உன் பெயர் மழை
—பா.சத்தியமோகன்
மழையே
எல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டன
உனக்கும் கேட்டிருக்கும் செவியில்
தோசைக்கல்லில் எண்ணெய் பொறியும்
விடவே விடாத
வெகு நீண்ட “உஸ்” போல் உன் அரவம் கேட்கிறது
சவுக்கு கிளை அமரும் காகம்போல் வந்து
உன் சில்லிப்பு வீட்டில் அமர்ந்து விழும்
மரங்களை
வேலாய்க் குத்திக் கொண்ட மண் அறியும்
உன் இதத்தை முழுக்க
மேகம் கரைந்து போன வருத்தமின்றி ஏதுமில்லை
வானமோ பார்த்து கொண்டேயிருக்கும்
பூமி மேல் வைத்த கண் எடுக்காமல்
குளிர்விக்க வரும் நீரின் நடுவே புக
சற்றே தயங்கும் சுடர் ஒளிகள்
தன் கையை பிடித்துக் கொள் என
வற்புறுத்தும் காற்றை
மறுக்கவியலாமல் கோர்க்கும் நீர்ச்சரம்
காற்றில் அலையும்
மிதிபடும் குளிர்ப்பூச்சு மிச்சம் இருக்கும் இரவிலும்
உன் பெயர் மழை.
***