முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

This entry is part 12 of 19 in the series 25 ஜூன் 2023

சி. ஜெயபாரதன், கனடா

விக்கியோ, மூச்சுவிடத் திக்குமுக் காடியோ

பொக்கெனப் போகும் உயிர்.      

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

சி. ஜெயபாரதன், கனடா

ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம்  ஆகிறது.  சொல்லப் போனால் அது ஒரு முதுமைச் சிறை வாசம் தான்.  அங்கு போக மாட்டேன் என்று சின்னப் பிள்ளை போல் மகளிடம் பன்முறை தர்க்கம் புரிந்தேன்.  மனைவி இறந்த பின் என் இல்லத்தில் இதுவரை தனியாக, சுதந்திரமாக, இனிதாக வாழ்ந்த நாட்கள், இனிமேல் திரும்பி மாட்டா என்று நான் நன்குஅறிவேன்..  பார்க்கின்சன் முடக்குவாத நோய் பத்து ஆண்டுக்கு மேல்  என்னை ஆக்கிரமித்துக் கொண்டு வேதனை தாங்க முடியாமல் தவித்து வருகிறேன்.  அத்துடன் அடுத்து மாரடைப்பு வேறு என்னை எதிர்பாராத நேரத்தில் தாக்கி விட்டது.  எனக்கு 911 எண்ணை அடித்து அவசர வாகன ஆம்புலன்சைக் கூப்பிட கையில் வலுவில்லை.  தடுமாறிக் கொண்டு எப்படியோ எதிர்த்த வீட்டு ந ண்பரை போனில் அழைத்ததும், அவர் பக்கத்து வீட்டு நண்பருடன் ஓடிவந்தார்.

இருவரும் என் நிலையை நன்கு அறிந்தவர்.  ஒருவர் 911 எண்ணை அடித்து  டெலிபோன் மாதுக்கு என் நிலையை விளக்கினார். ஐந்து நிமிடத்தில், ஒரு  வாகனம் வந்து நின்றது. நான் மூச்செடுப்பு குன்றி பேஸ்ட், பிரஸ், சேவர், மெடிகள் கார்டு, மருந்து பில்ஸ் லிஸ்ட் மற்றும் தேவையான உடைகளை மெதுவாய் பையில் எடுத்துக் கொண்டு ஆம்புலன்சில் நானே ஏறினேன்.  மீண்டும் இந்த வீட்டுக்கு வருவேனா என்பது கேள்விக் குறியானதால்,  திரும்பவும் ஒருமுறை என்னில்லத்தை பார்த்து கொண்டேன்.  எனக்கு மாரடைப்பு வந்துள்ளதை அப்போது நான்  அறிய வில்லை. 

       மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் பறந்தது. நண்பர் என் சின்ன மகளுக்கு தகவல் கொடுத்தார் போனில்.  சுதந்திர வீட்டு வாழ்வு தடையாகி மருத்துவ மனைச் சிறையில் ஒரு வாரமோ பல வாரமோ, சிக்கிக் கொள்ள இடர்களை இடையூறுகளை தாங்கிக் கொண்டேன்.  தினமும் இரத்த சோதனை. 15 பவுண்டு எடை எப்படியோ போய், எடுக்க இரத்த மில்லை. கைகளில் குத்த இடமில்லை. 24 மணி நேரம் நிரந்தர இரத்தம் திணிவு குறைய  மருந்து வீல் கம்பத்தை இழுத்துக் கொண்டு கழிப்பறை, குளிப்பறை, நடை பாதையில் போவது கண்கொளாக் காட்சி.  இருதய மென் தகடு பம்புக்கு இரத்தம் அனுப்பும் குழலில் அடைப்பு.

அருகில் காற்றுப் பைகள் பழுதாகி, ஆக்சிஜன் சிலிண்டரை இழுத்துக் கொண்டு ஒருவரை படுக்கையில் கிடத்தினார்கள். அவர் போட்ட இறுமலில் காங்கிரீட் மனையே ஆடியது.  அவரை வேறு பெரிய மருத்துவ மனைக்கு அனுப்ப முயன்றார்கள், ஒரு வாரத்தில் அவர் இறந்து போனார்.

ஆராவாரம், அலறல், இறுமல் சத்தங்கள் உள்ள மருத்துவ மனையில் 21 நாட்கள் இரவு சரிவரத் தூங்காமல் சுவர் கடிகாரத்தைப் பார்த்து எப்போது விடியும் என்று 

விழித்திருந்தேன். அங்கிருந்து ஓரளவு சுகமாகி, ரிப்லி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப் பட்டு ஒரு வாரம் ஆகிறது.  புதுச் சுற்றுப்புறம்.  50 முதியோர் [ஆடவர், மாதர்]-தங்கி வருகிறார். நான்தான் முத லில் தங்கும் தமிழன்.  ஆனாலும்  முதல் சில நாட்கள் தனிமை உணர்ச்சி கொன்றது.   பார்க்கின்சன் நோயில் துன்புற்று வரும் நான் இப்போது மாரடைப்பு வந்து, வலுவில்லாமல், கைத்தடி ஊன்றி பெங்குயின் போல் ஊர்ந்து வருகிறேன்.  மருத்துவ மனை சிறையிலிருந்து இப்போது முதியோர் காப்பு இல்லத்தில் சிக்கிக் கொண்டு உண்டு, உறங்கி, எழுந்து ஊர்ந்து வருகிறேன்.  அது பெரிய சிறை.  நிமிர்ந்து நாலு சக்கிர நடப்பு சாதன முடன்  ஊர்ந்திடும் மனிதன் நான் ஒருவன் தான்  பலர் முதுகு வளைந்து தள்ளாடும் வயோதியர். அவர்கள் நிலை என்னை விட இரங்கத் தக்கது. 

[தொடரும்]

Series Navigationபாடம்பல்லியை நம்பி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

4 Comments

  1. Avatar
    Govind Karup says:

    திரு ஜெயபாரதன் அவர்களுக்கு. மறக்க முடியா பல புதினங்கள், கட்டுரைகள் தந்தவர் நீங்கள். இது உங்கள் சொந்த அனுபவமா எனத் தெளிவாக தெரியவில்லை. அப்படியாயின், இத்தொடர் எமக்கும் ஒரு அனுபவமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *