This entry is part 1 of 5 in the series 25 ஜனவரி 2026

  மீனாட்சி சுந்தரமூர்த்தி              

                          

சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. பிற ஆற்றுப்படை நூல்கள் பொருளைப்பெற வழிசொல்ல இஃது ஒன்று மட்டும் அருளைப் பெற வழிகாட்டுவதாலும், மற்ற ஆற்றுப்படைகள் இரவலர் பெயரில் அமைய இஃதொன்று மட்டும் பாட்டுடைத் தலைவன் பெயரில் அமைந்துள்ளதாலும் பத்துப்பாட்டில் முதலில் வைக்கப்பட்டது.

இது முதலில் சரவணப்பெருமாளையர் என்பவரால் பக்திப் பனுவலாகப் பதிப்பானது. அதன் பின்னர் உ.வே.சா அவர்களால் பத்துப்பாட்டில் இடம் பெற்றது. இதற்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலானோர் உரை எழுதி உள்ளனர்..

சைவத்திருமுறையில் 11 ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

 ஆசிரியப்பாவால் அமைந்த  317 அடிகளைக்  கொண்டது இந்நூல்.

திணை பாடாண், துறை ; ஆற்றுப்படுத்தல்.

” கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுரீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்-

என்று தொல்காப்பியம்  ஆற்றுப்படைக்கு இலக்கணம்

கூறும். வீடு பேறு பெற்ற ஒருவன் அதற்குத் தகுதியுடைய ஒருவனை முருகனிடம் செல் உனக்கு வீடு பேறு கிட்டுமென ஆற்றுப்படுத்துவதாய் அமைந்தது

இந்நூலாசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்.

இவர் சங்கப்புலவர் 49 பேரில் தலைமைப் புலவராயிருந்தார் என்றும், செண்பகப் பாண்டியன்  தனக்கு ஏற்பட்ட ஐயத்தை தீர்க்க பொற்கிழிப் பரிசென அறிவித்தபோது  தருமியிடம் சோமசுந்தரக் கடவுள் எழுதி அனுப்பிய ,

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற்று அறிவை கூந்தலின் 

நறியவும் உளவோ நீஅறியும் பூவே’ (கு.தொ.- பாடல் 2) எனும் பாடலில் பொருட்குற்றம் உளதென ஈசனிடம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என வாதிட்டு நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டார்.பின் ஈசனால்  அருளப் பெற்றார். ஈசனிடம் வாதிட்டதற்கு வருந்தி கயிலை சென்று வணங்க முற்படுகிறார், வழியில் நதிக்கரை ஒன்றில் சிவபூசை செய்யும் வேளை சிவ பூசையில் தவறு செய்பவரைப் பிடித்து உண்ணும்   கற்கிமுகி எனும் பூதமொன்று ஆற்றங்கரை மரத்தின் மீதிருந்து இலை ஒன்றைக் கிள்ளிப் போட்டது அஃது பாதி நீரிலும் பாதி கரையிலுமாக வீழ்ந்தது.நீரின் பகுதி மீனாக, கரையின் பகுதி பறவையாக இரண்டும் ஒன்றை ஒன்று  இழுத்து நின்றது, இது கண்டு சிவபூசையினின்றும் கவனம் திரும்பினார் நக்கீரர் . உடனே அவரைப் பிடித்துச் சென்று குகையில் அடைத்தது கற்கிமுகி.ஏற்கெனவே அங்கு 999 பேர் இருக்க இவரொடு ஆயிரவர் ஆயினர். நீராடிவிட்டு வந்து இவர்களைப் புடைத்து  உண்ண நதிக்கரை சென்றது பூதம்.  அவ்வேளையில் அத்துணை பேரையும் காக்க வேண்டி முருகனை வேண்டி நக்கீரர் பாடிய பாடலே திருமுருகாற்றுப்படை. வேலவன் சூரனைத் தடிந்த வேல் கொண்டு கற்கிமுகியைக் கொன்று. இவர்களைச் சிறை மீட்டான் என்பர்… 

. இஃது ஆறு பகுதிகளாக அமையப்பெற்றது இவை முறையே திருப்பரங்குன்றம். திருச்சீரலைவாய்( திருச்செந்தூர்)

திருவாவினன்குடி(பழனி),  திருவேரகம்,( சுவாமிமலை) குன்றுதோராடல்,(திருத்தணி) பழமுதிர்ச்சோலை என முருகனின் ஆறு படை வீ டுகளைப் பாடுகின்றன. 

திருப்பரங்குன்றம்;;

ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும், என்று துவங்கும் சிலம்பு போல் 

‘ உலகம் உவப்ப வலனேர்பு திரிதர

பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு’ எனத் துவங்குகிறது. உலகை வலம் வருவது போல் நீலக்கடலின் மேல் தோன்றுகிறான் கதிரவன் அதுபோல் நீலமயில் மீதில் வலம் வருகிறான் முருகன்.ஞாயிற்றின் ஒளி கடலில் பரவுதல் சூரியன் கடலில் ஏரோட்டுவது போல் உள்ளதாம். இது போன்றே முருகனின் அருள்வெள்ளம் காலக்கடலில் உழுவது போல் இரண்டறக் கலந்து பாய்கிறது. தீது செய்வாரைத் தேய்த்தழிக்கும் திருவடிகள் கொண்டவன்.’ மறுவில் கற்பில் வாணுதல் கணவன்(தெய்வானையின் கணவன்.

‘கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை

வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறி'(6-7)

கார் மேகம் கடலில் நீரை முகந்துக் குளிர்ந்து கோடை முடிந்த முதல் மழையைப் பெய்யும் அதனால் கடம்ப மரங்களில் வெள்ளிய மலர்கள் பூக்கும். அவை முருகனின் மார்பினில் மாலைகளாகும். 

சூரர மகளிர் எனப்படும் தேவமங்கையர்:

‘மால்வரைநிவந்த சேணுயர் வெற்பிற் 

கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி'(8-9)

 குன்றத்தில் சூரரமகளிர் கிண்கிணி எனும் சிலம்புகள் அணிந்து இந்திரகோபப் பூச்சி(தம்பலப் பூச்சி) போல் மெத்தென்ற பட்டுத்துணியையும் காசுகளாலான ஆபரணத்தையும் இடுப்பில் அணிந்து ஆடினர். நாவல்பழம் போலும் மணிகளாலான அணிகலன்களை அணிந்திருந்தனர் திலகமிட்ட நெற்றியை மறைக்காது முடியப்பெற்ற சிகையில் குவளை மலர்மாலை சூடியிருந்தனர் தலையில் மரதம் பூக்கொத்து, சண்பகப்பூ அவை சூடி,தலைப்பூ அணிந்திருந்தனர். அது செவிகளின் பின்புறம் அழகுற அசைந்தது. 

‘கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி

வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன்

சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி . . . .(38-40)

சூரர மகளிர் ஆடும் சோலை . . . .( – 41)

மலையிலெல்லாம் எதிரொலிக்கச் சேவற் கொடியோனைப் போற்றி  இவர்கள் ஆடிப் போற்றும் திருப்பரங்குன்றம்,

‘மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்

சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்.’ . . .(42 – 44)

குரங்குகளும் புகுந்தறியாத அடர்வனத்தில் பூத்த காந்தள் பூமாலை சூடிய முருகன், சூரனை தண்டித்தவன் ‘

‘சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்.’ சூரனை வென்ற களத்தில் பேய்மகளிர் ஆடும் துணங்கை:

பரட்டையாய் தலைமுடி,வரிசை மாறின பெரும் பற்கள், நிணம்தினும் வாயுடன்,இறந்தோர் தலைகளைக் கையிலேந்தி முருகன் வெற்றி பாடி துணங்கை ஆடுவர்.

மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து . . . .(60)

எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் . . . .(61) மாமரமாய் வந்த சூரனை வென்றவன் என முருகன் வெற்றி பாடினர்.

ஆற்றுப்படுத்துதல்:

முருகனின் அருள் பெற்று வரும் அடியவன் ஒருவன் எதிர்வரும் அடியவன் ஒருவனை,

‘சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்

செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்

நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப . (62.-65)

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே’ பயன் கருதி வருகிறாய் எனில் உனக்கு நான் வழி காட்டுவேன் என்கிறான்.

செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி பறக்கும் , சிறுவரும், மகளிரும் பந்தாடி மகிழும் பொருநர் அழிந்து போனதால் திருமகள் குடிகொண்ட மாட மாளிகைகள் நிறைந்த வீதிகளைக் கொண்ட மாமதுரை அதன் வடக்கில்

‘ இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த

முட்டா தாமரைத் துஞ்சி வைகறைக்

கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்

கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் . . . .(72-75)

காலையில் தாமரைத் தேனருந்தி மாலையில் நெய்தலில் கள்ளுண்ணும் வண்டினங்கள் .

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

குன்றமர்ந்து உறைதலும் உரியன்.  . . . .(76-77) வயல்கள் சூழ்ந்த பரங்குன்ற  மலையுறை முருகன்.. திருச்சீரலைவாய் செல்கிறான்

திருச்சீரலைவாய்:

முருகனின் தோற்றம்:

பகைவர் அம்புகள் தைத்த வடுக்களைக்கொண்ட நெற்றியில் ஓடை எனும் பொன்னணி புனைந்து ,  இருபுறமும் தொங்கும் மணிகள் அசைய நடந்துவரும் 

‘கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்

கால்கிளர்ந் தன்ன வேழ’ (81,82) மான பிணிமுகத்தின் மீதேறி வரும் முருகன்.

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி

மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப . . (83-85).

அஞ்சு முகமெனும் மணிமுடி சூடி யிருந்தான் அதாவது பொற்தகட்டில் நீலமணி பதிக்கப்பெற்ற முடி. காதுகளில் செம்பொன் குழைகள் அணிந்திருந்தான் 

முடியின் மணிகளும், குழைகளின் மணிகளும் வான நிலவைச் சூழ்ந்த தாரகைகளை நினைவூட்டின. முருகன் முகம் வான்மதி.

ஆறுமுகங்கள் செயல்:

‘மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்,

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்

காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே; (91-94).

உலகின் இருளகற்றி ஒளிதரும் ஒரு முகம். ஒருமுகம் அடியவர்க்கு அருள்வரம் வழங்கும்,

ஒருமுகம் வேள்விசெய் அந்தணர் ஓதும் மந்திரம் கேட்கும்,ஒரு முகம் இரவில் நிலவாய் ஒளிவீசும்.ஒரு முகம், பகைவரைச் சினந்து சீரமைக்கும் களவேள்வி செய்யும்.ஒரு முகம் காதற் குறத்தி வள்ளியோடு கலந்துரையாடி மகிழும்.

‘குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.’(101-102)

பன்னிரு கைகளின் சிறப்பு;

‘விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை’( 107,108)

விண்ணில்  திரியும் தேவர்களைத் தாங்கிப் பிடிக்க நீண்டது ஒருகை, அதற்கிணையாக இடுப்பில்  ஒருகை,தொடையின் மீது ஒருகை, அதற்கிணையாக யானையின் அங்குசம் பிடித்தது ஒருகை,

கேடயம் ஒருகையில், அதற்கிணையாக வேலேந்தும் ஒருகை,

மார்பில் ஒருகை,அதற்கிணையாய் மாலை தாங்கும் ஒருகை,

தொடி சுழற்றும் கை ஒன்று,மணியடிக்கும் கை ஒன்று,

வானமாமழை தரும் கை ஒன்று, வானமங்கை தெய்வானைக்கு மணமாலை சூட்டும் கை ஒன்று.

அவனூர்தியான மயில் அகவ, கொடியுறை சேவல் கூவ ,கொம்பு, சங்கு ,முரசம் முதலான பல இசைக்கருவிகள் முழங்க அவன் வான்வழி புற்படுவதன் முன்னம் நீ சென்றவனைக் காண்பாயாக.

திருவாவினன்குடி;

காவியில் தோய்த்த மரவுரி தரித்த மேனியர், எவரிடமும் குறை காணாத பார்வையினர், மான்தோல் போர்த்தியவர், சினமும் காமமும் விட்டவர், பலநாள் பகலுணவும் பெறாது வாடியவர், எலும்பு துருத்தித் தெரியும் மார்பினர், பிணக்கு ஒழித்த பண்பாளர்களான, 

‘வலம்புரி புரையும் வால்நரை முடியினர்’ முனிவர் முன்செலப் பின்வரும்  செவ்வேள். தன்னோடு கந்தர்வர் யாழ் மீட்ட கந்தர்வ மகளிர் புகைபோலும் மெல்லிய ஆடை உடுத்து இன்குரல் எடுத்துப் பாடி வந்தனர்.

சிவன்,திருமால்,இந்திரன்:

பாம்பணை துயிலும் கருடக்கொடியோன் திருமாலும், திரிபுரமெரித்த மாதொரு பாகனும், இன்னும் ,

‘ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்

தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை'(157-158)

தந்தங்கள் நான்கு கொண்ட ஐராவதம் ஏறிவரும் இந்திரனும்,’

‘நான்முக வொருவற் சுட்டிக் காண்வர (165)

பிரணவத்தின் பொருள் மறந்து முருகனிடம் சிறைபட்ட நான்முகனை விடுவிக்க வேண்டி இங்கு வந்தனராக.

இப்படி நால்வரும்  கோவில் கொண்டுள்ள நகர்  இது.

நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . . (160). .

இன்னும் பலப்பல தேவர்களும் நித்தம்நித்தம் வந்து வணங்க,

‘தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் . . . .(175)

ஆவினன்குடி அசைதலும் உரியன், ‘

தெய்வானையுடன் சிலநாள் அருள்பாலிக்க ஆவினன்குடி உறைவான்.

திருவேரகம்;

பூணூலுக்குமுன், பூணூலுக்குப் பின் என இருபிறப்பாளரான அந்தணர்,48 ஆண்டுகள் இல்லறம் நடத்தி அதன்பின் துறவறம் பூண்டவர், முப்புரி நூலணிந்தவர், (ஒரு புரிக்கு மூன்று நூல் வீதம் ஒன்பது நூல்களால் முறுக்கிய மூன்று புரிகள்) முத்தீ வளர்ப்போர், 

( நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவம் என்னும்)

இறைவனுக்கும், இறந்தோர்க்கும் உணவு சமைப்பார்.ஈசனையும், மாலவனையும் வணங்கும் தொல்குடியினர். சென்னியின் மேல் கரங்குவித்து ஆறெழுத்து மந்திரத்தை ஓதுபவர், பிறர்க்கும் சொல்லுபவர். இவர்கள் முருகன் புகழ்பாடி மணமலர் தூவி வழிபாடுகள்  செய்வதை விரும்பி இங்கு வந்து செவ்வேள் தங்குவான் சிலநாள்.

குன்றுதோராடல்; திருத்தணி.

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . . . .(190)

மூங்கிலில் விளைத்த கள்ளை, வேட்டையாடும்போது  விரும்பிப் பருகும் கானவர், பூக்கூடையில் கொணர்ந்த குளவி, வெண்கூதாளப் பூக்களோடு நறைக்காயை வைத்துத் தொடுத்த கண்ணியை அணிந்த வேலன் , (முருகனைப் போல் கோலம் புனைந்து முருகனாகவே தோன்றும்) 

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர . . (196-197). .

தன் சுற்றத்தொடு தொண்டகப் பறை முழக்கி குரவைக் கூத்து  ஆடி வந்தான்.

இவனோடு 

‘விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்

குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி'(198-199)

சூடிய , குல்லாத்தழை பூத்த வெண்கடம்பு மரத்தளிர், மாந்தழை இவற்றாலான மரவுரி அணிந்த,

‘மயில்கண் டன்ன மடநடை மகளிர்’ ஆடிவந்தனர்.

வெறியாடும் வேலன் வடிவில் முருகன்: 

செம்மைத்திறம் மாறாதவன்,,சிவந்தமேனியன், காதாற் குழையாட,சேவலங்கொடியாட ,குழல்,முழவு,கொம்பு முதலான மல இசைக்கருவிகள் இயக்கிப் பாடி ஆடி  வருவோருடன் வெறியாடும் வேலனிடம் தானும் ஆடி வருகிறான்.

‘குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே’ இங்கு இவ்வாட்டம் மகிழ்ந்து உறைவான் சிலநாள்.

பழமுதிர்ச் சோலை;

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், ‘(218-220)

தினையும், மலரும் தூவி, ஆடு வெட்டி ,சேவற்கொடி நட்டு விழா அயரும் ஊர்கள்,

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,

வேலன் தைஇய வெறியயர் களனும்'(221-222)

வெறியாடும் களங்களிலும், மணல்மேடெனும் துருத்திகளில்  நடக்கும் விழவிலும்,

‘யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்'(224-225)

ஆறு,குளம்,,நாற்சந்தி, தெரு முட்டுமிடம்,முட்டுச்சந்து,என இங்கும்,

‘மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் ‘(226)

சோலைகள், மன்றங்கள், வீர விளையாட்டுத்திடல்கள் என எங்கும் மகிழ்ந்து தங்குவான் இவன்.

குறமகளின் வெறியாட்டு;

தெய்வம் ஏறிய பெண்ணின் மீது வெண்சிறுகடுகை நெய்யிற் கலந்து தேய்ப்பர், இவள் உடலை வளைத்தும், தண்ட முத்திரை காட்டியும் ஆடுவாள்.,எருக்கம்பூ மாலை அவளுக்குச் சூட்டி இருப்பர், வெறியாடுமிடத்தில் எல்லை இட்டு வைத்திருப்பர்,.வெண்பொறி சிதறியிருக்கும், யானை இரத்தம் கலந்த அரிசி பலியா`தூவுவர். அவளைப் பிரம்பால் தட்டுவர், மணநீரையும், மஞ்சள் நீரையும் அவள் மீது ஊற்றுவர்.

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே'(248-249)

கொம்பு ஊதி,மணியடித்து அச்சம்தரும் பூக்கள் தூவி,குருதி கலந்த செந்தினை பரப்பி வெறியாடும் குறமகளோடு சிலம்பை ஆட்டி அச்சம் எழப் பாடி ஆடுவர் கானவர்.வேண்டுதல் வைப்பர்.அது கேட்டு அங்கு அருள்புரிவான் வேலன்.

இங்கு வேண்டும் அடியார் விருப்பப்படி முருகன் உறைவான்.

இங்கெல்லாம் நீ அவனைக்காண நேர்ந்தால் அவனைப் பாடிப் பரவுதல் வேண்டும் இப்படி,

‘முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்

கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,'(251-252)

முருகனைக் கண்டதும் தரையில் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றுதல் வேண்டும்.ஈசனின் நெற்றிக்கண் தந்த தீப்பொறியை பஞ்ச பூதங்களில் ஒருவனான  அக்கினிதேவன் வணங்கி ஏந்திச் சென்று

சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம் தர ஆறு குழந்தைகளாய் உருவெடுத்தவனே,

மலையோள் மகனே,ஈசன் மைந்தனே, கொற்றவை புதல்வா,பகைவர்க்குக் காலனே, நூலாய்ந்த புலவர் பெருமானே,கிரவுஞ்சம் பிளந்த வேலனே, குறிஞ்சிக்கிழவனே, பெருதற்கரிய பேறே,அடியவர்க்கு அருளும் பேராளனே,

‘நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்

நின்னடி உள்ளி வந்தனென்’(278-279) உன் பெருமை முழுதும் சொல்லும் திறம் பெற்றவன் அல்லன் நான், இருப்பினும் எனை ஏற்று அருள வேண்டும் என நீ எண்ணியவுடனே , பல்வேறு வடிவினராய் முருகனின் உடனிருக்கும் கூளியர் எனப்படும் தெய்வப் பணியாளர் முருகனிடம்’ ‘பெருமானே இவன் இரங்கத்தக்கவன்  உன் இனிய வடிவழகைக் காணும் பேறு இவனுக்குத் தந்து இவனுக்கு அருள வேண்டுமென’ உனக்காகப் பேசுவர்.அவ்வளவில் முருகனும், ‘அன்பனே அஞ்சாதே உன் வருகையை அறிவேன் நான்’ என்று ,

வெடித்த பலவின் சுளைகளும், உயர்ந்த சுரபுன்னைக் கிளைகள் உதிர்ந்த மலர்களும் மிதந்துவர,யூகமெனும் கருங்குரங்கும்,கரிய முகம் கொண்ட முசுக்கலை எனும் குரங்கும் அஞ்சிட, மத்தகத்தில் புள்ளிகள் கொண்ட பிடி நடுங்க, முத்துக்கள் உதிரும் தந்தங்களை மலையுச்சியில் தொங்கும் தேன்கூடுகளை அறுத்துக்கொண்டு,பழுத்து உடைய களிற்றை இழுத்துக்கொண்டு ,

வேகம் கொண்டு வீசிவாழைமரங்களைச் சாய்த்து தென்னையின் குலைகளைப் பறித்து,மிளகுக்கொடிகளைச் சாய்த்து,மயில்கள் அஞ்ச,கோழிக்கூட்டம் சிதைந்து ஓட,பனையின் செரும்பன்ன முடிகளைக் கொண்ட கரடி மலைக்குகை சென்று அடைய, காளைகள் அஞ்சி ஓட,’ இழும், இழும்எனும் ஓசையுடன் மலையிலிருந்து கீழிறங்கி ஓடிவரும்  ,’ பழமுதிர்ச் சோலைஎனும்  படை வீட்டிலிருந்து நீ நயந்த வீட்டின்பம் தந்தருள்வான்.

Series Navigationகங்காவுக்கு பின் பெண்கள்