This entry is part 5 of 8 in the series 1 பிப்ரவரி 2026

ஆர் வத்ஸலா

என் பிறந்த நாள் விருந்துக்கு

“கூப்பிடவா

நீ மகனாய் நினைக்கும் அவரை”

எனக் கேட்டாள்

என்‌ அன்பு மகள்

“கூப்பிடு, கூப்பிடு”

என‌க் கத்தியது

உள்ளம்

“வேண்டாம்” 

என்றது வாய். 

கூப்பிட்டாலும் வரமாட்டாய். 

நல்ல நாளில் 

எதற்கு மன வருத்தம், 

எனக்கும்  

என்‌ காரணமாய்‌ அவளுக்கும், 

என‌ எண்ணி

வந்தார்கள் பலர்

உண்மையான அன்புடன்

மிகுந்த மகிழ்ச்சியளித்துக் கொண்டு

உள்‌ மனம் கோபப் பட்டது

என்‌ மேல்

உன்னை அழைக்க வேண்டாம் என்றதற்கு

வந்திருப்பாயோ அழைத்திருந்தால்?

நீ தோன்றினாய்

திடீரென.

என்னை முற்றிலும் அறிந்த 

என்னருமை மகள்

அழைத்திருந்திருக்கிறாள் உன்னை

ஏதேதோ பேசினாய்.

நானும்.

அதில் எதுவும் நினைவில்லை 

எனக்கு 

நினைவில் நிற்பது –

நெருக்கமானவர்களை‌ நோக்கி

“அடித்துக் கூறினேனே அப்போதே,

தொடர்பறுத்துக் கொண்டு போனாலும் 

அவனுடைய அன்பு 

உண்மை 

உண்மை

உண்மை

என்று”

என‌ கர்வத்துடன்

நான் வீசிய பார்வையும்

பதிலுக்கு

அவர்கள் உதிர்த்த 

ஆதூர புன்னகையும்

Series Navigationஇனி, யாரிடம் தமிழ் கற்பேன்? தமிழ் அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயாவுடனான நட்புறவு குறித்துமழை புராணம் : 17