வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

author
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 22 in the series 26 மார்ச் 2023

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு

வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை

அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான

கால்கள் வாய்த்திருக்கவேண்டும்.

மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள்

மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும்

அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை.

மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள்

வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று பாராட்டுகிறார்கள்

அவர்களை அடிமைச்சேவகம் செய்யவைத்தது தன் அரசகுலம் என்பதை மறந்தும் மறைத்தும்.

அடிக்கு அடி சேவகர்கள் காத்திருக்கும் அரண்மனைவாழ்வு வாய்த்த அரசகுடும்பத்தினர்

அரியணைகள் ஈரேழ்பிறவிக்கும் அவர்களுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

அதனால்தான் மக்களாட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.

அரையடி புதையும் வெல்வெட் கம்பளம் விரித்த நடைவழியிலேயே போய்வந்து பழகியவர்கள்

அடுத்தவர் நலனுக்காய் பாலைவன சுடுமணலில் வெறுங்காலில் பயணமாகியவன்

வெப்பம் தாளாமல் ஐயோ என்று கதறியதை எள்ளிநகையாடும்

வெட்கங்கெட்டவர்களாக இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

அவர்களுடைய நன்கு திட்டமிடப்பட்ட சொகுசுநடைப்பயணங்கள்

கால்களற்ற ஏழைப் பிச்சைக்காரரின் தினசரி அவலவாழ்வு கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

வெறுங்கால்களோடு வரப்புகளில் அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்

உலகெங்கும் வலம்வருகிறது புகைப்படங்களாய் காணொளிக்காட்சிகளாய்

ஆபத்தான அரைவேக்காட்டு விவரங்களும் தரவுகளுமாய் கண்ணில்படும் காணிகளுக்கெல்லாம் குறுநில பெருநில மன்னர்களாகும் கனவுகளோடு

வலம்வரும் இந்த மன்னர் மாமன்னர் சக்கரவர்த்திகளும் அவர்தம் உற்றமித்ர பந்துக்களும்

எளிய மனிதர்கள் தங்களுக்கு சமமாய் அரியணையில் அமரநேர்ந்தால்

அப்படி அழுதுபுரள்கிறார்கள் ஆங்காரமாய் மண்ணையள்ளித் தூற்றுகிறார்கள்

அய்யய்யோ அக்கிரமம் அராஜகம் என்று ஆயத்த மக்கள் புரட்சியாளர்களாய் அதையும் இதையும் பேசுகிறார்கள்

அத்தனை நேரமும் அவர்களுடைய முழுமுனைப்பான எண்ணமெல்லாம்

அரியணையைக் கைப்பற்றுவதே என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதை அத்தனை நேர்த்தியாக மறைத்தொளிக்கும் மாபாவிகள் என அவர்கள் மனங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆனாலும் அவர்கள் வாழையடிவாழையாய் ஏழைபாழைகளின் புரவலர்களே யல்லாமல்

மன்னிப்புக் கேட்கும் கோழைகளல்ல என்று திரும்பத்திரும்ப சொல்லியடியே ஓடியவாறிருப்பார்கள்

நாட்டில் உலகில் மீதமுள நிலபுலன்களை உடைமைகொள்ளும் மார்க்கங்களை

அதற்கான அதிகாரபீடங்களை

நாடித்தேடி….

Series Navigationபேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *