சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !

author
1 minute, 37 seconds Read
This entry is part 9 of 22 in the series 26 மார்ச் 2023

முருகபூபதி

சினிமாவுக்கு அத்திவாரம் கதை.  ஒரு கட்டிடம்  பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால்  உருவாகின்றது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்  பல சிறுகதைகள்,  நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன.  பாலுமகேந்திரா சிறந்த சில சிறுகதைகளை, கதை நேரம் என்ற வெப்சீரியல் தொடராக வரவாக்கினார்.  அதன் தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் மூலக்கதையை எழுதியவரின் பெயரையும் காண்பிப்பார்.

கமல்,  தனது குருதிப்புனல் திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில், அக்கதைக்கே சம்பந்தமில்லாத  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் பெயரை எடுத்தாண்டமைக்காக நன்றி தெரிவித்திருப்பார்.

இ. பா. வின் குருதிப்புனலை தழுவித்தான்  ஶ்ரீதர்ராஜன்                               ( ஜெமினிகணேசனின் மருமகன் ) கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தை  இயக்கி வெளியிட்டார் என்ற புகாரும் அப்போது சொல்லப்பட்டது.

தனது நந்தன் கதை நாடகத்தையும்  ஶ்ரீதர்ராஜன் அந்தத்திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என இ. பா. வும் புகார் சொன்னார்.

குருதிப்புனல்,  தஞ்சை கீழ்வெண்மணியில்  அடிநிலை விவசாய மக்களுக்கு நடந்த கொடுமையை சித்திரித்த கதை.   அந்த உண்மைச் சம்பவம் பற்றி எழுத்தாளர் பொன்னீலனும் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.

இராமையாவின் குடிசை என்ற பெயரில் கீழ்வெண்மணி கொடுமை குறித்து ஆவணப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.

ஜெயகாந்தனின்  உன்னைப்போல் ஒருவன்,  யாருக்காக அழுதான், சிலநேரங்களில் சில மனிதர்கள், காவல் தெய்வம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,  ஊருக்கு நூறுபேர் என்பன திரைப்படமாகின. ஜெயகாந்தனின் கிழக்கும் மேற்கும்  , பாரிசுக்குப்போ என்பன  தொலைக்காட்சி நாடகமாகியது. 

யாருக்காக அழுதான்  திரைப்படமான காலப்பகுதியில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் எதிர்நீச்சல் நாடகம் மேடைகளில் அரங்கேறிக்கொண்டிருந்தது.

ஜெயகாந்தன்,  இந்த எதிர்நீச்சலை தழுவித்தான் யாருக்காக அழுதான் எழுதிவிட்டார் என்ற புகார் அப்பொழுது வெளியானது.

எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்த நடிகர் நாகேஸ், ஜெயகாந்தனிடமே வந்து,  அந்த நாடகம் மேடையேறும்போது வந்து பார்க்கச் சொன்னார்.  அந்த நாடகத்திற்கும் தனது யாருக்காக அழுதான் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயகாந்தன் விளக்கியதையடுத்து, கே. பாலச்சந்தர் அவரது கருத்தை  ஏற்றுக்கொண்டார்.

இந்தப்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நடிகர் நாகேஸ்தான்  பின்னர் எதிர்நீச்சல் நாடகம் திரைப்படமானபோதும், யாருக்காக அழுதான் திரைப்படமானபோதும் அவற்றில் நாயகனாகத்  தோன்றி நடித்தார்.

எதிர்நீச்சல் ஒரு வங்க நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது ஜெயகாந்தனின் வாதம். இதுபற்றி அவர் தனது ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் விரிவாகச் சொல்லியுள்ளார்.

அகிலனின் பாவை விளக்கு அதே பெயரிலும்  வாழ்வு எங்கே,  குலமகள் ராதை என்ற பெயரிலும் கயல் விழி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரிலும் திரைப்படமாகியவை.  அகிலனின் சித்திரப்பாவை தொடர்கதை தொலைக்காட்சித் தொடராகியது.

தீபம் நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர்,  தொலைக்காட்சித் தொடராக வெளியானது. இதில் அரவிந்தன் பாத்திரம் ஏற்று நடித்தவர்தான் இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின்.

கொத்தமங்கலம் சுப்புவின்  தொடர்கதை தில்லானா மோகனாம்பாள் அதே பெயரிலும்    ராவ் பகதூர் சிங்காரம் என்ற மற்றும் ஒரு தொடர்கதை விளையாட்டுப்பிள்ளை என்ற பெயரிலும் திரைப்படமாகியது.

கல்கியின் புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வனும்  சிலருடைய கைகளுக்குச் சென்று, இறுதியில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் அதன் முதல் பாகம் வௌியானது. ரசிகர்கள்,   குறிப்பாக வாசகர்கள்    பல்வேறு விமர்சனங்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம்  பாகத்திற்கு தற்போது காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே கல்கியின்  கள்வனின் காதலி, தியாகபூமி,  பார்த்திபன் கனவு என்பனவும் சினிமாவுக்கு வந்தன.  

இவ்வாறு ஏற்கனவே தொடர்கதையாக, குறுநாவலாக, முழு நாவலாக வெளியான ஆக்க இலக்கியப்படைப்புகள்  திரைப்படமாகும்போது அதனை எழுதிய மூல ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கப்படும், அல்லது தயாரிப்பாளரினால், மூல ஆசிரியருக்கு சன்மானம் வழங்கப்படும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி  –  நயன்தாரா,  பிரபு – ஜோதிகா  நடித்த  சந்திரமுகி  வசூலில் வெற்றிபெற்றிருந்தாலும்,  அதன் மூலம்  மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரத்தாழ்  என்ற  மோகன்லால் –  ஷோபனா நடித்த திரைப்படம்தான்.  ஆப்தமித்ரா   என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியானது.இம்மூன்று  திரைப்படங்களும் வசூலை அள்ளிக்குவித்திருந்தாலும், இக்கதையை எழுதிய  கேரள எழுத்தாளர்  மது முட்டம்  என்பவருக்கு  கிடைத்த சன்மானம் சொற்பம்தான்.

இந்தவிவகாரம் நீதிமன்றப் படிக்கட்டுகளையும் தொட்டது.

1962 ஆம் ஆண்டு  கே. எஸ். கோபாலகிருஷ்ணனின்  திரைக்கதை, வசனம் இயக்கத்தில்  வெளியான சாரதா திரைப்படம் மீது எழுத்தாளர் அகிலன் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.  தனது சிநேகிதி  நாவலின் கதையைத்  திருடியே சாரதா திரைப்படம் வெளியாகியிருக்கிறது என்பதே அகிலனின் புகார். அந்த வழக்கு இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கல்கி இதழின் வெள்ளிவிழாக்காலத்தில் நடைபெற்ற நாவல் இலக்கியப்போட்டியில் உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவல் முதல் பரிசு பெற்றது. பின்னாளில்  சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் , சரத்பாபு  ஷோபா,  படாபட் ஜெயலட்சுமி நடிப்பில் அதே பெயரில் திரைப்படமாகியது.  மூலக்கதையில் மாற்றங்கள் நடந்திருந்தன. அவ்வாறே புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலைத்  தழுவி மகேந்திரன்,   விஜயன் – அஸ்வினி நடித்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தை வெளியிட்டார்.

இவ்வாறே எழுத்தாளர் கந்தவர்வனின்  சாசனம்,  எழுத்தாளர் பொன்னீலனின் பூட்டாத பூட்டுக்கள் ஆகியனவற்றையும்  தழுவியே  மகேந்திரன்  திரைப்படமாக்கியிருந்தார்.

கல்கி வெள்ளிவிழாப்போட்டியில் இரண்டாவது பரிசுபெற்றது ரா. சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவல்.   இந்திய சுதந்திரப் போராட்டத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதை. இதில் மகாத்மா காந்தியும் ஒரு பாத்திரமாக வருகிறார்.

பின்னாளில் நடிகர் கமல், ஹே ராம் திரைப்படத்தை வெளியிட்டபோது,  எழுத்தாளர் ரா. சு. நல்லபெருமாள், தனது கதையை கமல் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். வழக்குத் தொடரப்போவதாகவும் சொன்னார். ஆனால், கமல் இதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

இத்தனை செய்திகளையும்  தற்போது ஏன் சொல்ல நேர்ந்திருக்கிறது என்று இந்தப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர்களும் சினிமா ரசிகர்களும்  கேட்கலாம்.

இரண்டு தரப்பாருமே ஒரு புள்ளியில் சந்திக்கவேண்டியவர்கள்தான். ஆனால், சந்திப்பது அபூர்வம் !

இங்கிலாந்தில்  நீண்ட காலமாக  ( நாற்பது வருடங்களுக்கும் மேல் ) வதியும் ஈழத்து எழுத்தாளரான ராஜேஸ்வரி  பாலசுப்பிரமணியம், அண்மையில்  இந்தியாவில்  வெப்சீரிஸில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அயலி திரைப்படத்தின் கதை தன்னுடைய தில்லையாற்றங்கரை நாவல் என்று புகார் எழுப்பியிருக்கிறார். தனது கதையை திருடிவிட்டார்கள் என்பதுதான் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

இது தொடர்பாக லண்டன் பி. பி. சி.யிலும்  தமிழ் நாடு குமுதம் இதழிலும் நேர்காணல் வழங்கியிருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,  லண்டன் தமிழ் வானொலியில் மகரந்தச்சிதறல் 580 ஆவது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது  கருத்துக்களை கோபாவேசத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார். கனடா பதிவுகளிலும் எழுதியிருந்தார்.

தில்லையாற்றங்கரை நாவல் 1987 ஆம் ஆண்டு சென்னை சிந்தனையகம் வெளியீடாக வந்தது. பின்னர் மணிமேகலை பிரசுரமாகவும் வெளியானது. ஆங்கிலத்திலும்  The banks of the river thillai  என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கோளாவில் கிராமத்தில் பிறந்திருக்கும் ராஜேஸ்வரி,  பன்முக ஆளுமை கொண்டவர்.  சிறுகதை, நாவல், ஆய்வு, மருத்துவம் முதலான துறைகளில் பல நூல்களையும் எழுதி,  இலங்கையில் தேசிய சாகித்திய விருது உட்பட சாதனையாளர் விருதுகளும் பெற்றிருப்பவர்.

தொடர்ந்தும் பெண்களின் உரிமைக்காக  தார்மீகக் குரல் கொடுத்து வருபவர். 

இவர் அண்மையில் வெப்சீரிஸில் வெளிவந்து ரசிகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ள அயலி தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களிலும் அவரது  தார்மீகக்கோபமும் அறச்சீற்றமும் வெளிப்படுகிறது.

உண்மையிலேயே  அயலி திரைப்படத்தின் கதைதான்,  ராஜேஸ்வரியின் தில்லையாற்றங்கரை நாவல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது உடன்பாடு ராஜேஸ்வரிக்கு அவசியமும் இல்லை. என்னை அவர் பொருட்படுத்தாமல் கடந்தும் செல்லலாம்.

அவரது அறச்சீற்றமும்  அவர் ஊடகங்களில் வெளியிடும்  உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களும்,  ரசிகர்களை அந்த அயலி வெப்சீரியலை பார்க்கவே பெரிதும் தூண்டுமேயன்றி, அவரது தில்லையாற்றங்கரையை படிக்கத் தூண்டாது.

344 பக்கங்கள் கொண்ட நாவலை தமிழ் நூலகத்திலிருந்து தரவிறக்கம் செய்து நேரம் ஒதுக்கி,  எனது கணினியின் மவுசை நகர்த்தி நகர்த்தி படித்து முடித்தேன்.

நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில்  ஏராளமான எழுத்துப்பிழைகள் கண்களை உறுத்துகின்றன.

தொடக்கத்திலேயே அக்கரைப்பற்று என்ற சொல் அக்கரைப்பச்சை என்று அச்சாகியிருக்கிறது. ஓரிடத்தில் யாழ்ப்பாணம் – பாழ்ப்பாணம் என்று அச்சாகியிருக்கிறது.  இந்நிலையில் மணிமேகலை பிரசுரமாக வெளியான மற்றும் ஒரு பதிப்பு எவ்வாறிருந்தது என்பது தெரியவில்லை.

தில்லையாற்றங்கரை நாவல் , தான் பிறந்த கோளாவில் மக்களுக்கு அர்ப்பணம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

“  லண்டன் கனன்பரி வீதிக்கும் இலங்கையின் அக்கரைப் பற்றைச் சேர்ந்த சிறு கிராமமான கோளாவிலுக்கும் எத்தனையோ வித்தியாசம்.  ஒவ்வொரு நாளும் நான் கடந்து போகும் தேம்ஸ் நதிக்கும் ஒரு காலத்தில் சேறு புரள சிரித்து நீச்சலடித்த தில்லையாற்றுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

ஆனால்,  நீண்டோடும் தேம்ஸ் நதியைப் பார்க்கும் போது நினைவலைகள் தில்லையாற்று மணற்பரப்பில் தவழ்கிறது. நிலவுக்குத் தாலாடி நெஞ்சுக்குள் குளிர்தரும் தென்னோலை          சர சரப்பை இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னும் மறக்க முடியாது.

மல்லிகையுதிர்வது போல் பனிக்கட்டிகள் கொட்டும் போது பெரியக்கா வீட்டு கொடி மல்லிகையின் கொத்தான பூக்கொத்துகள் ஞாபகம் வருகின்றன.

தில்லையாற்றங்கரை 1957 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்துவருடகாலத்தில் நடந்தது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது. மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகளின் சட்ட திட்டத்தை எதிர்த்துப் போராடியதைப் பற்றி, அல்லது போராடியதாக நினைத்ததைப் பற்றிய ஒரு நாவலிது.

பாத்திரங்கள், சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனைகள்தான். ஆனால்,  இந்த நாவல் எழுதக் காரணமாக அமைந்த அடிப்படைகள் கற்பனையில்லை.  “ என்று ராஜேஸ்வரி இந்நாவலின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

கௌரி, மரகதம், சாரதா ஆகிய மூன்று பதின்ம வயதுப்பெண்களை சுற்றிச்சுழலும் கதை.  ஆச்சி முதல் நாடாளும் பிரதமர் வரையில் கதை நகர்கிறது.

 பருவமடைந்த பெண்பிள்ளைகளின் கல்வி தொடர்பாக இந்நாவலின் தொனிப்பொருள் அமைந்திருந்தாலும்,  கிழக்கிலங்கையில்   ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஆத்மாவையும் அங்கு வாழ்ந்த மக்களின் இயல்புகளை உயிரோட்டமாகவும் சித்திரிக்கும் குறிப்பிடத்தகுந்த நாவல்தான். அதில் சந்தேகம் இல்லை.

கோளாவில் கிராமம் போன்று தமிழ்நாட்டில் ஏன் முழு இந்தியாவிலுமே ஆயிரக்கணக்கான பின்தங்கிய கிராமங்கள் இன்றும் இருக்கின்றன.

அக்கிராமங்களின் தொன்மைகளை, கலாசாரங்களை,  பண்பாட்டுக்கோலங்களை, நம்பிக்கைகளை பின்னணியாகக்கொண்டு  ஏராளமான திரைப்படங்கள் வந்துவிட்டன.

 மழைவேண்டி பருவப்பெண்ணை நிர்வாணமாக நடக்கவிட்ட  கிராமத்து மக்களின்  கதையை ( கிழக்கே போகும் ரயில் )  பாரதிராஜா திரைப்படமாக்கினாரே?!

முத்துக்குமார்  என்ற இளம் தலைமுறை இயக்குநர்  எடுத்திருக்கும் அயலி வெப்சீரிஸ்,  தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் பின்தங்கிய

வீரப்பண்ணை கிராமத்து பெண்களை ஒடுக்கும் 500 ஆண்டுகால பழக்கவழக்கங்களையும்   அங்கிருந்த  மரபுகளை மீறி ஒரு இளம்பெண் (தமிழ்செல்வி) மருத்துவராக வேண்டும் என்ற கனவை நோக்கி தனது வாழ்க்கையை  நகர்த்துவதைச்  சுற்றியே கதை சுழல்கிறது

 இதன் இயக்குநர், தனது கதையை ( தில்லையாற்றங்கரை ) தமிழிலிருந்தோ, அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தோ ( The banks of the river thillai  )  திருடித்தான் அயலி திரைப்படத்தை எடுத்துள்ளார் என ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஊடகங்களின் ஊடாக குற்றம் சுமத்திவருகிறார்.

அவரை நேர்காணல் செய்பவர்கள்,  குறிப்பிட்ட தமிழ் – ஆங்கில நாவல்களை முழுமையாக படித்துவிட்டுத்தான் உரையாடுகிறார்களா..? என்ற கேள்வியும் எழுகிறது.

எனினும்,   நாவலாசிரியரின் அறச்சீற்றத்துடன் வெளிப்படும் புகார், அயலி வெப்சீரியலைத்தான் பார்க்கத்தூண்டும்.

நாவலையும்  வாசிக்கத்தூண்டவேண்டும் என்பதே இந்த நீண்ட பதிவில்  எனது நோக்கமாகவும் இங்கே அமைகிறது.

  பாத்திரங்கள், சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனைகள் தான். ஆனால்,  இந்த நாவல் எழுதக் காரணமாக அமைந்த அடிப்படைகள் கற்பனையில்லை.   என்று ராஜேஸ்வரி தனது நாவலின் முன்னுரையில் 36 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருப்பதுபோன்று, அயலி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமாரும்,  அந்தக்காலத்து தமிழகத்தின் பின்தங்கிய கிராமத்தின் அடிப்படைகள் கற்பனை இல்லை என வாதிடமுடியும்.

மணிரத்தினம் இயக்கி வெளியிட்ட இருவர் திரைப்படம் கலைஞர் மு. கருணாநிதி,  மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின். வாழ்க்கையில் நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களை பின்னணியாக வைத்து வெளியானது.

இந்தப்பாத்திரங்களில் பிரகாஷ்ராஜூம் மோகன்லாலும் நடித்தார்கள்.

இருவர் வெளியானபோது எம். ஜி. ஆர். உயிரோடு இல்லை.  கலைஞர்,  இத்திரைப்படம் குறித்து எத்தகைய எதிர்வினையையும் வெளியிடவில்லை. மௌனம் காத்தார்.

அந்தப்படம் படுதோல்வியை தழுவியது.

கலைஞர் கருணாநிதி,  எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல்வாதி.  சினிமாவுடன் நெருக்கமான தொடர்பிலிருந்த திரைப்பட வசன கர்த்தா.

தன்னைப்பற்றிய  திரைப்படம் வெளியானால், என்னசெய்யவேண்டும்..?  என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

அண்மையில் வெளியாகியிருக்கும் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நடேசன் எழுதிய மலேசியன் ஏர் லைன் 370 என்ற சிறுகதையைப் போன்றே மலேசியா To அம்னீசியா என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது என்ற குரல் தற்போது  எழுந்திருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் வெளியான மாதவன் நடித்த                       ( கமலின் தயாரிப்பு ) நள தமயந்தி கதையானது  தனது அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும்  என்ற சிறுகதைதான்  என இதனை எழுதிய எழுத்தாளர் ( அமரர் )  அருண். விஜயராணி ( 1954 –  2015)  அக்காலப்பகுதியில் சொன்னார். 

ஆனால், அக்கதையையும் படித்து,  திரைப்படத்தையும் பார்ப்பவர்கள்,  கதையின் சாயல் இருக்கிறதேயன்றி, தழுவலோ,  திருட்டோ அல்ல என்ற முடிவுக்கே வருவார்கள்.

உண்மையில் நள தமயந்தி ஆங்கிலத்தில் வெளியான Green Card என்ற திரைப்படம்தான்.  ஏற்கனவே, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்,  அவ்வை சண்முகி முதலான திரைப்படங்களையும்,  ஆங்கில திரைப்படங்களை தழுவியே  கமல் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

தற்போது ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தனது கதையை தமிழ்நாட்டு இயக்குநர் திருடிவிட்டார் என பகிரங்கமாக குற்றம் சுமத்திவருகிறார்.  இலக்கிய வாசகர்களும் – சினிமா ரசிகர்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதற்கு இதுபோன்ற சர்ச்சைகள் உதவலாம்.

இலங்கையில் தலைநகருக்கு வீட்டுவேலைக்கு மலையக சிறுமிகளை அழைத்துவருவதுபோன்று சென்னை மாநகரத்திற்கும் பின்தங்கிய தமிழக கிராமப்புறங்களிலிருந்து வேலைக்கு அழைக்கப்படும் சிறுமிகள் பருவமடையாதவர்களாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளை எஜமானிகள் முன்வைத்தனர் என்ற தகவல் உண்டு.

அவ்வாறு வரும் ஏழைச்சிறுமிகள், தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்வதற்காக, பருவமடைந்தாலும் வெளியே சொல்லாமல்  மறைத்து இறுதியில் பிடிபட்டுவிடும் அவலம் இருந்ததாக அறியப்படுகிறது.

இளம் இயக்குநர் முத்துக்குமார், தமிழக  கிராமப்புறத்தின் ஒரு காலகட்டத்தை தனது அயலியில் சித்திரித்துள்ளார்.

ராஜேஸ்வரி ஆறு தசாப்தங்களுக்கு முற்பட்ட கிழக்கிலங்கை கிராமத்தின் கதையை தனது தில்லையாற்றங்கரையில் சொல்கிறார்.  அதனால், முத்துக்குமார் இக்கதையை படித்துத்தான் அயலி எடுத்திருக்கிறார் என ராஜேஸ்வரி சொல்வதுதான்  வியப்பாக இருக்கிறது.

நேரம்கிடைத்தால் அயலியை பாருங்கள்.  அத்துடன்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தில்லையாற்றங்கரை நாவலை அல்லது The banks of the river thillai                                                      ( மொழிபெயர்ப்பை )  தரவிறக்கம் செய்து படியுங்கள்.

letchumananm@gmail.com

Series Navigationபுதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு காலவெளி ஒரு நூலகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *