வளவ. துரையன்
இரண்டாம் ஆட்டம்
பார்த்துவிட்டு
இரவில் வருகையில்
சிறு சலசலப்பும்
சில்லென்று அடிமனத்தில்
அச்சமூட்டும்.
அதுவும்
கட்டைப்புளிய மரம்
நெருங்க நெருங்க
அதில் ஊசலாடிய கம்சலா
உள்மனத்தில்
உட்கார்ந்து கொள்வாள்.
அங்கிருக்கும்
சுமைதாங்கிக்கல்
அந்த இருட்டில்
ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும்.
பகலெல்லாம்
அதனடியில்
பழம்பொறுக்கிச் சீட்டாடும்
பாவிகள் எங்குதான் போனார்கள்
என்று என்மனம் ஏசும்.
நடையை வேகமாகப் போட
நான் நினைத்தாலும்
கால்கள் பின்னலிடும்.
இத்தனைக்கும்
புளியமரம் பக்கத்திலிருக்கும்
வேப்பமரம்தான்
எங்கள் குலதெய்வம்.
குலதெய்வ கவிதை, என் பால்ய கால நினைவுகளை தூண்டி விட்டது.
இரண்டாவதாக காட்சி,சினிமா டூரிங் டாக்கிசில் பார்த்துவிட்டு தனியாக சந்தில் வரும்போது, எம்ஜிஆர் பாட்டுதான் வீடு வரை கூட வரும்.
மரங்களை பார்த்துவிட்டால் , பட்டுகோட்டையார் தோள் மேல் கைபோட்டு தோழனாக வருவார்.
ஜெயானந்தன்