This entry is part 2 of 5 in the series 6 ஜூன் 2026

உழைத்துச்

செத்த மாட்டின் 

தோலையும் உரித்து

விற்றுவிடுவான் மனிதன்

***

உலர்ந்து 

உதிர்ந்த இலை

ஆற்றோடு நகர்ந்து

ஒரு கட்டெறும்பைக்

கரைசேர்க்கிறது

***

எந்தச் செயற்கை

நுண்ணறிவுக்கும் எட்டாது

ஒரு சிலந்தியின்

தொழில்நுட்பம்

***

எல்லாப் பறவைகளும்

எங்கு பறந்தாலும்

இரவில் அடைவது

சொந்தக் கிளையில்தான்

***

ஒரு சேதியைச்

சொல்லத்தான்

புயலாக வருகிறது

தென்றல்

***

விதையை ஊன்றவும்

களையைப் பிடுங்கவும்

தெரிந்தவனே

உண்மை விவசாயி

***

புழுவை வெறுக்காதீர்

அது நாளைய 

வண்ணத்துப் பூச்சி

***

பறக்கத் தெரியும்வரை

பசியாற்றினேன் என்று

எந்தக் காகமும் தன் 

குஞ்சுக்குச் சொல்லாது

***

பொன்னின் வலிமைக்கு

கொஞ்சம் செம்பு தேவை

***

சத்தான பூட்டுகளை

தப்பான சாவிகளால்

திறக்கவே முடியாது

***

எதற்கும் உண்டு

மாற்று ஏற்பாடு

மரணம் தவிர

***

அறுபடுவோம் 

அடுத்தென்று

அறிந்திருந்தும் ஆடு

அனுபவித்து உண்கிறது

மாவிலையை

***

உயிரை வருடும்

இனிப்புகள் ஒருநாள்

உயிரைப் பறிக்கும்

***

வானமே வீடாய் 

அந்தப் பறவை

வேட்டைக்காரன்

பார்க்கும்வரை

***

தெருச்சண்டையில்

எந்த நாயும் 

வென்றதில்லை

இன்றுவரை

***

சூட்டிலேயே கிடந்துதான்

சுக ஒளி தருகிறான்

சந்திரன்

***

கொதிக்கும் 

எண்ணெயில்

குளிர்நீர் 

ஊற்றாதீர்

அமீதாம்மாள்

Series Navigationமழை புராணம் – 35தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி