ஆர் வத்ஸலா
திருமணத்திற்கு முன்
அவசர அவசரமாக படித்த
சமையல் புத்தகங்கள் மானத்தை வாங்கவே
மாமியாரிடம் திட்டு வாங்கி
கற்றுக் கொண்ட முதல் பாடம்
லட்டு செய்முறை
கண் திட்டத்தில்
அரிசி மாவு
கடலை மாவு
சோடா உப்பு
சர்க்கரை
கேசரி பவுடர்
தண்ணீர்
இரும்பு ஜாரணியை
பாணலி முன் வைத்த
உயரப் பலகையில்
‘டக் டக்’ என தட்டி
முத்து பூந்தி தயாரிப்பு
பாகு கம்பி கணக்கு
லட்டு பிடிக்கும் சூட்டின் பதம்
கணவனின் பாராட்டை
‘லட்டு மாமி’ எனும்
பட்டப் பெயரை
உறுதிப்படுத்தின
தீபாவளிகள்
அன்று
இன்று
நான் சாப்பிட்டால் கொன்றே போட்டுவிடுவான்
மருத்துவ பட்டம் பெற்ற மகன்
மகன் மருமகள்
மகள் மருமகன்
லட்டு தொடா ‘டயட்’டில்
பெயர்த்தி நம்மூர் பட்சணங்களுக்கு மட்டும்
‘டயட்’டில்
பேரனுக்கு ‘மூட்’ வந்தால் அரை லட்டு
அலுத்துப்போய் கொடுத்துவிட்டேன் என்னுடைய
இரும்பு ஜாரணியை
சமையற்கார மாமாவுக்கு
லட்டு சாப்பிடாமல் இருப்பது
பழகிவிட்டது
ஆனால்
நுழைந்தமர்கிறது மனதின் மூலையில்
எதையோ தொலைத்து விட்டது போன்றதோர் உணர்வு
ஒவ்வொரு தீபாவளி அன்றும்