சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’

This entry is part 8 of 8 in the series 8 மே 2022

 

 

கே.எஸ்.சுதாகர்

இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (maruyuham@gmail.com) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது.

ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’.

எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள்.

1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)—தமிழ் ஈழ விடுதலை இயக்கம்— ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் 30 பெண்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் எல்லாளன் ராஜசிங்கம், சிவகாமியைச் சந்திக்கின்றார். அது முதல் கொண்டு, சிவகாமியைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கின்றார் அவர். தோழர் தோழிகளுக்கிடையேயான தொடர்புகள் தடைப்பட்டமையும், 2016 ஆம் ஆண்டில் எல்லாளன் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்’ புத்தகம் வெளிவந்த பின்னர் மீண்டும் தொடர்புகள் துளிர்விட்டதையும் எல்லாளன் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார்.

சிவகாமி இயக்கத்திலிருந்து விடுபட்டதன் பிற்பாடு, அவரை இசிதோர் பெர்னாண்டோ அறிந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரத்தின் பிற்பாடு, மருந்து உட்பட அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது – இசிதோர் பெர்னாண்டோவும் வேறு சிலருமாகச் சேர்ந்து மருந்தகம் (பார்மஷி) ஒன்றைத் திறக்கின்றார்கள். இந்த மருந்தகத்தை நிர்வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர் தான் சிவகாமி என்கின்றார் இசிதோர் பெர்னாண்டோ .

எமது இன விடுதலைப் போராட்டத்தில் பல பெண்கள் இணைந்து போராடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய பதிவுகள் பெரிதாக வந்ததில்லை. அவர்கள் தாங்களாக முன்வந்து எழுதினால் தான் உண்டு என்ற நிலைமை. இங்கே சிவகாமி, யாழினி இருவரும் – போராட்டம் பற்றியும், உட்கட்சிப் பூசலில் ஏற்பட்ட அநீதி அவலங்களைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லியிருக்கின்றார்கள். புத்தகத்தின் பெரும்பகுதியை சிவகாமிதான் எழுதியிருக்கின்றார்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வறுமைப்பட்ட குடும்பம் – தாய் ஒரு நோயாளி – இரண்டு சகோதர்களை ஆறுமாத கால இடைவெளியில் அடுத்தடுத்து பலி கொடுத்தமை (அவர்களின் இழப்பு  எப்படி நேர்ந்தது என்று இங்கே குறிப்பிடப்படவில்லை) – மூன்று சகோதரிகள் – இப்படி சிவகாமி தன்னைப்பற்றிய சுயசரிதையை `படர்க்கை’ நிலையில் நின்று எழுதியிருக்கின்றார். சிவகாமி உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டம் தீவிரமடைகின்றது. தனது நண்பியுடன் ரெலோ இயக்கத்தில் இணைகின்றார். இணையும்போது இயக்கத்தின் கொள்கையில் அவருக்குப் பற்று இருக்கவில்லை. வாழ்வில் ஏற்பட்ட ஒரு விரக்தி நிலையினால் இணைகின்றார். இலங்கையிலிருந்து வேதாரண்யம், பின்னர் சென்னையில் சாலிக்கிராமம் பெண்கள் முகாம் சென்றடைகின்றார். உட்கட்சிப் பூசல்களினால் அங்கிருந்த 42 பெண்களில், சிவகாமி உட்பட 30 பேர்கள் பிரிகின்றார்கள். மனோ மாஸ்டரின் குழுவில் இணைந்து வளசரவாக்கம், பிறகு கோடம்பாக்கம் செல்கின்றார்கள். மனோ மாஸ்டரின் கொலையின் பின்னர் ஒருசிலர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்துவிட, மிகுதியினர் மீண்டும் இலங்கை திரும்புகின்றனர்.  இலங்கை திரும்பும்வரை எல்லாளன்(ரஞ்சித்), ராஜன் போன்றவர்கள் இவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளார்கள். தாயார் மறைந்த சேதியை சிவகாமி இலங்கை திரும்பிய பின்னரே அறிந்து கொள்கின்றார்.

இலங்கை திரும்பிய பின்னர் வாழ்க்கையில் ஏற்பட்ட அவலங்களை – `சிறுசிறு தொழில்கள் செய்தல்’, `மல்லியினால் (விடுதலைப்புலிகள்) கைது செய்யப்படல்’, `இந்திய இராணுவத்தினரின் விசாரணைக்குட்படுதல்’, `கிளிநொச்சியில் பதுங்கியிருத்தல்’, `கொழும்பு நகர்வு’ போன்ற தலைப்புகளில் பதிவு செய்கின்றார் சிவகாமி. புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வதற்கு முன்னர் சிலகாலம் இலங்கை அரச பொலிஸ் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்திருக்கின்றார்.

இருபாலை முகாமில் விடுதலைப்புலிகளினால் சிவகாமி தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தித்து அவருடன் உரையாடியதையும், விடுதலைப்புலிகள் பற்றிய தன்னுடைய ஆதங்கங்களையும் பதிவு செய்யும் சிவகாமி கூடவே இந்திய இராணுவத்தினரைப் பற்றிய கருத்துகளையும் சொல்லுகின்றார். இந்திய இராணுவத்தில் இருந்த சில தமிழர்களைப் பாராட்டுகின்றார். தன் வாழ்வை நல்வழிப்படுத்திய ஆசிரியர்கள், அன்புள்ளம் கொண்டவர்களுக்கு இந்தப்புத்தகம் மூலம் நன்றி தெரிவிக்கின்றார்.

`எனது வாழ்க்கைப்பயணத்தின் சில சம்பவங்கள்’ என நூலின் இரண்டாவது பகுதியை, வடமராட்சியைச் சேர்ந்த யாழினி `தன்கூற்றில்’ எழுதியிருக்கின்றார்.  இவர் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், தனது குடும்பத்தினரின் விவசாயம் காரணமாக வன்னியில் உள்ள மல்லாவியில் வசித்தார். 10ஆம் வகுப்பிற்கு மேல் அங்கு படிக்க முடியாததால், இவர் மாத்திரம் மீளவும் தனது கிராமத்திற்கு வந்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் படித்தார். பின்னர் யாழ்ப்பாணத்தில் சட்டம் பயின்றார். அந்தக் காலகட்டத்தில் தான் நாட்டில் பல மாறுதல்கள் ஏற்படுவதை அவதானித்தார்.

1983 இனக்கலவரங்களின் பின்னர் ஏற்பட்ட இயக்கங்களின் அரசியல் செயற்பாடுகளில் கவரப்பட்டார். அந்தக் காலத்தில், வடமராட்சியில் ரெலோ இயக்கம் மாத்திரமே அரசியல் சார்ந்த வகுப்புகளை நடத்தினார்கள் எனப் பதிவு செய்யும் இவர், மனோ மாஸ்டரின் தலைமையில் அரசியல் வகுப்புகளில் கலந்துகொண்டார். அரசியல் சார்ந்த பயிற்சிக்காக சோதியா, உமா போன்ற தோழிகளுடன் கடல் வழியாக இந்தியா சென்றார். சிவகாமி சொல்லியிருப்பதைப் போல இவரும் சாலிக்கிராமத்தில் பெண்கள் முகாமில் இணைகின்றார். உட்கட்சி மோதலின் போது மரீனா கடற்கரையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இவரும் பங்குபற்றினார். எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் இழந்த நிலையில் ஊர் திரும்பி, யாழ் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1986 காலகட்டத்தில் விடுதலைக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படவும், மின்கம்பத்தில் உடல்கள் தொங்கவும், விடுதலைப்புலிகள் ஏகப்பிரதிநிதித்துவம் கொள்வதும் நடக்கின்றது. 1988 இல் இவரின் திருமணம் முடிந்து ஐந்தாம் நாள், இவரது தம்பி இந்திய இராணுவத்தினால் கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புலம்பெயர்ந்து செல்வதற்கு விரும்பிய இவர், தற்போது கனடா நாட்டில் வசிக்கின்றார்.

போராடப் புறப்பட்டு, உட்கட்சிப் பூசல்களினால் அவர்களின் போராட்டம் தடைப்பட்ட எத்தனையோ போராளிகள் இருக்கின்றார்கள். அதில் பெண்களின் நிலை சொல்லத் தேவையில்லை. மீண்டும் வாழ்க்கைச் சகதிக்குள் அல்லலுறும் நிலைதான் சிவகாமிக்கும் யாழினிக்கும். கழுகுக்கண்களுடன் குத்திக் குதறும் சமூகத்தின் மத்தியில் அவர்களின் வாழ்க்கை, பல போராட்டங்கள் நிறைந்தது.

இலங்கையில் 25இற்கும் மேற்பட்ட இயக்கங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இதில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தமது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றார்கள். எண்ணிக்கையில் இவை குறைவுதான் என்றாலும் முக்கியமானவை. அதிலும் பெண்கள் முன்வந்து எழுதப்பட்ட புத்தகங்கள் மிகவும் குறைவு. ஒருவர் புத்தகத்தில் அச்சாகக் பதிவு செய்யும்போது, அவர் குறிப்பிடும் தகவல்கள் சரியானவை என்றே ஏற்றுக் கொள்ளவேண்டும். எனினும் இன்னொருவரினால் மறுதலிக்கவும் சர்ச்சைகளை ஏற்படுத்தவும் கூடும்.

இந்தப் போராட்டத்தின் பின்னர் எவர் உயிருடன் இருக்கின்றார், எவர் இல்லை என்பதுகூடத் தெரியவில்லை. பலர் மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகவும், இன்னும் பலர் இவை எல்லாவற்றையும் கடந்தும் மன உழைச்சலுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியான புத்தகங்களின் வருகை இருப்பவர்களுக்கிடையே மீண்டும் ஒரு தொடர்பாடலையும் நட்புறவையும் ஏற்படுத்தக்கூடும். பல்வேறு இயக்கங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வையும் ஏற்படுத்தக்கூடும்.

Series Navigation2025 -2030 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளைப் பூமிக்கு மீட்டுவரும் விண்சிமிழ் அமைப்புத் திட்டங்கள்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *