கிணற்றுப்பக்கம் போனால்,
துவைக்கப்படாத
அத்தானின்
வேஷ்டியும் சட்டையும்
கல் மேல் அசடாய் தெரிந்தது.
வாழை “தார் “தள்ளியாயிற்று
தோட்டத்தில்.
கமலம் அடிவயிற்றைத்தடவிக்கொண்டாள்.
கணக்குப்படி
ஐந்தாவது தீபாவளி வரப்போகின்றது.
இன்னும்
வெறும் வானமாக இருந்தது கர்ப்பப்பை.
மாமா,மாமி கூட ஜாடமாடையாய்
பேச ஆரம்பித்து விட்டார்கள்.
தொலுவத்தில் முட்டிக்குடிக்கும்
லட்சுமி கன்றை தடவிக்கொடுத்தாள் கமலம் கண்ணீரோடு.
வானம் வெறிச்சோடிக்கிடந்தது.
அம்மா வீட்டு ஞாபகத்திலே
குதிக்கும் சாதப்பானையை மறந்தாள்
கமலம் பயத்தோடு.
ஒரு மணிக்கு வரும்
அத்தானுக்கு இலைப்போட
நுனி இலையைப்பறித்தாள் கமலம்.
போஸ்ட்மேன் லெட்டர் கொடுத்தார்.
அம்மாவின், முத்தான கையெழுத்தில்,
” ஒரு முறை வந்துபோயேன்
நீயும், உன் அகத்துக்காரரும்.
மீனாட்சி டாக்டர் கைராசிக்காரி,
செக்கப் செய்துவிடலாம்.
ரயில்,
பிளாட்பாரத்தை விட்டு புறப்பட்டது.
கும்போணம் ஒரு மணிக்கு வந்தது.
லேசான மேகமூட்டம்.
ரயிலடிக்கே வந்து விட்டார் அப்பா,
தள்ளாத வயதில்,
மாப்பிள்ளையை வரவேற்க.
செக்கப் முடிந்து
வெளியே வந்தார்கள்
பெண்ணும் மாப்பிள்ளையும்.
மாப்பிள்ளைக்கு
கோளாறு என்பதை
கமலம் சொல்லவில்லை
மாமியார் வீட்டில்.
இன்னமும்
திட்டு வாங்கிக்கொண்டு
அடுக்களையில் அடுப்பூதினாள்.
வெந்நீர் அண்டாவில்
வெதுவெதுப்பான நீரில்
குளித்துவிட்டு
வேலைக்கு கிளம்பினான் மாப்பிள்ளை.
இரா. ஜெயானந்தன்