-ரவி அல்லது.
அவள் இழந்தவைகளில் வலிகள் தரக்கூடியதாக இருந்தது வாப்பாவை பறிகொடுத்ததுதான். கண் முன்னே கரிசனம் கை நழுவிப் போனது. பின் நாட்களில் தாயும் பலியானதில் அவள் மனிதர்களின் மேல் நம்பிக்கையற்றுப் போனாள்.
‘மரியத்தைக் காணவில்லை’ என அந்த ஊரில் பேசிக் கொண்டார்கள். அவர்கள் நினைப்பது போல் அல்லாமல் அவள் கற்பப்பை பவித்தரமாகவே இருந்தது.
விதைகளைச் சேகரித்து முளைக்க விடுவதில் அவள் ஆசைகள் வைத்தாள்.
பாலைவனத்தில் செடிகளும் மரங்களும் ஒரு நாள் வனமென அழைக்கப்பட்டது.
அவர்கள் இரசாயனக் குண்டுகள் போட்டு கொன்றழிப்பதில் ட்ரோன்களைத் தயாரித்து துல்லியத்தில் வளர்ந்தார்கள்.
மரியத்தின் காட்டுப் பறவைகளும் பூச்சிகளும் அவளைப் போலவே மரங்கள் புதிதாக வளரக் காரணமானது.
எதேச்சையாக அந்தக் காட்டின் வழியாக சென்ற இராணுவப் படையினர் உடல் ஒவ்வாமையில் இறந்து போயினர். காரணம் அறியாமல் மனிதர்கள் கண்டதையும் பேசினார்கள்.
காடுகள் வளர்ந்து பாலைவனம் பச்சை வனமாக மாறியது. வானத்தின் இரகசியமொன்று மழையாக பொழிந்தது. விளைச்சலில் மக்கள் வியாபாரத்தைப் பெருக்கினார்கள்.
மரியம் தான் மரியமென்பதை மறந்தபோது தோள் சுருக்கம் மறைந்து இளமைக் கன்னியாக எப்போதும் இருந்தாள்.
பிறகான நாட்களில் படைகள் அழிக்கக் கிளம்பும் பொழுதெல்லாம் ஏதோவொரு நோய்த் தொற்றை ஏதாவது ஒரு உயிரி காட்டிலிருந்து மனிதனை அழித்துக் கொண்டே இருந்தது.
இப்பொழுதெல்லாம் பிறரை அழிக்க நினைத்தால் அங்கு மனிதர்களுக்கு வியாதிகள் வந்தது. நேசிக்க முடிந்தால் மட்டுமே அங்கு வாழ முடிந்தது.
காலக் கணக்கின் ஏற்பாட்டில் அவள் பாலைவனங்களை சோலைவனங்களாக்கப் பயணப்பட வேண்டியதாக இருந்தது.
இடம்பெயர்தலில் அவள் இல்லாமையின் இடங்களை அற்பக் காரணங்களுக்காக மனிதர்கள் அழித்த வண்ணம் இருந்தார்கள்.
மனிதர்களின் மாறாத துயரால் களைப்புகளற்று அவள் பூமி எங்கும் புறப்பட்ட வண்ணமே இருந்தாள்.
சற்றைக்கு முன்புவரை கரிசனைத்தைக் கை மாற்றிவிடும் பேரன்பில் திளைத்த மரியம் மனிதனொருவனுக்காக காத்துக் கொண்டே இருந்தாள்.
****
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com