யுவராஜ் சம்பத்
“மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு?”
என்று குழம்பிக் கொள்கிறார்களா?
தொடர்ந்து வாசியுங்கள்…
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு, அமெரிக்கா–சீனா வர்த்தக உறவுகள் கடும் அழுத்தத்தைச் சந்தித்தன. அதன் விளைவாக, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் சோயாபீன் மற்றும் மக்காச்சோளம் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க விவசாயிகள் ட்ரம்ப் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.
அமெரிக்காவில் தற்போது இயற்கை எரிபொருளான பயோடீசல் மோட்டார் வாகனங்களில் சுமார் 10% வரை கலக்கப்படுகிறது. இதை 15% ஆக உயர்த்தினால், அமெரிக்க மக்காச்சோளம் விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் கிடைக்கும் என்ற அடிப்படையில், அவர்கள் அரசாங்கத்தின் மீது E15 கலவை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.
“அமெரிக்க விவசாயிகளை காப்பேன்” என்று வாக்குறுதி அளித்திருந்த ட்ரம்ப் அவர்களுக்கு, இது ஒரு அரசியல் சோதனையாக அமைந்தது. அதனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, E15-ஐ சட்டமாக்க முயற்சி செய்தார்.
ஆனால், இரு அவைகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதிக எத்தனால் கலவை அதிக வெப்பத்தில் சற்றே அதிகமாக ஆவியாகி, புகைமூட்டத்தை உருவாக்கும்; மேலும் வாகனங்களின் இயந்திரப் பாகங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும்.
மேலும், தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் இந்த கலவைக்கு ஏற்றவாறு தங்களின் கட்டமைப்புகளை மாற்ற வேண்டி இருப்பதால், பெரும் முதலீடு தேவைப்படும் என்ற எதிர்ப்பும் எழுந்தது.
மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பது நிலத்தடி நீர் சுரண்டலையும், நீர்வழித் தொற்றுகளையும் அதிகரிக்கும் என்பதும் ஒரு முக்கிய காரணமாக முன்வைக்கப்பட்டது.
இன்றுவரை இது சட்டமாகாத நிலையில், அமெரிக்க விவசாயிகள் ட்ரம்ப் மீது பெரிய பொறுப்பைச் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சரி… இதற்கும் திருப்பூர் ஏற்றுமதிக்கும் என்ன தொடர்பு?
ஆரம்பம் முதலே, இந்தியாவுக்கு மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே ட்ரம்பின் விருப்பம்.
இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கூடுதல் வரிவிதிப்பு விதிக்கப்படும் என்று மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
ஆனால் இந்தியா அதனை நிராகரித்தது.
பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்திய விவசாயிகளை காப்பது என்பதே முதன்மை காரணமாக முன்வைக்கப்பட்டது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) மக்காச்சோளத்திற்கு இந்தியாவில் நிரந்தர தடை உள்ளது.
இந்தத் தடையை உடைக்காமல், இரு அரசுகளுக்கும் அரசியல் லாபம் இல்லை என்பதும் தெளிவாகிறது.
இதற்கான ஒரு சமரசத் தீர்வாக,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தை எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தால், இந்தியா தனது E20 இலக்கை எளிதாக அடைய முடியும்.
மேலும், எத்தனால் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், கால்நடை தீவன உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும்.
அதன் மூலம் இறைச்சி உற்பத்தி செலவுகள் குறையும்.
இந்தச் சங்கிலித் தாக்கத்தின் விளைவாக, இந்தியாவிற்கு விதிக்கப்பட்டதாக பேசப்படும் 50% இறக்குமதி வரி குறையக்கூடும்.
அப்படி குறையும் பட்சத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் 63% வரி சுமை தளர வாய்ப்பு உள்ளது.
அப்போது திருப்பூர் ஒரு நிம்மதி பெருமூச்சு விடும்.
ஆனால்,
திருப்பூரின் குரல்வளையை இறுக்கிக் கொண்டிருக்கும் அந்த மேலிட அதிகாரிகள் யார்?
என்பதே இன்றைய திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் முக்கியக் கேள்வி.
இன்று, ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கையெழுத்திட்டிருப்பதால்,
“இதனால் திருப்பூர் ஏற்றுமதி பாதிக்கப்படாது” என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அந்த ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் இந்தியா பல்வேறு சமரசங்களை செய்திருப்பதால்,
“எங்களுடனும் இதுபோன்ற சமரசங்களை செய்து கொண்டு, உங்கள் வரிகளை குறைத்துக் கொள்ளுங்கள்”
என்று அமெரிக்கா வலியுறுத்தக்கூடும்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் ஸ்காட் பெஸன்ட்,
“இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறது”
என்று வெளியிட்ட அறிவிப்பை,
ஒரு சமாதானக் கொடியை ஏற்றும் முன்னோட்டமாக தான் பார்க்க வேண்டும்.
ஐரோப்பிய யூனியனை விட,
அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தகம் இரண்டு மடங்கு அதிகம் என்பதால்,
இரு அரசுகளும் தங்களின் கடும் நிலைப்பாடுகளில் இருந்து ஒரு படி பின்னோக்கி வந்து,
திருப்பூரை காப்பாற்ற வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் கோரிக்கை.
ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா?
காத்திருப்போம்… நம்பிக்கையுடன்.
— யுவராஜ் சம்பத்
30.01.2026
===================================================