This entry is part 5 of 7 in the series 1 மார்ச் 2026

( இந்த நாவல், பாபுவா நியூ கினியா நாட்டின், சிம்பாரி பழங்குடி இன மக்கள் குறித்துப் பேசும், ஒரு திகில் மர்ம நாவல் ஆகும்.

ஆறு விசயங்களை, இந்தக் குறுநாவலில், நான் பேசி உள்ளேன்.

1.       உலகில் தோன்றிய பெரிய பெரிய மதங்கள், எப்படி எல்லாம், சிறிய மதங்களை அழித்து, தங்களை நிலைநாட்டி இருக்கிறது என்ற வரலாறு.

2.       ஒரு பெண்ணின் முலைப்பால், எவ்வளவு புனிதமானது என்று நமக்குத் தெரியும். ஆனால், இந்த நாவலில் பேசப்படும் சிம்பாரி சமூகம், ஆண் பாலையும் புனிதமாகக் கருதுகிறது. அவர்கள் கருத்தை நிலைநாட்டப் போராடுகிறது என்கிற தகவல்.

3.       இயற்கையையும், மாந்தரீகத்தையும் நம்பிய மக்களின், அனிமிச மத நம்பிக்கை. அது அழிக்கப்பட்ட விதம்.

4.       ஆண் குறியோடும், பெண் குறியோடும் பிறக்கும் (inter sex), மூன்றாம் பாலினமான, இடையலிங்கங்களின், சமூக வாழ்க்கை, அவர்கள் படும் அல்லல்கள்.

5.       மாந்தரீகத்தின், தாந்தரீகத்தின் உண்மைத்தன்மை, அதன் சமூகப் போராட்டம்.

6.       பாபுவா நியூ கினியாவில், ஜப்பானியர்கள் செய்த, இனக் கொடுமைகள்.

ஐயா, இத்துடன், எனது பத்து அத்தியாயங்கள் கொண்ட, நாவலை, இணைத்துள்ளேன். அத்துடன், நாவலுக்குத் தேவையான படங்களை இணைத்துள்ளேன்.

Reference:

https://en.wikipedia.org/wiki/Simbari_people
https://www.nifty.org/nifty/gay/adult-youth/jerungdu/jerungdu-1

https://video.alexanderstreet.com/watch/guardians-of-the-flutes)

ஆண் பால்

அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

Day by day we walk on, Our feet pressing the same earth

நாளுந்தான் நாங்க நடக்கிறோம்

அதே பூமித்தாய் அழுந்த நடக்கிறோம்

பாட்டனும் நடந்தான் பூட்டனும் நடந்தான்

நாங்களுந்தான் நடக்கிறோம்

எங்க பூமித்தாய்க்கிட்டே சொல்லாதீங்க

அவளைத்தானே இன்னும் நேசிக்கிறோம்

கடைசியில அவ மடியிலதான் தூங்கப்போறோம்

ஆனா இப்ப அவமேலதானே நடக்கிறோம்

  • பாபுவா நியூ கினியா நாட்டுப்புறப் பாட்டு

பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம், பாப்புவா நியூ கினியா

நான் வேதனையுடன், அந்தக் காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். என் வேதனையை மறக்க, நான் பாடிக்கொண்டே, அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தேன். எனது வேதனையைப் புரிந்து கொண்டது போலவே, காட்டுச் செடிகள், அந்த இருட்டில், குலுங்கி குலுங்கி அழுவது போல, அசைந்து அசைந்து ஆடின.

குளிர்ந்த மலைக் காற்று, அடர்ந்து வளர்ந்த மூங்கில் மரங்களின் நடுவே புகுந்து புகுந்து, ஒரு வித சோக ஒலியை, விடாது எழுப்பிக் கொண்டு இருந்தன. எனது, கண்ணீர்ப் பாட்டைக் கேட்டுத்தான், அந்த அடர்வனக் காட்டு மூங்கில் மரங்கள், தங்கள் வேதனையை, என்னோடு பகிர்ந்து கொள்வது போலவே, நான் மனதில் நினைத்துக் கொண்டேன்.

“இந்த பூமித்தாய் எங்கள் சொந்தம். இந்த நிலம், நாங்கள் நடந்த நிலம்… நாங்கள் நடக்கிற நிலம். எங்களுக்கென ஒரு குலசாமி. ஆண்டாண்டு காலமாகத் தொடரும் எங்கள் குல வழக்கத்தை, எங்கிருந்தோ வந்த இன்னொரு மதம் அழிக்க நினைப்பதை, எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்” நான், நடந்துகொண்டே புலம்பினேன்.

ஆள் அரவம் இல்லா, அந்த நள்ளிரவில், எனது வயதான உடம்பு, குளிரில் நடுங்க ஆரம்பித்தது. சாயந்திரம் பெய்த மழையின் ஈரத்தில், சொத சொதவென்று இருந்த பாதை, லேசாக வழுக்கியது. இருப்பினும், நான் காட்டு ஏரியை நோக்கி நடந்து கொண்டே இருந்தேன்.

மாந்த்ரீக குரு மசளையான், எங்கள் இனத்து வாலிபன் ஒருவனைக் கொன்று விட்டான். கிறித்துவம், எங்கள் மலைக்குள், உள்ளே வந்த நாளில் இருந்தே, எங்கள் இனத்தில், யாராவது ஒருவரின் உயிர், இப்படி அடிக்கடி போய்க்கொண்டே இருக்கிறது.

எங்கள் மாந்த்ரீக குரு, மசளையான், எங்கள் மதத்தைக் கேவலமாகப் பேசும் எல்லாரையும், இப்படி, காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறான். ஒவ்வொரு உயிராய்ப் பறிபோவதைப் பார்க்கையில், நான் நடுங்கிப்  போகிறேன்.

கூடு விட்டுக் கூடு பாயும் கலை தெரிந்த மசளையானை, அடையாளம் கண்டு கொண்டோர், எங்கள் இனத்தில் ஒரு சிலர்தான். அவர்களில் நானும் ஒருவன்.

ஒரு நாள் குரங்கின் உடம்பில் இருப்பான். ஒரு நாள் புலியின் உடம்பில் இருப்பான். ஒரு நாள் கழுகாக மாறுவான். மசளையானின் மாந்தரீக சக்தி கண்டு, இங்கே பயப்படாதோர் யாருமில்லை.

“அழியட்டும் அந்த கிறித்துவ மதம்”… நான் சபித்துக்கொண்டே,  காட்டேரியை வந்து அடைந்து விட்டேன்.

அந்தப் பரந்த காட்டேரி, அந்த இருளில், எனக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது. மழை தூறிக் கொண்டே இருந்தது. ஏரியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த, பெரிய பெரிய தவளைகள் எழுப்பிய “கர கர” ஒலியைக் கேட்டு, நடுங்கிக்கொண்டே, நான் ஏரிப் பாதையில், தட்டுத் தடுமாறி நடந்தேன்.

தூரத்து மரங்களில், மின்மினிப்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் கூடிப் பறந்ததால், சில தூரத்துக் காட்டு மரங்கள், அந்த இருளில், மின்னிக் கொண்டு இருந்தன.

மின்மினிப் பூச்சிகள், ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து, ஒரே மாதிரி பாணியில், ஒரே மாதிரி நேரத்தில், ஒளியை மினுக்கி மினுக்கி, அங்கும் இங்கும் பறந்த போது, மின்மினிப்பூச்சிகள் அடர்ந்து இருந்த அந்தக் காட்டு மரங்கள், அங்கும் இங்கும், ஒளியில் அசைவது போல அசைந்து காட்டியதை, தூரத்தில் இருந்த பார்த்த எனக்கு, மசளையான், அந்த மரங்களில் இருந்து, ஆடுவது போலத் தோன்றியது.

ஒரு வித நடுக்கத்துடன், நான் இறந்து போன உடலைத் தேடினேன். உடல் கிடைக்கவில்லை. ஆனால், மனித உடல், கடித்துக் குதறப்பட்ட, ரத்த வாடையை மட்டும், அந்த இருட்டில், எனது மூக்கால் முகர்ந்து, உணர்ந்து கொள்ள முடிந்தது. நான், அந்த ரத்தவாடை இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்தேன்.

எனது பாத ஒலி கேட்டவுடன், திடீரென ஒரு பெரிய உருவம், அந்த ரத்த வாடை வருகிற இடத்தை விட்டு, நகர்ந்து போனது. நான் உற்றுப் பார்த்தேன். அது ஒரு பெரிய முதலை.

முதலை என்னையே பார்ப்பது போன்ற உணர்வு. எனக்கு அந்த முதலை யார் என்று புரிந்து போனது. அது.. அது.. மசளையான்தான்…

கூடு விட்டுக் கூடு பாயும் கலை தெரிந்த மசளையான், முதலை வடிவில் வந்து, எனது இனப் பையனைக் கொன்று விட்டான்.

இப்போது முதலை, ஏரிக்குள் சரேலென குதித்து, நீந்தத் தொடங்கியது. நான் அந்த முதலையை, முதலை வடிவில் இருக்கும் அந்த மசளையானை, பின் தொடர்ந்து போக வேண்டும்.

நான், ஏரியோரம் நாங்கள் கட்டி வைத்து இருக்கும் அந்த மரப்படகு நோக்கி ஓடினேன். படகைக் கட்டி இருந்த கயிற்றை அவசரம் அவசரமாக அவிழ்த்தேன். படகை, முதலை நீந்தும் திசையில் செலுத்தினேன்.

முதலை, அந்தப் பரந்த, ஏரியில் போய்க்கொண்டே இருந்தது. முதலைக்குப் பின்னால், படகை நான் செலுத்திக் கொண்டு இருந்தேன். படகுத் துடுப்பை நான் வலிக்கும் போது, அந்த நள்ளிரவில், ஏரித் தண்ணீர் எழுப்பிய “சலக் சலக்” சத்தம், அமைதியாக இருந்த அந்த ஏரியில், ஒரு வித பயங்கரத்தை உண்டு பண்ணிக் கொண்டு இருந்தது.

ஏரியில் ஆங்காங்கே பாறை மேடுகள் இருந்தன. அந்த மேடுகளில், மசலையான் போன்ற, சில குட்டி மாந்த்ரீக உயிர்கள், அந்தக் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, உட்கார்ந்து இருப்பது எனது கண்ணுக்குத் தெரிந்தது. நான் எனது உயிரைப் பிடித்துக் கொண்டு, அவைகளைக் கடந்து போனேன்.

முதலை, கடைசியில், ஏரியை ஒட்டி இருந்த, அந்த குகைக்குள் போக ஆரம்பித்தது. நானும், படகை குகைக்குள் செலுத்தினேன்.

வௌவால்கள் குடியிருப்பதற்கு அடையாளமாய், குகையின், ஒரு வித கந்தக நாற்றம், எனது மூக்கைத் துளைத்தது. கீழே நீர், மேலே குகையின் கூரை என்று இருந்த அந்த குகையின், எல்லை வரை முதலை நீந்திச் சென்றது. நானும் விடாது, முதலையைப் பின் தொடர்ந்தேன்.

குகைக்கு அந்தப்புறம், இன்னொரு வாசல் இருந்தது. நான், அந்த வாசல் வழியே, எனது குடிலுக்குத் திரும்பிவிடலாம்.

திடீரென்று முதலையை, அந்த குகைக்குள் காணோம். நான் பதைபதைப்புடன், அங்கும் இங்கும், எனது கண்களால் உற்று நோக்கித்  தேடினேன். முதலையைக் காணவில்லை.

“நான் இங்கு இருக்கிறேன்.. திரும்பிப் பார்..” என்று திடீரென, ஒரு மனிதக்குரல் எனக்குக் கேட்டது.. நான் அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தேன். அங்கே.. அங்கே… மசளையான் மனித உருவில் நின்று கொண்டு இருந்தான்.

கருத்த ஒரு பெரிய உருவம். காடு போல அடர்ந்த முடி. சவரம் செய்யாத மீசையும், அடர்ந்த தாடியும். கையிலே ஒரு பெரிய கோடரி.

மசளையான் மார்பில், இரண்டு புறமும், பெரிய பெரிய முலைகள். அந்த பருத்த முலைகளைச் சுற்றி, கருமையாய் வளர்ந்த அடர் முடிகள். பார்ப்பதற்கே படு பயங்கரமாய் இருந்தான் மசளையான்.

மசளையான் உரக்கக் குரல் கொடுத்தான். “அடே மகனே.. என்ன நடக்கிறது நமது மலை நிலத்தில்? ஏன் நமது இன மக்கள், மனம் மாறிக்கொண்டே போகிறார்கள்? எத்தனை பேரை நான் இன்னும் கொல்லப் போகிறேன்”.

அவனது உரத்த குரலில், குகையில் இருந்த சில வவ்வால்கள், “கிரீச் கிரீச்” என்று ஒலி எழுப்பி, அங்கும் இங்கும் பறந்த போது, நான் பயத்தில் அலறினேன்.

“ஆம் மசளையான்… நான் என்ன செய்ய முடியும்? நம் இனம் வாழ, என்னால் ஆன முயற்சி செய்கிறேன்… என்னால் ஆன முயற்சி செய்கிறேன்.. மசளையான்”

நான் கதறினேன். கிறித்தவ போதகர்கள், எனது இனத்து மனிதர்களை மனம் மாற்றச் செய்யும், அத்தனை அக்கிரமங்களையும் சொல்லி நான் கதறினேன்.

“முடியாது… முடியாது.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஏதாவது செய்… பதரே.. ஏதாவது செய்” மசளையான் இடியென முழங்கினான்.

“செய்கிறேன் சாமி செய்கிறேன் சாமி..” நான் கதறிக்கொண்டே, அந்த குகையிலேயே, மயங்கி விழுந்தேன்.

மசலையான், என் அருகே வந்து என்னை உலுக்கிக்கொண்டு இருக்கும்போதே, நான் கொஞ்சம் கொஞ்சமாய், குகையிலேயே, நினைவிழந்தேன்.

நான் எனது மயக்கம் தெளிந்து பார்த்த போது, எனது குடிசைக்குள், எனது கட்டிலில், படுத்து இருப்பதை, உணர்ந்து கொண்டேன்.

“மசளையான்தான், என்னை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டு போய் இருக்க வேண்டும்” என நான் ஊகித்துக் கொண்டேன்.

அந்த நள்ளிரவில் நடந்த விசயங்களை, ஒவ்வொன்றாய் நான் அசை    போட்டேன். எனது உடம்பு, ஒரு முறை, நடுக்கத்தில் சிலிர்த்தது.

பாதிரியார் ஜேம்ஸ், ஆங்கிலிக்கன் திருச்சபை, மோர்ஸ் பி, பாபுவா நியூ கினியா

திருச்சபையின் காலைத் திருப்பலியை, நான் நல்லபடியாக முடித்து இருந்தேன். எல்லாம் கர்த்தரின் கருணைதான்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து, வளர்ந்து, சிட்னியில், திருமறை வேதக் கல்லூரியில் படித்து முடித்து, பின்னர், இந்த பாபுவா நியூ கினியாவிற்கு கப்பலில் வந்து, இங்கேயே நான் பாதிரியாராய், கர்த்தருக்குத் தொண்டு செய்துகொண்டு இருக்கிறேன்.

நான் ஆஸ்திரேலியாவில் இருந்து, பாபுவா நியூ கினியா வந்த ஆரம்பத்தில், இந்த சர்ச்சில் பணிபுரியவில்லை. இதற்கு முன்னர், லாமிங்டன் மலையில் இருந்த தேவாலாயத்தில்தான் நான் பணி புரிந்துகொண்டு இருந்தேன்.

அந்த வட்டாரத்திற்கு அருகே நடந்த, ஜப்பானிய ராணுவம் நடத்திய, கிறித்துவக்  கொலைகளுக்குப் பிறகே, நான் இந்த தேவாலயத்திற்கு வந்து பணி புரிகிறேன். என்னோடு கூடவே, இங்கே வந்து வேலை செய்பவன்தான், மணி அடிக்கும் வில்லாளன்.

நான் யோசனையுடன் நடந்து, திருச்சபையின் ஓரத்தில் இருக்கும், எனது அறைக்கு வந்த போது, இன்னொரு வேலையாள், என்னருகே ஓடி வந்தான். “சாமி… தலைமை ஆயர் உங்களை, அவரது அறைக்கு, கூப்பிட்டு வரச்சொன்னாருங்க சாமி..” என்ற போது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“பாதர் ஜேம்ஸ்… நமது இந்த மாபெரும் திருச்சபையின் தலைமை ஆயர், மிக மிக கண்டிப்பானவர். எந்த வித சின்னக்குறையையும் கூட, உடனே கண்டித்துத் திருத்த முயல்பவர். திருச்சபையின் பணிகளில், நாம் ஏதாகிலும் தவறு செய்தால், உடனே, தப்பு செய்த நம்மை, அவரது தனி அறைக்குக் கூப்பிடுவார்.. கண்டிப்பார்” என்று, என்னை, இந்தத் திருச்சபையில், என்னோடு வேலை பார்க்கும் மற்ற ஆயர்கள், ஏற்கனவே எச்சரித்து வைத்து இருந்தார்கள்.

எனவே, வேலையாள், “தலைமை ஆயர், அவரது தனி அறைக்குக் கூப்பிட்டு வரச்சொன்னார்” என்றபோது, நாம் என்ன தவறு செய்தோம் என்ற ஆச்சரிய உணர்வே, எனக்கு முதலில் வந்தது. இருப்பினும், எனது உணர்வுகளை மறைத்துக்கொண்டு, தலைமை ஆயர் அறைக்குச் சென்றேன்.

“உட்காருங்கள் பாதர் ஜேம்ஸ்..” என்றவுடன், நான் அருகில் இருந்த நாற்காலியில், பவ்யமாக உட்கார்ந்தேன்.

தலைமை ஆயர் செருமிக்கொண்டார். “பாதர் ஜேம்ஸ்… உங்களுக்கு அனிமிசம் மதம் பற்றித் தெரியுமா?” என்று என்னிடம் அவர் வினவியபோது, எனக்கு என்ன சொல்வது எனப்புரியவில்லை.

“நான் வேதாகமக் கல்லூரியில் படித்தபோது, கொஞ்சம் கொஞ்சம், அனிமிசம் மதம் பற்றித் தெரிந்து கொண்டு இருக்கிறேன் பாதர்” என்று, நான் தயங்கித் தயங்கிப் பேசினேன்.

தலைமை ஆயர், இப்போது என்னை உற்றுப் பார்த்தார். ஏதோ சொல்ல வந்தவர், அவரையும் அறியாமல் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு என்னிடம் அந்த அடுத்த கேள்வியைக் கேட்டார். “பாதர் ஜேம்ஸ்.. உங்களுக்கு காட்டுமிராண்டிகளின் ஆண்பால் குடிப்பது குறித்து ஏதாவது தெரியுமா?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே, இடிஇடியென நகைத்தார்.

அப்போதும் எனக்கு, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. நான், அப்பாவி முகத்துடன், அவரையே பார்த்தேன்.

“காட்டுமிராண்டிகள்… காட்டுமிராண்டிகள்…”எனச் சினந்து பேசிய, தலைமை ஆயர் முகத்தில், இப்போது சிரிப்பு இல்லை. மாறாக, கடுமை இருந்தது.

மெல்ல நடந்து போய், அவரது அலமாரியில் இருந்து, ஒரு புத்தகத்தை எடுத்துப் போட்டார். பின்னர் அவரே பேசினார்.

“பாதர் ஜேம்ஸ்.. நீங்கள் லாமிங்டன் மலையில் வேலை பார்த்து இருந்தும், அனிமிசம் மதம் குறித்து உங்களுக்கு, அவ்வளவாகத் தெரியவில்லை. எனவே இந்தப் புத்தகம் படித்து, நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.. சரியா?” என்றார்.

“எதற்காக நான் தெரிந்து கொள்ளவேண்டும்?” என்று, வெளிப்படையாக கேள்வி கேட்கும் முன்னரே, தலைமை ஆயரே தொடர்ந்தார்.

“பாதர் ஜேம்ஸ்… சிம்பாரி மலையில் இருந்து, சில சிம்பாரி மாணவ மாணவியர்கள், நமது திருச்சபைக்கு வந்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று என்னை வினவியபோது, நான் பதில் பேசாமலே, “ஆம்” எனத் தலையாட்டினேன்.

“ம்ம்… அவர்கள் வாழும் சிம்பாரி மலையில், இந்த அனிமிச மதத்தின் அட்டகாசம், எல்லை கடந்து போய்க் கொண்டு இருக்கிறது. காட்டுமிராண்டித்தனமான அனிமிசம் மதத்தில் இருந்து, புனிதமான நமது கிறித்துவ மதத்திற்கு மாறும், பலர், மறைமுகமாக கொல்லப்படுகிறார்கள்…” ஆயர் தொடர்ந்தார்.

“அப்படிக் கொலைபாதகம் செய்யும், அந்த மலைவாழ் மாந்த்ரீக சாத்தான்களைக் கொல்ல, விவிலியம் நன்கு தெரிந்த, தேவனின் தொன்டூழியத்தில், சிறந்து விளங்கும், உங்களைப் போன்றோர் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.”

“பாதர் ஜேம்ஸ்.. நீங்கள் ஏற்கனவே லாமிங்க்டன் மலையில், திருச்சபை ஊழியம் செய்த அனுபவம் உள்ளவர்… மலைவாழ் மக்களின் எண்ணங்களை, அதிகம் உணர்ந்தவர்.. எனவேதான், இந்த சிம்பாரி மலை கிறித்துவ ஊழியப் பணிக்கு, உங்களைத் தேர்வு செய்து இருக்கிறேன்.. நீங்கள் அங்கே சென்று, அங்கே நிலவும், மாந்த்ரீக சாத்தான்களை ஒழித்து, நிரந்தரமாக, கிறித்துவத்தை நிலை நாட்ட வேண்டும்” என்று ஆயர் பேசி முடித்தபோது, என்னால், அவரது கட்டளையை, ஏற்காமல் இருக்க முடியவில்லை.

தலைமை ஆயர் அப்படிச் சொன்னபிறகு, நாங்கள் இருவரும், சிம்பாரி மலையில் நடக்கும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்து, நிறையப் பேசினோம். சிம்பாரி கலாச்சாரம் குறித்து, தலைமை ஆயர் சொன்ன. சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. கடைசியில், நான் ஒத்துக்கொண்டேன்.

“அப்படியே செய்கிறேன் சாமி” என்று, ஆயரை வணங்கி விட்டு, எனது அறைக்கு வந்து சேர்ந்தேன்.

அறைக்கு வந்த அடுத்த கணமே, நான் நாற்காலியில் சாய்ந்தேன். இன்று, காலைத் திருப்பலி காரணமாக, நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டதால், இப்போது, எனக்கு களைப்பு அதிகம் வந்தது.

“இருந்தாலும் தலைமை ஆயர் கொடுத்த அந்த புத்தகம், எனது கண்ணை உறுத்தியது. நான், இப்போது படுத்துக்கொண்டே, அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன்.

புத்தகத்தின், பல பக்கங்கள், எனக்கு எந்த வித சுவாரசியமும் தரவில்லை. ஆனால், சில பக்கங்கள், என்னை ஆச்சரியப்படுத்தாமலும் இல்லை. நான், எனக்கு சுவாரசியம் தந்த, அந்த வரிகளை மட்டும், மீண்டும் மீண்டும் படித்தேன். அவை கீழே கண்ட வரிகள்தான். அதிலும் அந்த முக்கியமான ஐந்தாவது அனிமிசக் கோட்பாடு, என்னை, இன்னும் இன்னும் ஆச்சரியப்படுத்தியது.

“அனிமிசம் (Animism) என்பது, விலங்குகள், தாவரங்கள், பாறைகள், ஆறுகள் போன்ற உயிரற்ற பொருட்கள் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் ஒரு தனிப்பட்ட ஆன்மா அல்லது ஆவி உள்ளது என்று நம்பும், ஒரு மத நம்பிக்கை அல்லது உலகக் கண்ணோட்டமாகும்.

இதன் முக்கிய அம்சங்கள்:

  1. உயிரினங்கள் மட்டுமல்லாமல், மலைகள், ஆறுகள், வானம் போன்ற இயற்கை கூறுகளுக்கும் ஆன்மா உண்டு என்று நம்புதல்.
  2. ஆன்மா என்பது பருப்பொருள் அல்லாத ஒன்று; அதன் மூலமே உயிர் இயக்கம் (life) ஏற்படுகிறது.
  3. இந்த ஆன்மாக்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும், அவற்றைப் போற்றலாம் அல்லது அவற்றுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
  4. இது பல பழங்குடி சமூகங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையாக உள்ளது, அங்கு விலங்கு ஆவிகளும், புனித இடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
  5. அனிமிச மாந்தரீகவாதிகளில் பெரும்பான்மையோர், திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ அல்லது இடையலிங்கமாகவோ இருப்பார்கள். ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்காத, இவர்களால், கடவுளிடம், நேரிடையாகப் பேச முடியும்.“

புத்தகத்தின் அந்த வரிகள், எனது சிந்தனைகளை, அதிகம் கிளறி விட்டு இருந்தது.

“இந்த பாபுவா நியூ கினியாதான், எத்தனை எத்தனை மதங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது? ஒரு புறம், கிறித்துவ மதம். இன்னொரு புறம், இந்த பாபுவா நியூ கினியாவை, ஆக்கிரமித்த ஜப்பானியர்கள் சொன்ன, சிண்ட்டா மதம். வேறோர் புறமோ, ஆவிகளையும், திருநங்கை, திருநம்பி, இடையலிங்கம் போன்ற பாலின மாந்தரீகவாதிகளை நம்பும் அனிமிச மதம்.. இப்படி எத்தனை எத்தனை மதங்களை. இந்த பாபுவா நியூ கினியா சந்திக்கும்?” நான் குழம்பினேன்.

ஜப்பானிய ராணுவம், பல கிறித்துவப் பாதிரிமார்களை, இந்த பாப்புவா நியூ கினியாவில், ஏன் கொன்று குவித்தது தெரியுமா? காரணம், ஜப்பானியர்களின், சிண்ட்டா மதத்தின், பல தெய்வக் வழிபாடு.

“நம்மைச் சுற்றி இருக்கும், சூரியன், சந்திரன் என்ற அனைத்து இயற்கைகளும்தான் நமது தெய்வங்கள். கூடவே, நமது மூதாதையர்கள்தான், நமது குல தெய்வங்கள்” என்ற ஜப்பானிய சிண்ட்டா மதத்தின் போதனைகளை, போதிக்கும் நோக்கில்தான், ஜப்பானிய ராணுவம், பல கிறித்துவப் பாதிரிமார்களை, இந்த பாப்புவா நியூ கினியாவில், கொன்று குவித்தது.

அந்தப் படுகொலைகள் அனைத்துக்கும், லாமிங்க்டன் மலையில், கிறித்துவப் பணிகள் செய்த, நானும், இங்கே மணியாட்டும் வில்லாளனுமே சாட்சி.

இப்போது, எனக்கு, என் கண் முன்னாடியே படுகொலை செய்யப்பட்டு செத்துப்போன, பாதர் ஹென்றி நினைவில் வந்து போனார். என் நெஞ்சம், அதை நினைத்து நடுங்கியது.

நான், இப்போது, அனிமிசம் மதத்தை எதிர்க்க, சிம்பாரி மலைக்குச் செல்ல வேண்டும். அங்கே, பாதர் ஹென்றி போல, நானும் கொலையுண்டு போகலாம்… யார் கண்டது?

இருப்பினும், சிம்பாரிக்கு மலைக்கு என்னை போகச் சொல்வது, எல்லாம் வல்ல கர்த்தர்தானே… நிச்சயம் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார்” நான் முணுமுணுத்துக் கொண்டே, சிலுவை இட்டுக்கொண்டேன்.

அப்போதுதான், வில்லாளன், எனது அறைக்குள் நுழைந்தான். வந்தவுடனேயே, என் முன்னால் மண்டியிட்டான்.

“பாதர்…என்னை மன்னியுங்கள் பாதர்… நான் காதலித்த ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து விட்டுத்தான், நான் வாழ்ந்த சிம்பாரி மலையில் இருந்து, லாமிங்க்டன் மலைக்கு வந்து சேர்ந்தேன் பாதர்… இங்கே வந்து வேறொரு பெண்ணைக் கல்யாணமும் செய்துகொண்டேன் பாதர்.. என் பாவங்களை மன்னியுங்கள் பாதர்” என்று, வில்லாளன் கதறினான்.

வில்லாளன் என்னிடம் அப்படிக் கதறியபோது, ஒரு புறம் எனக்கு, அவன் மீது இரக்கம் வந்தது. இன்னொரு புறம், வில்லாளன் சிம்பாரி இனத்தைச் சார்ந்தவன் என்ற அவனது வார்த்தையைக் கேட்டு, எனக்கு மகிழ்ச்சியும் வந்தது.

நான், வில்லாளனைக் கைப்பிடித்து, தூக்கி நிறுத்தினேன். “வில்லாளன்.. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றேன்.

வில்லாளன், எனது வார்த்தைகளில், முழுமையான சமாதானம் அடையாமல், இன்னமும் அழுதுகொண்டே இருந்தான்.

“வில்லாளன்.. கர்த்தர் நம் இருவரையும் அழைக்கிறார்.. நாம் இருவரும் சிம்பாரி மலைக்கு, அடுத்த வாரம் போகப் போகிறோம்..” என்று நான் சொன்னபோது, வில்லாளன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

“சிம்பாரி மலையில், நீ கைவிட்டு விட்டு வந்த உனது காதலியை, நிச்சயம் தேடிக் கண்டு பிடிப்போம். அவள் இன்னும், இன்னொருவனைத் திருமணம் செய்யாமல் இருந்தால், அவளை, ஒரு நல்ல பையனுக்குத் திருமணம் செய்ய, நானே ஏற்பாடு செய்கிறேன்.. போதுமா?” என்றவுடன்தான், வில்லாளன் அழுகையை நிறுத்தினான்.

“நான் இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்” என்றவுடன், வில்லாளன், என்னிடம் இருந்து விடை பெற்றுப் போனான்.

நான், களைப்பில், தூங்கிப் போனேன். அந்தப் பகல் தூக்கம், எனது பலத்த சிந்தனைகளைப் போக்கும், ஒரு வடிகாலாக இருந்தது.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationகே.பாரதி எழுதிய ‘ரங்கநாயகி’ நாவல்  கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்