இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், வீட்டின் மையத்தில் ஒரு சின்ன பெட்டி இருந்தது. தொலைக்காட்சி. அதன் குரலும் ஒளியும் அந்தக் காலத்துக் குடும்பங்களின் மையத் துடிப்பாக மாறியது.
அந்தக் குரல் ஒவ்வொரு மாலையும் வீட்டை நிரப்பியது—பல நேரங்களில் குடும்பத்து உறுப்பினர்களாலும், சில நேரங்களில் தெருக் குழந்தைகளாலும். சினிமாப் பாடல்கள், செய்தி, நகைச்சுவை நாடகங்கள் — இவையெல்லாம் அன்றைய ஒரு குடும்பத்தின் இரவுத் தோழர்களாக இருந்தன.
ஆனால் இன்று, அந்தப் பெட்டி சுவரில் தொங்கிக் கிடக்கிறது; அதற்குப் பதிலாகத் தோளில் தொங்கும் பையில் உள்ள மொபைல், டேப்லெட், ஐ-பேட் ஆகியவை வந்துவிட்டன.
இப்போது “தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு நேரம் போகிறது” என்று சொல்வதில்லை; அதற்குப் பதில், “ஒரு வீடியோ பார்ப்பேன்”, “ஒரு ரீல் வந்திருக்கு”, “சின்ன நியூஸ் பார்க்கிறேன்” என்கிறார்கள் குடும்பத்தின் மூத்தவர்கள். மனிதன் தன்னையே இழக்கும் மாய வலை, இதன் மறுபெயர்.
தனிமையிலிருந்து வலைக்காட்சிக்குள்..
சுறுசுறுப்பான வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று, தங்கள் வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை அமைதியாகக் கழிப்பதாக நினைத்தார்கள். சினிமா, நாடகம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிலர் நண்பர்களுடன் சீட்டு விளையாடுதல், புத்தகங்கள் படித்தல் என அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அமைதி எங்கே? ஈன்றெடுத்து வளர்த்த பிள்ளைகள் தங்கள் உலகத்தில் இருக்கிறார்கள். நண்பர்கள் மெல்ல மெல்லத் தொலைந்து போனார்கள். உடல் பலவீனத்தின் பெயரில் வெளி உலகம் தள்ளிப் போய்விட்டது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தது — இணையம்.
முதலில் அது ஒரு சிறு பொழுதுபோக்கும் கருவியாக, விளையாட்டு மாதிரி இருந்தது. தினசரி ஒரு மணி நேரம் செலவழிப்பது மிகவும் சிரமமாகவும் இருந்தது. பின்னர் காலைத் தேநீர் குடிக்கும் போதும், இரவு தூங்குவதற்கு முன்பும், சாப்பிடும் இடைவெளிகளிலும் — அந்தச் சிறிய திரை அவர்களை விட்டு நீங்கவேயில்லை.
மெல்ல மெல்ல அந்தக் கண்ணாடித் திரை ஒரு கோடிக்கால் பூதம் ஆனது.
ஆண்கள் – தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சி..
பல ஆண்கள் தங்கள் வாழ்க்கையைப் பணியிடத்தின் வேலையுடனே அடையாளப்படுத்தியவர்கள். அந்த வேலையிலிருந்து விலகியதும், “நான் யார்?” என்ற கேள்வி அவர்களை மெல்ல உள்வாங்குகிறது. பயனற்றவன் என்ற உணர்வு அவர்களைத் துரத்துகிறது.
அப்போது இணையம் வந்து, ஆறுதல் தந்தது. இணையம், ஸ்மார்ட்போன், சமூக வலைதளங்கள் ஆகியவை முதியவர்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் இடத்தைப் பிடித்துவிட்டன. இவை அவர்களுக்கு உலகத்தோடு இணைந்திருக்கிறோம் என்ற உணர்வை அளிக்கின்றன. அவர்களின் சொற்களில் — “நாங்களும் காலத்தோடு முன்னேறுகிறோம்!” என்பதே பெருமையாக ஒலிக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் இது ஒரு மாயச் சுறுசுறுப்பு (pseudo-activity). மனம் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற தோற்றம் கிடைக்கிறது, ஆனால் அந்தச் செயலில் அறிவு வளர்ச்சியோ அல்லது அனுபவ ஆழமோ பெரிதாக நிகழ்வதில்லை. ஒரு தகவலை உடனே தேடிப் பிடிப்பது எளிதானது, ஆனால் அதை உணர்ந்து, சிந்தித்து, செறிவாக வைத்துக் கொள்ளும் சக்தி குறைந்துவிடுகிறது.
சிலர் புதிதாகச் சில ஆங்கிலச் சொற்கள் கற்றுக்கொள்கிறார்கள், உலகச் செய்திகளை விரைவில் அறிகிறார்கள். ஆனாலும், அவற்றை நுண்ணறிவுடன் ஆராய்வதற்கான நேரம் இல்லை. அறிவு பரவுகிறது — ஆனால் ஆழமில்லை. “நான் இன்னும் பல விஷயங்களை அறிந்தவன்” என்பது தற்காலிக நம்பிக்கை.
அரசியல் விவாதங்கள், பங்குச் சந்தை நுணுக்கங்கள், கார் விமர்சனங்கள் — எல்லாம் அவர்களின் புதிய அவதாரம். ஆனால் அந்த அவதாரம் அன்பளிப்பை அளிப்பதில்லை. அது விமர்சனத்தையும் மயக்கத்தையும் மட்டும் அளிக்கிறது.
மாயச் சுறுசுறுப்பு – தன்னிலையே மயங்கும் முதுமை..
முதுமை என்றால் ஓய்வு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இன்று அது ‘ஆன்லைன் ஆக்கிரமிப்பு’ என்ற புதிய வடிவில் வந்திருக்கிறது.
அவர்களுக்குள் இன்னும் பிழைத்திருக்கும் இளமை நினைவுகள் — “நானும் இன்றும் புதிதாகக் கற்றுக் கொள்கிறேன்”, “உலகம் எனக்கு இன்னும் தேவைப்படுகிறது” என்கிற மனக்குரல் மின்னும் திரையில் சற்று அதீதமாய்ச் ஜொலிக்கிறது.
“நான் வாட்ஸ்அப் குழுவில் பேசுகிறேன், யூடியூப் பார்க்கிறேன், புதிய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன் — அதனால் நான் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்” என்பது உண்மையான சுறுசுறுப்பு அல்ல. இது மனதைச் சிதறடிக்கும் செயற்பாடு.
சுறுசுறுப்பு என்றால் உடலும் மனமும் ஒன்றாகப் பயிற்சி பெறுவது. இங்கே உடல் அசைவின்றி நாற்காலியில் மூழ்குகிறது, ஆனால் மனம் உழலும். பலவிதமான வீடியோக்கள், அரசியல் விவாதங்கள், சதி கோட்பாடுகள், வலைக்காட்சித் திருட்டுகள் — இவை அனைத்தும் “அறிவு” என்று தோன்றினாலும், உண்மையில் மனத்தின் அமைதியைச் சிதைக்கின்றன.
சிலர் “புதிய முதலீட்டு வழி” என்ற பெயரில் இணைய மோசடிகளில் சிக்குகிறார்கள். ஒரு வங்கி எண், ஒரு OTP — சில வினாடிகளில் ஆயிரங்கள் போகின்றன. சிலருக்கு அவர்களின் வாழ்க்கையே தேக்கமான, அசையாத, செயலற்ற நிலையை அடைந்துவிடுகிறது.
இன்றைய நாளில் ஓய்வு பெற்றவர்கள் இணையச் சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கான முக்கியக் காரணம் — அவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே இந்தச் சாதனங்களுடன் பழகியவர்கள் என்பதே. முன்பு தொலைபேசி ஒரு வியப்பாக இருந்தது; இன்று அது அவர்களின் கைப்பகுதியே ஆனது.
இணையமும் மொபைலும் வாழ்க்கையின் அங்கமாக மாறியதால், ஓய்வு பெற்ற பிறகும் அதிலிருந்து விலக முடியவில்லை. மாறாக, அவர்களின் நேரத்தின் பெரும்பகுதியை அதுவே பிடித்து வைத்திருக்கிறது.
குறிப்பாக ஆண்கள் — முன்னொரு காலத்தில் மாலை நேரம் சீட்டாட்டம், நண்பர்களுடன் அரட்டை அல்லது வீதி நெடுக நடைப்பயிற்சி எனத் தங்கள் ஓய்வு நேரத்தை வெளியில் செலவிட்டார்கள். இப்போது அந்த நேரத்தைப் போலி ஒளி கொண்ட இந்த நவீன “நேரத் திருட்டுப் பொம்மைகள்” அபகரித்துக் கொண்டிருக்கின்றன.
வீட்டுக்குள் அமைதியாய்க் குரல் இல்லாமல் அமர்ந்திருக்கும் அவர்கள், கையில் இருக்கும் அந்தச் சிறு திரையில் தங்கள் நாளையும், சில நேரங்களில் வாழ்க்கையையும் செலவழிக்கிறார்கள்.
வீட்டுப் பெண்கள் இதை பெரும்பாலும் எதிர்க்கவில்லை. மாறாக, “அவர் வெளியே போகாமல் வீட்டிலேயே இருக்கிறார், அதனால் உடல்நலமும் பணச்செலவும் குறைகிறது” என்று அமைதியாக ஆமோதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாமல் அனுமதிப்பது — கணவனின் மனத்தை மெதுவாக ஒரு மாய வலையில் இழுத்துச் செல்லும் அமைதியான அழிவே.
பெண்கள் – பேச யாருமற்ற மாயக் குதிரை..
இந்தப் போக்கில் ஆண்களும் பெண்களும் வேறுபட்ட பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.
பெண்கள் — வேலைப்பளுவிலிருந்து மீண்டு இளமையைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்கிற நினைவில் ஓய்வு பெற்று, இப்போது பேச யாரும் இல்லாத மாயக் குதிரையில் ஏறிப் பயணம் செய்யும் நிலை.
குழந்தைகள் வெளிநாடுகளில்… மகனோ மகளோ அவர்களுடைய சொந்த வாழ்வில் சிக்கல்களைச் சந்தித்தவாறு. பொருள் ஈட்டும் பெரும் பயணத்தில் நேரங்களைத் தொலைத்தவர்கள். வாரம் ஒரு முறை பெற்றோர்களிடம் பேசினாலே ஒரு மிகப்பெரிய மனநிறைவு கொண்டதாக நினைப்பவர்கள். இந்த குழந்தைகளைப் பெற்ற தாய் தனிமையில்…
முன்பெல்லாம் வீடுகளில் சிறு சிறு வேலைகளைச் செய்ய உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களோடு ஒன்றாய் அமர்ந்து உண்ட காலம் கூட மறைந்த நினைவுகளாய் அவர்கள் மனதில். இப்போது அதுவும் சுருங்கிவிட்டது. பொருளாதாரமும், இடவசதியின்மையும், நகர்ப்புற வாழ்வும் இவற்றையெல்லாம் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டன.
முன்பு காலை நேரத்தில் பேசும் தங்கை கூட, தற்போது வாட்ஸ்அப் குழுவின் ஒரு உறுப்பினர். காலை வணக்கத்தைக் கூட “forward” ஆக அனுப்புபவள். அந்தச் சிறிய திரையில்தான் இப்போது அவர்கள் நண்பர்களையும், உறவினர்களையும், மகிழ்ச்சியையும் தேடுகின்றனர்.
கேக் ரெசிபி வீடியோக்கள், வேத ஜோதிடக் குறிப்புகள், புனிதப் பயணக் காணொலிப் பதிவு (vlogs), பக்தி ரீல்கள் (devotional reels) — இவை எல்லாம் அவர்களின் பொழுதுபோக்கின் போலிப் பதிப்புகள்.
சில நேரங்களில், அந்தத் திரை வழியே நுழையும் அநியாய அன்பு அல்லது பொய்யான நட்பு அவர்களின் மனதைக் காயப்படுத்துகிறது. “ஒருவராவது எனக்காகப் பேசுகிறார்” என்ற நம்பிக்கையில் ஆரம்பமான உரையாடல், ஒரு நாளில் அவமானமாகவும், ஏமாற்றமாகவும் முடிகிறது. சிலர் தங்கள் சுயமரியாதையை இழந்துகொண்டு உயிரையும் இழக்கிறார்கள். அதிலும் பெரிய இழப்பு — அந்த உயிரோடு இருக்கும்போதே அவர்கள் தங்கள் நிஜ வாழ்விலிருந்து விலகிச் செல்வது.
இந்த மாயச் சுறுசுறுப்பின் விளைவாக, உண்மையான உறவுகள் மங்கிக்கிடக்கின்றன. முன்னர் தங்கள் வீட்டின் வாசலில் அமர்ந்து அண்டை வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தவர் இன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “காலை வணக்கம்” படங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். உரையாடல் உயிரை இழந்து, ஸ்டேட்டஸ் உயிருடன் வாழ்கிறது.
இதுதான் இன்றைய ஓய்வுபெற்ற தலைமுறையின் தினசரி வாழ்வு… இணையத்தின் வலைப்பின்னலில் சிக்கித் தவிக்கும் மனிதனின் மாயவலை.
மாய வலைக்குள் சிக்கிய மனம்..
இணையம் ஒரு மாயவனம். அதில் ஒளியும் இருக்கிறது; ஆனால் அந்த ஒளி எப்போதும் மனிதனை வெளிச்சத்துக்கு வழி நடத்தாது. மாறாக, அது அவனை மயக்கத்தில் நிறுத்தும்.
“ஒரு வீடியோ பார்த்துப் பத்து நிமிடம் கழித்துவிடலாம்” என்பதிலிருந்து தொடங்கும் பயணம், ஒரு நாள் முழுவதையும் விழுங்கிவிடுகிறது. பின்னர் இரவு தூங்கும்போது மனம் சோர்வாக இருக்கும் — ஆனால் நிறைவாக இல்லை. அது அறிவில்லாத சோர்வு. மூளையும் கண்களும் களைத்துவிடும்; ஆனால் மனம் இன்னும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும்.
இழந்தது என்ன?
இணையம் எதையாவது வழங்கியிருக்கலாம் — தகவல், சுவாரசியம், சிரிப்பு, சிலருக்கு அரசியல் அறிவு. ஆனால் அது மனிதனிடமிருந்து எடுத்தது அதைவிடப் பெரிது.
மனிதன் ஒருவரை ஒருவர் நோக்கிப் பேசும் திறனை எடுத்துக்கொண்டது.
வாசிப்பின் சுவையை மறக்க வைத்தது.
கலை இலக்கியங்களில் நேரம் செலவிடுவதைத் தடுத்தது.
மொழி, பண்பாடு போன்ற விழுமியங்களை அறிய விடாமல் செய்தது.
நேரத்தின் மதிப்பை அழித்தது.
முன்பெல்லாம் மாலை நேர சூரியன் மறைவதைப் பார்த்தால் மனம் அமைதியடையும். இப்போது மாலை நேரம் என்பதே எப்பொழுது என்றே தெரியாது — திரையில் வெளிச்சம் இருந்தால் போதும், நாள் முடிவதில்லை…
மீள்வது எப்படி?
இணையம் எதிரி அல்ல. ஆனால் அது மனதை அடிமைப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரு கருவி. அதிலிருந்து மீள்வது திடீரென முடியாது. ஆனால் ஆரம்பிக்கலாம் —
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் “திரை இல்லாத நேரம்”.
வீட்டின் வெளியில் சிறு நடை.
புதிய சுவாசம், பழைய உறவுகள்.
ஒரு புத்தகத்தை மீண்டும் எடுத்துப் படிப்பது.
பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு ஒரு புன்னகையைப் பரிசளிப்பது.
அத்தகைய சிறு செயல்களே மெல்ல அந்த வலைக்குள் சிக்கிய மனதை மீண்டும் வெளிச்சத்துக்கு அழைக்கும்.
மனிதன் கண்டுபிடித்த ஒவ்வொரு தொழில்நுட்பமும் அவனுக்குத் துணையாக உருவானது; ஆனால் சில சமயம் அந்தத் துணைதான் அவனைத் தன்னை மறக்கச் செய்கிறது. இணையம் அப்படிப்பட்ட ஒரு கண்ணாடி — அதில் நம்மைப் பார்க்கிறோம் என்று நினைக்கிறோம்; ஆனால் நம்மை மெல்ல மறக்கிறோம்.
ஒரு தலைமுறை — தொலைக்காட்சியில் தன்னை இழந்தது. அதன் அடுத்த தலைமுறை — வலைக்காட்சியில் தன்னைத் தொலைக்கிறது.
அடுத்த தலைமுறை — தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயல வேண்டும்.
ஏனெனில், திரையின் வெளிச்சம் தற்காலிகம்; ஆனால் மனத்தின் வெளிச்சம் மட்டுமே நித்தியம்.
முடிவாக
ஒருகாலத்தில் தங்கள் குழந்தைகளை “இந்த மொபைலை அதிகம் பயன்படுத்தாதே” என்று எச்சரித்த பெரியவர்கள் — இன்று அந்த குழந்தைகளாலேயே “அப்பா, போ னை வையுங்கள்!” என்று சொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்குக் காரணம் யார்? மனிதனின் ஆசையா, தொழில்நுட்பத்தின் வல்லமையா, அல்லது — காலத்தின் கோலம் தானா?
யுவராஜ் சம்பத் 05-11- 2025…