நாவல்  தினை              அத்தியாயம் இருபத்துமூன்று

This entry is part 6 of 7 in the series 16 ஜூலை 2023

   

இரண்டாம் நாள் மாநாடு.   ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் பூரணி கச்சேரி என்று ஊர் எல்லாம் தமுக்கு அடித்து விளம்பரம். 

பூரணியைத் தெரியாதவர்கள் கூட யாரது என்று ஆர்வத்தோடு விசாரிக்கிற அளவு பிரபலம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு போவதை கர்ப்பூரமய்யன் கவனிக்கத் தவறவில்லை.

 வெள்ளிக்கிழமை ஒரு பிரார்த்தனைப் பாட்டு. ரெண்டு பாரதியார் பாட்டு. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரக் கச்சேரி என்று பெரிய எதிர்பார்ப்பு. 

கர்ப்பூரமய்யன் இந்தப் பரபரப்பை ரூபாய் அணாவாக மாற்ற வழி தேடிக் கொண்டிருந்தான். இன்றைக்கு என்னமோ எதையெடுத்தாலும் எட்டணா வகையறா விற்பனை சோபை குறைந்து போனதாகத் தோன்றியது. 

காலைச் சிற்றுண்டி கல்லுக் கல்லாக இட்டலியும், குழைந்து போன கிட்டத்தட்ட திரவ பதத்தில் இருந்த பொங்கலும், முந்தாநாள் டிகாக்‌ஷனும் பெயருக்குப் பாலும் சேர்த்த காப்பியும் எல்லாம் கொஞ்சம் ஏமாற்றம். 

சிநேகிதன் புகார் சொன்னபோது கர்ப்பூரமய்யன் சொன்னான் – ஒரு சல்லிக்காசு வாங்காமல் இவ்வளவு ஜனக்கூட்டத்துக்கு இலவசமாக சிற்றுண்டி, மதியச் சாப்பாடு ரெண்டும் கொடுக்கறது மட்டுமில்லை. சமைக்க, தள்ளுமுள்ளு ஏற்படாமல் விநியோகிக்க, பாத்திரம் பண்டம் சுத்தப்படுத்தி கொடுத்து திரும்ப வாங்கி நிர்வகிக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா நாக்கு தள்ளிடும்.  

எதை எடுத்தாலும் எட்டணா விற்பனையை விட குறைந்த விற்பனை அடுத்த ஸ்டால் ஆன கதர் வேட்டி, துண்டு, ஜிப்பா விற்பனை. குலுக்கல் முறையில் விற்பனை செய்து பார்க்கலாம் என்று யோசனை சொன்னான் கர்ப்பூரமய்யன். 

அங்கேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து சட்டைப்பையில் இருந்து பாக்கெட் நோட்புக்கை எடுத்து ஏதோ கணக்குப் போட்டு வந்தேமாதரம் சீட்டு நான்கணா. விழுந்தால் ஒரு செட் கதர் வேட்டி, சட்டை, துண்டு இலவசம். விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு என்று பரபரப்பாக விளம்பரம் செய்ய, ஒரு மணி நேரத்தில் இருபது குலுக்கல் நடந்து கிட்டத்தட்ட பாதி சரக்கு விற்றுப் போனது நல்ல லாபத்தில். 

தலைவர்கள் வந்தேமாதரம் குலுக்கல் தடை செய்யப்படும் என்று கண்டித்தபோது சுதந்திர இந்தியாவில் அதைத் தடை  செய்யலாம். இப்போது முடக்கிய முதல் திரும்ப வரட்டும் வந்தேமாதரம் என்று கர்ப்பூரமய்யன் எடுத்து விட, ராட்டை, பஞ்சு, ஜவ்வாது விற்கிற மற்ற வியாபாரிகள் வயிறு வாடாமல் இருக்க விற்பனை கர்ப்பூரமய்யன் சொன்னபடி நடக்கட்டும் சுதந்திரம் தானே வரும் என்று வியாபாரத்தில் மும்முரமானார்கள். 

ராத்திரி எட்டு வரை மும்முரமான விற்பனை. சொற்பொழிவு அரங்கிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. கதர்க்கடை நண்பன் பாலாஜி கர்ப்பூரய்யனிடம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று கண் கலங்க, கர்ப்பூரம் சொன்னது – இலவசச் சாப்பாடு என்று எதுவும் இல்லை சிநேகிதா. 

அவன் புரியாமல் பார்க்க, பாலாஜி, நீ ரிக்கார்டு கம்பெனி வச்சிருக்கே தானே, சரி உன் மாமனார். அவருக்கு நானூறு சதவிகிதம் லாபம் அதிகரிக்க நான் வழிசெய்கிறேன். என்னை உன் மாமனாரிடம் கூட்டிப்போ   என்றான். 

சனிக்கிழமை ராத்திரி பட்டப்பா நாடகம் கூட சுமாராகத்தான் போகப் போகிறது, கூட நடிக்க வேண்டிய சுந்தரம்மா வரமுடியவில்லையாம். 

கதர் பாலாஜி அவன் ஸ்டாலில் இருந்து கர்ப்பூரமய்யன் எதை எடுத்தாலும் ஸ்டாலுக்கு வந்து சொன்னது – அவன் மாமனாரும் இந்தப் புதுப்பொண்ணை ரிகார்ட் குரல் டெஸ்ட் நாளைக்கு எடுக்கத் தயாராம். சரியாக வந்தால், பட்டணத்தில் திருப்புகழ், காவடிச்சிந்து என்று பத்தை பத்தையாக இவளைப் பாட வைத்து ரிகார்ட் தரச் செய்யலாம். 

இந்தக் குட்டி நாளைக்கு வடக்கு வடம்போக்கி தெரு வீட்டு ஆபீசில் குரல் டெஸ்ட் எடுக்க வருவாளா? தயக்கமே இல்லாமல் வரேன் என்று சொல்லி விட்டாள். கூட வந்த அவள் தம்பியோ எவனோ மாரியம்மன் தெப்பக்குளம் பக்கம் நாளை சொந்தக்காரர்களைத் தேடிப் போகப் போகிறானாம். அது நல்லதுக்குத்தான். கர்ப்பூரமய்யன் கணக்குப் போட்டான்.

நாளைக்கு பகல் பனிரெண்டு மணிக்கு குரல் டெஸ்ட் முடித்து தமுக்கம் மைதானம் வந்து விடலாம். நாளை சாயந்திரம் கச்சேரி. ராத்திரி பதினொன்றுக்கு பாசஞ்சரை பிடித்து கும்பகோணம் நல்ல பிள்ளையாக வீடு போய்ச் சேர்ந்து விடலாம். 

இன்று சனிக்கிழமை பிற்பகல் உள்ளூர் பேச்சாளர்கள் உள்ளூர்க் கடையில் கோலி சோடா விற்கிற விலை பற்றி எல்லாம் குரலெடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பிநாதன்  திருமலை நாயக்கர் மஹால் பக்கம் ஒரு சௌராஷ்ட்ர நண்பனைப் பார்த்து விட்டு வருவதாகக் கிளம்பிவிட்டான். ரொம்ப நல்லது. தம்பி என்றால் இப்படி இருக்கணும்.

 பூரணி ப்ளேட் கொடுப்பதில் இருக்கும் சிரமம், விற்றால் எவ்வளவு கிடைக்கக் கூடும் என்று ஈடுபாட்டோடு கர்ப்பூரம்மய்யனோடு பேசிக் கொண்டிந்தாள். உள்ளூர், மலையாள பூமி சோதரர்கள் பேச இடையிடையே நாளை பத்து மணிக்கு ஜவஹர்லால் நேரு அல்லது அவர் தந்தை மோதிலால் நேரு சொற்பொழிவாற்றுவார் என்று அறிவிப்பு. அங்கே வந்திருந்த நூற்றுக் கணக்கான பெண் சேவாதளத் தொண்டர்கள் விஜயலட்சுமி பண்டிட்டை எதிர்பார்த்திருந்தார்கள்.

நாளை ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் பூரணி இந்துஸ்தானி சங்கீதக் கச்சேரி, ராத்திரி எட்டு மணிக்கு சுந்தரதாஸின் வள்ளித்திருமணம் என்றும், விருந்துச் சாப்பாட்டை கடைசி நாள் மகாநாடு என்பதால் எதிர்பார்த்தும் நிறையத் தொண்டர்கள் ஊர் சுற்றத் திட்டமிட்டார்கள். 

மற்றப் பேச்சை விட சத்தியமூர்த்தி அற்புதம் என்று எதிர்பார்த்தும் நிறையப் பேர். ஆறு மணி சாயந்திரம் அதிகமாக இருட்டிக் கொண்டிருந்தது. ஆனால் எதை எடுத்தாலும் கடையிலும்,  கதர்க் கடையிலும், ஜவ்வாது, கோலி சோடா கடையிலும் சாயந்திர விற்பனை மும்முரமாக இருந்தது. 

பூரணியை மகாநாட்டுப் பந்தலுக்குள் அழைப்பதில் யார்யாரோ ஆர்வம் காட்டினார்கள். அதான் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் கச்சேரின்னு போட்டு உட்கார்த்தி வச்சிருக்காங்களே இன்னிக்கும் வேறே பாடணுமா என்று கேட்டாள் எல்லோரிடமும் ஒரே சதவிகிதத்தில். அவளை அப்படி அழைத்ததில் பெருமையும் அவளிடம் தட்டுப்பட்டு ஒரு கீற்றுப் புன்னகையாக மின்னி மறைந்தது.

 கர்ப்பூரமய்யன் கடையில் அது இதுவென்று உதவி செய்ய, சமயத்தில் கல்லாவில் வியாபாரம் கவனிக்க அதுவும் கர்ப்பூரத்தோடு பேசியபடியே எல்லாம் செய்ய அவளுக்குப் பிடித்திருந்தது. 

கர்ப்பூரத்தின் நண்பர்களும் இங்கிதம் பார்த்து அவனை அவளோடு பேச விட்டுவிட்டுத் தனியாக நேரம் கொடுத்து விலகி இருந்தார்கள்.

பட்சி படிஞ்சு வந்தாச்சு. இனி படுக்கை விரிக்க வேண்டியதுதான் மிச்சம்.  கர்ப்பூரத்துக்கு உடம்பெல்லாம் மச்சம்.

அவன் தோழன் சுப்பாசாமி குரல் தணித்து சொல்ல மற்ற சிநேகிதர்கள் சிரித்தபடி பூரணியைப் பார்த்தார்கள்.

போஜனசாலையில் அருமையான ஊத்தப்பமும் கோதுமை தோசையும் கிடைத்து பட்டப்பா நாடகம் பார்க்கப் போவதற்கு முன் வயிறு நிறைந்தது. 

பூரணி பக்கத்தில் இருந்து உண்ணும்போது கபிதாள் நினைவு வந்தது கர்ப்பூரத்துக்கு. இந்த இரண்டு நாளில் அவளை நினைத்தது கட்டுச் செட்டாக நாலைந்து தடவை மட்டும் இருக்கக் கூடும்.

 கபிதாளை நினைக்கும்போது அவனுக்குத் தேள் நினைவு வருகிறது. கல்யாணப் பகலில்,   முயங்கிக் கிடந்த முதல் ராத்திரியில் அது வீட்டுக்குள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா படுக்கை சௌகரியமா என்று பார்த்துப் போனது. ஜ்வரம் வந்து கூடத்தில் கிடந்தபோது, கர்ப்பூரமய்யரே டாக்டர் கிட்டே கூட்டிப் போம் உடனே என்று தூணில் இருந்து கொடுக்கு உயர்த்திச் சொன்னது. கோவில் பல்லக்கில் அவளை வைத்துத் தூக்கிப் போனபோது, பல்லக்கு உள்ளே ஏதேதோ சத்தங்களோடு அதுவும் உள்ளே இருந்திருக்கலாம். கர்ப்பூரய்யன் நினைவில்  பெரும்பகுதி கபியோடு கூட தேள் வருகிறது. பிறந்தபோதே தேள் கொட்டி அழுத சிசுவோ என்னமோ அவள். 

பக்கத்தில் நின்று அவன் முழுக்கக் கேட்கக்கூட விடாமல் சலசலவென்று நிறுத்தாமல் பேசி வரும் இந்தப் பெண் இரண்டே நாளில் கபிதாளின் இடத்தை மனதில் இருந்து சுபாவமாக எடுத்துக்கொண்டு விட்டாள் என்றால் அது மிகையான நினைப்பாகும். ஆனால் அதுதான் நடந்து வருகிறது.

எள்ளுப்பூ நாசியும், தீர்க்கமான கண்களும். மெல்லிய சிவந்த உதடுகளும் எல்லாம் கபிதாளிடம் இல்லை. இனிய அந்தத் தேவதைக் குரலும் தான். என்றாலும் கபிதாள் சாந்நித்யம் கொண்ட தெய்வம் போல. 

கடவுள் வரும் நேரம் இல்லை இது. பூரணி என்ற தேச பக்தை, நெத்திலிக் கருவாட்டுப் ப்ரியை, கலகல சிரிப்புக்கு சொந்தக்காரி மோகினியின் நேரம் இது. 

வாயில் அதிகம் எச்சில் சுரந்து வாயைத் துடைத்தபடி கைக்குட்டையை இடுப்பில் சொருகி பளிச்சென்று இடுப்பு மெலிவு காட்டும் பூரணி வாய் எச்சில் அவ்வப்போது கர்ப்பூரய்யன் வலதுகைத் தண்டையில் காற்றில் வந்து சிதறி லகரி ஏற்றுகிறது. 

அவளுக்கும் அவனோடு பிரியம் கவிந்து வருகிறது. வெறும் இரண்டே நாளில் நேரமும் இடமும் சந்தர்ப்பமும் கிடைக்கக் கூடி வரும் நெருக்கம் அது. அவளுக்குத் தெரியும் இதை எங்கே நிறுத்தலாமென்று.

மங்கம்மா சத்திரம் போய்ச் சேருவதற்குள் மழை ஆரம்பித்து விட்டது. பூரணியும், கர்ப்பூரமும் சொட்டச் சொட்ட நனைந்து விட்டார்கள். பூரணி கதவைத் திறந்து உள்ளே போனாள். கொஞ்சம் தயங்கி நின்றான் கர்ப்பூரம். மழையில் இரு பக்கமும் அடர்த்தியாக நீர்த் தாரைகள் பொழிவது மட்டும் தெரிந்தது. அடுத்த இடி முழங்கும்போது அவன் உள்ளே இருந்தான்.

அவன் வெளியே வந்தபோது மழை விட்டிருந்தது. அவள் ஓய்ந்திருந்தாள். லகரியில் இருந்தாள். பயந்திருந்தாள். மகிழ்ந்திருந்தாள். குற்ற போதத்தில் இருந்தாள். எதையோ சாதித்த மேட்டிமையில் இருந்தாள். அசுத்தமாக உணர்ந்திருந்தாள். உயிர் கலந்த பரிசுத்தத்தில் இருந்தாள். அவள் அவனாக, அவன் அவளாக ஆன மாயம் அது. எங்கே நிறுத்தலாம் என்று அவளுக்குத் தெரியும். நிறுத்தத்தான் மனம் வரவில்லை. என்னைக் கொடுப்பேன், எனக்கு என்ன கொடுப்பாய்? அவனை மீண்டும் நெருங்கியிருந்து மௌனத்தில் கேட்டாள். எது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள். என் உடலும் மனசும் எதை எடுத்தாலும் எட்டணா தான். நெருங்கிக் கிடந்து மறுபடி வளை எறிய மறுபடி அவள் அவனுக்குக் கிடைத்தாள்.

காலையில் தயங்கித் தயங்கி கர்ப்பூரம் சத்திர வாசலுக்கு வந்தபோது சாமிகளே என்று அழைக்கும் ஒலி. அவள் தான். நிமிர்ந்து பார்க்க முடியாமல் மனதில் குற்ற உணர்ச்சி. மெல்ல தலையுயர்த்தினான். 

உள்ளே வாங்க என்று அழைத்தாள். தரையில் பாய்க்கு வெளியே அவள் தம்பி தயா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 

கர்ப்பூரத்தின் பார்வை  போன திசையில் கண்கள் சஞ்சரிக்க, பூரணி சொன்னாள் – நடுநிசிக்கு அடுத்த மழையோடு வந்தான். பாவம். ராத்திரி தமுக்கம் மைதானம் போய் என்னமோ பயித்தாரத்தனம் அங்கே நான் இல்லேன்னு தெரிஞ்சு இங்கே சத்திரத்துக்கு வந்திருக்கான். நானா? ஏன் கேக்கறீங்க. சொட்டச் சொட்ட நனைஞ்சு. நல்ல வேளையா ஒரு ஜட்கா வண்டி வந்துச்சு. இந்தப் பக்கம் தான் வீடாம் அவருக்கு. நேரே கொண்டு வந்து விட்டுட்டார். டீ குடிக்கறீங்களா? நான் குடிக்கப் போறேன். 

இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள் பூரணி. ராத்திரிக் கதையை கட்டிச் சமைத்த திறமை அவனை பிரமிக்க வைத்தது. கர்ப்பூரமய்யன் அவளிடம் ராத்திரி அத்து மீறியது அவள் மனதில் பதியவே இல்லையா? அவளால் தாங்க முடியாத அதிர்ச்சியில் மனம் புரண்டிருக்குமோ. 

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் போய்க் கிசுகிசுத்தாள் – இப்படித்தான் ராத்திரி ஆரம்பிச்சீங்க. 

அவள் கலகலவென்று சிரித்தாள். அவன் சற்றே தாமதித்து அந்தச் சிரிப்பில் ஜாக்கிரதையாகக்  கலந்து கொண்டான்.

 மீண்டும் குற்றபோதம் ஏற்பட நிறுத்தி தப்பு என்கிறதுபோல் தலையசைத்தான். தயா எழுந்து,  உட்கார்ந்து இடம், காலம் போதமின்றி டீ கொண்டுவாங்க என்று கண்ணை மூடியபடியே சொல்ல பூரணியோடு கர்ப்பூரமும் அடுத்த அலை சிரிப்பில் மூழ்கினாள். 

தயாவுக்கு இடமும் காலமும் புலப்பட்டபோது அவன் எழுந்து நின்றான். கர்ப்பூரத்துக்கு ஒரு வணக்கம் சொல்லி வாசலுக்கு ஓடினான். வரும்போது மூன்று கிளாஸ் டீயோடு வந்தான்.

கர்ப்பூரமும் தயாவும் வாசலில் நின்றிருக்கக் குளித்து விட்டு குரல் டெஸ்டுக்கு வடம்போக்கு வீதிக்குப் புறப்பட்டாள் பூரணி. நான் மீட்டிங் போறேன் என்றான் அவள் தம்பி. அவனுக்கு இங்கிதம் தெரியுமாக்கும்.

அம்மா அப்பா என்ன செஞ்சிட்டிருத்தீங்கன்னு கேட்டால் பாதி நிஜமாவது சொல்லலாம் என்றாள் பூரணி சிரித்தபடி. சரியாக எட்டு மணிக்கு மங்கம்மா சத்திரத்தில் இருந்து புறப்பட்டு கொஞ்ச தூரம் போய் ஜட்கா வண்டி பிடித்தார்கள். 

கர்ப்பூரம் கதர்ச்சட்டை போட்டிருந்தான். சட்டைப்பையில் இருந்து சிறு காகிதப் பொட்டலத்தை பூரணிக்குக் கொடுத்தான். 

விடியற்காலையிலே கோவிலுக்குப் போயிருந்தேன். உனக்காக அர்ச்சனை செஞ்சேன். சதய நட்சத்திரம் தானே? மீனாட்சி அம்மன் குங்குமம் இட்டுக்கோ என்றான். ராத்திரி அவளை உடல் சோர ஆக்ரமித்து விட்டு காலையில் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து தரித்துக் கொள்ளச் சொல்ல நிறைய அசாத்தியத் துணிச்சல் இருக்க வேண்டும் என்று பூரணிக்குத் தோன்றியது. அவனுக்கு எப்படி பூரணிக்கு சதய நட்சத்திரம் என்று தெரியும்? 

இரண்டு நாள் பழக்கத்தில் வீழ்த்த முடிந்தது என்றால் வேறே எவனாவது காரும் வயலும் பணமுமாக வந்து ஒரு மணி நேரத்தில் இவளைக் கொண்டுபோக முடியுமா என கர்ப்பூரத்துக்குத் தோன்றியது.

 அவனை ஏணியாக  அவளும், அவளைப் படகாக அவனும் உபயோகிப்பது தவிர வேறு எந்தத் தொடர்பும் வேண்டாம் என்று மனதில் இருவருக்கும் நேரெதிர் அலையடித்திருக்க, வடக்குவடம்போக்கித் தெரு வந்து சேர்ந்தார்கள். கர்ப்பூரத்துக்கு வாயில் குறுநகை. வளை சரியாக விழுந்து கொண்டிருக்கிறது,

தன் நடையும் உடையும் பாவனையும் சிரிப்பு உண்டாக்குவதாக இருக்கிறதா என்று அவசர அவசரமாகக் குனிந்து பார்த்துக் கொண்டாள். முக்கியமான பாடம், நாலு பேர் இருக்கற இடத்துலே குனிஞ்சு பார்க்கக் கூடாது. எல்லாம் பத்திரமாகத்தான் இருக்கு என்று திடமாக நம்பவேணும். சரியா என்று கேட்டபடி அந்தப் பெரிய வீடு அல்லது ஆபீஸின் அல்லது ரெண்டும் சேர்ந்த இடத்தின் வாசல்படி ஏறினான் கர்ப்பூரமய்யன். சற்றுத் தயங்கி படி ஏறினாள் பூரணி. 

நேற்று இப்படிக் குனிந்து பார்த்தால் உரிமையோடு அவளது நெஞ்சைப் பற்றிப் பேசியிருப்பானா என்று ஆச்சரியம் பூரணிக்கு, இது கீழே போகுமோ என்று சந்தேகம். அதுதான் எல்லாம் ஆச்சே என்றது மனது. 

வாசல் கதவை விடாமல் தட்டிக் கொண்டிருந்து விட்டு சரிதான் போய்யா என்று திரும்ப உத்தேசித்த கணத்தில் கதவு திறந்து ஃபுல் சூட்டும் ஒரே ஒரு கண்ணில் மூக்குக் கண்ணாடியும், கையில் பிரம்புமாக கதர் பாலாஜியின் மாமனார் பிரத்யட்சமானார். 

வாய்யா  கேம்ஃபர் ஏன் இப்படி ராத்திரி மழை கொட்டுகொட்டுன்னு கொட்டினது? வைஸ்ராய் எப்படி இந்த மாதிரி பேசப் போச்சு?

 உலகத்தில் நடக்கும், நடக்காமல் போன எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடவுளின் ஏக பிரதிநிதியாக கர்ப்பூரமய்யனை வரிந்திருக்கிறார் பாலாஜியின் மாமா. அவருடைய சர்வ வியாபகமான கரிசனத்தில் பூரணா என்ற இந்தப் பெண்ணும் வாய்ஸ் டெஸ்ட் இன்று அவளை வரச்சொல்லி இருந்ததும் நினைவாகவே வரவில்லை. 

கர்ப்பூரமய்யன் அவர் எம்டன் பற்றிப் பேச ஆரம்பிக்கும்முன் முந்திக் கொண்டான் – இந்தப் பெண்ணை குரல் டெஸ்டுக்கு இன்னிக்கு வரச் சொன்னேளே மாமா அதான் கூட்டிண்டு வந்தேன். 

அவர் ஒரு வினாடி பூரணியைப் பார்த்தார். அவருடைய வெள்ளைக்காரத் தோற்றத்துக்குப் பொருந்தாமல் இடுப்பில் இருந்து ஒரு பொடிமட்டையைத் திறந்து தாராளமாகப் பொடி எடுத்துப் போட்டுக் கொண்டார். 

தும்மத் தும்ம பூரணியை முன்வாசல் காமரா அறையில் உட்கார வைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பூரணி குரலில் வண்ணா மணிவண்ணா என்று யாரோ எழுதி காகிதத்தை அவரிடம் விட்டுப் போயிருந்த கவிதையை ஆனந்த பைரவி ராகத்தில் பாடச் சொன்னார். 

பூரணிக்கு ஆனந்தபைரவி இது என்று தெரியாவிட்டாலும் அருமையாக கண்ணா மணிவண்ணா என்று அந்த ராகத்தில் பாடினாள். அரைமணி நேரம் திரும்பத் திரும்பப் பாடித் திருப்தி ஏற்பட்டவுடன் இன்னொரு சிட்டிகை பொடி போட்டுக் கொண்டு பாட்டை ஒரு சுழலும் யந்திரத்தில் பதிவு செய்தார். 

டெஸ்ட் சக்சஸ் என்று அவர் பூரணியின் கையைக் குலுக்கினார். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை பதினைந்து புதுக்குரல்களை இறுதிக்கட்ட குரல் டெஸ்ட் எடுத்து சரியா இருந்தா திங்கள்கிழமை மெட்றாஸ்லே ரிகார்டிங் அஞ்சு அஞ்சு பாட்டு. 

கர்ப்பூரம் கைதட்டி ஓயவில்லை. இன்று சாயந்திரம் நேருஜி சைமன் கமிஷன் பத்தி என்ன சொல்வார்? நேரு அந்த இருட்டறையில் இருந்து மெல்ல நழுவினார்.

(தொடரும்)

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்வெளிச்சம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *