மீனாட்சி சுந்தரமூர்த்தி
செல்வி கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும் அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ? நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை நிறுத்தப்பட்டது . ஆமாம் மூன்று கல்லூரி மாணவர்கள் நிறுத்தியிருந்தார்கள். நடத்துநர் இறங்கி இவளைப் பார்த்து ,சீக்கிரம் வந்து ஏறுமா , உனக்காகதான் நிறுத்தினாங்க’ என்றார். இவள் அவர்களைப் பார்த்து நன்றிங்க என்றாள். அதில் ஒருவன் ஐந்து மாதங்களாக இவளைத் தொடர்ந்து வருகிறான் என்பதை இவள் அறிவாள். ஒருநாளும் பேசினதில்லை, கூட்டமாக இருந்தால் உட்கார இடமின்றி நிற்கும் இவளை யாரும் நெருக்காமல், உரசாமல் காவலாய் நிற்பான்.
‘ஏண்டா ரகு அவகிட்ட எப்படா பேசப்போறே’
சரியான நேரம் வரட்டும்டா’
‘எப்ப வரும் , நீ அதுக்குள்ள கிழவனாகிடுவ’
அவளையும் யாராவது கல்யாணம் பண்ணிட்டு போயிடுவான்’
பயமாயிருக்குடா?
‘டேய் இதெல்லாம் வேலைக்கு ஆகாது? எப்படியாவது முயற்சி பண்ணு’
செல்வி. கூட வர பொண்ணு பேரு மல்லிகா , அவகிட்ட பேசு முதல்ல.
எப்படியோ மகளிர் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த ., செல்வியும் ஆடவர் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த ரகுவும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்தார்கள். பொது இடத்தில் எங்கும் பேச்சே கிடையாது, கல்லூரி நிறுத்தத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவ்வளவே, புதுப்புது கவிதை, இலக்கிய நூல்களாக வாங்குவான் ரகு. அதில் வைத்து கடிதம் தருவான் . சில நாட்களில் பதில் கடிதத்தோடு. புத்தகத்தைத் திருப்பித் தருவாள் செல்வி
கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தது
‘மூன்று வருடம் போனதே தெரியலை செல்வி’
‘மல்லிகா நீ ஊருக்குப் போயிடுவியா.
‘என்னடி பண்றது? நீ ரகுவைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கணும் ‘பயமா இருக்கு மல்லிகா, இதெல்லாம் நடக்குமானு தெரியவே இல்லை.
‘எல்லாம் நடக்கும்டி கடவுளை வேண்டிக்குவோம்.’
‘ அம்மா ரெண்டு பேரையும் வரச் சொல்றாங்க’ தங்கை மேகலா வந்து அழைத்தாள்
‘மல்லி உனக்குப் பிடிச்ச பச்சபருப்பு பாயசம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செஞ்சிருக்காங்க அம்மா வா’
தோழியர் அன்று முழுவதும் பேசிக் களித்தனர். பிரிய மனமின்றி விடை பெற்று நெல்லை சென்றாள் மல்லிகா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் படிப்பு முடித்திருந்த ரகு இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடித்து அதிகாரியாக டில்லிக்கு வந்தான்.
கிணற்றில் போட்ட கல் போல ஒருமாதம் அப்படியே ஓடியது.. ஒருநாள் மதியம் கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருந்த செல்வியிடம் ‘அக்கா ரவி அண்ணா தந்தார்’ என்று ஒரு நீல நிற கடிதத்தைத் தந்தாள். மேகலா .. எட்டாவது படிக்கும் அவளிடம் சில முறை பேசியிருக்கிறான் . ரகு. இந்த விவரம் அவளுக்கும் தெரியும்.
நண்பன் ரவிக்கு கடிதம் அனுப்பும்போது செல்விக்கு எழுதும் கடிதத்தை அவளிடம் சேர்க்கச் சொல்லியிருந்தான் ரகு’
‘இன்னும் ஒரு வாரத்தில் விடுமுறையில் வருவேன், தேர்வு நன்றாக எழுதியிருப்பாய், நம் கனவெலாம் நிறைவேறப் போகிறது விரைவில் சந்திப்போம்’
கண்களில் நீர் துளிர்க்கத் தங்கையைக் கட்டிக் கொண்டாள் செல்வி.
‘என்ன சார் உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது, திடீர்னு வந்து பொண்ணு கேக்கறீங்க?’
‘ உங்க பெண்ணைப் படிக்கும்போது பார்த்திருக்கான் எங்க மகன்.அவனுக்குப் பிடிச்சுப் போச்சு, பிடிவாதமா இருக்கான்’
‘ நாங்க வேற, நீங்க வேற எப்படிங்க சரியா வரும், அதோட அவ மேல படிக்கணும்’
உங்க மகளை மேலே நாங்க படிக்க வைக்கிறோம். வேற்றுமை சொல்லாதீங்க,
‘ உங்களால முடிஞ்சதை செய்யுங்க , பெண்ணைத் தந்தால் போதும்’
தஞ்சாவூருக்கு வந்து எங்களைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க’
‘ ஒரு வாரத்தில் பதில் சொல்றேன்’
ரகுவின் பெற்றோர் செல்வியின் வீட்டிற்கு வந்து பேசிவிட்டுச் சென்ற மூன்றாம் நாள் அவளின் தாய்மாமன் வந்தார்.
‘ என்ன . உண்ணாமலை’ சொல்ற, விசுவம் நீ என்ன சொல்ற?’ வெங்கடேசன் பி.எச்.டி முடிச்சி வேலைக்கும் போய் மூணு வருஷமாகுது..ஆனியில நாள் குறிச்சிடலாமா?
‘நீயே உங்க அண்ணனிடம் சொல்லு’
‘ என்னது தஞ்சாவூர்க்காரன் முக்கியமா போயிட்டானா ‘பொறந்த வீட்ட மறந்துட்டியே உண்ணாமலை’
‘அண்ணி மன்னிச்சிடுங்க வேற வழி தெரியல’
‘என் பிள்ளை இதை எப்படித் தாங்குவான்?, காலம் கெட்டுக் கெடக்குது, பத்தாவதோட படிப்ப நிறுத்துனு அப்பவே சொன்னேன்’
‘விசுவம் பசங்க பொறந்தப்பவே உறுதி பண்ணதாச்சே’
முன்ன பின்ன தெரியாத எடத்துல போய் நல்லாவா இருக்கப்போறா?
‘அண்ணி நல்ல வார்த்தை சொல்லுங்க’
ஒரு வழியாக மணநாள் குறிக்கப்பட்டு தஞ்சையில் ஏற்பாடுகள் நடந்தது .. ரகுவின் அக்கா சென்னையிலிருந்து வந்திருந்தாள்.
‘அப்பா உங்க பேத்தி பிறந்தப்பவே சொன்னீங்க , தம்பிக்கு கட்டிக்குவேனு ஞாபகமிருக்கா?’
‘ இருக்குடி, சும்மா அப்பாகிட்ட கேள்வி கேட்காதே, ரகுவோட விருப்பத்த தள்ள முடியல’
‘அம்மா நீதான் அவனுக்கு புத்தி சொல்லணும்’
‘ விடுமா, என் பேத்திக்கு ராஜா போல மாப்பிள்ளை பார்த்துடுவோம்.’
‘ போங்கப்பா, எல்லாரும் திட்டம் போட்டு ஏமாத்திட்டீங்க’
‘முன்ன பின்ன தெரியாதவளோட இவன் நல்லாவா இருக்கப்போறான்?
‘ ஏண்டி தம்பினு கூடப் பார்க்காம இப்படிப் பேசறியே?
கோலாகலமாகத் திருமணம் நடந்து முடிந்தது. சென்னை சென்ட்ரலில் இரண்டு வீட்டு உறவுகளுமாய் நாற்பது பேர் திரண்டு வந்து வழியனுப்பி வைத்தனர்.
‘ செல்வி நம்மை வரவேற்க இதே போல் எத்தனை நண்பர்கள் வருவாங்க தெரியுமா?’
‘ ஓ அப்படியா?, எல்லாம் கனவுபோல் இருக்குதுங்க’
இரண்டாண்டுகள் ஓடிவிட்டது. வளைகாப்பு முடிந்து பிறந்தகம் வந்திருந்தாள் செல்வி .நல்லதொரு நாளில் அம்மாவின் நிறத்தில் அப்பாவின் சாயலில் அழகான கண்ணன் பிறந்தான். மூன்று மாதங்கள் ஓடிவிட்டது, அன்று நல்ல வெயில் மின்தடை வேறு, . தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை,
‘அம்மா இங்கே வா இவன் முகம், கை,காலில் வீறல் வீறலா இருக்குது?
‘ இரு பதட்டப்படாத, எறும்பு கடிச்சிருக்கும்’
‘ என்னது இரத்தமா வருது,
உடனடியாக குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் செல்வியின் தந்தை. மருத்துவரின் அறையில் குழந்தை அழுகை நிறுத்தியது. பல பரிசோதனைகள் நடந்தது. ஏதாவது ஒவ்வாமையாக இருக்குமென அனுப்பி விட்டார் மருத்துவர். ஆனால் தொட,ர்ந்து இப்படி கீறல்களாகs கீறல்களில் இரத்தம் கசிய ஆரம்பித்தது உடனடியாக வந்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் சென்ற ரகு பெரிய மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களிடம் காட்டினான். பல ஆய்வுகளுக்குப் பிறகு காரணம் தெரிந்தது.
ஒரு மனிதரின் உடலில் வெப்பத்தின் அளவைச் சமன்படுத்த வியர்வைச் சுரப்பிகள் உதவுகின்றன. அந்த வியர்வைச் சுரப்பிகள் குழந்தைக்கு இல்லை என்றொரு மருத்துவமனை அறிக்கை சொன்னது. இன்னொரு மருத்துவமனை வியர்வைச் சுரப்பிகள் மிகவும் குறைவாக உள்ளதோடு அவையும் செயல்படாது என்று ஆய்வு முடிவு தந்தது. அதனால் உடலில் வெப்பம் அதிகமாகும்போது தோல் வறண்ட நிலம்போல் வெடித்து இரத்தம் வடிகிறது என்றனர்.
‘ என்னதான் சார் சொல்றீங்க? இதற்கு சிகிச்சை இல்லையா?’
‘ தற்போது இல்லை ரகு இலட்சத்தில் ஒரு குழந்தை இப்படிப் பிறக்கிறது, ஒரு வகையில் பரம்பரையாய் வந்த குறைபாடாகவும் இருக்கலாம்.’
‘ எங்கள் வாழக்கையின் வசந்தமே இவன்தானே சார்’
‘இப்படிப்பட்ட குழந்தைகள் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் இருக்கலாம். ‘
‘குழந்தைக்கு வேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’
சிறகிருந்தும் பறக்க முடியாத பறவை போல அழகான மகனின் நிலை நகக்கண்ணில் பட்ட முள்ளாய் வலித்தது இருவருக்கும்.
‘செல்வி என் அக்கா தந்த சாபமோ இது?
‘ரகு எங்க அத்தை கூட நல்லா இருக்க மாட்டேன்னாங்க ‘
‘என்ன பாவம் செய்தோம் தெரியலே’
‘இவங்களை நாம அதிகமாக காயப்படுத்தினதால் இப்படி ஆனதோ’
இரண்டு குடும்பத்தினரும் அவரவர் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும் விரதமிருந்து வேண்டுதல்கள் வைத்தனர். டில்லியிலிருந்து மாறுதல் சிம்லாவிற்கு கண்ணன் நிலை சொல்லி வாங்கினான் ரகு. அடுத்து டார்ஜிலிங், டல்ஹௌசி என்று குளிர்ப்பகுதிகளாக அழைத்துச் சென்றான்.தொண்டு நிறுவனம் ஒன்று குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஜாக்கெட் ஒன்று ரஷ்யாவிலிருந்து வரவழைத்துத் தந்தது.
‘அம்மா என் பல்லெல்லாம் எப்போ அழகாகும்?
‘நீ சரியா சாப்பிடு சீக்கிரம் வளர்ந்திடும்.’
‘அப்பா எனக்கு ஏன் தலையில நெறைய முடி இல்லை’
‘ கண்ணா அறிவான பிள்ளைகள்னா இப்படிதான் இருப்பாங்க’
‘போப்பா பொய் சொல்ற நீ’
‘ஏம்மா நம்ம வீட்ல தம்பி பாப்பா இல்ல . தங்கச்சி பாப்பா கூட இல்ல’
‘செல்வமே உனக்கு நந்தலாலா இருக்கான் பாரு’
ஓ நந்தலாலா, நான்கடி உயர குழலூதும் கண்ணன் சிலையைத் தடவிக் கொஞ்சினான் கண்ணன்.
காலதேவனின் சக்கரம் நிதானமாகவே சுழன்றது. ‘செல்வி எழுந்திரு, ஒரு காபி குடிக்கலாம்’
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தாள் செல்வி, ஒரு வயது மகளைத் தூக்கிக் கொண்டு கண்ணனை விரும்பி மணந்த மருமகள் இறங்கினாள். ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி வந்து காரின் கதவைத் திறந்தான் கண்ணன்.’குளிருதாம்மா ‘ சால்வையைப் போர்த்தி விட்டான்.
‘. குளிரும்தான் இன்னும் ஒரு மணி நேரத்துல மல்லிகாவைப் பார்க்கப் போகிற சந்தோஷம்’ என்றார் ரகு.
ஆமாம்பா மனசே குளிர்ந்துதான் இருக்குது என்று மகனின் தோளில் சாய்ந்தவளை அணைத்துக் கொண்ட கண்ணனின் விழியோரம் ஈரம் கசிந்தது.