இஃப்தார்

author
0 minutes, 25 seconds Read
This entry is part 3 of 6 in the series 23 ஏப்ரல் 2023

தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு  முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கும் உற்றார் உறவினர்களுடன் இந்தப் பள்ளியில் கூடுவதும் கலைவதும் என்றென்றும் நீங்காத நினைவுகள். அதற்குக் காரணம் தமிழ்முஸ்லிம்களின்   கலாச்சார வழக்கப்படி நடக்கும் நிகழ்வுகள், மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களால் தமிழில் நடத்தப்படும் இறைச் சொற்பொழிவுகள் ஆகியவைதான்

மாலை நேரத்தில் 5 மணிக்கெல்லாம் நோன்புக்கஞ்சி விநியோகம் தொடங்கிவிடும். அதற்கும் முன்னதாகவே இஃப்தார் வேலைகள் ஆரம்பமாகிவிடும். பள்ளிவாசலின் சுற்றுப்புறப் பகுதியில் வெண்கூரை அமைக்கப்பட்டு, பலகைகளால் தளங்கள் போடப்பட்டு நெகிழித்தாள்கள் நேர்த்தியாக விரிக்கப்பட்டு நோன்பு திறக்க இடம் தயார்ப் படுத்தப்பட்டிருக்கும். பள்ளிவாசலின் அடித்தளத்திலும் நோன்பு திறக்கலாம். ஆயிரம் பேரல்லவா நோன்பு திறக்கவேண்டும். சரி. அதற்கு என்ன ஏற்பாடுகள்? ஆப்பிளோ, ஆரஞ்சோ, தர்பூசணியோ,  வாழையோ 1000 துண்டுகள் தயார்செய்யப்படும். பேரீச்சம்பழப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, 3 பேரீச்சம்பழங்கள், ஒரு துண்டு பழம் என்று நெகிழிப்பையில் நிரப்பப்பட்டு 1000 பைகள் 6.30க்குள் தயாராக இருக்கவேண்டும். 1000 தண்ணீர்ப் போத்தல்கள். நெகிழி டப்பாக்களில் ஆயிரம் கஞ்சிகள். தயாரிக்கும் இடத்திலிருந்து 6 மணிக்கு கஞ்சி வந்துவிடவேண்டும். 6.30 வரை இங்கும் அங்குமாக சின்னச்சின்ன புறாக்கூட்டங்களாய் நிற்கும் சகோதரர்கள் 6.30க்கு நோன்பு திறப்பதற்காக வேண்டி வரிசைபிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவர் கஞசி கொடுப்பார். அடுத்தவர் பேரீட்சை, பழத்துண்டு அடங்கிய நெகிழிப்பையைத் தருவார். அடுத்தவர்  தண்ணீர்ப்போத்தலை நீட்டுவார். அனைத்தையும் வாங்கிக்கொண்டு அவரவர்களுக்கு வழக்கமான இடங்களில் உட்கார்ந்துவிடுவார்கள். 7.10 க்கு இந்த விநியோகம் முடியும். 7.14க்கு ‘சிங்கப்பூர் நேரப்படி இது நோன்பு திறக்கும் நேரம்’ என்று அறிவிக்கப்படும்போது, எல்லார் கைகளிலும் தயாராக இருக்கும் பேரீட்சை இறைவார்த்தைகளுடன் வாய்க்குள் பயணித்துவிடும்

7.30க்கு மாலைத்தொழுகை. அதற்கு அவர்கள் தயாராக வேண்டும். மளமளவென்று பேரீட்சை, பழத்துண்டு மற்றும் கஞ்சி பசித்த வயிறுகளுக்கு பயணிக்கும். உடன் அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தொழுகைக்கு தயார்ப்படுத்தவேண்டும். 7.30க்கு அனைவரும் தொழுகைகக்காக வரிசைகளில் வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை வேலைகளும் 4.30க்குத் தொடங்கி முடிக்கப்படவேண்டும். இதென்ன சாதாரண காரியமா? பள்ளிவாசலில் இதற்கென்று சில ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தாலும், தொண்டூழியர்கள் பலரும் வேலை செய்தாலும், ரஃபீக் என்கிற அந்த இயந்திரமனிதர் இல்லையென்றால் அது சாத்தியமே அல்ல. யாரிடமும் எந்த வேலையும் ஏவாமல் தானே இறங்கிவிடுவார். 1000 துண்டு பழங்களை வெட்டி தயார்ப்படுத்த அவர் எடுத்துக் கொள்ளும் நேரம் அரைமணிக்கும் குறைவே. இத்தனைக்கும் அவருக்கு வயது 50. மற்றவர்கள் அனைவரும் பார்க்கும் வேலை 40 சதமென்றால் இவர் ஒருவர் பார்ப்பது மட்டும் 60 சதம். யார் இந்த ரஃபீக்?

ஊர் மேலப்பாளயம். குர்ஆன் ஞானமுள்ள மார்க்க அறிஞர்கள் பலரும் இந்த ஊரில் உருவாகி, தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஊர்களிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துகிறார்கள். பள்ளிவாசலின் நிர்வாகக்குழுவின் தலைவர் கலீல் என்பவரும் மேலப்பாளயத்தைச் சேர்ந்தவர்தான். அவருடைய கட்டட ஒப்பந்த நிறுவனத்தில்தான் இந்த ரஃபீக் வேலை செய்கிறார். 3 மணிக்கெல்லாம் ரமலான் மாதத்தில் ரஃபீக்கை பள்ளிவாசலுக்கு அனுப்பிவிடுவார் கலீல். சென்ற ஆண்டும் ரஃபீக்கின் சேவையைப் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதற்கான சிறப்பு ஊதியத்தை கலீலே தந்துவிடுவார். ரஃபீக் கலீலின் நிறுவனத்துக்கு வந்தது  இன்னொரு  கதை.

ரஃபீக்கின்  மகள் மேலப்பாளயத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் முதல்  மாணவியாகத் தேர்ச்சிபெற்றிருந்தார். அவரைப் பாராட்டும் விழாவுக்கு பள்ளிக்கூடம் ஏற்பாடு  செய்தது.  அப்போது கலீல் மேலப்பாளயம் வந்திருந்தார். அதை அறிந்த பள்ளி நிர்வாகம் சிறப்பு விருந்தினராக கலீலை அழைத்தது.   அந்த விழாவில் அந்த  மாணவியை மிகவும் பாராட்டிப் பேசினார். அப்போதுதான் ரஃபீக் அறிமுகமானார். ரஃபீக்கின் குடும்பத்தை அடுத்தநாள் மதிய உணவுக்காக வீட்டுக்கு அழைத்தார். அடுத்தநாள் மதியம் ரஃபீக்கின் குடும்பம் கலீல் வீட்டுக்குச் சென்றது

விருந்து முடிந்தது. நேரடியாக கலீல் தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘உங்கள் மகள் பெரிய அறிவாளி. தொடர்ந்து மேற்படிப்புகள் இருக்கிறது. உலகஅளவில் புகழ்பெற நிறைய வாய்ப்புகள் வரலாம்.  தாங்கள் பார்க்கும் வேலையில் இருந்தபடி அதையெல்லாம் சிறப்பாக கையாளமுடியுமா? யோசியுங்கள். ஆனாலும் மிகச்சிறந்த அறிவும், திறமையும் உள்ள உங்கள் பெண்ணுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இப்போதே நீங்கள் முயற்சி செய்யவேண்டும். என்னோடு நீங்கள் சிங்கப்பூர் வந்துவிடுங்கள். உங்கள் வீட்டுச் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் சம்பளத்தை நீங்கள் தனியாக சேர்த்துவையுங்கள்.  இரண்டு ஆண்டுகளில் உங்கள் கையில் பெரிய  தொகை சேர்ந்துவிடும். உங்களுக்கு சம்மதமென்றால் அடுத்த வாரமே  என்னோடு நீங்களும் சிங்கப்பூர் வந்துவிடலாம்.  யோசித்து நாளை உங்களின் முடிவைச் சொல்லுங்கள்.’

உடனே ரஃபீக் சொன்னார்.

‘இதில்   யோசிக்க என்னண்ணே இருக்கு. நான் தயார்’

அப்போது வந்தவர்தான் இந்த  ரஃபீக். இப்போது  இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது.

ரமலான்  மாதத்தின்  30 நாள் நோன்பும்  சிறப்பாக முடிந்தது.  பள்ளிவாசலின் நிர்வாகக்குழு ஒரு வியாழக்கிழமை கூடியது. தொண்டூழியர்களுக்கும், ரமலான் சிறக்க உதவிய நன்கொடையாளர்களுக்கும்  பாராட்டுவிழா நடத்துவதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்ற   ஆண்டு சிறந்த தொண்டூழியருக்கான விருது ரஃபீக்குக்கு வழங்கப்பட்டது. இந்த  ஆண்டும் அவருக்கே  தரலாம் என்று முடிவு செய்யப்பட்டு  கலீல் அறிவித்தார்.  எல்லாருமே அதை  வரவேற்றார்கள். வெள்ளை வேட்டியில் ஒரு சின்ன கறுப்புப்புள்ளிபோல்  காதர் எழுந்தார். அவர்தான் துணைத்தலைவர். கலீலோடு   போட்டியிட்டுத் தோற்று பிறகு துணைத்தலைவரானார். அதில்  அவருக்கு   ஒரு அவமானம்   இருந்துகொண்டே  இருந்தது. அவர் சொன்னார்

‘ரஃபீக் பெரிய மனிதர் .  நல்ல  சுறுசுறுப்பாளி. ஆனாலும்  அவர் ஒரு  திருடர்.’

காதர் இப்படிச் சொன்னதை குழு எதிர்பார்க்கவில்லை. எல்லாரும் காதரையே பார்த்தனர். காதர் தொடர்ந்தார்.

‘இதோ என் கைப்பேசியில் நான் அப்படிச் சொல்வதற்கான ஆதாரம் இருக்கிறது.  எல்லாரும்   பாருங்கள்’

என்றார். ரஃபீக் இரண்டு கைகளிலும் இரண்டு பைகளைத் தூக்கிக்கொண்டு கேம்பெல் லேன்  சாலையில் செல்வதுபோல் ஒரு படம். தேக்கா பேருந்து நிற்கும் இடத்தில்  147 எண் பேருந்தில் ஏறுவதுபோல் ஒருபடம். படங்களை எல்லாரும் பார்த்தனர். காதர் தொடர்ந்தார்.

‘ரஃபீக் ஹவ்காங்கில்தான் தங்கியிருக்கிறார். இரண்டு   பைகளிலும்  பள்ளிவாசலில்  நோன்பு திறப்பதற்காக வைத்திருந்த சாப்பாடு, கஞ்சி பழங்கள்தான்  வைத்திருக்கிறார். அவைகளைத்தான் அவர் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகிறார். இப்படி  தினந்தோறும் அவர்  தூக்கிப்போவதைப்  பலர்  பார்த்திருக்கிறார்கள்.  கலீலின்  அலுவலகத்தில்  வேலை  செய்வதால்  அதைப்பற்றி யாரும்  பேசுவதில்லை’

ஓர் ஆழமான   மௌனம். அதை கலீல்தான் கலைத்தார்.

‘ரஃபீக் அப்படிச் செய்திருந்தால், அதற்கான தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்டடத்தில் கோளாறென்றால் கொத்தனார் எப்படிக் பொறுப்பாவார். ஒப்பந்தக்காரர்தான் பொறுப்பு. நான்தான் அந்த ஒப்பந்தக்காரன். என்னிடம்தான் அவர்  வேலை பார்க்கிறார். காதர் சொல்வது உண்மையானால், உடனடியாக நான் என் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன். அதற்காக எந்த இழப்பீடும் பள்ளிவாசலுக்குத் தரத் தயாராக இருக்கிறேன். ரஃபீக்கை அழைத்து விசாரிப்போம். நாளையே விசாரிப்போம். மஹ்ரிபு முடிந்து   இரவு 8  மணிக்கு  விசாரணையை வைத்துக்கொள்வோம்.’

கூட்டம்  ஏற்றுக்கொண்டது.

வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முடிந்து நிர்வாகக் குழு அலுவலகத்தில் கூடியது. ரஃபீக்குக்கு ஏற்கனவே இந்த ஏற்பாட்டை கலீல் தெரியப்படுத்திவிட்டார். 8 மணிக்குக் கூட்டம். 7.55 வரை ரஃபீக் வரவில்லை. கூட்டத்தில் சலசலப்பு.

‘எத்தனை கனமாக தங்கமுலாம் பூசினாலும் ஒருநாள் பித்தளை இளித்துவிடும்’ இப்படி ஒருவர்.

‘பெருச்சாளி எத்தனை நாள் திருடித்தின்றாலும் ஒருநாள் அடிபட்டுச் சாகும்’ இப்படி  ஒருவர்

‘அவர் இங்கிருப்பதாக கலீல் நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நேரம் அவர் மேலப்பாளயம் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். ஆதாரத்தோடு நான் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.’

என்று சொல்லி ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார் காதர். ஒரு பெரிய சாதனை படைத்த மகிழ்ச்சியில் அவர் எல்லாரையும் ஓரக்கண்ணால் கவனித்தார்.  

வெளியே ஏதோ சலசலப்பு. மணி சரியாக 8. ரஃபீக்தான் வருகிறார். அவரோடு நான்கு பங்களாதேஷ் இளைஞர்கள், ஒரு வயதான தம்பதி, டன்லப் தெருவில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் பரங்கிப்பேட்டையார், கேம்பல்லேனில் அதேபோன்ற கடை வைத்திருக்கும் நாகப்பட்டிணத்தார்  என்று ஒரு கூட்டமே வந்தது.

‘இவுங்கள்ளாம் ஒன்னும் செய்யமுடியாது. இன்னிக்குத்தான் இருக்கு ஒனக்கு ஆப்பு’

என்று காதர் சொன்னது, பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது.

எல்லாரும் அமர்ந்தார்கள். ரஃபீக் மட்டும் நின்றார். சொன்னார்

‘என் வீட்டுக்குக் கீழதான் இந்த பங்களா பையன்கள் தங்கியிருக்காங்க. இந்த தம்பதிகளின் மகன் சமீபத்துல ஒரு கார் விபத்துல வஃபாத் ஆயிட்டார். இவுங்களையெல்லாம் பலதடவை பரங்கிப்பேட்டையார் கடைக்கும், நாகப்பட்டிணத்தார் கடைக்கும் நான் கூட்டிட்டுப்  போயிருக்கேன். இஃப்தாருக்கும், சஹர் சாப்பாட்டுக்கும் இவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டு, நான் வீட்டுக்குப் போகும்போது,  கஞ்சி, பழம், சாப்பாடெல்லாம் தருவாங்க.’

கடைசிவார்த்தையை சொல்லமுடியாமல் தேம்பித்தேம்பி அழுதார்  ரஃபீக். பிறகு தொடர்ந்தார்.

‘காதரண்ணெ புடிச்ச போட்டாவில இருக்குறது அந்தப்பைங்கதான். அப்பவே கேட்டுருந்தா நா சொல்லீருப்பேன். பள்ளிவாசலிலேயே எல்லாரோடும் சேர்ந்து  நா நோன்பு திறந்துருவேன். எல்லாருக்கும் உள்ளதுதான் எனக்கும். மற்றபடி பள்ளிவாசல்லேருந்து ஒரு பேரீட்சம்பழத்தக்கூட நா வீட்டுக்கு எடுத்துப் போனதுல்ல.’

என்று சொல்லி மீண்டும் தேம்பினார். பரங்கிப்பேட்டையாரும் நாகப்பட்டிணத்தாரும் அதை ஆமோதித்தார்கள். ரஃபீக் மேலும் மேலும் குலுங்கினார். அவரை இருவரும் சமாதானப்படுத்தினார்கள்.

‘என்னத் திருடன்னு சொல்லிட்டாங்கண்ணே’

மீண்டும் கதறினார். கலீல் அருகே வந்து சமாதானப்படுத்தினார்.

‘அதுதான் இல்லேன்னு தெரிஞ்சுபோச்சே. தைரியமா இருங்க ரஃபீக்’ என்றார்

கலீலின் கைகளைப்பற்றிக்கொண்டு அந்தக் கைகளிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார் ரஃபீக். அவர் வடித்த கண்ணீர் அவர் கைகளை நனைத்து வழிந்தது. அப்போது சொன்னார்

‘கலீலண்ணே நா ஒங்க வீட்டு நாயிணே.  இதுவரக்கும் நீங்க கொடுத்ததெத்தான் நா சாப்பிட்டேன்ணே. எடுத்துச் சாப்பிட்டதுல்லண்ணே’

மீண்டும் கதறினார். நிர்வாகக்குழுவே அவரைச் சமாதானப்படுத்தியது. பாராட்டுவிழாக்கூட்டத்தில் சிறந்த தொண்டூழியருக்கான விருது ரஃபீக்குக்குத்தான் தரவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்தநாள் இன்னொரு செய்தியும் ரஃபீக்குக்கு வந்தது

‘ரஃபீக்கின் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாம்.’

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationதெரியாதது 2காணிக்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *