வாசு பாஸ்கரின் “ மறுபடியும் ஒரு காதல் “

This entry is part 15 of 43 in the series 17 ஜூன் 2012

காதல் கோட்டையில் ஆரம்பித்து, மௌனராகத்தில் கொஞ்சம் கலந்து, தேவதாஸ் பாணியில் முடித்து விட வேண்டும். நவீனத்திற்கு லண்டன், மெடிக்கல் காலேஜ், புகழ் பெற்ற டாக்டர் என்று சில மசாலாப் பொடிகளைத் தூவ வேண்டும். டிரம்ஸ் இசையுடன் டிஜிட்டலில் எடுத்து விட்டால் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேல் பூரி ரெடி.

ஜீவா முத்துசாமி ( அனிருத் ) புகழ் பெற்ற சர்ஜன். இந்தியாவே கொண்டாடும் ஜூனியஸ். கூடவே கவிக்கோ என்கிற பெயரில் கவிதைகள் எழுதுபவன். அவன் படித்த மருத்துவக்கல்லூரி, அவனுக்கு பரிசும் பாராட்டும் கொடுக்க நினைக்கும் வேளையில், அவன் சாலையில் அடிபட்டுக் கிடக்கிறான் மிதமிஞ்சிய போதையில்.

மஹி (எ) மஹேஸ்வரி ( ஜோஷ்னா ) பெரிய பணக்காரனின் ஒரே செல்ல மகள். இருப்பும் படிப்பும் லண்டனில். கவிதாயினி என்கிற பெயரில் கவிதை எழுதுபவளும், பாரதி, பாரதிதாசனைப் படிப்பவளூமான அவளுக்கு, இந்தியா வர விருப்பமில்லை. அவளது மறைந்த தாயின் ஒரே ஆசை, அவள் இந்தியாவில் படித்து டாக்டராவதும், ஒரு இந்தியனைக் கலியாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதும்.

ஜீவாவும் மஹியும் லண்டனில் இருக்கும் பண்பலை நிகழ்ச்சிக்குக் கவிதை எழுத, இருவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள் முதல் இரண்டாவது இடங்களூக்கு. பாராட்டு நிகழ்வன்று மஹி லண்டனில். ஆனால் ஜீவா இந்தியாவில். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

கணிப்பொறி மூலமாக உரையாடல் தொடர்ந்து, காதலாகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் சேரும் மஹி, ஜீவாதான் கவிக்கோ என்று தெரியாமலே பழகுகிறாள். இரு குடும்பமும் அவர்கள் திருமணத்தை நிச்சயம் செய்து நடத்தியும் விடுகின்றன. கணினிக் காதலனை எண்ணி மஹியும், காதலியை எண்ணி ஜீவாவும் தாம்பத்யம் நடத்தாமலே வாழ்கிறார்கள்.

ஜீவா புகழ் பெற்ற டாக்டராகி, லண்டன் மாநாட்டில் கலந்து கொள்ள நேரும்போது, லண்டன் பண்பலை நிகழ்ச்சி அறிவிப்பாளர் மூலமாக, கவிதாயினிக்கு திருமணம் நடந்ததை அறிகிறான். காதல் தோற்றதைத் தாங்க முடியாமல், தண்ணி அடிக்கிறான். திருமணம் மேலும் விரிசலாகி விலகும் தருணத்தில், ஜீவாவின் கணிப்பொறியில் கண்களை மறைத்து, தான் அனுப்பிய, தனது புகைப்படத்தைப் பார்க்கிறாள் மஹி. உண்மை தெரிகிறது. ஆனால் அதற்குள் ஜீவா அடிபட்டு ஐசியுவில் போய் இறந்தும் போகிறான். அவன் உயிரற்ற உடல் மீது மஹியும் உயிர் விடுகிறாள்.

ஜீவாவாக வரும் அனிருத் ஸ்டைலாக இருக்கிறார். உயரம் தோற்றம் எல்லாம் ஒரு தேர்ந்த டாக்டரை கண் முன் கொண்டு வருகிறது. ஜோஷ்னா புத்தம் புது மலர் போல் இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஜீவாவின் அப்பாவாக வரும் ஒய் ஜி மகேந்திரன் தான் ஒரு சீனியர் நடிகர் என்பதைப், பேசாமலிருக்கும் பின்பகுதிகளில் காட்டி விடுகிறார். மஹியின் அப்பாவாக வரும் சுமன், ஒரு என் ஆர் ஐயை பிரதிபலிக்கிறார். ஆனால் காட்சிகளீன் அமைப்பு, இவர்களை எல்லாம் காலை வாரி விட்டு விடுகிறது.

ஸ்கைப், வெப் கேமரா என்று நவின விஞ்ஞானம் வளர்ந்து வரும் வேளையில் இன்னமும் கண் தெரியவில்லை, கால் தெரியவில்லை என்று கதை விடுகிறார்கள். கண்கள் இல்லா புகைப்படத்தில், வெவ்வேறு விதமான கண்களைப் பொருத்திப் பார்த்தாலே, ஏதோ ஒரு உருவம் கிடைத்து விடுமே. வெறும் சாட்சிகளின் உருவ வர்ணனையை வைத்து, சிவராசனையே வரைந்து விடவில்லையா?

ஸ்ரீகாந்த் தேவா இம்முறை ஏனோ டமுக்கு டப்பான் பாட்டையெல்லாம் போடவில்லை என்பது ஆறுதல். மெல்லிய டியூன்களைப் போட்டிருக்கிறார். ஆனாலும் மனதில் தைக்க பல முறை கேட்க வேண்டும். ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. லண்டனின் சாலைகள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன. பெருமூச்சு விடத்தான் நம்மால் முடியும்.

ஒரு மேடை நாடகத்துக்கு உண்டான கருவைத் திரைப்படமாக எடுக்கும்போது, அதில் சேர்க்கவேண்டிய இன்கிரேடியென்ட்ஸ் என்ன என்பதை அறிய வாசு பாஸ்கர் ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போக வேண்டியது அவசியம்.

#

கொசுறு

சனி நாக்கான எனது நாக்கு, அருள் வாக்கு கொடுத்த அதிசயத்தைப், போரூர் கோபாலகிருஷ்ணா தியேட்டரில் பார்த்தேன். விரைவில் ஏ சி பண்ணப்போகிறார்களாம். ஏசி போட்டால் கிளாஸ் கட்டடிக்கும் இளம் ஜோடிகள் வருவார்கள் என்று நான் எழுதியது பலிக்கப்போகிறது. எனது அடுத்த குளிர் வாக்கு விருகம்பாக்கம் அன்னை கருமாரிக்கு. பலிக்கிறதா என்று பார்ப்போம்.

#

Series Navigationபழ. சுரேஷின் “ பொற்கொடி பத்தாம் வகுப்பு “பிடுங்கி நடுவோம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *