியை அந்தப் பக்கம் இழுத்துக் கொண்டு போய் உமக்கேன் வம்பு என்கிறார்கள். 

இன்றும் அதே கதை திரும்ப நடக்கும் போது பொறுக்க முடியாமல் கதைசொல்லி, மனைவி தடுத்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கிழவியின் அருகில் செல்கிறார். ‘ஏம்மா இப்படித் தினமும் படுத்துகிறாய் ?’ என்று கேட்கையில் பசியெடுத்ததால் பழம் வாங்கக் கடைக்குப் போனதைச் சொல்லுகிறாள். வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறது. அதனால் கதைசொல்லி “பாட்டி, ரொம்பக்  குளிரா இருக்கு. எங்க வீட்டிலே வந்து படுத்துக்குங்கோ. காலம எழுந்துண்டு போயிக்கலாம்”என்கிறார்.

“உங்க வீட்டிலியா?”

“ஆமாமாம். வாங்கோ, பாதகமில்லே. கதவோ திறக்கிற வழியாயில்லே. குளிர் நடுக்கறது. என்ன செய்யிறது? வாங்கோ.ஒரு பாயும் போர்வையும் தரேன். உள்ளே வந்து படுத்துக்குங்கோ.”

பாட்டி தயங்கினாள்.

“வாங்களேன்.”

“நீர் தனியா இருக்கீறா? வீட்டில் இன்னும் யாராவது இருக்காளா?”

“எல்லாரும் இருக்கா.”

“எல்லாரும்னா?”

“வீட்டுக்காரி இருக்கா. மூணு குழந்தை இருக்கு.”

“அப்படின்னா வரேன்.”

உள்ளே போய்ப் படுத்துக் கொண்ட கிழவியிடம் கதைசொல்லியின் மனைவி கேட்டாள்: “தனியா இருக்கேளா?   வீட்டில் இன்னும் யாராவது இருக்காளான்னு கேட்டேளே. இப்ப நன்னா தூங்கலாமோல்லியோ?”

“என்னமோம்மா , நாலு பேர் நாலு சொல்லுவா. அதுக்கு இடம் கொடுப்பானேன்….லோகம் பொல்லாதது. இப்ப குளிர் விட்டது பாரு” என்று இருமினாள் கிழவி. 

“உங்களுக்கு நன்னா வேணும்” என்று கதைசொல்லியைப் பார்த்து அவர் மனைவி சிரித்தாள்.

அம்மா ! இந்தக் கிழவியிடம் என்ன பொல்லாத்தனம் ! என்ன அக்கிரமம் ! 

மனுஷனைத்  தூக்கி வாரிப் போடச் செய்யவில்லை?

                                               & & &

 “வேண்டாம் பூசனி மற்றொரு கதை.

மனிதர்கள் ராட்சசர்களாக இருக்க வேண்டும் என்பது உலகின் நியதிகளில் ஒன்று. அதற்காக அவர்கள் ராவணனின், கம்சனின் குலத்தில்தான் பிறக்க வேண்டும் என்றிருக்க வேண்டியதில்லை.  ராதாவின் வீட்டிலும் அவளுடைய குழந்தைகளாகப் பிறந்து அவள் ராதாப்பாட்டியாக ஆகும் போது அவர்கள் அரக்கர்களாக மாறிவிடும் சாத்தியமிருக்கிறது. அவள் குடும்பத்தில்

அதுவும் ஒரு பிள்ளை இல்லை. மூன்றில் இரண்டு பிள்ளைகள் அப்படி அசுரர்களாக மனிதாபிமானம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் பிரகிருதிகளாக மாறி விடுகிறார்கள். மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் எழுதப்பட்ட தி.ஜா.வின் இந்தக் கதை “அந்தக் காலம் அப்படியொண்ணும் பொன்னான காலமில்லையோ? ” என்ற சம்சயத்தை இன்றைய இளம் வாசகனுக்கு ஏற்படுத்தக் கூடும். இன்று முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று சிறை வைக்கப்படும் சூழ்நிலைக்குப் பதிலாக எண்பத்தி இரண்டு வயதுத் தாயைத் தனியாக ஒரு வீட்டில் இருக்க வைத்து அவளையே வீட்டைப்  பெருக்கி சுத்தம் செய்து தனக்காக சமைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கைக்குத் தள்ளி விடுகிறார்கள்.  இனிமேல் ஒரு சோதனை பாக்கியில்லை என்பது போலக் கால வெள்ளம் ஏற்றித் தந்த வடுக்கள் நிறைந்த வாழ்க்கை.

 கிழவி வாழும் வாழ்க்கையில் அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப்  பாருங்கள்:

பாட்டிக்குக் கைகால்கள் எல்லாம் வீங்கி விட்டன. திடீர் திடீரென்று கிறுகிறுவென்று மயக்கம் வருகிறது. கண்ணில் நிழலாடுகிறது. பொழுது சாய்ந்து விட்டால் இந்த அரைப் பார்வையும் மங்கி விடுகிறது. நடக்கவோ முடியவில்லை. தெம்பு இல்லை. ராத்திரி பலகாரம் அவளே செய்து சாப்பிட வேண்டுமென்பதால் அதை நிறுத்தி விடுகிறாள்.

 மூத்த பிள்ளையைப் பார்த்து இரண்டு வருஷமாகி விட்டது. எப்போதாவது நான்கு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து விட்டுப் போவான். தாயார் தகப்பனார் என்று இருவர் மீதும் கோபம் அவனுக்கு. ‘அவனது பெற்றோர்கள் அவனை விடச் சின்னவனுக்கு அதிகம் செய்து விட்டார்கள்’ என்று அவன்  மனைவி போட்டுக் கொடுத்து விட்டாள். அவள் அவனை மேலும் தூண்டி சொத்தைப் பாகம் பிரித்து எடுத்துக் கொண்டு இருவரும் போய் விட்டார்கள். அப்பா இறந்த போது வந்தவன் கடைசிக் காரியமெல்லாம் செய்ய மாட்டேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டு நின்ற கனவானாக இருந்தான். பிறகு

மற்றவர்கள் அவனைக் கரைத்துப்  பணத்தைக் 

கொடுத்துப் பண்ண வைத்தார்கள். அவன் மனைவி அந்த நேரத்திலும் கூட வந்து பார்க்காத புண்ணியவதியாக இருந்தாள். 

நடுப்பிள்ளை சுவீகாரம் போய்விட்டான்.  

கடைசிப் பிள்ளையும் அவன் மனைவியும் பெரியவனையும் அவனது மனைவியையும் நல்லவர்களாக்கி விட்டார்கள்,  ‘தாயார் பெண்ணுக்கு அதிகமாகச் செய்கிறாள்’ என்பது அவன் எண்ணம். அவன் பெண்டாட்டிக்கு அதில் சந்தேகமே இல்லை.  ஒரு நாள் 

“அம்மாடியோவ்; வயசாவது ஆகவாவது. ஒண்ணரைப் படி சாதம் சாப்பிடறதே !. என்னாலே போட  முடியாது” என்று ஒரு கர்ஜனை போட்டாள். அம்மா அப்படியே மண்டையில் அடித்தாற் போலத் திகைத்து விட்டாள். பிள்ளை தலையைக் குனிந்து கொண்டே வாசலுக்குப் போய் விட்டான். சாதத்தை விழுங்க முடியாமல் கிழவி தாரை தாரையாகக் கண்ணீர் விட்டாள். குழந்தைகள் திக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தன. இந்த அதிர்ச்சியில் அவள் இலையைக் கையோடு எடுத்துச் செல்ல மறந்து விட்டாள். “ஏ முண்டமே ! இந்த எச்சில் இலையை யார் தூக்கிண்டு போவா?” என்று எச்சில் இலையை எடுத்துப்  பாட்டி தலை மீது வீசிவிட்டாள் அவள். பாட்டி வாய்விட்டு அழுது கொண்டே இலையைப் பொறுக்கி வாசலில் எறிந்து கையை அலம்பிவிட்டு அப்படியே நடுப்பிள்ளை வீட்டைப் பார்க்க ஓடிப் போய் நடந்ததைச் சொல்லி அழுதாள். நடுப்பிள்ளை ரௌத்காரமாகச் சீறிக் கொண்டு வந்து தம்பியையும் அவன் பெண்டாட்டியையும் கத்தி எச்சரித்தான். அதற்குப் பின் கிழவி அந்த வீட்டிலேயே ஒரு ஓரமாக சமைத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். அதுவும் ஆறுமாசத்துக்கு மேல் ஓடவில்லை. திடீரென்று உலர்த்தியிருக்கிற புடவையின் நடுவில் தானாக ஒரு கஜம் கிழிந்திருக்கும். படுக்கிற இடத்தில் ஒரு முட்டுச் சாணம் உறைந்திருக்கும். கரண்டிகள் மறைந்து விடும்.

அதன் பிறகு நடுப்பிள்ளை இருக்கிற கோடி வீட்டில் ஒன்றியாக ஆறு வருஷமாக ஒரு அறையில் இருக்கிறாள்.  ஒரு நாள் தலையைச் சுற்றிக்  கீழே விழ மண்டையில் நல்ல அடி. இரண்டு நாள் கழித்து அவள் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூட்டிச் செல்கிறார்கள்.’இன்னும் நாலைந்து மாதம்தான் தாங்கும். கிழவியின் பாத்திரங்கள் எல்லாம் தனக்கு வந்து விடும்’ என்ற பெண்ணின் கணக்கோடு.  அங்கும் எட்டு மாதம் ஆகும் போது பெண் ஒரு நாள் ஏதோ பேச்சு வாக்கில் “நீ சாப்பிட்டா இங்கே ஆயிடப் போறது?” என்று வறண்ட குரலில் சொல்கிறாள். பாட்டிக்கு அது பிடிக்கவில்லை. நடுவில் ஒருநாள் மூத்த பிள்ளை வந்து தனக்கு சஷ்டியப்தபூர்த்தி என்று சொல்லி விட்டு அவளை ‘வா !’ என்று  கூப்பிடாமலேயே திரும்பிப் போய்

விடுகிறான். அதைப்  பெண் குறை சொல்லும் போது கிழவிக்கு இதையேன் இவள் பெரிது படுத்துகிறாள் என்றிருக்கிறது. வர வர பெண்ணும் அம்மாவுக்குத் தான் போட்ட கெடுவுக்கு மேல் அம்மா பிழைத்திருப்பதைச் சுட்டிக் காட்டுவது போலப் பேசுகிறாள். ஒரு நாள் மாலை முற்றத்தில் இறங்கும் போது கால் தடுக்கிப் பாட்டி இசைகேடாக விழுகிறாள்.ரத்தம் ஆறாகப் பெருகி வழிகிறது. ஆஸ்பத்திரி மூன்று மைலில் இருக்கிறது. டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போக மாப்பிள்ளை முன்வர மாட்டேன் என்கிறார். எதிர்வீட்டுக்காரர் நிர்ப்பந்திக்க மாப்பிள்ளை வீட்டின் பின்புறம் சென்று உட்கார்ந்து கொள்கிறார். “என் பாட்டி, தாத்தா ரெண்டு பேரும்  இப்பிடித்தான் விழுந்து செத்துப் போனா. அதே மாதிரிதான் அம்மாவுக்கும் வந்திருக்கு.” என்று பெண் வருகிறவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இரவு வெகு நேரம் கழித்துப் பாட்டிக்கு ரத்தப்பெருக்கு நின்று கசியும் நிலைக்கு வருகிறது. மறுநாள் மாலை அந்தக் கசிவும்  நின்று போய் விடுகிறது. பாட்டி அதற்கு மறுநாள் வரும் சிவராத்திரிக்குத் தன்னை ஊரில் கொண்டு விடச் சொல்கிறாள். அறுபது வருஷமாக சிவனைத் தரிசித்து வரும் வழக்கத்தை இந்தக் கடைசித்  தரிசனம் தடுத்து விடக் கூடாது என்கிறாள். மறுநாள் நடுப்பிள்ளை இருக்கும் ஊருக்குக்  கிளம்பி விடுகிறாள். வீட்டை அடைந்ததும் வண்டி வந்த சத்தம் கேட்டு நடுப்பிள்ளையும் அவன் மனைவியும் வாசலுக்கு வந்து பார்க்கிறார்கள். வண்டியில் அசையாமல் இருக்கும் கிழவியைப் பார்த்து தூங்குகிறாள் என்று எழுப்புகிறான் பிள்ளை. கிழவி கைலாசத்தில் சிவனாரின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

மேலே அனுபவங்களைச் சுருக்கிச் சொல்ல முயலும் போது தி. ஜா.வுக்கு இழைக்கப்படும் அநியாயத்தைத் தவிர்க்க முடியவில்லை. தி. ஜா எழுதிக் காட்டும் இந்த சம்பவங்களில் பொதிந்திருக்கும் அவரது நுணுக்கமான பார்வை, சொல்லாட்சி, மனிதாபிமானத்தின் பல்வேறு கண்ணாமூச்சி ஆட்டங்கள் ஆகியவற்றை ஒரு வாசகர் சிறுகதையைப் படித்துத்தான் அறியவும் உணரவும் முடியும். இவ்வளவு துன்பங்களையும் எதிர்கொள்ளும் கிழவியின் மனஓட்டம் எவ்வாறு இருக்கிறது? அவளைத் தன்னிரக்கம் சூழ்ந்து கொள்ளும் அதே நேரத்தில் தனக்கு இவ்வாறு நிகழக் காரணம் என்ன என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பி விடை காண முயலுகிறாள். 

துக்க சாகரம் சூழ்வதற்கு முன்பு அவளது வாழ்வு எவ்வாறு இருந்தது? சாந்தி கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்த புதிதில் பிடாரியம்மன் புறப்பாட்டுக்காகத் தெருவடைத்துக் கோலம் போட்டாள். ஊரே அதைப் பார்த்துப் பிரமித்தது. “நன்னாப்  போட்டே அசடு !” என்று மாமியார் பூரிப்புத் தாளாமல் சுவாமி அலமாரியைத் திறந்து அவள் நெற்றியில் திருஷ்டிப் பொட்டாக விபூதி இட்டு விட்டாள் . தெய்வப் பிறவி ! அந்த மாமியாருக்குப் பின்னாளில்  முடக்கு வாதம் வந்து இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல் இருந்த போது ராதையும் அவளுக்குக்  கொஞ்சமாகச் செய்யவில்லை. ஒரு காரியம் விடாமல், ஜுகுப்ஸை இல்லாமல் செய்தாள். ‘உனக்கு ஒரு குறையும் வராதுடியம்மா ‘என்று வாயார அவள் ஆசி கூறினாள். அந்த உத்தமி வாக்கு ஏன் பலிக்கவில்லை? 

‘தெய்வத்தின் வழியே தனக்குப் புரியவில்லை’ என்று கிழவி நினைக்கிறாள். மாமியார், மாமனார், மைத்துனர்கள்  எல்லோருக்கும் அவள் கொஞ்சமாகவா உழைத்தாள்? அரை மனது, கால் மனது என்றில்லாமல் கபடமில்லாமல் அவள் செய்தது பகவானுக்குத் தெரியும். எல்லோரிடத்திலும் நல்ல பெயர். ‘நீ செத்த இடத்தில் செங்கழுநீர் பூக்கணும்னுடீம்மா’ என்று மாமனார் ஆசீர்வாதம் செய்வது வழக்கம். ஆனால் பாட்டிக்கு எந்த ஆசை, எந்த ஆசீர்வாதம் பலித்தது?

நடுப்பிள்ளை வீட்டுக்குப் பாட்டி கிளம்பிப் போகிறாள், அப்போது அவளுக்கு வண்டி கைலாசத்தை நோக்கிப் போவது போலத்  

தோன்றுகிறது. “ஈசனே, என்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பி விடாதே. வேண்டாத பூசனிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்” என்று வழி பூரா சொல்லிக் கொண்டு வருகிறாள். கடைசியில் அவளுடைய  இந்த ஆசைதான் பலிக்கிறது.     

                     .   

.   

Series Navigationஅயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *