வளவ. துரையன்
”கவிதைக்கு மிக அருகில் இருக்கும் வடிவம் சிறுகதை. ஆக அதுவும் கவிதை போலவே ஞானத்தைப் பேசும் வடிவம்” என்று நாஞ்சில் நாடன் கூறுவார். பெரும்பாலான படைப்பாளிகள் முதலில் எழுதுவது கவிதைகள்தாம். அவற்றில் தேர்ந்தபின்னரே அவர்கள் கதை எழுதத் தொடங்குகிறார்கள். எந்தப் படைப்பாயினும் வாழ்வின் விழுமியத்தைத்தான் பேச வேண்டும். அதே நேரத்தில் அப்படைப்பு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கண்டிப்புடன் நீதியைப் போதிக்கும் ஆசிரியராக இருக்கக்கூடாது.
இந்தச் சட்டகத்தில் அடங்குவதாக இதில் உள்ள கதைகள் உள்ளன. சசிகலா விஸ்வனாதனை நான் முதலில் அறிந்தது கவிஞராகத்தான். பின்னர்தான் அவர் கதாசிரியராகவும் இருக்கிறார் என்று அறிந்து மகிழ்ந்தேன். இத்தொகுப்பில் எந்தக் கதையுமே “நீ இப்படி இரு; எனக் கட்டளை இடுவதில்லை”. ஆசிரியர் தான் கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்ச்சிகளைக் கதைகளாக்கித் தந்திருக்கிறார், அதிலிருந்து வாசிப்போர் தமக்கான அனுபவத்தையும் கண்டு உணர்ந்து தமக்குள் ஒரு முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி என்பதை நன்கு ஆலோசித்து அறிய வேண்டும்.
அலுவலகத்தில் நடப்பவை, ஆட்டிசம் உள்ள குழந்தை, சிறுவயதிலேயே எடுத்தெறிந்து பேசிப் பின்னால் துன்புறுவது, மனைவி பேரில் அனாவசியச் சந்தேகம், மாமியாரின் வீண் சச்சரவு, நல்ல மாமியார்கள், வைதவ்யக் கொடுமைகள், எல்லார்க்கும் உதவி செய்துக் கேலிக்கு ஆளாதல், ஞாபக மறதி நோய், மத நல்லிணக்கம், சிறு வயதிலேயே வரும் கெட்ட பழக்கங்கள்—இப்படி நாம் நாள்தோறும் நன்கறிந்தவையே கதைகளின் மையப்பொருள்களாகி இருக்கின்றன.
அறுபது வயதான பின்னர் அதுவும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு மனத்துள் ஒரு சோர்வு வந்து விடுகிறது. அது உடலுக்கும் களைப்பைக் கொண்டுவந்து சேர்த்து விடுகிறது. இதுவரை உழைத்ததெல்லாம் போதும் என்னும் முடிவுக்கு மனத்தைக் கொண்டு போய் அது தானாகவே சேர்த்து விடுகிறது. மகள் மற்றும் மாப்பிள்ளை, மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகள் எல்லாரும் வருவது குறித்து கௌசல்யாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் அவர்கள் வந்தபின் அவரால் உட்காரவோ அல்லது வந்தவர்களிடம் சிறிது நேரம் பேசவோ முடியவில்லை. வீட்டில் எந்த நேரமும் வேலை, வேலைகள்தாம். குழந்தைகள் சைக்கிள் விட்டுக்கொண்டும் விளையாடிக்கொண்டும் பொழுது போக்குகிறார்கள். ஆண்களுக்கு எப்படியோ அரசியல், திரைப்படம், விளையாட்டு பற்றிப் பேசிப் பொழுது போய்விடுகிறது. இல்லையேல் வெளியே போய் விடுகிறார்கள்.
மகளும் மருமகளும் இங்கே வந்தால்தான் தங்களுக்கு ஓய்வு என்று எப்பொழுதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டு பேருக்குச் சமைத்துக் கொண்டும் மற்ற வேலைகள் செய்து கொன்டும் இருந்த கௌசல்யாவிற்குத்தான் மிகவும் களைப்பாக இருக்கிறது. தன் கணவனுக்கும் தன் சிரமம் புரியவில்லையே என்று அவர் நினைக்கிறார்.
சொர்க்கம் என்று தான் நினைத்தது நரகமாகும் அபாயம் கௌசல்யாவுக்குப் புரிகிறது. நல்ல செயலாய் கௌசல்யாவின் கணவர் அடுத்தப் பதினைந்து நாள்களுக்கு வீட்டில் சமைக்க ஆள் ஏற்பாடு செய்கிறார்.
வெளியில் சொல்வதில்லையே தவிர இக்கதை வயதான ஒவ்வொருவரின் அனுபவம்தான். சுகமான சுமைதான் எனினும் எத்தனை சுமைகள் இம்மனம் தாங்கும்? உடல்தான் எப்பொழுது ஓய்வெடுக்கும்? வாசகர் சிந்தித்துத் தனக்குள் பூ ஒன்று மலர்வது போல மெதுவாக ஒரு முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். ”குழந்தைகள் வருகை” என்பது மனத்தால் உணரவேண்டிய அற்புதமான கதை.
”மங்கலம்” என்று ஒரு கதை. பூவாத்தாள் தன் பெயருக்கேற்ப பூ வியாபாரம் செய்பவர். கடைத்தெருவில் அவருக்குத்தான் எல்லாக்கடைகளிலும் முதல் வணிகம். அவரிடம் முதல் போணியென்றால் வணிகம் நன்றாக நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. கதையில் இறுதியில் ஒரு திடீர்த் திருப்பம். கணவன் படத்திற்கு ஒரு பிச்சிப் பூ மாலை இட்டு, தானும் ஒரு கீற்றுப் போல் விபூதியையும் இட்டுக்கொண்டு, “மன்னிச்சுடு மச்சான், இந்த வேஷம் போடலைன்னா என் பிழைப்பு ஆகாது” என்று முனகியவள் “பூ! பூ! பூவாத்தா விற்கும் பூவோய்! பூ வாங்கலையோ பூ என்று கூவிக் கொண்டே வியாபாரத்தைத் தொடங்குகிறாள்.
பூவாத்தா ஒரு விதவை என்பதும் விதவை விற்கும் பூவைக் கூட சிலர் வாங்காமல் இருக்கிறார்கள் என்பதையும் ”மங்கலம்” கதை முகத்தில் அடித்தது போல் சொல்கிறது.
இவை போல எல்லாக் கதைகளுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம். இவை வாழ்வின் வெளிச்சங்கள்தாம். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் படும் பட்டறிவுகள்தாம். ஆக யதார்த்தமான தொகுப்பு.
.
- சிரிப்பு
- எத்தனை நாளைக்கு?
- வாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் – [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- கைக்குள்…
- மழை புராணம் – 22
- நூறு குடம்
- தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை
- நடுவில் சிக்கிய சாதாரண வாழ்க்கை