This entry is part 4 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான்

நீங்கள் யாரென்றே தெரியாத என்னிடம்

தானாய் வந்து கைக்குலுக்கி

உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர்

சுய புராணத்தை புகழ விட்டீர்

தோள்மீது கை போட்டு உடன் வந்தீர்

சூடாய் தேநீர்ப்பருக கூட்டிச்சென்றீர்

கோப்பையின் வெதுவெதுப்பாய்ப் பேசத்தொடங்கினீர்

இடது கையின் இரண்டு விரல்களுக்கிடையில்

புகைச் சுருட்டை புகைத்துத் தள்ளினீர்

எதற்கும் நினைவாய் இருக்கட்டுமேயென

சிரித்த முகத்துடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டீர்

தூரத்தில் யாரோ காணத்தெரிந்ததும்

கைத்தட்டி இருக்கச்சொன்னீர்

இதோ வருகிறேன் என ஓடிப்போய் கைக்குலுக்கினீர்

பழைய பாக்கி சொச்சத்துடன்

புகைக்கும் தேநீருக்கும் சேர்த்து

என் தலையில் கட்டினீர்.

    -கோவிந்த் பகவான். 

Series Navigationநட்புக்காகபழித்தலும் பழித்தல் நிமித்தமும்