தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி

This entry is part 10 of 11 in the series 13 செப்டம்பர் 2020

 

‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை.   ‘ப’ வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை – எந்த வேளையிலும் நாமம் இல்லை.குளிக்கக் கூட அவருக்கு மனசு வரவில்லை.மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ,தோலுக்கு அசல் மண் நிறமே வந்து விட்டது.

தி. ஜா. பத்து செட்டியை வருணிக்கும் விதத்தில் உங்கள் மனக்கண்ணில் அடி வாங்கிக் கீழே விழுந்து விட்ட, மேலே எழுந்திருக்க முடியாத ஓர் உருவம் தென்படலாம்.

அது சரிதான். அவர் அப்பா பாலு செட்டி எப்படியிருந்தார் ! எவ்வளவு ஜெரப்பா கலியாணம் பண்ணினார் ! பாண்டு என்ன, கச்சேரி என்ன, நாலு குதிரை சாரட்டிலே ஊருகோலம். பெரிய மளிகைக் கடை.. இப்போது அந்தக் கடை இல்லை. பத்து போண்டியாகி விட்டார். வீட்டோடு விதவைகளாகி விட்ட மூன்று அக்காக்கள், மனைவி, மூன்று குழந்தைகள். எல்லோரும் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ?

இந்தப் பத்து செட்டி திண்ணையில் உட்கார்ந்து படிக்கிற கதைசொல்லியைத் தாண்டிப் போகையில் விடாமல் கேட்பார்:

“இப்ப எந்த க்ளாசு?’

“ஆறாவது.”

“நல்லாப் படி” என்று உபதேசமும் செய்து விட்டு நடப்பார்.

அடுத்த வாரமும் அதே கேள்வி.

“இப்ப எந்த க்ளாசு?”

“ஆறாவது.”

“நல்லாப் படிக்கணும்.”  

வாரா வாரம் இதே கேள்வி. இதே பதில். இதே உபதேசம்.

கதைசொல்லி பி.ஏ. கடைசி வருஷம் படிக்கையில் பத்துவின் அக்கா கதைசொல்லியின் அம்மாவிடம் வந்து சொன்னாள். ஏழெட்டு வருஷமாக பத்து திண்ணையில் கணக்கெழுதிக் கொண்டிருக்கிறாராம். தினப்படி வரவு, செலவு, பயறு கொள்முதல், கொடைகள் கொடுத்தது என்று தினமும் கணக்கு, ஒரு இருநூறு பக்க நோட்டுப் புத்தகத்தில் இருபத்தி ஐந்து கோடிக்கு மேல் வரவு செலவு ! பிலாத்துவின் அக்கா கேட்டுக் கொண்டபடி கதைசொல்லியின் அப்பா ஒரு நாள் விபூதி மந்தரித்துக் கொடுத்தார். முடிந்தால் குணசீலம் போகச் சொன்னார். ஐம்பது ரூபாய் கடனும் கொடுத்தார். 

இது நடந்து முப்பது வருஷங்களாகி ஒரு நாள் ஐநூறு ரூபாய்க்கு செக்கும் கடிதமும் பத்துவிடமிருந்து கதைசொல்லிக்கு வருகிறது – 

அவர் நடத்தும் ஹைஸ்கூல் ஆண்டு விழாவுக்கு அழைத்து. இவர் போகிறார்..பத்துவின் வீடு இப்போது பழைய வீடு இல்லை. இட, வல வீடுகளையும் வாங்கி, பெரிய இரண்டு மாடிப் பங்களாவாகக் கட்டி விட்டார். ஆனால்  அதே பழைய பத்துதான். கொஞ்சம் நரை நாமம். ஸ்ரீசூர்ணம். சில்க் ஜிப்பா. ஒரு ‘சேட்டு’ மெத்தையில் இரட்டை நாடியாக உட்கார்ந்திருந்தார். பத்து வயசு எழுபது இருக்கும். ஆனால் தோற்றத்தில் ஐம்பது, ஐம்பத்தைந்து 

கதை சொல்லிக்கு ‘சில பேர் சில விஷயங்களில் மட்டும் ஒரு தினுசாக இருப்பதுண்டு’ என்று தோன்றுகிறது. அவருடைய உறவினர்களில் ஒரு பெரிய வைத்தியர். நல்ல பெயர். நல்ல கைராசி. ஆனால் திடீர் திடீரென்று அவருக்கு மைசூர் மகாராஜா தனக்குப் பெண் கொடுப்பதாய் வாக்களித்திருப்பது போல் நினைவு வரும். கல்யாணம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகவும் சில வித்வான்களின் சௌகரியத்தை உத்தேசித்தும் சில பந்தல்காரர்கள் ப்ரீயாக இருக்கிற தேதிகளை உத்தேசித்தும் இப்படி பேசிக் கொண்டே போவாராம். (பின்னாளில் ‘செம்பருத்தி’யில்  அரைக் கிழிசல் அண்ணாக்குட்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடியைச் சூடிக் கொள்ளத் தயாராவது  போலத்தான் !)

பத்து சொல்வதிலிருந்து அக்காவுடன் குணசீலத்துக்குக் கிளம்பிப் போனவர் அங்கே ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்தார். கையில் அவரிடமிருந்த  நாற்பத்திரெண்டு ரூபாயில் பத்தில் ஒரு பங்கு என நாலு ரூபாயும் மூணரையணாவும் அந்த வெள்ளைக்காரனிடம் அவன் கேட்டபடி  கொடுத்தார். அவன் அவரை ஆசீர்வதித்து ‘உனக்கு நாற்பத்தி மூணரை லட்சம் வரும் போ. பத்தில் ஒரு பங்கை ஏழைப்பட்டவர்களுக்கு, இல்லாதவர்களுக்குக் கொடுத்து விடு’ என்றான். அதன் பிறகு அவரும் அக்காவும், எச்சில் கையால் காக்கை ஒட்டாத ஒரு உறவினர் வீட்டுக்குப் போகும் போது என்ன நிலைமை என்று அவர் கேட்டார். பிறகு ஒரு ஐயாயிரம் கொடுத்து கடையை வைக்கச் சொன்னார். அதிலிருந்து பத்தில் ஒரு பங்கு என ஐநூறு எடுத்து  பத்து ஒரு ஸ்கூலுக்கு கொடுத்தார். வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது.  இப்போது அவர் சொத்து மதிப்பு நாப்பத்தி மூணரை லட்சம் !

இந்த உலகத்தில் ஏழை பணக்காரனாக மாறுவது எப்படி வேண்டுமானாலும் நடக்கும் என்பதைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதனால் பத்துவுக்கு நடப்பது என்னால் நம்ப முடிந்த கதையாகத்தான் எனக்கு இருக்கிறது.

பத்து கதைசொல்லியிடம் கேட்கிறார்: “இப்பவும் நான் நாலு லட்சத்து முப்பத்தஞ்சாயிராம் இந்த நிமிஷம் தர்மமா தூக்கிக் கொடுக்கறேன்னு வச்சுக்க. நாலு கோடி முப்பத்தைஞ்சு லச்சமாகி, சொத்து பெருகும். யார் மானேஜ் பண்றது! “

என்ன ஒரு லாஜிக் ! ஸோ, சொத்து சேர்ந்து தன்னை அடித்து விடக் கூடாது என்று தர்மத்துக்கும் ஒரு புல்ஸ்டாப் வைத்து விடும் பத்து, கதை சொல்லியிடம் “இப்பவும் என்னைப் பாத்தா பைத்தியமாத் தோண்றதோ” என்று கேட்கிறார்.

“பெரிய பைத்தியம்” என்று கதை சொல்லி சிரிக்கிறார். 

“”நீ சொல்லுவேன்னு தெரியும். இப்ப பசங்கள்ளாம் என்ன கிளாஸ் படிக்கிறா?”  

வறுமையோ செல்வமோ எதுவாக இருந்தாலும் பத்து மனிதராகக்  கொஞ்சமும் மாறவில்லை என்பதைத் தெரிவிக்கும் முத்தாய்ப்பான கடைசி வரி. 

தி. ஜானகிராமன் தி. ஜானகிராமன்தான் ! 

 .

Series Navigationசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    ஜானகிராமனின் பத்து செட்டி கதையின் சாரத்தை சுவையாக சிந்துஜா பரிமாறுகிறார்.வாழ்ந்தாலும் கெட்டாலும் மனிதத் தன்மை மாறாதவர்களைப் அருமையான படம்பிடிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *