ஒரு தலைவன் என்பவன்

author
0 minutes, 17 seconds Read
This entry is part [part not set] of 19 in the series 1 நவம்பர் 2020


கௌசல்யா ரங்கநாதன்
-1-
சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான் எனக்கு விளங்கியது 40 கி.மீ. தூரத்தை அந்த பேருந்து கடக்க எப்படியும் 2 மணி நேரமாவது ஆகுமென.குண்டும்,குழியுமான சாலை, வளைந்து,நெளிந்து,பக்கவாட்டில் இன்னொரு பஸ்ஸோ,காரோ, வேறு ஏதாவது வண்டிகளோ வந்தால் டிரைவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்..அது மட்டுமல்ல..எங்களுக்கு பிறகு
அந்த வண்டியில் ஏகப்பட்ட குஞ்சும்,குளுவான்களும், தாய்மார்களும், அகவை முதிந்தவர்களுமாய், உட்கார இடமில்லாமல் நின்று கொண்டும் வருவது பார்த்து கண்களில் கண்ணீர் சுரந்தது..வியர்வை ஆறாய் பெருகி ஓடியது..பேருந்தும் மிக மெதுவாய்த்தான் ஊர்ந்து,ஊர்ந்து சென்றது..


அம்மாவை வேறு சென்னையில் தனியே விட்டு,விட்டு வந்திருக்கிறோம்..எப்படியும் இன்று குல தெய்வ பிரார்த்தனை முடித்து உடனடியாய் சென்னை திரும்பியாக வேண்டும்.. இப்படி போய்க்கொண்டிருந்த பஸ் திடீரென நிற்க,பஸ்  பழுதாகிவிட்டது போலும் என்று நினைத்து, பக்கத்து இருக்கையில் இருப்பவரை வினவிய போது, அவர் சொன்னார்..” ஊம்..எல்லாம் நம் தலைவிதி சார். இங்கே இன்னைக்கு ஒரு அரசியல் கட்சி போராட்டம் நடத்துது..
சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் ஏகப்பட்ட மக்களை பேருந்துகள்,மினி டெம்போக்கள், டெம்போ டிராவலர்ஸ்கள் மூலம் அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க..இது ஒரு சின்ன கிராமம்..சாலை வசதிகள் சுத்தமா இல்லை..அதனால் அவங்க வந்த வண்டிகளை எல்லாம் தெருப்பூராவும், பிரதான சாலைகளின் நடுவாலும் நிறுத்தி வச்சிருக்காங்க..இது இந்த ஊர் அரசியல்வாதியின் வேலையாம்…ஆனா, ஆள்பவர்களாகட்டும், மற்ற கட்சிகளாகட்டும், சமூக ஆர்வலர்களாகட்டும், இப்படி யாருமே பொது மக்களை பத்தி துளியும் கவலை படறதே இல்லை..இங்கிருந்து 10 கி.மீ. தூரம் போய்த்தான் பசங்க
படிக்கணும்..15 கி.மீ. தாண்டினாதான் காலேஜ்..மருத்துவமனை, சின்ன, நடுத்தர தொழிலகங்கள்..அங்கே வேலைக்கு போக இந்த ஒரு பஸ்தான் உண்டு..அதுவும் ஒரு நாளைக்கு 4 முறைதான்..இப்ப போல எல்லாருமே நெக்கி தள்ளிக்கிட்டு போய் வரணும்..சுதந்திரம் வந்து 73 வருஷங்கள் முடிஞ்சு போச்சு..இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழுதுனு தேச பிதா அன்னைக்கே சொல்லிட்டு போய்ச் சேர்ந்துட்டார்..ஆனா நம்ம நாடு பூரா உள்ள ஆறுகள்,குளங்கள்னு,  எல்லாம் வரண்டு போய் வெள்ளாமை இல்லாம தவிக்குது..ஆனால் எதை,எதையோ அந்தந்த சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல உருக்கமா பேசி ஏதோவொரு கட்சி ஆட்சியை பிடிச்சுருது..ஆனா கொடுத்த வாக்கை..வேணாமே இதற்கு மேல்..நான் உங்களை போரடிக்கிறேனோ சார்..ஆனாலும் நாட்டில் இன்னைக்கு நடக்கற அக்கிரமங்களை புட்டு,புட்டு வைக்காமல் இருக்கவும் முடியலை..ஆனாலும் நம்மைப்போல் உள்ள நடுத்தர வர்கம் புலம்பத்த்தான் முடியும்…ஊம்..மத்ததை நீங்களே பாருங்க..” என்றார்… அங்கே நாலா பக்கங்களிலும் மனித தலைகள், வண்டிகள், திரும்பக்கூட முடியாம 1 கி.மீ. தூரத்துக்கு ஒண்ணு பின்னால் ஒண்ணாய் .. தலைவர் வேற வந்துக்கிட்டே இருக்காராம்..அவர் எப்படி இந்த சூழல்ல  வர முடியும்னு நினைச்சு, இங்கே நிக்கிற வண்டிகளை பின்னால் எடுத்து 1 கி.மீ. தூரத்துக்கு போகப் பணித்தனர், காவலர்கள் மற்றும் அங்கே கூடியிருந்த  அந்த கட்சிக்காரங்க எல்லாம்..ஆனாலும் முன்னும்,பின்னும்,இரு பக்கவாட்டுகளிலும் வண்டிகள் ஒண்ணோடு ஒண்ணு இடிச்சுக்கிட்டு,டிராஃபிக் ஜாமாகி, நிற்கிறதால வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி நிற்கிறார்கள்..


-2-
அப்போதுதான், அந்த கட்சிக்கார ஆள் ஒருத்தன் அந்த பேருந்து அருகில் வந்து, “இந்தாப்பா கண்டக்டர் உனக்கு வேற தனியா சொல்லணுமா?வண்டியை பின்னால எடுத்துக்கிட்டு போனு” அதட்டலா சொல்ல,பாவம் அந்த  கண்டக்டர்தான் என்ன செய்வார்..ஒரு பக்கம் அந்த ஆளின் கெடுபடி..”முன்னே நிக்கிற வண்டி மூவாகாம எப்படி ஐயா வண்டியை நான் வண்டியை எடுக்க முடியும்னு” கண்டக்டர் பணிவாய்த்தான் அந்த கட்சியாள் கிட்ட கேட்டார்..ஆனால் அவனோ “இதெல்லாம் எனக்கு தேவையில்லை..தலைவர் வந்து போற வரை இந்த பஸ் மட்டுமில்லை எல்லா வண்டிகளையுமே ஓரம் கட்டித்தான் ஆகணும்..நீ என்ன செய்வியோ,ஏது செய்வியோ..தலைவர் வந்தா என்னைத்தான் சாடுவார்னு சொல்ல, கண்டக்டர் “என்னையா சொன்னதையே திரும்ப,திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கே..என்னால் முடியாதுனு சொல்ல, அந்த வண்டியில் பயணம் பண்ற நாங்களும் கண்டக்டருக்கு ஆதரவு குரல் கொடுக்க, அதைப் பார்த்து, கீழே நின்னுக்கிட்டிருக்கிற சிலரும் அந்த கட்சிக்காரனை கண்டபடி ஏச ஆரம்பிச்சதோட, இங்கே நடக்கிற காட்சிகளை சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட ஆரம்பிக்க, விஷயம் பூதாகாரமாகிவிட, அந்த கட்சிக்காரன் கண்டக்டரை பார்த்து “எங்கிட்டயேவா மோதறே? இனி இந்த ரூட்டில் நீ எப்படி தினம் வண்டியை எடுத்துக்கிட்டு வந்து டியூடி பார்க்கிறேனு நான் ஒரு கை பார்க்காம விட மாட்டேன்னு கத்த, கண்டக்டரும் “நான் என் டியூடியை ஒழுங்கா பார்க்கிறேன்..எங்களுக்கும் ஒரு தொழிற்சங்கம் இருக்கு..” என்று உரத்த குரலில் பேசியது  அனைத்தும் சமூக  வலைதளங்களில் வைரலாய் பரவிட,போலீஸ் ஆபீசர்ஸ் உடனடியாய் அங்கு  வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் இரு தரப்பினரையுமே..ஆனாலும் தொடர்ந்து அந்த கட்சிக்காரன், கண்டக்டரைப் பார்த்து “நான் யாருனு உனக்கு விளங்க வைக்கிறேன் பாரு.நீ டெர்மினஸ் போறதுக்குள்ள..
இந்த பஸ்ஸை வழியிலய மடக்கி ஒரு கை பார்க்காம விட மாட்டோம்” என்று சூளுரைத்திட, அந்த பகுதி மொத்தமும், அடுத்தடுத்த ஊர்களிலும் விஷயம் தீயைவிட வேகமாய் பரவிட, ஒரு பதற்றத்துடனேயே, நாங்கள் போய்ச்சேர்ந்தோம் போலீஸ் வழியெங்கும் குவிக்கப்பட்டிருந்ததால்..நாங்கள் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஊர் திரும்ப எண்ணிய போது எங்கள் உறவினர் சொன்னார்..”நீங்க இப்ப ஊர் திரும்பிப்போறது அவ்வளவு நல்லதா படலை எங்களுக்கு..இன்னம் அந்த பகுதி பூரா ஒரு பதற்றமான சூழல்தான் தென்படுத்து..போலீசார் குவிக்கப்பட்டிருக்காங்க..எல்லா கட்சிகளுமே இந்த
 கட்சியின் செயல்பாடுகள் பத்தி  கண்டிச்சு அறிக்கை விட்டிருக்காங்க ..இப்படி ஒவ்வொரு கட்சியிலும் சிலர் அராஜகப் போக்கை கடைப்பிடிச்சா வரும் தேர்தல்ல எவன் நமக்கு ஓட்டு போடுவான்..இவங்ககூட கூட்டணி வச்சிருக்கிறதையே நாம மறு பா¢சீலனை பண்ணனும் போல இருக்கே” என்றெல்லாம் கருத்து சொல்ல, “ஒரே நாளில் கட்சியின் செல்வாக்கு அடிமட்டத்துக்கே போயிரும் போலிருக்கே..கடந்த சில வருஷங்களாய் நாம் தேர்தலில் தொடர் தோல்வியை சந்திச்சுக்கிட்டு வரோம்.. சீர்கெட்டு போன நம்ம இமேஜை கொஞ்சம்,கொஞ்சமா தூக்கி நிறுத்த படாதபாடு
பட்டுக்கிட்டிருக்கிறப்ப, இப்ப இந்த ஆளால் நம்ம  கட்சியே காணாம போயிரும் போல இருக்கே” என்று புலம்பிய தலைவர், அன்றே சமூக வலைத்தளங்கள்,  மின் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், மூலமாக தன் கட்சிக்காரன் சார்பாய் தான்  மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்,இனி இதுபோல் யாராவது அத்துமீறி நடப்பார்களேயானால், உடனடியாய் அதை தன் கவனத்துக்கு கொண்டுவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததுடன், இப்போது அந்த கட்சிக் காரனின்  அடிப்படை உறுப்பினர் பதவியையே பறித்துவிட்டதாகவும் தொடர் அறிக்கைகள் விட்டுக் கொண்டே இருந்தார்..அவர்தான் பாவம்..என்ன செய்ய முடியும்” என்றிருந்தது..


-3-
 “அந்தாளை மன்னிச்சு விட்டிருக்கலாமே தலிவா? யார்தான் தப்பு பண்ணலை இன்னைக்கு..?  சில அடிமட்ட, படிக்காத தொண்டர்கள் இப்படித்தான் நடந்துக்கறாங்க, உணர்ச்சி வசப்பட்டு..கட்சி தொண்டர்கள் எப்படி பொதுமக்கள் கிட்ட நடந்துக்கணும், நாம அரசியல்ல இருக்கிறது மக்களுக்கு சேவை செய்யன்றதையும் ஒரு பயிற்சி பட்டறை நடத்தி,”  என்றவர்களிடம் “இன்னைக்கு அரசியல்வாதிகள் ஒவ்வொருத்தருடைய நடவடிக்கைகளையும்,
அங்கங்கே நடக்கிற ஜனநாயக அத்துமீறல்களையும், யாராவது ஒருத்தர் உடனே சோஷியல் மீடியாக்களில் பதிவிடறாங்க..அது உலகம் பூரா உடனே பத்திக்குது.


இந்தாள், மற்றும் இவனுடைய தொண்டர்கள் சில நூறு பேர்கள்தான்..ஆனா இப்ப என் இந்த அவசர நடவடிக்கையால என் இமேஜ் வானளவுக்கு உயரும்..அதுவே வர தேர்தலில் நமக்கு நிறைய வோட்டை அறுவடை பண்ணும்.. அப்படி  பண்ணலைனாக்கூட பரவாயில்லை, தன் கட்சிக்காரனா இருந்தாலும் அவன் பண்ணின தப்புக்கு நான், உள பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறதா அறிக்கை விட்டது எவ்வளவு பெரும்தன்மையான நடவடிக்கைனு பாராட்டுவாங்க..ஒரு ஆரோக்கிய அரசியலுக்கு நாம் வித்திட்டதா வரும்கால சந்ததியினர் நம்மை பாராட்டுவாங்க இல்லையா!  இன்னொரு வேண்டுகோளும் இன்னைக்கு சமூக வலை தளங்களில்  பதிவிட்டிருக்கேன்.


அதாவது நம்ம கட்சியில சேர வரவங்க, அரசியலை வச்சு பிழைப்பு நடத்தணும்ன்ற எண்ணமுள்ளவங்க, தயவு பண்ணி வரவேணாம்..வசதி உள்ளவங்களோ, இல்லாதவங்களோ, தொண்டு உள்ளத்தோட, நலிந்த மக்களுக்கு சேவை பண்ணனும்..யார் எந்த நேரத்தில்,வீட்டுக் கதவை தட்டினாலும்,உடனே கொஞ்சமும் முகம் சுளிக்காத மனோபாவம் உள்ளவங்களா இருக்கணும்..இதுகூட, முதல்ல உன் குடும்பத்தை கவனி..பிறகு நேரமும்,தொண்டு உள்ளமும் இருந்தா மட்டுமே பொதுவெளிக்கு வா”..என்ற வாசகங்களும் வலைதளங்களில் பரவி வைரலாயிற்று..  
                                                                                 ———

Series Navigationதிருவழுந்தூர் ஆமருவியப்பன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *