This entry is part 9 of 9 in the series 8 மார்ச் 2026

ரவி நடராஜன்

இந்தியத் தொலைக்காட்சி செய்தியாளர், பால்கி ஷர்மாவின் மேற்காசிய நிலை பற்றிய இரு சமீபத்திய விடியோக்கள், என்னை அங்குள்ள சாதரணர்களின் நிலை பற்றி அசை போட வைத்தது. பால்கியின் விடியோக்களின் சாராம்சம் இதுதான்:

  1. கடந்த 48 மணி நேர மேற்சாசிய போரைப் பற்றிய 10 முக்கிய கேள்விகள் இவை. பத்து முக்கிய கேள்விகளுக்கு, அழகாக பதிலளித்தார்
  2. அதே போல இன்னொரு விடியோவில், கடந்த 48 மணி நேரங்களை விளக்கும் 10 முக்கிய விடியோக்கள் என்று அழகாக ஒவ்வொரு விடியோவையும், சிறு குறிப்புடன் விளக்கினார்

அத்தோடு நிற்காமல், விடியோக்கள் மற்றும் செய்திகளில் எது உண்மை, எது ஜோடிக்கப்பட்டது என்று தெரிவதில் உள்ள பிரச்சினைகளையும் விளக்கினார்.

Figure 1 Jebel Ali under fire

இந்தக் கட்டுரை மேற்காசிய இரான் போர் பற்றிய அரசியல் கட்டுரை அல்ல. போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றியதும் அல்ல. இந்தப் போரில் வளைகுடா பகுதியில் மாட்டிக் கொண்டுள்ள சாதாரணர்களைப் பற்றியது. இதை எழுதக் காரணம், 36 வருடங்கள் முன்பு இது போன்ற போர் சூழலில் வளைகுடா பகுதியில் நானும் மாட்டிக் கொண்டு தவித்த அனுபவம்.

1990 ஜூலை மாதம் கொளுத்தும் வெய்யிலில், வேலைக்காக துபாய் சென்றடைந்தேன். அந்த காலத்தில் செல்பேசிகள் கிடையாது. இந்தியாவில் தொலைப்பேசிகளே அரிது. முதல் மாதம், புதிய வேலையில் மூழ்கிப் போய் வழக்கமான அலுவலக பணிகளிலும், கற்றலிலிலும் கழிந்த்து. அதற்கு முன் இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது, வங்கிக் கணக்கை காலி செய்து குடும்பச் செலவிற்காக கொஞ்சம் பணத்தை பெற்றோரிடம்/ மனைவியிடம் கொடுத்து வைத்திருந்தேன். என் கணிப்புபடி, அந்தப் பணம் ஒரு 4 அல்லது 5 மாதம் தாக்கு பிடிக்கும். இந்தியாவில் என் குடும்பம் வசிக்கும் ஊரில், பக்கத்து வீதியில் ஒரு வீட்டில் டெலிஃபோன் இருந்தது. கிளம்புவதற்கு முன்னர், அந்த வீட்டுக்காரருடன் தொடர்பு கொண்டு, அவரது எண்ணை பதிவு செய்து கொண்டு, துபாயிலிருந்து மாதம் ஒரு முறை அழைத்தால், அடுத்த வீதிக்குச் சென்று, குடும்பத்தாரிடம் சொல்ல ஏற்பாடு செய்து விட்டேன். முதல் முறை அழைத்து, கூப்பிடும்படி சொல்ல வேண்டும். 10 நிமிடம் கழித்து, மீண்டும் அழைத்துப் பேச வேண்டும். இத்தனை விவரமாக இவற்றைச் சொல்லக் காரணம், தொலைத் தொடர்பு என்பது அவ்வளவு பிந்தங்கியிருந்த காலம் அது.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி, குவைத் மீது இராக் படை எடுத்து, அந்தக் குட்டி வளைகுடா நாட்டை ஆக்கிரமித்தது. வளைகுடா பகுதி எங்கும் பீதி அதிகமானது. குவைத் போர், வளைகுடா பகுதி எங்கும் பரவ வாய்ப்புண்டு என்ற வதந்திகள் பரவத் தொடங்கின. வளைகுடா பகுதியிலிருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்படியோ இந்தியாவில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டவுடன், விமானச் சேவை மீண்டும் இயங்க ஆரம்பித்ததும், திரும்பி வருமாறு சொன்னார்கள். பழைய வேலையை திரும்பிச் செய்யலாம். போர்களத்தில் ஏன் வலுக்கட்டாயமாகச் சென்று மாட்டிக் கொள்ள வேண்டும்?

இத்தனைக்கும், அன்று உள்ள சூழலை, இன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மிகப் பெரிய வித்தியாசம் தெரியும்:

  1. துபாயில், அபுதாபியில் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை
  2. இந்தியாவில் தூர்தர்ஷனை விட்டால் எந்த செய்தி சேனலும் இல்லை
  3. வளைகுடா பகுதியில், CNN மூலம், உள்ளூர் டிவியில், அமெரிக்க சக்தி பற்றிப் படம் காட்டினார்கள்
  4. ஒரு முக்கிய குறிக்கோளுடன் அமெரிக்கா (குவைத்தின் விடுதலை) களத்தில் இறங்கியது. தோழமை நாடுகளும் உதவின
  5. விமானப் போக்குவரத்து, ஒரு வாரத்தில் இயங்கத் தொடங்கியவுடன், இந்தியா/ எகிப்திலிருந்து காய்கறி, பழங்கள் வரத் தொடங்கின
  6. பதட்டம் இருந்தாலும், அன்றாட வாழ்க்கை திரும்பியது

இன்றைய நிலை முற்றிலும் வேறுபட்டது. ஆனால், இரண்டிலும் மாறாத விஷயம், சாதாரணர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி. இன்று எல்லோரிடமும் திறன்பேசி உள்ளது. பெரும்பாலும், பலரிடமும் கணினியும் உள்ளது. 1990 –களில், என் போன்றோருக்கு இருந்த ஆறுதல் இதுதான்: துபாயில் வெள்ளியன்று, மார்கெட் சென்றால், எங்கும் பாகிஸ்தானியர் மற்றும் ஆஃப்கானியர், கூட்டம் கூட்டமாகக் காணலாம். அங்கு எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு, தன் கிராமத்திற்குச் செல்லும் நண்பரிடன், ஒரு காசெட் டேப்பில் தன்னுடைய நிலையைப் பற்றி பேசி, பதிவு செய்து அனுப்பும் விஷயம். அந்த கேசட் சென்றடையும் ஊரில் இணையம் இல்லை, செல்பேசி இல்லை. எங்கோ உள்ள, மின்கலனில் இயங்கும்,  ஒரு டேப் எந்திரத்தில் குடும்பத்தினர் துபாயில் வாழும் உறவினருடைய நிலையைப் பற்றி அறியும் வாய்ப்பு ஒன்றுதான், இரு நாடுகளுக்கான இணைப்பு. இவர்களைக் காட்டிலும், இந்தியாவில், பக்கத்து வீதியில் இருக்கும் தொலைபேசி மேல் என்ற ஆறுதல்!

ஆனால், இத்தனை தொலைத் தொடர்பு வளர்ந்துவிட்ட நிலையில், பால்கி சொல்லும் ஜோடிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு விடியோக்கள் குடும்பங்களை எப்படி பாதிக்கும் என்று யாரும் நினைப்பதில்லை. ஓமானைத் தவிர எல்லா வளைகுடா நாடுகளிலும் குண்டுவெடிப்பு, எண்ணெய் கிணறுகள் மற்றும் கப்பல்கள் எரியும் பீதியைக் கிளப்பும் காட்சிகள். அத்துடன், விமான நிலையங்கள், விடுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல், நடுவில் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பல்லாயிரக் கணக்கான சாதாரணர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் விஷயம்.

Figure 2 Airspace closed over the Arabian Gulf

இப்பகுதியின் விமான நிலையங்கள், உலகின் எல்லா பகுதிகளையும் இணைக்கும் மையங்கள். ஆசியாவிலிருந்து யுரோப், வளைகுடா பகுதி, ஆப்பிரிக்க, மற்றும் வட அமெரிக்கா என்று எங்கும் பயணிக்க வசதியான விமான நிலையங்கள் இன்று மூடிக் கிடக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில், இதனால் பலரும் மாட்டிக் கொண்டு விமானப் பயண ரத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பகுதிக்கு உணவு சென்றடைய மிகப் பெரிய தடையும் இதுவே. நீர் வழிப் பாதை (Strait of Hormuz)  மூடப்பட்டிருக்கும் நிலையில், உணவு வளைகுடா பகுதிகளுக்கு செல்லக் கூடிய ஒரே வழி ஓமான் வழியாக மட்டுமே. இதுவரை அங்குள்ள நீர் உப்பு அகற்றும் மையங்கள் (desalination plant) தாக்கப்படவில்லை. இவை, மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்யும் அமைப்புகள். இது நேராமல் அந்நாடுகள் பார்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் விலை ஏறி, இறங்கினால் வரும் பாதிப்பை விட, குடிநீர் என்பது மிகப் பெரிய பிர்ச்சினை.

வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு வாழும் பல கோடி தெற்காசிய மற்றும் அரபு தேசக்காரர்கள் இந்த போரின் நடுவில் சிக்கித் தவிப்பது நினைக்கவே வேதனையளிக்கிறது. என் மனதில் 36 ஆண்டுகள் கழித்து இன்னும் நினைவில் பதிந்து போன போரில் பெரிதாக நான் பார்த்தது, தினமும் அமெரிக்க படைகளுக்காக மதியம் பறந்து செல்லும் எரிபொருள் விமானம். நான் வாழ்ந்த பகுதியில் ஏவுகணை தாக்குதல் இல்லை.

இன்னும் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு அனுமதியில்லை. எப்பொழுது அமைதிநிலை திரும்பும் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்தப் போரில் மற்ற அரபு நாடுகள் இழுக்கப்படுமா என்றும் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் போரில் சிக்கித் தவிக்கும் சாதாரணர்கள் எந்தப் பக்கமும் சார்ந்தவர்கள் அல்ல.

கூடிய விரைவில் வழக்க நிலை மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கை ஒன்றே முக்கியம். எது செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத வாழ்வாதாரத்தை தேடி, இந்தப் பகுதியில் வாழும் மக்களைக் காக்க வேண்டியது, போரில் ஈடுபட்டிருக்கும், மற்றும் அப்பகுதி அரசாங்கங்களின் பொறுப்பு.

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை