நிழலாடும் நினைவுகள்

author
0 minutes, 44 seconds Read
This entry is part 4 of 9 in the series 18 ஜூன் 2023

.      ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி.

.                                                  

           கோடை வெயில் தகிக்கும்  மாதமிது. பள்ளிகளுக்கு விடுமுறை ,பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். பணி காரணமாக அயலூரில் இருப்பவர்கள் பெற்றவர்களோடு , உற்றவர்களோடு இருக்க சொந்த ஊருக்கு வருவார்கள். அப்படிதான் வேணியும் லக்னோவிலிருந்து ஊருக்கு வந்திருந்தாள். அதோடு தம்பிக்கும் திருமணம் இவளிடம் கேட்டு அப்பா ஏற்பாடு செய்திருந்தார். 

‘என்னடா இது? ஒரு வாரத்திற்கு இதை யாரிடமாவது விட்டுட்டு வரக் கூடாதா?.

‘இல்லை பா, இது என்னை விட்டு இருக்காதே’

‘மாமா இது இரயில்ல சும்மா  இருந்ததா?

‘சொன்னபடி அமைதியா வந்தது கண்ணா’

‘டேய் கன்னுகுட்டி மாதிரி இருக்கு’ 

நான்தான் பார்த்துப்பேன்,

என்னோடதான் வெளையாடும்.

தம்பி ரொம்ப அழகா இருக்குடா’ 

எல்லோரும் இங்கே வாங்க’

மூன்று தமக்கைகளின் ஆறு  பிள்ளைகளும்  சுற்றி நின்றனர்.

‘யாரும் சண்டை போடக் கூடாது, இது சிப்பி, ரெண்டு வயசாகுது,

சொன்னபடி கேட்கும்.அன்பா விளையாடுங்க, வம்பு  செய்யாதீங்க’

சரிங்க மாமா. என்றனர் ஒரே குரலாக.

இசைத் தட்டுகளில் போடப்பட்டிருக்கும்  கணீரென்ற குரலுக்கு உரிய டாபர்மேன் இரக நாய் அது.

அம்மா சிப்பிக்குத் தனியா பால் வாங்கணும்.

சரி டா,  எல்லாம் பார்த்துக்கலாம். நீ  கல்யாண வேலைகளைப் பாரு.

       திருமணம் முடிந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டது. உறவினர்கள்  விடை பெற்றுச் சென்று விட்டனர்.

உதவி இயக்குனராகப்  பணிமாறுதல் பெற்றிருந்த தம்பியை   கல்பாக்கத்தில் தனிக் குடித்தனம் வைத்து விட்டுத் திரும்பியிருந்தனர் அம்மாவும் அப்பாவும். சிப்பியைப் பிரிய மனமின்றி  பிரிந்த பிள்ளைகள்  வருத்தத்தில் ஆழ்ந்து விட்டனர்.அவர்களைத் தேற்றுவது பெரிய பாடாகி விட்டது.

லக்னோ புறப்படும் முன் தம்பி வீட்டிற்குச் சென்று வர வேணி  நினைத்தாள்.

அம்மா நாம் எல்லோரும்தானே போகிறோம். 

இல்ல வேணி  தங்கைங்க  வரலை.

ரெண்டு பேருமே வரலையா? ‘ஆமாம்,’ 

அக்கா சிப்பிய பாக்கணுமாம் இவங்களுக்கு ,

பிள்ளைங்கள கூட்டிட்டுப் போங்க,

நாங்களும் ஒரு வாரம்  ஓய்வெடுப்போம்.

ஆறு பேரையும் எப்படி சமாளிக்கிறது?

அதெல்லாம் மாமா பார்த்துக்குவார்.

என்ன வேணி நம்மால பார்த்துக்க முடியாதா

வேணியின் மகனுக்கு பத்து வயது மகளுக்கு எட்டு வயது,

அடுத்தவளின் பிள்ளைகள் எட்டு, ஆறு வயதில்,

இளையவளுக்கு ஐந்து வயதிலும், மூன்று வயதிலும் மகன்கள்.

‘நீங்க நாலு பேரும் வரலைனா , குழந்தைகளும் இங்கேயே இருக்கட்டும்.’

‘அம்மா அப்பா எப்படி கண்டிப்பா சொல்றாரு பாரு.’

‘இருக்கட்டுங்க , நாம பார்த்துக்கலாம்.

வம்பு பண்ண மாட்டோம் தாத்தா. கூட்டிட்டுப் போங்க.

சரி சரி பார்க்கலாம். விடியலில் புறப்பட்டால் வெயில் சூடேற்றும் முன் சென்று விடலாம் என்றார் அப்பா. வேணி.  தன் குடும்பத்திற்கு ஒரு சூட்கேஸ், அம்மா அப்பாவிற்கு ஒன்று, தங்கைகள் இருவரின் பிள்ளைகளுக்கும் ஒன்று எனத் துணிகளை அடுக்கினாள் ..கல்பாக்கம் போகும்முன் தன் அக்காவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்றாள் அம்மா. ஒருவழியாக அடுத்த நாள் அதிகாலை ஆறு மணிப் பேருந்தில் ஏறிவிட்டனர்.

சுந்தரம் எல்லா பெட்டியும் இருக்கா பா.,

எல்லாமே இருக்குது மாமா மேலே வச்சிட்டேன்.

சிறுவர்கள் சன்னலோரம் கேட்டு அமர்ந்தனர். தூங்கிப் போனார்கள் சிலுசிலுவென்ற இளங்காற்றின் தாலாட்டில்.மடியில் சாய்த்துக் கொண்டார்கள் பெரியவர்கள் பத்திரமாக. வழியில் ஒரு தொல்லையும் இல்லை. தாம்பரம் வந்ததுமே அப்பா சைதாப்பேட்டையில் இறங்கணும்  என்று எழுப்பி விட்டார்.

ஹரி எங்கேடா போற?

முன்னாடி சீட் காலியாயிருக்கு அங்கே போறேன் தாத்தா,

சரிடா பத்திரம்.

சைதாப்பேட்டையில் வண்டி நின்றதும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு இறங்கினார்கள்.பேருந்து புறப்பட்டது.

‘தாத்தா தூக்கு,’ ‘இருடா வரேன்’ .

 ‘ என்னங்க ஹரி இறங்கலைங்க’

‘என்ன வேணி பொறுப்பா இருக்க மாட்டியா?’

ஆட்டோ வரியாப்பா  அந்த பஸ்ஸைப் பிடிக்கணும்.

‘முந்நூறு ரூவா தரியா,’, ‘ சரி பா மொதல்ல புறப்படு.

‘இன்னா சார் , ஒயிங்கா புள்ளைங்கள எறக்கக் கூடாதா,

சினிமா கணக்கா சேஸ் பண்ணவேண்டி கீது.’

 அடுத்த நிறுத்தத்தில் நின்ற பேருந்தில் அவசரமாக ஏறிய சுந்தர் தூங்கிக் கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு அதே ஆட்டோவில் திரும்புகிறார்.

ஒரு வழியாகப் பெரியம்மா வீட்டிற்கு வந்தாயிற்று. காலை டிபன் முடிந்து அளவளாவிக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று வயது வதனா வீசிய பேப்பர் வெயிட்  சரியான பந்து வீச்சு போல டி, வியில் பட்டு சிலீரெனச் சிதறியது.

என்னடா பண்ற, அப்பாவின் அதட்டலில் ஓ வென குரலெடுத்தான். பரவாயில்ல விடுங்க என்றார் பெரியப்பா. அம்மாவின் பாடு தர்மசங்கடம். ஆசிரியையாக இருக்கும் பெரியம்மா  ஒழுங்கு கட்டுப்பாடு  தேவை என்பவர். அன்று மதிய உணவின்போதும் சிறுசிறு தொல்லைகள். வேணி அவற்றைப் பெரிதாகாமல் கவனித்துக் கொண்டாள். மறுநாள் காலை  அங்கிருந்து புறப்பட்டபோது,

 ‘என் தங்கையை இங்கேதான் விட்டுட்டுப் போங்களேன் .    . 

 இன்னொரு முறை வரேன் அக்கா .

        தம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அம்மா சமையல்கட்டு, அப்பா செய்தித்தாள், தொலைக் காட்சி , வேணி அம்மாவிற்கு உதவி, சுந்தர் பிள்ளைகள் மேற்பார்வை என்றானது.பத்து நாள் பட்டினி கிடந்தவன் விருந்து கண்டதுபோல் ஆனார்கள் சிப்பியைக் கண்ட சிறுவர்கள்.

  இரண்டு நாட்கள்  நன்றாகவே போனது. மூன்றாம் நாள் பிரபலமாயிருந்த வி,ஜி.பி கோல்டன் பீச் சென்று.வர வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் தம்பி. பக்கம் என்பதனால் காலைச் சிற்றுண்டி முடித்துக் கொண்டு புறப்படுங்கள் என்று சொல்லிவிட்டு ஏழுமணிக்கே வேலையிருக்கிறது என்று அலுவலகம்  புறப்பட்டுவிட்டான் .அவன் மனைவி திண்டுக்கல்லிலிருந்து வந்திருந்த தன் அம்மாவிற்கு மூட்டுவலி என்பதால் உடனிருக்கிறேன் என்று சொல்லி.. தன் பன்னிரண்டு வயது அண்ணன் மகனை அழைத்துச் செல்லுங்கள்  என்று சொல்லி விட்டாள்.

ஒரு வழியாக ஒன்பது மணிக்குப் புறப்பட்டார்கள். வி.ஜி. பி யில் இறக்கி விட்டார் ஓட்டுநர். கோட்டை மதில் போன்று சிற்பங்கள் பதிக்கப்பட்ட உயரமான சுற்றுச் சுவர். அரண்மனை வாயில் போன்று பெரிய அலங்கார வேலைப்பாடமைந்த  கதவுகள் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது..சுந்தர் சென்று நுழைவுச் சீட்டுகள் வாங்கி வந்தார். இருபுறமும் அழகான தொட்டிகளில் விதவித மலர்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன.  சற்று தூரத்தில் மிகப் பெரிய வெள்ளை வெளேறெனச் சிதறித் தாவும் செயற்கை நீரூற்று. அதனருகு இருந்த உயரமான மேடையில் சோழர் காலத்து இராஜாவைப் போன்ற மிடுக்கான உடையில் சிலை போல் ஒரு மனிதர் இடுப்பில் செருகியிருந்த நீண்ட வாளில் கைவைத்து நின்றிருந்தார். சிறுவர்களுக்கு மகிழ்ச்சி, அதிசயம், ஏன் எல்லோருக்கும்தான்.        பார்வையாளர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தார்கள். அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை சிறுவர்கள் ரவி, முருகா சிறு கற்களை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இராஜாவின் நெற்றியில் ஒன்றும், மார்பில் ஒன்றும் பட்டது. திடுக்கிட்டு அசைந்து சமாளித்துக் கொண்டார்.. இருவரின் முதுகிலும் வைத்தார் அப்பா. இருவரும் அழவே இல்லை.

      அதன் பின் உள்ளே சென்றனர். இராட்டினங்கள்.  நீண்ட கம்பிகள் கொண்ட குதிரைகள் சுற்றும்போது மேலெழுந்து கீழே வருவது இவற்றில் அமர்ந்து .குதூகலித்தார்கள் பிள்ளைகள்.  வதனா அவ்வப்போது தூக்கச் சொன்னான் . வேணியும் சுந்தரும் தூக்கிக் கொண்டார்கள்.

‘தாத்தா ஐஸ்க்ரீம் வாங்கித் தா’

‘இப்பதானேடா வாங்கினோம்.’

‘அது அங்க, இங்க வாங்கு.’

சரி சரி வாங்கலாம், அழாதே.

நல்ல பெரீப்பா நீதான்

எனுக்கு பாப்கார்ன் வேணும்.

எனக்கு கரடிப் பொம்மை வேணும்.

எனக்கு குரங்குதான் வாங்கணும்

அவனுக்கு வாங்கக் கூடாது.

என் மூஞ்சியில ஐஸ்க்ரீம் ஏண்டா போட்ட

கரடிப் பொம்மைய ஏண்டா பிச்சிட்டே.

ஒரு வழியாக சமாதானப் படுத்தி மதியம் சாப்பிட அங்கிருந்த உணவகத்திற்கு வந்தார்கள். பெரிய தட்டில் இரண்டு பெரிய சப்பாத்திகள், கூட்டு, பொறியல், வறுவல், குருமா, சாம்பார்,ரசம், பாயசம், சிறிய வடை, தயிர் என அசத்தலாகவும் சுவையாகவும் இருந்தது முழுவதும் தங்களால் சாப்பிட முடியாது என்றாலும்  பிடிவாதமாக தனித்தனியாக கேட்டார்கள். எல்லோருக்கும் தனித்தனி தட்டுகள் வந்தது. பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.அடுத்த அரைமணி நேரத்தில் ,

அரி என் தட்ட பாக்கறான்.

 நீ உன்னோட தட்டு பார்த்து சாப்பிடு,

ரவி தட்டுல ஒரு ஈயப் பார்த்தேன் பெரிப்பா. 

இல்ல பொய் சொல்றான், எறும்புதான் நான் பார்த்தேன்,

முருகா நீ சும்மா இருக்க மாட்டே.

கிண்ணங்கள் வீசப்பட்டன, சாம்பார், இரசம் முகத்தில், உடையில் எல்லோர் மீதும் தெறித்தது. பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ஒரு தம்பதியினர் மீதும் பட்டது. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஒரு வழியாக அரைகுறையாக உண்டு முடித்து பெரிய திடலில் இருந்த மற்றவற்றையும் பார்க்கத் தொடங்கினார்கள்.. 

தாத்தா எனக்குத் தூக்கம் வருது.

வேணி நானும் அம்மாவும் இங்கே இருக்கோம்,

நீங்க பார்த்திட்டு வாங்க ,

இவனும் கொஞ்ச நேரம் தூங்கினா நல்லாயிருப்பான்.

ஒரு வழியாக மாலை நான்கு மணிக்குச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வாசலுக்கு வந்தபோது ,

 ‘என் கைப்பையை அங்கேயே விட்டுட்டேன் சுந்தரம்’

எங்கேங்க விட்டீங்க,

நாம உட்கார்ந்திருந்த எடத்துல

‘இங்கேயே இருங்க நானெடுத்திட்டு வரேன் மாமா.

தூரத்திலிருந்த அந்த இடத்திற்குச் சென்று தேடிவிட்டு வந்தவர்

‘கிடைக்கலை மாமா, அதில என்ன வச்சிருந்தீங்க’

‘கண்ணாடி கூட பரவாயில்லை, பா,   ஐந்தாயிரம் ரூபாயும் போச்சே’

            வருத்தத்தோடு வீடு திரும்பினர். மறுநாள் ஏகப்பட்ட அறிவுரைகள், அன்பான கட்டுப்பாடுகள் விதித்து மாமல்லபுரத்திற்கு அனுப்பி வைத்தான் தம்பி. ஒரு பயனும் இல்லை,   புதிய செருப்புகள் வாங்கிக் கொண்ட சிறுவர்கள் சண்டையிட்டுச் செய்த வம்பில்  அங்கங்கே வீசினார்கள். அலைகள் இழுத்துக் கொண்டன. ஒற்றைச் செருப்புகளோடு நின்றனர். இது மட்டுமா . நான் நீ என்ற போட்டியில் ஒரே நேரத்தில் இருவர் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கியதில் அம்மா கீழே விழுந்து கணுக்கால் எலும்பு முறிந்து போனது. மருத்துவமனையில் கட்டு போட்டு ஊருக்கு வேன் வைத்து அனுப்பி வைத்தான்  தம்பி. 

இன்று ஹரியின் திருமணத்திற்கு வந்து லக்னோ திரும்பும் வேணிக்கு வி.ஜி.பி யைக் கடக்கும்போது இந்த நினைவுகள் நிழலாடின.

Series Navigationதிரைஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *