சொன்னதும் சொல்லாததும் – 1

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 11 in the series 13 செப்டம்பர் 2020

   
   
    அழகியசிங்கர்


    நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம்.  அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும்.  ஆனால் படிப்பதோடு சரி.  அப்படியே விட்டு விடுவேன்
.      திடீரென்று தற்சமயம் ஒரு எண்ணம்.  வாசிக்கிற கவிதையைக் குறித்து எதாவது சொல்ல முடியுமா என்று.
    முதலில் எதாவது ஒரு கவிதையை எடுத்துக்கொள்வோம்.
    ஞானக்கூத்தனின் ‘கல்லும் கலவையும்’  என்ற கவிதையை எடுத்து  வைத்துக்கொண்டேன். 
    முதலில் கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்லும் கலவையும்

கல்லும் கலவையும் கொண்டு
கரணையால் தடவித் தடவி
சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்
ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்
கட்டிடம் இல்லை பாலம்

முன்னாளெல்லாம் பாலம்
தியானித்திருக்கும் நீருக்கு மேலே
இந்நாளெல்லாம் பாலம் …
நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு

ஆதியில் இந்தப் பாலம்
தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்
போகப் போகப் போக
மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி
ஒருவாறாகிப் பிறந்தது பூமியில்

ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது
வேலியும் படியும் கம்பமும் ஏணியும்
தானே என்றது பாலம்
இன்னும் கொஞ்சம் நின்றால்
என்னையும் தானே என்று
கூறக்கூடும் பாலம்
என்கிற எண்ணம் உதிக்க
வருகிறேன் என்று புறப்படும் பொழுது
என்னைப் பார்த்துப் பாலம்
சிரிப்பில்லாமல் சொல்லிற்று

ஜாக்கிரதையாகப் போய் வா
எங்கும் ஆட்கள் நெரிசல்
உன்னைத் தள்ளி உன்மேல்
நடக்கப் போறார் பார்த்துக் கொள்.


    இந்தக் கவிதை முதலில் பாலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறதா அல்லது பாலத்தை உருவாக்கும் மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறதா என்று முதல் வாசிப்பில் தெரியவில்லை.
    முதல் மூன்று பாராக்களில் பாலத்தைப் பற்றிய விபரங்கள் வருகின்றன.
    முதல் பாராவில் பாலம் எப்படிக் கட்டப் படுகிறது என்ற தகவல் கிடைக்கிறது.
    கல்லும் கலவையும் கொண்டு/கரணையால் தடவித் தடவி/
சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்/ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்/கட்டிடம் இல்லை பாலம்
    பாலத்தைப் பற்றி விவரிக்கும்போது அது கட்டிடம் இல்லை ஆனால் பாலம் என்கிறார்.  சாவிப் பொத்தல் மாதிரி தெரியும் என்கிறார் சாவிப் பொத்தல் என்று பாலத்தைப் பற்றிக் குறிப்பிடுவது சிறப்பாக வருகிறது. 
    அடுத்தப் பாராவில் முன்னாளெல்லாம் பாலம்/தியானித்திருக்கும் நீருக்கு மேலே/ என்கிறார்.  சற்று நிதானமாக யோசிக்க வேண்டும்.  ஏன் இப்படி சொல்லியிருக்கிறார்?  பாலம் இருந்தாலும் பாலத்தின் மீது முன்பெல்லாம் நடமாட்டம் இருக்காது. அதனால் தியானித்திருக்கும் நீரின் மேல் என்கிறார்.     பாலத்தின் மீது யாராவது நடந்தால் நடமாட்டம் இருக்கும்.  யாரும் நடக்கவில்லை என்றால் சலசலப்பு இருக்காது.
    அதற்கு அடுத்த இரண்டு வரிகளில் இந்நாளெல்லாம் பாலம்/நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு. நீரின் மேல் இருக்கும்  பாலம் நிலத்திலும் ஊடுருவுகிறது.  பாலம் கட்டி எழுப்பி விட்ட பிறகு  எல்லோர் கண்களில் பட்டு விடுகிறது.  நிலத்திலும் உரிமை கொண்டாடி விடுகிறது பாலம்.
    மூன்றாவது பாராவில் பாலம் உருவாகிறது என்பதைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.  எப்படி? ஆதியில் இந்தப் பாலம்/தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்/போகப்போகப் போக/மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி/ஒருவாறாகிப் பிறந்தது  பூமியில்.
    ஒருநாள் பாலத்துடன் பேசுகிறார் கவிஞர்.  என்ன சொல்கிறது பாலம்?  வேலியும் படியும் கம்பமும் ஏணியும் தானே நான் என்கிறது பாலம்.  பாலத்தின் பயன்பாடு பற்றி கவிஞர் விவரிக்கிறார். கவிஞருக்குக் கவலை வந்து விடுகிறது.  எங்கே தன்னையும் நான்தான் என்று பாலம் சொல்லி விடுமா என்ற பயம்.  உடனே வருகிறேன் என்று புறப்படும் பொழுது, கவிஞரைப் பார்த்து சிரிப்பில்லாமல் பாலம் சொல்கிறது.
    ஜாக்கிரதையாகப் போய் வா/ எங்கும் ஆட்கள் நெரிசல்/ உன்னைத் தள்ளி உன்மேல்/நடக்கப் போறார் பார்த்துக் கொள் என்கிறார் ஞானக்கூத்தன். 
இப்படிச் சொல்வதன் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார்? நெரிசல் அதிகமாக இருப்பதால் ஒருவர் மீது ஒருவர் மிதித்தபடி செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.  அதைப் போல் ஏற்படாமலிருக்க நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
    நான் ரசித்த அற்புதமான கவிதை இது. அதாவது முதல் 3 பாராகளில் பாலம் கட்டுவது போல் வர்ணனை.  நாளாவது பாராவில் பாலம் பேசுகிறது.  ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறது.  இப்படிப் பாலமே பேசுவதால் இது ஒரு சர்ரியிலசக் கவிதையாக மாறி விடுகிறது. 
   

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்கண் திறப்பு
author

Similar Posts

Comments

  1. Avatar
    Subramanian Sridhar says:

    Long shot – இல் கவிஞர் பாலம் கட்டும் ஆட்களை பார்கிறார். அவர்கள் சாவித்துவாரம் போல தெரிகிறார்கள்… இரண்டாவதாக, முன்பெல்லாம் நீர் நீலைகள், ஆறுகளின் மேல் தான் பாலங்கள் கட்டப்பட்டது. உதாரணம் கூவம்…. தற்காலத்தில் சாரை நெரிசலை குறைக்கவேண்டி பாலங்கள் சாலையின் மேலேயே கட்டப்படுவதாய் சுட்டிக்காட்டுகிறார். ஆதியில் என்று சொல்லவருவது பாலத்திற்கு முதலில் கட்டப்படும் சாரங்களை சொல்கிறார். தென்னை பனை போன்றவைகளை கொண்டு கட்டப்படும் சாரத்தை சொல்லி செல்கிறார்…… Still Bridges எந்த நெரிசலையும் குறைக்கவே இல்லை என்கிறார்…
    நிறைய நையாண்டியுடன் எழுதப்பட்ட சிறந்த கவிதைகளில் ஒன்று இது எனலாம்… 🙏🙏✅✅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *