நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்

This entry is part 6 of 9 in the series 18 ஜூன் 2023

துயர் பகிர்வோம்:

நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்.

இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது.

கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன்,  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். கனடாவில் உள்ள மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து மிகவும் திறமையாகச் செயற்பட்டவர். அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் இருந்து ‘குறிப்பிட்ட சரியான நேரத்திற்கு’ நிகழ்வைத் தொடங்க வேண்டும் என்பதைத் தான் கற்றுக் கொண்டதாகவும், அதையே கடைசிவரை கடைப்பிடித்ததாகவும் அவர் ஒரு முறை குறிப்பிட்டது நினைவில் நிற்கின்றது.

பல தரமான நாடகங்களை நெறிப்படுத்தி மேடை ஏற்றிய சிறந்த கலைஞரான இவர் ஏனையோருடைய திறமைகளையும் அடையாளம் கண்டு அவர்களையும் உள்வாங்கிச் செயற்பட்டார். சங்கத்தில் இவர் தலைவராக இருந்தபோது, நான் உபசெயலாளராக இருந்தேன். ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டால், அதற்காகக் கடினமாக உழைப்பார். மகாஜனாவின் நூற்றாண்டு விழாக் கலைநிகழ்ச்சிக்காக ‘மனசுக்குள் மனசு’ என்ற நாடகத்தை மேடை ஏற்றினார். அந்த நாடகத்திற்குக் கதை வசனம் எழுதும் பொறுப்பை என்னிடம் தந்திருந்தார். ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் மேடை ஏறிய பெருமை அவரது அந்த நாடகத்திற்கு உண்டு. கலைஞர் கணபதிரவீந்திரன் குழுவினர் அந்த நாடகத்தில் பங்குபற்றிச் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

இவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) காப்பாளராகவும் பணியாற்றினார். மிகவும் நகைச்சுவையோடு உரையாடக் கூடிய, எல்லோரோடும் அன்பாகப் பழகக் கூடிய ஒரு கலைஞரின் இழப்பு மகாஜனக் கல்லூரிக்கு மட்டுமல்ல, தமிழ் நாடகத் துறைக்கும் பேரிழப்பாகும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்

பெருமை உடைத்து இவ் உலகு (திருக்குறள்)

அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்துடன் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களான நாங்களும் கலந்து கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி.

குரு அரவிந்தன்.

Series Navigationஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்நாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *