பஞ்சணை என்னசெய்யும்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 5 of 13 in the series 2 ஜூலை 2023

      மனோந்திரா

            (நொண்டிச் சிந்து)

யாரெனக் கேட்டதற்கு – அவன்

யாதொரு பதிலையும் சொல்லவில்லை

பாரெனை என்பதுபோல் – அவன்

பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன்

கூரெனப் பார்வையினைத் – தீட்டி

குறுகுறு என்றுநான் பார்த்திருக்க

நீரென பூமியிலே – சரிந்து

நிற்காமல் மண்ணிலே போய்மறைந்தான்

மாயமாய்ப் போய்மறைந்த – அந்த

மனிதனை எண்ணியே நின்றிருந்தேன்

தேயமும் நடுங்கியது – சற்று

சிந்தையும் தானுடன் குழம்பியது

காய்ந்திட வில்லைபதம் – அவன்

காயமு டன்தரை மீண்டுவந்தான்

தீயதோர் சக்தியென்றே – எண்ணித்

திரும்பியே போய்விட எத்தனித்தேன் 

அஞ்சிட வேண்டாமென்றே – சொல்லி

அருகினில் வந்தவன் நின்றுகொண்டான்

“துஞ்சவோர் இடமுமின்றி – நான்

துயர்சுமந் தலைகிறேன் பூமியிலே

கொஞ்சமாய்த் தூங்குதற்கு – இடம்

கொடுத்திடு எனக்கது போதும்” என்றே

கெஞ்சியே கேட்டுநின்றான் – அவன்

கேட்டதைக் கொடுத்திட ஆசைகொண்டேன்

பஞ்சணை ஒன்றுசெய்து – அதில்

படுத்துறங் கிடும்படி நானுரைத்தேன்

சஞ்சலம் அடைந்தவனாய் – சற்றுத்

தள்ளியே நின்றவன் நகைபுரிந்தான்

கொஞ்சமாய் யோசிக்கையில் – அவன்

கொள்கைகள் மெல்லவி ளங்கினவே

பஞ்சணை என்னசெய்யும்! – அதில்

படுப்பவன் மனதினில் புயலிருக்க!

மனோந்திரா

22-06-2023

Series Navigationவேதனைஅதே பாதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *