சோம. அழகு
‘பெண்ணியம்’ – சமத்துவத்தை வலியுறுத்தவும் நிலைநாட்டவும் வேண்டி தொடங்கப்பட்ட மகத்தான ஓர் இயக்கம்! ஆனால் தற்காலத்தில் ‘பெண்ணியவாதி’ என்றாலே ஆண்களை வெறுப்பவர் என்றும் ‘பெண்ணியம்’ என்பது மது அருந்த, புகை பிடிக்க, வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருக்கவென பயன்படுத்தப்படும் உரிமம் என்றுமான பிம்பத்தை பெரும்பாலானோரின் ஆழ்மனதில் விதைத்தது யார்? “அவ்வியக்கத்தின் முகமும் வரையறையும் முற்றிலும் மாறிப் போய்விட்டதோ? அதன் நோக்கம் நீர்த்துப் போனது போல் இருக்கிறதே?” என்றெல்லாம் சில காலமாக மனதில் தோன்ற அந்தப் ‘பெண்ணியவாத’ அடையாளம் என் மீது படராமல் பார்த்துக் கொண்டேன்.
என்னிலும் எட்டு வயது இளையவளான என் தங்கைதான் என் முட்டாள்தனத்தை இடித்துரைத்தாள். மிகச் சாதாரணமாகத் துவங்கிய ஓர் உரையாடலின் வழியாக அவளது சிந்தனைத் தெளிவை எனக்கும் கடத்தினாள்.
“நீ சொல்ற அந்த specious உரிமத்தை பயன்படுத்தியோ இல்லாமலோ ஒரு பொண்ணு தனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குறதுல இந்த சமூகத்துக்கு என்ன பிரச்சனை?” – இந்த ஒற்றைக் கேள்வியில் எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிட்டாள் எனினும் பொதுபுத்தி சட்டென அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் அல்லவா? அதன் விளைவாக எங்கள் உரையாடல் கொஞ்சம் நீண்டது. நான் வலுக்கட்டாயமாக நீட்டித்தேன் என்று கூட சொல்லலாம்.
ஒரு கட்டத்திற்கு மேல் இவளை இன்னும் உசுப்பேற்றி எவ்வளவுதான் கறக்க முடிகிறதென்று பார்ப்போமே என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது.
“சரி தப்புன்னு சில விஷயங்கள் இருக்குதுல்ல?”
“இல்ல!” – இவள் இப்படித்தான். நறுக் சுருக்கென்று தெறித்தாற்போல் பேசுவாள்.
“டேய்”
“என்ன? தனிநபர் சார்ந்த விஷயங்களில் சரி தப்புன்னு எல்லாம் ஒண்ணு கெடையவே கெடையாது”
“சமூகத்திற்கென்று சில விதிகள் இருக்குல்ல?”
“அதை வகுத்தது யாரோ அவங்க வசதிற்கேற்ப இயற்றப்பட்டவைதானே அந்த ‘விதிகள்’? நீ திரும்பத் திரும்ப பொதுவான விஷயங்களை மனசுல வச்சே பேசுற. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், செயல்பாடுகள் பற்றித்தான் இங்க பேச்சே”
“சரி. மது, புகை எல்லாம் கூட தனிநபர் விருப்பம் சார்ந்தவைதான். இதற்குப் பாலின பேதம் கிடையாது. ஆனால் இதையெல்லாம் ‘பெண்ணியம்’ என்னும் முத்திரையோடு சிலர் செய்வது அந்த இயக்கத்தையே கேலிக்குள்ளாக்குவது போல் இல்லையா? அது குறித்த கோபம்தான்”
“Why do you assume yourself to be a flagbearer of feminism here?” – என் கன்னத்தில் அவளது கைக்குப் பதிலாக இவ்வார்த்தைகள் பொளேரென்று வந்து அறைந்தன.
“அப்படி இல்லை. ஒரு நல்ல இயக்கம் திசை மாறி….”
“ஒரு சில அரைவேக்காடுகளை ஏன் அந்த இயக்கத்தோட முகமா பாக்குற?”
அதானே? ரஷ்யா, சீனா, வட கொரியா – இவர்களைப் பார்த்து கம்யூனிஸத்தையேவா ஒதுக்கி விட்டேன்? இல்லையே. இங்கு மட்டும் எப்படி இந்த மடமை நிகழ்ந்தது என்னுள்? எல்லோருக்கும் அடி சறுக்கும். ஆனால் வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் ‘தவறெனில் என் பார்வையை மாற்றிக் கொள்ள இசைவாயிருக்கிறேன்’ என்பது தானே நாம் இன்னும் பக்குவப்படத் தயாராய் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறி.
இப்போது சிறிது நேரம் பொதுசனத்தின் முகமூடியை வலுக்கட்டாயமாகக் கடன் வாங்கினேன். அவர்களின் வழமையான கேள்விகள் என் குரலுக்குப் பொருந்தவில்லை எனினும் இவளிடம் இன்னும் பேச வேண்டும் போல் இருந்தது.
“சமூக வலைதளங்கள்ல அவங்க சத்தம்தான் அதிகமா இருக்கு. அவங்க ஏற்படுத்துறது தவறான தாக்கம். ‘என் கணவனுக்குக் காப்பி போட்டுத் தர மாட்டேன்’னு சொல்றதுதான் பெண்ணியமா? இந்த மாதிரி அற்ப விஷயங்களுக்கெல்லாம் அப்பேர்ப்பட்ட வார்த்தையைத் தூக்கிட்டு வரணுமா?”
“அற்பமாவே இருக்கட்டுமே! ரொம்ப சரியா பேசுறதா இருந்தா, Cooking is a survival skill. ஆனா ‘ஆணுக்கு அது கண்டிப்பா தெரிஞ்சுருக்கணும்னு அவசியமில்லை’ன்னு ஒரு சமூகமா எல்லாரும் அந்த அற்பத்தை ஏத்துக்கிட்டது male privilege இல்லையா? அதே சமூகம் ‘காப்பி போட்டுத் தர மாட்டேன்’னு ஒரு பொண்ணு சொல்றத கொலைக்குத்தம் மாதிரியும் அப்படிச் சொல்ல அவளுக்கு உரிமையே இல்லைன்னும் நினைக்குதுல்ல? அதுவும் தப்புதான். அப்புறம்… நீ சொல்ற அந்த யாரோ ஒருத்தி அவளோட கணவனுக்கு காப்பி போட்டுத் தர மாட்டேன்னு சொல்றதுனால உனக்கு எங்க வலிக்குது?”
“ங்ஙே?” – ‘என்ன பொசுக்குன்னு இப்பிடி கேட்டுட்டா? இதுக்கு… இப்ப… நான்… என்ன… சொல்றது?’ என்று ஒரு கணம் வாயடைத்துப் போனேன். “ஒரு குடும்பத்துல கணவனும் மனைவியும் எப்பவும் எல்லா வேலையையும் நூல் பிடிச்சு சரி சமமா பகிர்ந்துக்க முடியாது. சில சமயங்களில் ஒரு ஆணின் பங்களிப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வேறு சில சமயங்களில் அந்தப் பெண் கொஞ்சம் அதிகப்படியாகப் பங்களிக்க வேண்டியிருக்கலாம். ‘அதுதான் சரி’ன்னு கூட சொல்லல. ஆனா அது ஒண்ணும் தப்பில்லையே?”
“அந்தப் பெண்ணுக்குச் செய்ய இஷ்டமில்லை. அவ்வளவுதான்”
“அப்பிடின்னா அந்தக் குடும்பத்துல பிரச்சனை வராதா?”
“வரலாம்”
“இப்படியே போனா விவாகரத்துலதான போய் முடியும்?”
“அது அவங்க பிரச்சனை. அவளுக்கு வேலை செய்ய இஷ்டமில்லாததும் அது அவனுக்கு சரிப்படாதுன்னு தோணுறதும் இரு தனிநபர்களுக்கிடையேயான விஷயம். அதை ஒரு நடுவிடத்துக்குக் கொண்டு வர்றது, பேசி தீர்க்குறது, சரி வரலைன்னா நீதிமன்றத்திற்குப் போறது – எல்லாம் அவங்க பாடு. குடும்ப நலத்துறை தூதர் மாதிரி நீ ஏன் மேன் இவ்வளவு பரபரக்குற?– ஒரு மரமண்டைக்குப் புளியைப் போட்டு விளக்கிக் கொண்டிருப்பதைப் போன்ற லேசான கடுப்பு தொனித்தது அவளிடம்.
“இப்படியே எல்லாரும்….” – நான் முடிக்கும் முன்பே புருவங்களை நெரித்துக் குறுக்கிட்டாள்.
“தான் சாப்பிட்ட தட்டைக் கழுவி வைக்க முடியாதுன்னு ஒரு ஆண் சொல்றதைப் போல்தான் அதுவும். இதை மட்டும் சாதாரணமான ஒரு விஷயமாகக் கடந்து விடுகிற சமூகம் ‘பெண்’ கட்டுப்பாட்டில் இருந்து திமிருகிறாள் என்று மட்டும் ஏன் கூப்பாடு போடுகிறது?” – ஒரு சிறிய இடைவெளி விட்டாள்.
என்னிடம் மேற்கொண்டு கேள்விகள் இருக்கின்றனவா என என் கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டு மீண்டும் அவளே தொடர்ந்தாள். “இதுக்கு மேலயும் நீ எப்படி சுத்தி சுத்தி கேட்டாலும் என் பதில் கேள்வி ஒண்ணே ஒண்ணுதான். ‘அதனால தனிப்பட்ட முறையில் உனக்கென்ன?’ உனக்குப் பிடிச்சுருக்கா? உன் வூட்டுக்காரருக்கு காப்பி போட்டுக் குடு, கால் அமுக்கி விடு… அத்தோட நிறுத்திக்கோ. அடுத்த வீட்டு விஷயத்துல ‘குடும்பம் உடைஞ்சுடுமோ?’, ‘சமூக அமைப்பு சீர்குலைஞ்சிடுமோ?’ன்னு தேவையில்லாத அக்கறையெல்லாம் எதுக்கு? அப்படியெல்லாம் யோசிக்குற அளவுக்கு இங்க யாரும் நல்லவங்க கிடையாது. ஆனா எல்லாரும் அதையே திரும்பத் திரும்பப் பதட்டத்தோட பேசுறது கூட ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் இருந்துதான். Because an independent ‘woman’ can be happy even in reclusion! In fact only in reclusion it seems.”
****************************************
“பெண்கள் என்ன செஞ்சாலும் தப்பே இல்லைன்னு சொல்ல வர்றியா?”
“நீ தப்புன்னு எதையெல்லாம் சொல்லுறன்னு எனக்குத் தெரியல. தவறுகளுக்குக் கூட பாலினம்(gender) கற்பித்து வைத்திருப்பதையே தப்புன்னு சொல்றேன்”
“எதுக்கெடுத்தாலும் பெண்களுக்கு மட்டும் ஒரு நீண்ட விதிமுறை பட்டியலைத் தூக்கிட்டு வர்ற சராசரிகள், எரிச்சலை வரவழைக்காமல் இல்லை. நம்ம சமூகம் ஒரு transition stageல இருக்கு. ஆணாதிக்கத்தை(patriarchy) ஏற்றுக் கொண்டு அதைப் பத்திரமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியைப் பல பெண்களு‘ம்’ செவ்வனே செய்து கொண்டுதான் இருந்தார்கள். ஒரு பறக்கோடியில்(extreme) இருந்து இப்போது இன்னொரு பறக்கோடியை நோக்கி நாம் வேகமாக செல்வது போல் இருக்கிறது”
“போயிட்டு போறோம். அதனாலென்ன?”
“அங்கயும் இங்கயும் மாறி மாறி அடிச்சு ஒரு நிதானத்துக்கு வர கொஞ்சம் காலம் பிடிக்கும்னு நினைக்குறேன். அவங்க அடக்க நினைக்குறது தப்புன்னு பளிச்சுனு சொல்ற மாதிரி நம்ம பக்கம் இருக்குற பிசகையும் சுட்டிக் காட்டுறது தவறில்லைன்னு நினைக்குறேன்”
“இந்த வாதம் இங்க சரியா வராது. ‘நான் எனக்குப் பிடிச்ச குட்டைப் பாவாடை போட்டுதான் போவேன்’னு ஒரு பொண்ணு சொல்றா. A completely harmless behavior for any other given individual. ஆனா ‘அப்படி ஒருத்தி சாலையில் சென்றால் நான் திங்குற மாதிரி பாக்கத்தான் செய்வேன். என் இஷ்டத்துக்குத் தப்பு செய்வேன்’னு ஒரு ஆண் சொல்றான்னா, Who is dangerous here? நம்மளோட பிசகுன்னு நீ எதை தூக்கிட்டு வந்தாலும் அது அவங்க பக்கமும் இருக்கு அல்லது அவங்க பக்கம் மட்டும்தான் இருக்கு. ஏன் எல்லாருக்கும் பெண்கள் பக்கமாவே உறுத்துது? கண்ணியமான உடைன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. வசதியான உடை. பாக்குறவங்களுக்குப் பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கலாம். ஒரு விசேஷ வீடுன்னா பக்கத்துல இருக்கவங்ககிட்ட அசிங்கமா கிசு கிசு பேசிட்டு மறந்துடலாம். இன்னும் ஒரு படி மேல போய் மனசுக்குள்ள judge கூட பண்ணிட்டுப் போகலாம். அவ்வளவுதான். அதுக்கு மேல அதைப் பத்திப் பேச யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு பையன் பூந்தொட்டி மாதிரி மண்டையை செதுக்கி இருக்குறதுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அவ்வளவு சாதாரண விஷயம்தான் இது”
இதற்கு மேல் அந்த முகமூடியை அணிய முடியவில்லை. மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் “உறுத்தல. ஆனா கடைசில பாதிக்கப்ப….” என்று துவங்கவும்,
“ஸ்ஸ்ஸ்ஸப்பா…. டேய்… இந்த முள்ளு, சேலை கதையெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. பாதிப்புக்குள்ளான ஒரு பொண்ணோட பண்பு நலன்கள், உடை, அவள் வெளியே சென்ற நேரம்னு கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாம கூராய்வு செஞ்சிட்டு பாதிப்புக்கு உள்ளாக்குனவன பத்தி ஒரே வரியில முடிச்சுக்குற கேவலமான ஊரு இது. Just because a woman is a prostitute, it doesn’t give a man the license to touch her without her consent”
******************************************
“இன்னும் எல்லாவற்றிலும் சமத்துவம் வரவில்லை அல்லவா? ‘வேலைக்குப் போயே ஆக வேண்டும்’ என்று ஒரு ஆணை நிர்பந்தித்து விட்டு, சில சமயம் அதை ஒரு எதிர்பார்ப்பாகக் கூட பெண்களின் மீது வைப்பதில்லை. வேலை இல்லாத ஒரு ஆணை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற சமூகம்தானே இது?”
“திருமணச் சந்தையை எல்லாம் ஒரு அளவுகோலாக வைத்துப் பேச வேண்டியதில்லை. அதே போல் incelகளின் insecurityயையும் கண்டு கொள்ள வேண்டியதில்லை. ‘என்னை வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்கிறார்கள். எனக்கு இந்த இடம் வேண்டாம்’ என்று ஒரு வரனை (பெண்ணைப் போலவே) ஆணும் வேண்டாம் என்று சொல்லட்டும். யார் தடுக்கிறார்கள்? ஏன், பயமா? Why not embrace celibacy? ஆனால் அதே ஆண்மகன் ஒருவேளை அவனுக்கேற்ற பெண் அமைந்து திருமணம் செய்து இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்கள் எனில் அவளது பேறு காலத்தின் போதும் அதற்கும் பிறகு ஓராண்டிற்கேனும் பொருளாதாரச் சூழல் கருதி அக்குறுகிய காலத்திற்கேனும் அவன் பணிக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். Because woman is at a physical disadvantage here. போதும். எனக்கு மண்டை வலி வந்துரும் போல இருக்கு. You are just asking trivial questions for which the answers are as plain as the nose on our faces”
இவ்வளவு நேரம் அமர்ந்து எனக்குப் பதில் அளித்ததே பெரிய விஷயம் என்பது போல் மாடிக்குச் சென்று விட்டாள். தனக்குள் இயல்பாகவே உருவாகும் சரியான கருத்துகளைப் பிறருக்குப் புரிய வைக்க வேண்டும் என்றெல்லாம் மெனெக்கெட மாட்டாள். “சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். வேணும்னா எடுத்துக்கோ. இல்லையென்றால் ‘வாழ்க வளமுடன்!’” என்பது போல் கிளம்பி விடுவாள். அடப் போங்கடா! நீங்களும் உங்க மொன்னத்தனமான கேள்விகளும் என்றவாறே முகமூடியைக் கழற்றி விசிறி எறிந்தேன். Leave the damn girl alone என்பதே அவளது மொத்த வாதத்தின் சாராம்சமாக இருந்தது.
**********************************
“தாய் நாடு, தாய் மொழி….. எல்லாவற்றையுமே பெண்களை முன்வைத்துதானே கூறுகிறோம்” என்றெல்லாம் கிரீடத்தைத் தூக்கி வைத்ததைப் போல் எங்களின் மீது எவ்விதமான புனிதத்தையும் ஏற்ற வேண்டியதில்லை. பெண்களை மையப்படுத்தி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அநேக வசைச்சொற்களும் பறை அடித்துச் சொல்கின்றனவே, எங்கள் மீதான உங்கள் மரியாதையை. மென் உதாரணமாக, ‘வாயாடி’ என்னும் சொல்லுக்கான ஆண் பதம் ஒன்று ஏன் இல்லவே இல்லை?
நாள்தோறும் செய்திகளில் வரும் வன்கொடுமைகளை ராசிபலன் வாசிப்பதைப் போல் கடந்து செல்ல முடிகையில் யாரோ ஒரு அரைவேக்காடு, திரைப்படங்களின் மூலம் ஒரு பெண்ணின் உடை பற்றியோ ஒழுக்கத்தைப் பற்றியோ நன்னெறி வகுப்பெடுத்தால் பெரும்பான்மை ஆண் வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு ஒரு வெற்றிக் களிப்பையும் கொண்டாட்ட மனநிலையையும் வெளிப்படுத்துகிறதே. இது மனதில் உள்ள அழுக்கும் வன்மமும் அல்லாமல் வேறென்ன?
ஒரு பொறுப்பில்லாத(எழுத்து நாகரிகம் கருதி பொறுக்கி, பொறம்போக்கு என்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டுள்ளன!) ஆணை தெரிந்தே பெண் ஒருவள் உருகி உருகி காதலிப்பதாகப் பல திரைப்படங்கள் பார்த்தாயிற்று. ஆனால் ஆண் ஒருவன் அராத்துப் பெண்ணை அவள் அவளாக இருப்பதற்காகக் காதலிப்பதாகவெல்லாம் காட்டியதேயில்லை. அப்படியே படம் எடுத்தாலும் கூட அவளை அடக்கி நல்வழிப்படுத்திப்(!) பின்னர்தான் மூக்கணாங்கயிரு கட்டுவார்.
‘பெண்ணியம்’ என்ற கருத்துருவாக்கத்தை நேரடியாக எதிர்த்தால் பிற்போக்குத்தனம் வெளிப்பட்டுவிடும். எனவே தனி மனிதக் குறைபாடு உடைவர்களை முன்வைத்து ‘fake feminists’, ‘pseudo feminists’ என்றெல்லாம் ஒப்பாரி வைத்துப் பரப்புரை செய்து ஒட்டுமொத்தமாக பெண்ணியத்தை அடிப்பது உசிதம். அதானே? பெயரளவில் ஒரு உண்மையான பெண் போராளியை வெறும் இரண்டு நிமிடம் உயர்வாகக் காட்டி விட்டால் போதும். அல்லது ‘படையப்பா போன்றவற்றைக் காவியமாக எண்ணிய என் மடமையை உணர்கிறேன்’ போன்ற ஒரு வசனத்தை வைத்துவிட்டால் போதும். மொத்தமாக அவ்வளவு நேரம் உமிழ்ந்த காழ்ப்புணர்வையும் மடத்தனத்தனத்தையும் மறைத்துவிடலாம். WOW!
ஒரு பெண்ணை வலிந்து அதிகப்பிரசங்கியாகச் சித்தரிப்பதன் மூலம் பெண்கள் அனைவரிடத்தும் பொதுவாக இடம், பொருள், ஏவல் என்று இஷ்டத்துக்குப் பினாற்றலாம் என்ற மழுமட்டையான யோசனையை யார் தந்தது? ‘கோவிலுக்கு பிகினி அணிந்து செல்லக் கூடாதல்லவா? அது போலத்தான்” – அசட்டுத்தனமான வாதம் என்றாலும் கூட மிகைப்படுத்தப்பட்ட(exaggerated) ஒரு உதாரணத்தைதான் சிந்திக்க வருமா? பெண்கள் அந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் இருக்கிறார்களா? கோவிலுக்கு எந்த உடையில் செல்லக்கூடாது என்று பாடம் எடுக்கத் தெரிந்த இயக்குநர், அக்கோவிலின் பிரகாரத்திலேயே தமது கலாச்சாரத்தைச் சீர் கெடுக்கும் பல சிலைகள் உள்ளன என்பதை மிக வசதியாய் மறந்து தொலைத்துவிட்டார் போலும்.
நமது சமூக அக்கறையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்த ஏராளமான உருப்படியான தளங்கள் இருக்கின்றன. மொழித் திணிப்பு, நீட் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, பண வீக்கம், பொருளாதாரச் சரிவு, ஓட்டுத் திருட்டு, சைபர் குற்றங்கள்,…. இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஒரு பெண்ணின் வெளியில்(space) போய் கொக்கரிக்கும் இந்த அறநெறி காவலர்களிடம் ஒரே ஒரு கேள்வி – “எங்கள் கருப்பை என்ன சுருக்குப்பையா, உங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முடிந்து வைக்க?”
“Men are afraid that women will laugh at them. Women are afraid that men will kill them” – Margaret Atwood.
இச்சமூகத்தில் அடிப்படை ஒப்புமையிலேயே பெரும் பிழை உள்ளது. ‘உனது ஆதிக்கத்துக்கு அடங்க மாட்டேன்’ என்பது misandry அல்ல. ஆனால் ‘நீ அடங்க மறுக்கிறாய்’ என்று சதா சர்வ காலமும் moral policing செய்வது நிச்சயமாக misogyny.
- சோம. அழகு