இரா.ஜெயானந்தன்
சசிக்கு அன்றாட வாழ்வின் மீது நீண்ட கவலை படர்ந்தது. பத்து நாட்களுக்கு முன், டிவியின் முன் அமர்ந்துக்கொண்டு, பக்கோடா சுவையில் போரின் செய்திகளும், காட்சிகளும் பொழுதுபோக்கு செய்தியாக தெரிந்தது.
இன்றைக்கு அவளது வாழ்வை மாற்றி அமைக்கப்போகும் போர் அரக்கன் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகின்றான்.
கேஸ் சிலிண்டர் சப்ளையில் முப்பது நாள்கள் காத்துக்கிடக்க வேண்டும் என்ற செய்தி அவளது தலையில் யாரோ அமெரிக்க குண்டை போட்டது போல் ஆனது. அவளது வீட்டின் மண்ணெண்ணெய் கிணறும் வற்றிப்போய் நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. கேஸ் ஏஜென்சி சென்டருக்கு வெளியே முன்பதிவுக்கு நீண்ட க்யூவில் காத்திருந்தனர்.
பழைய பஞ்சாங்க விறகு அடுப்பிற்கும் போகமுடியாது. நவநாகரீக அடுக்குமாடி வீட்டின் வாழ்வில், விறகு கட்டைகள் மறைந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன.நகரவாழ்வின் நெருக்கடிகள் கோரமாக தாண்டவமாட காத்திருந்தது.
புன்னைநல்லூர் பாட்டி சொன்ன வாழ்க்கையும், நகரத்தில் வாழமுடியாது. விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, அரிசிமாவு களி, மாட்டுவண்டி, சைக்கிள் ரிக்ஷா இவையெல்லாம் அடுக்குமாடி நகரவாழ்வில் புதையுண்ட செய்தி.
எலக்டிரிக் ஸ்டவ் வாங்க அண்ணா நகரின் அனைத்துக்கடைகளிலும் அலைந்தாள் திரிந்தாள். எங்கும் ஸ்டாக் இல்லை. தூபாயின் எண்ணெய்க் கிடங்குகள் , ஈரான் டிரோன்களால்தாக்கப்பட்டவுடன் ,வர்த்தக கப்பல்களின் எண்ணிக்கை குறைந்தது. யாரோ இரண்டு நாடுகள் போடும் சண்டையில், உலக நாடுகள் அனைத்தும் கதிகலங்கி போனது. சாதாரண மனதர்களின் வாழ்க்கையில் ஆயிரம் கத்திகள் தலைக்கு மேல் தொங்குகின்றன.
ஒவ்வொரு நாளும் பிரச்சனை வெவ்வேறு முகாரி முகமூடி ராகங்களில் பாடின.
சரவணன் காரை எடுத்துக்கொண்டு, தி.நகரில் அலைைந்தான். ரங்கநாதன் தெருவில் எலக்டிரிக் ஸ்டவ் வாங்க கூட்டம் அலைமோதியது . பர்சை பிடித்துக்கொண்டே அழையவேண்டிய சூழல். யார் முகத்தில் எந்த முகமூடி தெரியவில்லை.
இதைவிட கொடுமை, சரவணன் காரின் பெட்ரோல் அளவு குறைந்துக்கொண்டே வந்தது. அங்குமிங்கும் திரிந்தும் ஸ்டவ் வாங்க முடியவில்லை. காருக்கு பெட்ரோல் போட போனான் சரவணன். அதற்குள் நூறுமுறை போன் செய்தாள் சசி. அவளுக்குத்தான் திக்திக்கென மனசு அடித்துக்கொண்டது. அடுத்த வாரம் எப்படி கேஸ் இல்லாமல் சமைப்பது என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் வந்தது சசிக்கு. குழந்தைகளை எப்படி சமாளிப்பது என யோசித்துக்கொண்டிருந்தாள். அரைமணிக்கு ஒருமுறை செய்திகள் பார்த்துக்கொண்டாள். ஆனால் போரின் உக்ரம் கூடிக்கொண்டே போன செய்திதான், ஆசிய நாடுகளுக்கு நிம்மதியை கெடுத்தது.
நடுக்கடலில் எண்ணெய் கப்பல்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வாசித்துக்கொண்டிருந்தனர். நாளைக்கு பிள்ளைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்ல வேன் வருமா என்ற கவலை சசிக்குள் படர்ந்தது.
பெட்ரோல் பங்கில் மூன்று மைலுக்கு கார்களும், ஆட்டோக்களும் வரிசைக்கட்டி நின்றது. நுங்கம்பாக்கம் பங்கிற்கு வந்தான் சரவணன். அங்கும் வரிசைதான்.
நாளை ஆட்டோ ஸ்ட்ரைக் என அறிவிப்பு வந்தது. பாதி சென்னைவாசிகள் ஆட்டோவை நம்பி வாழ்பவர்கள். கோயம்பேட்டிற்கு வரும் காய்கறி லாரிகளும் குறைந்தன. அலமேலுவின் பூக்கார வியாபாரத்தில் அடிவிழுந்தது. பழக்கடை பாண்டி வரப்போகும் மகளின் கல்யாணத்தை நினைத்து அழுதார். ஆந்திரா, கர்நாடக காய்கறிகள் வரவில்லை. நிறைய காய்கறி மண்டிகளுக்கு விடுமுறை விட்டனர். மீட்டர் வட்டி வடிவேலு மீசையை முறுக்கிக்கொண்டே புல்லட்டில் கோயம்பேட்டை வலம்வந்தார். கழுத்தில் தொங்கிய பத்துசவரன் தங்க சங்கிலியை தடவிப்பார்த்துக்கொண்டார்.
பீகார், ஒரிசா தொளிலார்கள், ரேஷன்கடை கோதுமைகளை மலிவான விலையில் வாங்கி மாவு அரைத்து பெரிய பெரிய டப்பாக்களில் அடுக்கிக்கொண்டனர்.
அவர்களுக்கு சுக்கா ரொட்டியும் ,வெங்காயம் பச்சைமிளகாய் இருந்தல் போதும். அவர்களுடைய வாழ்க்கை எளிமை இந்த தத்தளிப்பான நிலையிலும் நிம்மதியாக சென்றது.
வேண்டாத நாகரீக உபகரணங்களால், நடுத்தர மக்களின் வாழ்க்கைதான் நிலைதடுமாறியது.
காசிமேட்டில் மீன் படகுகளுக்கு டீசல் பற்றாக்குறை. மீன் வியாபாரமும் படுத்தது. காசிமேடு மீனவ மக்கள், மீன்வளத்துரை மந்திரியை பார்க்க சென்றனர்.
ரோட்டோர டீக்கடைகள் ஊசலாடிக்கொண்டிருந்தது. ராமசந்திரன் டீ கடைக்கு விறகுகள் வந்திறங்கின. எங்கோ மூலையில் கிடந்த விறகு அடுப்புகள் வீதிக்கு வந்தன. தினசரிகளில் பொதுஜனம் மொய்த்துக்கொண்டிருந்தது. மாலையில் சுடச்சுட போடம்படும் பஜ்ஜி, போண்டா நிறுத்தப்படுகின்றன என்ற அறிவிப்பை சாக்பீசில் மாதவன் நாயர் எழுதி அய்யப்பன் டீ ஸ்டால் வெளியே வைத்தார்.
உலகமே மறந்து போன சீனுவும், கோபியும் டாஸ்மாக் கடைக்கு பக்கத்து சந்தில் மெய்மறந்து கிடந்தனர். மிச்சமுள்ள சில்லறைகளை அவர்களுடன் வந்த தனசேகரன் ஊறுகாய் வாங்க எடுத்து சென்றான். டாஸ்மாக்கடையில் எப்பவும்
போல் கூட்டம் நின்றது. அடுத்த வாரம் சரக்கு வருமா என்ற கவலையில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த அடுக்குமாடி கட்டடத்தின் பத்தாவது அடுக்கில், ஜெனோ என்ற பெண்ணை சீத்தாராமன் காஷ்மீரில் வேலை செய்யும் போது, காதல் லீலையில் மயங்கி, இளம் தம்பதிகளாக
வந்தனர்.
இருவருமே ஐ.டி.ஜோடிகள். தனி உலகம்.
தனி குடித்தனம். அடுக்குமாடி கட்டடத்தில் பக்கத்து வீட்டில் மூச்சுவிடுபவர்களை பற்றியெல்லாம் கவலையில்லை. அவனவன் தொல்லை அவனவனுக்கு.
ஜெனோவுக்கு பெருங்கவலை, அமெரிக்க – ஈரான் போர்.
எல்லோருமே வியந்தார்கள் அந்த பெண்ணை நினைத்து. அவளது குறுஞ்செய்தி அந்த பிளாட் மக்கள் வாட்ஷப் பக்கத்தில் வெளியிட்டாள்.
அந்த செய்தி எல்லோரையும் நிலைக்குழைய வைத்தது.
ஜெனோவிற்கு ஒரே கவலை, ஸ்வகியும், டோமட்டோவும் இனி உணவு ஆர்டர் எடுக்காது. சப்ளை லைன் மூடப்பட்டது என்ற அறிவிப்பு அவளை மிகவும் சங்கடப்படுத்தியது.
காலை டீ யிலிருந்து, மதியம், மாலை, இரவு உணவு வரை ஆர்டர் செய்து வாழும் பிராணி அவள். அவளின் கதி இனி அதோ கதிதான் என வருந்தினாள்.
உலகமே அறுந்து விழுந்தாலும், சில ஜனமங்களுக்கு உலகமே ஒரு சின்ன சுயநல வட்டம்தான்.
டிரம்புக்கு இதைப்பற்றி கவலையில்லை.
அவருக்கு அவரது பிடிவாதம் ஒரு சுயநல வட்டம். ஈரான் மல்லுக்கு நிற்கின்றது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என சண்டை
பல்லவிப்பாடி போர் ஆட்டத்தை ஆடுகின்றது. ஐக்கிய அரபு நாடுகள் பெட்ரோல் விலை உயர்த்தியது.
அங்கு உயர்த்தியவுடன் மற்ற நாடுகளில் விலைவாசி ஏறியது.
இதற்கிடையே அந்த அரசியல் நடிகர் ,
தனி விமானத்தில் சிபிஐ., விசாரணைக்காக டில்லிக்கு பறந்தார் என்ற செய்தி, அல்லல்படும் நடுத்தர மக்களுக்கு எரிச்சலை தந்தது. ஆளும் கட்சியும்,
எதிர்க்கட்சியும் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு இலவசங்களை தரப்போவதாக செய்திகளை அள்ளி வீசியது.
அரசியல் மாநாட்டிற்கு சென்ற பல அப்பாவி உயிர்கள் பறிபோயின என்ற செய்தி சசிக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவளது தம்பி ஒரு புதுக்கட்சி கூட்டத்திற்கு கொட்டிபிடித்து அலைவதை நினைத்து சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தாள். ரசிகர் கூட்டத்தை ஏற்றிச்சென்ற பஸ் பல்லத்தில் விழுந்து கவிழ்ந்ததில், மூன்று இளசுகள் இறந்த செய்தி, எல்லா தாய்மார்கள் வயிற்றிலும் தீப்பொறியாக பறந்தன.
இதற்கிடையே மத்திய அரசு, ரஷ்யாவிடம் பேசி, பெட்ரோல் வாங்க ஒப்பந்தம் போட்டது.
வாழ்க்கையே எண்ணெய் வட்டத்தை சுற்றிதான் சுற்றுகின்றது.
இந்த வட்டங்களுக்கு வெளியே,மற்ற நாடுகள் இயங்கிக்கொண்டு இருப்பதை இந்த போரிடும் நாடுகள் உணர்ந்தால் நல்லது.
சசியும்,சரவணனும் இரவுதான் வீடு வந்து சேர்ந்தனர்.
பிள்ளைகள் இரண்டும் ஒவ்வொரு
மூலையில் தூங்கிவழிந்தனர். ஆயாம்மா சாவியை கொடுத்துவிட்டு
சென்றார்.