This entry is part 4 of 22 in the series 26 மார்ச் 2023

சேயோன்

சிட்டுக்குருவிக்கென்ன 

கட்டுப்பாடு?

இந்தப் பாடலே அந்த‌

சிட்டுகளின் தேசத்துக்கு 

ஒரு தேசீயகீதமாய் 

ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இன்று இதன் சிறகடிப்புகள்

கைபேசிகளில் கூடு கட்டி

உலகத்தின் முகத்தையே

மாற்றிக்கொண்டிருக்கின்றன.

மரக்கிளைக்குருவியும்

மின்ன‌ணுக்குருவியும்

போட்டுக்கொண்ட கூட்டணியில்

உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது.

முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும்

பொரிக்காவிட்டாலும்

பில்லியன் பில்லியன் டாலர்கள்

எங்கோ 

ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.

கீச்கீச்சென்று அவை

கலித்தொகையும் குறுந்தொகையும்

பாடிக்கொண்டிருப்பதால்

காதல் மின்னல்களின் நெய்தலில்

இந்த உலகம் அழகாய் சுழல்கிறது.

எந்தப்பறவை என்றால் என்ன‌

ஹாஃப் பாயில் என்று வரும்போது

நட்சத்திர ஓட்டல்களின் மேஜைக்கும் 

வருவது உண்டு.

மனிதனுக்கு

மரம் மட்டை புழு பூச்சியோடு

இந்த வானம் கூட‌

தீனியாகும் போது

ஒரு நாள் இந்த உலகமே

காணாமல் போய்விடலாம்.

செவ்வாய்க்கோளின் கூண்டு வீடுகளில்கூட‌

ஒரு சிறிய கூண்டில்

அது சிறகடித்து சிக்னல்கள் 

தந்து கொண்டிருக்கும்.

_____________________________________________________________

சேயோன்.

Series Navigationஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்அகழ்நானூறு 20