வாசல் தாண்டும் வேளை

author
0 minutes, 53 seconds Read
This entry is part 4 of 6 in the series 16 ஜூன் 2024

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாக
இழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்
தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  
திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.
வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.
வேப்ப மரத்தடியில்  நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கி
வந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும்  சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டு
நாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. அதை விரட்டிவிட்டு 
ஆட்டோவைச் சுத்தம் செய்தாள் வள்ளி. 
வீட்டின் பின்புறம் அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் தவலையைத் தூக்கி வைத்தாள்,
‘வாசு எழுந்திருடா மணி ஆறாகுது’
‘போம்மா உனக்கு வேலையே கெடையாது’
‘பால் வாங்கிட்டு வாடா,காபி போட்டுத் தரேன் உக்காந்து படி’
‘ உன்னோட தெனமும் ரோதனையா போச்சு, தூங்கவே விடமாட்ட நீ’
எழுந்து ஆரோக்கியா பால் பாக்கெட் வாங்கி வந்தான் வாசு.
நைனா, நைனா என்று எழுப்பினான்,
 ‘இன்னாடா  கண்ணு, துட்டு வேணுமா ‘
காக்கிச் சட்டையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து மகனிடம் தந்து விட்டு,’ ஏ வள்ளி சீக்கிரமா
காபி கொண்டா’
காபியைக் குடித்தவன்,
‘இன்னாடி புருசங்காரன் வரானே, சோறு போடணும்னு தெரியாதா?’
‘ எத்தினி மணிக்கு நீ வந்த?
‘ கமலம்  தியேட்டர்ல ரெண்டாவது ஆட்டம் முடிஞ்சி ரெண்டே பரோட்டா தின்னுட்டு
வந்தேன்டி’
எட்டி உதைத்தான்,’  நீயெல்லாம் ஒரு பொண்டாட்டி’

அவள் குடும்பத்தையே  வசைபாடிக் கொண்டு குளிக்கப் போனான். வள்ளி வெந்நீர் வளாவி
துண்டு எடுத்து வைத்திருந்தாள்.
வாசு முன்னறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டது ஆனாலும்
நைனாவை ஒன்றும் சொல்ல மாட்டான். 
நைனா கெத்து யாருக்கு வரும்னு பெருமை அவனுக்கு. ஆட்டோ இலாவகமாக
ஓட்டுவதையும்,சவாரி ஏற்றும் திறமையும் எவனுக்கும் இல்லை என்பான் வாசு.அது
என்னவோ உண்மைதான். 
 நெற்றி நிறையஆனால் அவன் சகாக்கள் அவனை விடுவதாயில்லை திருநீறும் அதிலொரு
சந்தனப் பொட்டும் வாஞ்சையான
பேச்சும், அண்ணே, தம்பி என்று அழைத்து அவர்களின் உடைமைகளை 
வாங்கி அடுக்குவதும் அலாதியானதுதான்.
ஒரு நாளைக்கு  செலவு போக குறைந்தது ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பான். வடிவேலு
கதைதான். சாயந்திரமானால் சகாக்களோடு குடித்துவிட்டு வருவான். 
வீட்டில் ஒரே ரகளை செய்வான். மீன் குழம்பு இருந்தால் கோழி எங்கே
என்பான்,இல்லையென்றால் ‘ தெனமும் கோழி கொக்குனுதான் உங்கம்மா வீட்ல தின்னியா?
‘இப்பிடியே தின்னா குடும்பம் வெளங்குமாடி’
‘நேத்து கேட்டியேனு செஞ்சேன் மாமா’
‘எதுத்துப் பேசுறியா? செலவழிக்கதான் அம்மாக்காரி சொன்னாளா?’
“ சோத்துக்கு லாட்டிரி அடிச்சத மறந்துட்டியா?’ 
என்பான்.  இவன் மொடாக் குடியன் என்பது தெரிந்தும் வள்ளியை  கரையேத்த வேறு
வழியில்லாமல் இவனுக்கு கட்டி வைத்தாள் அம்மாக்கண்ணு.
வள்ளி வந்த புதிதில் சில மாதங்கள் குடியை மறந்தே இருந்தான் முனியன்.ஆனால் அவன்
சகாக்கள் அவனை விடுவதாயில்லை.
‘டேய் மச்சி இன்னக்கி என்னோட பொறந்த நாளுடா, எனுக்காக குடி’
நாளுக்கு ஒரு காரணம் சொல்லிச் சேர்த்துக் கொண்டார்கள்
விட்டது தொட்டதும் , தொடர்ந்தது . 
வள்ளி ஆரம்பத்தில் அழுது, சண்டைபிடித்துப் பார்த்தாள் அவனை மாற்ற முடியவில்லை.
திரைப்படத்தில் வருவதுபோல் செய்து பார்க்க நினைத்து,

 ஒரு முறை கோபித்துக் கொண்டு ‘ ‘இனி நீ இந்தக் குடிய விட்டுத் திருந்தனாதான்
வருவேன்’
என்று சொல்லி அம்மா வீட்டிற்குச் சென்று விட்டாள். அவன் திருந்தி வந்து கூப்பிடுவான்
என்ற நம்பிக்கையில் காத்திருந்ததுதான் மிச்சம்.இருபது நாள் ஓடியது,
அன்று சந்தைக்குச் சென்றிருந்த அம்மாக்கண்ணு திரும்பி வந்து,
‘வள்ளி ஒம் புருசன் தெனாவட்டா இருக்காண்டி, என்ன பார்த்தும்,
பாக்காத மாதிரி போறான்’
‘வுடும்மா அது சரியா பாத்திருக்காது’
‘இல்லடி, நீ கெளம்பு, ரெண்டு புள்ளைங்களாச்சி, வுடக் கூடாது’
அம்மாக்கண்ணு மகளையும் பேரக் குழந்தைகளையும் தானே அழைத்துச் சென்று நயமாகப்
பேசி விட்டுவிட்டு வந்தாள்.
பிள்ளைகள்,’ நைனா,நைனா’என்று அழுவதாகச் சொல்லி வைத்தாள். 
இப்போதெல்லாம் வள்ளி அவனை எதுவும் கேட்பதில்லை, இவன் இப்படிதான் என்று
இருக்கப் பழகிக் கொண்டாள்
            ஒன்பதாவது வரை படித்திருந்த வள்ளி சேமியாக் கம்பெனிக்கு தினக்
கூலியாகப் போகிறாள். எத்தனை பாக்கெட்டுகள் போடுகிறாளோ அதைப் பொறுத்துப்
பணம் கூடும், குறையும். எப்படியும் மாதத்திற்கு எட்டாயிரம் வரை சம்பாதித்து
விடுவாள்.அவளது வருமானத்தில்தான் குடும்பமே நடக்கிறது.
முனியன் சம்பாதித்தாலும் குடித்துக் கும்மாளமிட்டு மனம் போனபடி செலவு செய்வதால்
குடும்பத்திற்கு ஒரு பலனுமில்லை. மகனும் மகளும் கேட்பதை மட்டும் தட்டாமல் செய்து
விடுகிறான். சில சமயங்களில் ஞானோதயம் வந்தவனாக மனைவியிடம் அன்பாக நடந்து
கொள்வான். முனியனின் பூர்வீகச் சொத்து அந்த ஓட்டு வீடு என்பதால் வாடகை
தரவேண்டிய கவலை இல்லை.
‘வாசு பாப்பாவை  பத்திரமா  பார்த்துக்கோ,. மத்தியானத்துக்கு ஒழுங்கா சாப்பிடுங்க ‘என்று
டிபன் பாக்சுகளை தந்தவள்., மகனும், மகளும் ஆட்டோவில் ஏறிய பின்னர்,
‘ இன்னாயா புள்ளைங்கள பள்ளிக்கோடத்துல வுட்டுட்டு வூட்டுக்கு வரியா?” 
‘எதுக்கு’
 என்ன  கம்பெனில வுட்டுட்டுப்  போயேன்” 

“இல்லடி முக்கியமான ஒரு   சவாரி போவணும் நேரமாச்சி ‘ என்று வேகமாக வண்டியைக்
கிளப்பினான்  முனியன்.
அக்கம் பக்கத்துப்  பெண்கள் ஆறுபேரோடு  சேர்ந்து  இரண்டு கி.மீ தூரம்  நடந்தே
போவாள் வள்ளி. இன்று ஏதோ அலுப்பாக இருந்ததால் ஆட்டோவில் போக நினைத்தாள்.
      மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டான் வாசு, புத்தகப் பையை வீசிவிட்டு
நைனா தந்த நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு
 ‘அம்மா இன்னக்கி தல  படம் வந்திருக்கு வீரையனும் நானும் போறோம்’
‘ ஏண்டா அப்பன மாதிரியே பொறுப்பில்லாம இருக்கே, நாலெழுத்து படிச்சா நல்ல
வேலைக்குப் போவே’
‘ஆரம்பிச்சிட்டியா புராணத்த நிறுத்து’ 
‘அண்ணா நானும் வரேன் , கூட்டிட்டுப் போ ‘ ‘ வேணாம் பாப்பா நீ நானு அம்மா ஒரு
நாளக்கிப் போலாம், உனுக்குப் பாப்கார்ன் வாங்கிட்டு வரேன்’
ஆறுமணிக் காட்சிக்கு நண்பர்கள் மூன்று பேரோடு டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்து
அமர்ந்தான் வாசு. திரையில் படம் ஓடிக் கொண்டிருந்தது. பின் வரிசையிலிருந்து சிரிப்பும்,
கொஞ்சலுமாய் சத்தம். இவனுக்கு இடையூறாக இருந்தது. இடைவேளை விளக்குகள்
பளீரென எரிந்ததில் திரும்பிப் பார்த்தான் அதிர்ந்து போனான். பாதிப் படத்தில் 
நண்பர்களிடம் தலைவலி என்று சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பினான். அன்று நைனா
வரும் வரை காத்திருந்தான்,
‘ ஏண்டா இன்னும் தூங்கல’, நீ தூங்கு நான் நைனா வந்தப்பறம்  தூங்கறேன்’
மகனை அதிசயமாகப் பார்த்தவள் அலுப்பில் தூங்கிப் போனாள்.
பன்னிரண்டு மணிக்கு வந்த முனியன் நிதானமாவே இருந்தான்.
‘ இன்னாடா கண்ணு முழிச்சிங்கிறே, சீமாட்டி ஒன்ன வேல வாங்கறாளா?’
‘ அம்மாக்கு ஒடம்பு நல்லால்ல, நீ வா நைனா ‘
தட்டில் சோற்றைப் போட்டு மீன் குழம்பை ஊற்றி கொடுத்தான் வாசு, செம்பில் தண்ணீரை
எடுத்து வைத்தான். ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்து 
தாழ்வாரத்தில் விரித்திருந்த பாயில் படுத்தான் முனியன். அந்த போதையிலும் மகனிடம் ஒரு
மாற்றத்தை உணர்கிறான் . அடுத்த பத்து நாட்கள் முனியனின் நடவடிக்கைகளைச்
சேகரிக்கத் தொடங்கினான் வாசு. 

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது.வாசுவின் மனம்  அதில்
இல்லவே இல்லை.நைனா மீது கோபம் ஒருபுறம், வெறுப்பு ஒரு புறம் மண்டி விட்டது.
ஆனாலும் பாசமும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுதான் இருந்தது. எத்தனை படங்கள்
பார்த்திருக்கிறான், எதுவும் புரியாமல் இல்லை,
இப்போதெல்லாம் அடிக்கடி அவர்கள் இவன் கண்ணில் பட்டார்கள், கடற்கரையில்,
கடைவீதியில், துணிக்கடையில் , அந்த வீட்டில்.
நண்பர்கள் கூட அங்கே இங்கே பார்ப்பதாக  இவனிடம் சொன்னார்கள் .’அம்மாவிற்குத்
தெரியுமா? தெரியாதா?’
பாவம் உழைத்து இளைத்துக் கொண்டிருக்கிறாள்.
இப்போதெல்லாம் அம்மாவிடம் இவன் எதிர்த்துப் பேசுவதில்லை, அதிகமாய் அக்கறை
எடுத்துக் கொள்கிறான்.
அன்று,’ வாசு நீ போய் படு, நான் கதவு தொறக்கறேன்’ இவன் படுத்தான், தூங்கவில்லை.
முனியன் வந்தான், வள்ளி சாப்பாடு எடுத்து வைத்தாள்,
இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானாடி, உப்பு இல்ல, காரமும்  இல்ல  பத்திய சாப்பாடா
போடற?’
தட்டு பறந்து வள்ளியின் முதுகில் விழுந்தது, அறை விட ஓங்கின கை நின்றது. முனியனை
விட உயராமாக வளர்ந்திருந்த வாசு கையைப் பிடித்திருந்தான்.
பொங்கிய பால் அடங்கியதுபோல் முனியன் ‘ ஏண்டா கண்ணு நீ தூங்கல?’
என்றான்.
‘அம்மா நீ போயி தூங்கு, நானு நைனாக்குப் பாய் போட்டு வச்சிட்டு  வரேன்’
‘ இன்னா நைனா , இப்ப நீ சாப்புடப் போறியா இல்லியா?’
‘ எனுக்குப் பசிக்கலடா’
‘கணேஷ் பவன்ல  சாப்புட்டு வந்தா எப்பிடி பசிக்கும்?’
‘ சரி வா, தூங்கு’ பெட்டிப் பாம்பாய் சுருண்டான் முனியன். 
‘நாளக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடணும், இந்த கண்ணாமூச்சி வெளையாட்டுலாம்
சரியாவாது’ என்று முடிவெடுத்து வாசு அம்மாவின் பக்கத்தில் சென்று படுத்தான், அவளின்
கரத்தைப் பிடித்துக் கொண்டே தூங்கிப்போனான். காலையில் அடுப்பில் வைக்க வெந்நீர்த்
தவலையைத் தூக்கிய வள்ளி தலைசுற்றி விழுந்தாள். பதறிப்போன வாசு அவளைத் தூக்கி

பாயில் படுக்க வைத்தான். சுந்தரி ஓடித் தண்ணீர் எடுத்து வந்தாள். ‘அம்மா கொஞ்சம்
குடிமா’
‘போதுண்டா, எனுக்கு ஒண்ணும் இல்ல’ எழ முயன்றாள்.’ அம்மா நீ படு , இன்னக்கி
கம்பெனிக்குப் போக வேணாம்’
இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த முனியன் ,’ எவடி உனுக்கு வேல கத்துக் குடுத்தது,
நெனப்பு எங்கடி வச்சிருக்க?’
‘நைனா பேசாம இரு, கண்டபடி பேசாதே’ ‘ ஏண்டி எம்மவன கெடுத்துட்டியா.
என்னைய எதுத்துப் பேசறான்?”நைனா நீ போயி  நாஸ்தா வாங்கினு வா,’ ‘அம்மாவ
ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போறியா?’
‘அடபோடா. அவ  நடிக்கறா’
 ‘  உன்ன மாதிரியா? நீ போவாட்டி நானு கூட்டிட்டுப் போறேன் ‘ஆட்டோவில் அம்மாவை
உட்காரவைத்து ஓட்டிக்கொண்டு  போனான் வாசு.
எல்லாம் தெரிந்து விட்டிருக்குமோ என்று ஆடு திருடிய கள்ளனைப்போல் திகைத்தான்
முனியன்.
வள்ளி பலவீனமாக இருப்பதாக மருந்து , மாத்திரைகள் தந்திருந்தார்கள். ஒரு வாரத்திற்குப்
பின் ஒருநாள் அந்தக் காலனிக்கு சோமுவோடு சென்றான் வாசு.
வீட்டின் முன்புறம் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள் கிழவி. வியாபாரம் சூடு பிடித்திருந்தது.
வாசு மட்டும் உள்ளே சென்றான்,மல்லியும்,சாமந்தியும் கலந்த வாசனை இவனுக்கு
குமட்டியது.
ஜிகு ஜிகு வென ஜொலிக்கும் புடவையை  அழகு பார்த்துக் கொண்டிருந்தான் முனியன்.
வாசுவைப் பார்த்ததும் அதிர்ந்தான், எதுவுமே பேசாமல் முனியனின் தோளிலிருந்த
அஞ்சலையின் கையைத் தட்டிவிட்டு தகப்பனை இழுக்காத குறையாக பிடித்துக் கொண்டு
வீட்டிற்கு வந்தான்.
விளக்கை மாடத்தில் வைத்துவிட்டுத் திரும்பிய வள்ளிக்கு ஆச்சரியம்.
விடுவிடுவென உள்ளே வந்தான் வாசு, ‘அம்மா  வா , நாம மூணுபேரும் இந்த வீட்ட
விட்டுப் போயிடலாம், இவரு ஜாலியா இருப்பாரு’
‘என்னடா ஆச்சு வாசு ? ஏன் இப்பிடி பேசறே?’
‘அம்மா உனுக்குத் தெரியாது இவுரு இன்னா பண்றாருனு?’

‘தெரியுண்டா, நீங்க ரெண்டு பேரும் படிச்சி முன்னுக்கு வரணும்னு பொறுத்துகிட்டு
இருக்கேன்’
‘ இன்னா பெரிய்ய படிப்பு? மூட்டை தூக்கறேன், கல்லு உடைக்கறேன், நீ கஷ்டப்பட்டது
போதும்மா’
‘ வாசு , பரீட்சை வருதுபா, படிக்கற நேரத்துல மனச கெடுத்துக்காத’
‘ஏற்கெனவே கெட்டுப் போச்சும்மா இவுரால’
‘என்னோட நைனானா கெத்துனு நெனச்சேன். கேவலம்னு தெரிஞ்சிகிட்டேன் மா’
தங்கையின் கரத்தைப் பற்றிக் கொண்டு,’ அம்மா நீ கெளம்பு’ என்ற தீர்க்கமான குரலில்,’சரிடா’
என்று அப்படியே நடந்தாள் வள்ளி.
மூவரும் வாசல் தாண்டும் வேளையில்,
பொட்டில் அறைந்ததுபோல்  தெளிந்தது மயக்கம் முனியனுக்கு, 
வள்ளியின் கைகளைப் பிடித்து,’ என்ன மன்னிச்சுடு வள்ளி, உனுக்கு நெறைய கஷ்டம்
தந்துட்டேன்’
‘இன்னாடா கண்ணு, ஆபீசராட்டம் எனுக்கு புத்தி கத்துக் குடுத்துட்டே
நீங்க மூணுபேருதான் எனுக்கு ஒலகம்’
‘இப்பதான் நைனா நீ கெத்து’ என்று தந்தையைக் கட்டிக்கொண்டான் வாசு,
வள்ளியின் கண்களில் நீரரும்புகள் கோர்த்து உருண்டது.

Series Navigationகவலையில்லை`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *