‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 18 of 19 in the series 1 நவம்பர் 2020

  1. பிறவி

கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக்

காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம்.

There is many a slip between the cup and the lip என்று

சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து

எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி

ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள்.

பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை.

ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள்.

நீர்க்கோப்பையின் கனத்தில் கை நலுங்குகிறது.

மறுகையிலுள்ள ஸ்கேல் மிக நெருங்கிவரும் போதெல்லாம்

அரண்டுபோய் தம்மையுமறியாமல் மூடிக்கொள்கின்றன விழிகள்.

அதன் அச்சத்தை அதிகரிப்பதாய்,

ஒருமுறை ஸ்கேலின் மேற்பகுதி உதடுக்கு மேல் ஏறி

விழிமீதூர்ந்து புருவத்திலேறிவிடுகிறது.

ரணமாகிச் சிவந்த கண்களின் வலிநீக்க முன்வருவார் வரிசை யென்று என்றாவதிருந்திருக்கிறதா?

ஆனாலும் திரும்பத்திரும்ப முயன்றவண்ணமிருக்கிறாள் சிறுமி.

ஒவ்வொரு முறையும்

அவளுடைய இன்னொரு கையிலிருக்கும் கோப்பையிலிருந்து

தரையில் சிந்திக்கொண்டிருக்கிறது நீர்.

  • கைவீசம்மா கைவீசு…..

அளவைகள் ஒன்றுதாமென்றாலும்

அவற்றிலுள்ள பண்டங்கள் வேறு வேறு;

வாங்குபவர்களும் விற்பவர்களும் வேறு வேறு….

வாங்கிச்செல்பவர்கள் நுகர்வோர் என்றாலும்

அவர்களே பயனாளிகள் என்று உறுதியாகச் சொல்லவியலாது.

பணம்கொடுத்து வாங்குபவர்களா

பயன்படுத்துபவர்களா _

யார் நுகர்வோர்?

பணம்கொடுத்து வாங்கினால் தானா?

பண்டமாற்றுசெய்தால்…?

எது எதன் மாற்று?

எதன் மாற்று காற்று?

மனதின் விலைநிர்ணயம் பணத்தின் கையிலா?

பணத்தின் விலைமதிப்பு மனதின் கையிலா?

கையுண்டோ மனதிற்கு?

கைவீசம்மா கைவீசு

கடைக்குப் போகலாம் கைவீசு….

வீசும் கை வீசித் தளர

வீதியோரங்களில் மூடத்தொடங்கும் கடைகள்.

Series Navigationகொரோனா காலம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *