கோ. மன்றவாணன்
தவிக்கிறாள் தமிழ் அன்னை. ஆம், ஒரு மெய்யான தமிழ் அறிஞரை இழந்து தவிக்கிறாள் தமிழ் அன்னை. அந்தத் தமிழறிஞர்…. தமிழ்ப்பேரறிஞர் தெ. ஞானசுந்தரம் அய்யாதான்.
அவர் என்னை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என்மேல் அன்பைப் பூமழையெனப் பொழிந்து அருளினார்.
தினமணி – தமிழ்மணியில் சொல்தேடல் என்ற பகுதியில் ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் கண்டறியும் பணியைத் திறம்படச் செய்தார். அந்தப் பகுதிக்கு நானும் சொல்செய்து அனுப்பினேன். என்னுடைய புதுச்சொற்கள் பலவற்றைத் தேர்ந்து எடுத்துப் பாராட்டினார். அப்போது தொடங்கிய நட்பு மேலும் மேலும் பல்கிப் பெருகிக் கொண்டே இருந்தது. அது எனக்கு அமைந்த நல்பெருமை. இந்தத் தமிழுறவு ஏற்பட்டதற்கு முதல் காரணர், தினமணி ஆசிரியர் திருமிகு வைத்தியநாதன் அய்யாதான். அவரையும் இந்த நேரத்தில் நினைத்து வணங்குவது என் நன்றிக் கடன்.
தமிழ்மணியில் வெளியான சொல்தேடல் பதிவுகளைத் தொகுத்து அதே பெயரில் நுாலை வெளியிட முனைந்தார். அப்போது அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டார். நான் அதிர்ந்து போனேன். அந்த மாபெரும் தமிழ்க்கடல் முன், மழையின் போது மட்டுமே தேங்கி வறண்டு போகும் குட்டை நான். அவருக்கு நான் எப்படி அணிந்துரை எழுத முடியும் என்று மறுத்தேன். ஆனாலும் நான்தான் எழுத வேண்டும் என ஆசை உற்றார். அவரின் சொல்தேடல் பணிகுறித்து நான் எழுதிய ஒரு மடலையே அணிந்துரையாக அந்த நுாலில் வெளியிட்டார். அதுவும் எனக்கு அமைந்த உயர்பெருமை.
இதேபோல் ஒரு நிலைமை அவர் வாழ்விலும் நிகழ்ந்தது என்று பின்னர் அறிந்தேன். அவருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அரும்பெரும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தம், தன் நுாலுக்கு அணிந்துரை எழுதித் தருமாறு ஞானசுந்தரம் அய்யாவைக் கேட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட மன அதிர்வைப் பதிவு செய்து இருக்கிறார். அது அவரின் தன்னடக்கம். அப்போதே தெ.ஞா. அவர்கள் தேர்ந்த தமிழறிஞர்தான்!
பிறப்பால் அவர் சைவ மரபினர் என அறிகிறேன். சிறப்பால் அவர் உலகு போற்றும் வைணவப் பேரறிஞர். இந்நிலையில் கடலுார் திருப்பாதிரிப் புலியூரில் வாழ்ந்து உயர்ந்த ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளைப் பற்றி ஒரு சிறுநுால் எழுதினேன். “அவருக்கும் அமுது என்று பேர்” என்பது அந்த நுாலின் தலைப்பு. ஞானியாரோ சைவப் பேரறிஞர். ஞானசுந்தரம் அய்யாவோ வைணவப் பேறிஞர். எனக்கு எப்போதுமே முரண்களை மோத விடுவதில் தீராத ஆர்வம் உண்டு. அதன் அடிப்படையில் ஞானியார் அடிகள் பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதித் தருமாறு வேண்டுகோளையும் மின்நுாலையும் வினவியிலேயே அனுப்பினேன்.
அந்தச் சமயத்தில் அவருக்குப் பல்வலி. ஆனாலும் இரண்டே நாளில் நுாலை முழுவதுமாகப் படித்து, ஞானியாரைப் போற்றி ஓர் அன்பான அணிந்துரை எழுதித் தந்தார். அந்த அணிந்துரை வழியாக இன்றைய துறவிகளுக்கு ஓர் அறிவுரையும் வழங்கினார். அது, இதுதான்.
“இன்றைய துறவிகள் ஞானியார் அடிகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு ஒழுகின், அவர்களுக்குச் சிறப்பும் துறவுக்கு மதிப்பும் கிட்டும்.”
நான் தமிழ் படிக்காதவன். என்றாலும் என்னை வளமான தமிழ்அறிஞர் என்றே குறிப்பிட்டு வந்தார். அதை நான் அப்போதும் இப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா வரும் போதெல்லாம்… முதன் நாளிலேயே வாழ்த்துக் கவிதை எழுதி அனுப்புவது அவருடைய அன்பான வழக்கம். பெரும்பாலும் அறுசீர் விருத்தப் பாவில்தான் அந்த வாழ்த்துகள் இருக்கும். அதே யாப்பில்… அவர் பயன்படுத்திய அதே எதுகை அமைப்பில் அவரை வாழ்த்திக் கவிதை அனுப்புவது என்னுடைய தமிழ் விளையாட்டு. அதைப் படித்து மகிழ்ச்சி அடைந்தார்.
14-01-2026 அன்று அவர் அனுப்பிய கவிதை வாழ்த்துக்கு மட்டும், அதே யாப்பு வடிவில் நான் வாழ்த்து எழுதவில்லை. அது இதுநாள் வரை எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது. அவர் மறைவு செய்தி கேட்டதும், அந்த உறுத்தல் என்னை நிலைகுலையச் செய்கிறது. ஆனால் அவரின் படம் போட்டுப் பொதுவாழ்த்து அனுப்பி இருந்தேன்.
தினமணி – தமிழ்மணியில் எப்போதாவது என் கட்டுரை வெளியானால்… அன்று காலை ஏழு மணியளவில் அவரிடம் இருந்து அழைப்பு வரும். அவர்தான் முதலில் பாராட்டுவார். என் கட்டுரை வெளிவந்த விவரம் எனக்கே அப்போதுதான் தெரியும். அவரின் இந்தப் பேரன்பு என்னை வியக்க வைக்கிறது.
திருக்குறள் குறித்து அவர் நிறைய பேசி இருக்கிறார். எழுதி இருக்கிறார். திருக்குறள் உரைகளும் குறைகளும் குறித்து என்னிடம் கலந்தாடல் செய்திருக்கிறார். திருக்குறளில் அவர் செலுத்தும் நுட்பமான பார்வை, திருவள்ளுவரே நேரில் வந்து சான்றுரை சொல்வது போல் இருக்கும். திருக்குறளுக்கு உரை எழுதுமாறு அவரை வேண்டினேன். அவர் சிரித்துக் கொண்டார்.
நிகழ்காலத்துடன் பொருத்தி நானும் திருக்குறளுக்கு உரை எழுதினேன். ஐநுாறு குறள்களுக்கு மேல் உரை எழுதிய நிலையில் சாலை விபத்தில் சிக்குண்டேன். அதன் பின்விளைவுகளால் பெருந்துன்பம் அடைந்து வருகிறேன். அதனால் அந்தப் பணியை முடிக்க முடியவில்லை. முடியாமல் போய்விடுமோ என்று இப்போதும் அஞ்சுகிறேன்.
கடலுாரில் நடந்த இலக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்று இருக்கிறார். பாச்சுடர் வளவ. துரையன் அவர்களிடம் நேற்று இரவு பேசிய போது, இலக்கியப் பேரவை (இப்போது இலக்கியச் சோலை) நிகழ்ச்சியில் தெ.ஞா. அய்யா பேசியதை நினைவுகூர்ந்தார்.
இதே போல் சில நாள்களுக்கு முன், பேராசிரியர் குழந்தைவேலன் அவர்களிடம் நலம் உசாவிப் பேசிய போது, கடலுார் காவேரி திருமண மண்டபத்தில் தமிழியக்கம் நடத்திய இலக்கியப் பெருவிழாவில் ஞானசுந்தரம் அய்யா பேசியதை நினைவூட்டினார்.
கடலுாரில் நான் இருந்தும், இந்த நிகழ்வுகளில் எப்படிப் பங்கேற்காமல் போனேன் என்று தெரியவில்லை. அரிய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன். வாய்ப்புகளை இழப்பது என் வாடிக்கையான பதிகம். என்ன செய்வது?
உயரிய விருதுகளையும் பதவிகளையும் அவர் பெற்றிருக்கிறார். அத்தனைக்கும் அவர் பெருந்தகுதி கொண்டவராகவே விளங்கினார். எண்பது அகவை கடந்த நிலையிலும் தன் மணிக்குரலால் தமிழ் அரங்குகளை அலங்கரித்தார். எழுதிய நுால் ஒவ்வொன்றும் தமிழுக்கு அவர் சூட்டிய அணிகலன்.
அவர் இயற்கை எய்திய செய்தி என் மீது விழுந்த பேரிடி. என்பால் அன்பு செலுத்திப் போற்றிவந்த ஒரே தமிழறிஞர் அவர்தான். அவருக்கு நான் பல மடல்களை எழுதி இருக்கிறேன். எனக்கும் அவர் அன்பு மடல்களை அனுப்பி இருக்கிறார். அவை யாவும் நினைவில் ஆடுகின்றன. அவரோடு அலைபேசியில் உரையாடிய பொழுதுகள் யாவும், தமிழன்னையின் மடியில் அமர்ந்து தமிழ் கற்றது போல் இருந்தன.
இனி எங்கே யாரிடம் தமிழ் கற்பேன்?
- லா.ச.ரா.காலத்துக்கதை
- வாடகை
- E15-ம், திருப்பூர்ஏற்றுமதிவணிகமும்…
- இனி, யாரிடம் தமிழ் கற்பேன்? தமிழ் அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயாவுடனான நட்புறவு குறித்து
- நெஞ்சறியும்
- மழை புராணம் : 17
- தராசு முள்….
- பெண்ணியம் என்னும் பெருநிலை