எம்.எம். மங்காசரியான்
மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்
நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்?
எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று.
இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன. இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும். டிசம்பர் இருபத்தைந்தாம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாகக் குறித்தது தன்னிஷ்டப்படி எடுக்கப்பட்ட முடிவல்ல. அந்த நாள் சூரியக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். தேவ மைந்தனும், சூரியனும் ஒரே நாளில் பண்டிகை கொண்டாடுவது எதைக் குறிக்கிறதென்றால், ஒரு காலம் வரையில் இருவரும் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தார்கள் என்பதை. இயேசு இறந்த போது சூரியன் மறைந்ததாகக் கூறப்படும் கதையும், இயேசு இறந்த அன்று இளவேனிற்கால நாட்சமநிலை என்ற பாரம்பரிய நம்பிக்கையும், இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள கதைகளும் இயேசுவின் கதை சூரிய தேவனின் புராணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. இயேசு பூமிக்கடியில் மூன்று நாட்கள் இருந்தது, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தது, ஹெர்குலிஸ் திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இருந்தது, லிட்டில் ரெட் ரைடிங் ஹுட் ஓநாயின் வயிற்றில் இருந்தது போன்ற கதைகள் பழங்கால மனிதன் இரவையும் பகலையும் சுற்றிப் பின்னிய கற்பனைக் கதைகளை ஒத்திருக்கின்றன. சூரியன் ஒரு டிராகன் அல்லது திமிங்கலம் அல்லது ஓநாயால் விழுங்கப்படுவது இருட்டை ஏற்படுத்துகிறது. அந்த டிராகன் கொல்லப்படும் போது சூரியன் வெற்றிகரமாக அடுத்த நாளில் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் எகிப்திய நாகரிகத் துவக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான அனைத்து மதங்களிலும் வழக்கில் இருக்கின்றன.
மத்தேயு அதிசய நட்சத்திரத்தைப் பற்றியும், அது பெயரில்லாப் பிச்சைகளான மந்திர வித்தைக்காரரை அதிசயக் குழந்தையின் தொட்டிலுக்கு வழிநடத்திச் சென்றதைப் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் இந்த விண்மீன் என்னவாயிற்று என்பதைப் பற்றியோ, அந்த மந்திர வித்தைக்காரர், அவர்கள் கொடுத்த பரிசுகள் என்ன ஆயிற்று என்பவற்றைப் பற்றியோ மத்தேயு மூச்சு விடவில்லை. இந்த சுவிசேஷ எழுத்தாளரின் சோதிட விருப்பங்களையே இந்த நட்சத்திரம் பற்றிய நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையை நிர்ணயிப்பவை என்ற நம்பிக்கை மிகப் பழமையான ஒன்று. நமது மொழியில் உள்ள சொற்களான (ஆசிரியர் ஆங்கிலத்தைக் குறிப்பிடுகிறார்) ill starred”,”lucky star, “lunacy” போன்ற சொற்கள் மனித மனத்தின் மீதான சோதிடவியலின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இன்றும் நாம் மனிதரின் பல்வேறு உணர்வுகளைக் குறிப்பிட கிரகங்களின் அடிப்படையில் அமைந்த பெயர்களை உபயோகிக்கிறோம். சுவிசேஷங்களில் சூரியனுக்கும், விண்மீன்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயேசுவை சரித்திரப்பூர்வமான மனிதர் என்பதிலிருந்து சோதிடவியலின் அடிப்படையில் அமைந்த கற்பனா கதாபாத்திரம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் நாள் ஆகியவற்றை சரியாகக் கூற முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிச்சயமற்ற நிலை ஒரு குறிப்பிட்ட அளவு வரையாவது இயேசுவின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.
டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி இயேசுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்தநாளைப் பற்றி எதுவும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஆனாலும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் இயேசு டிசம்பர் இருபத்தைந்தில் தான் பிறந்தார் என்பதை மறுக்க முடியும். பாலஸ்தீனம் வெப்ப நாடாயிருப்பினும் டிசம்பர் மாதத்தில் பனி பெய்வதால் மேய்ப்பர்கள் ஆடுகளுடன் டிசம்பர் மாதத்தில் இராத்தங்குவதில்லை. பெரும்பாலும் இந்த நேரங்களில் மலைச்சிகரங்களும் பனியால் மூடப்பட்டிருக்கும். மேய்ப்பர்கள் உண்மையிலேயே வானம் திறந்ததையும் தேவதூதர்கள் பாடுவதையும் கண்டிருப்பார்களானால் அது நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் நடந்திருக்காது. ஆரம்பகாலங்களில் கிறிஸ்தவர்கள் மே மாதத்திலும், ஜுன் மாதத்திலும் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
இயேசு பிறந்த நாளைப் பற்றி அறிய வேண்டியது நமக்கு அவசியமில்லை. ஆனால், அது ஏன் அறியப்படவில்லை? இயேசுவின் பிறந்த நாள் மட்டுமல்ல, இயேசு பிறந்த ஆண்டு எது என்பதைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்கு இல்லை. சுவிசேஷகர்களில் ஒருவரான மத்தேயு இயேசு ஏரோதின் ஆட்சிக் காலத்தில் பிறந்ததாகச் சொல்கிறார். ஏரோதின் ஆட்சிக்காலத்தில் தான் மூன்று ஞானிகளின் வருகை நிகழ்ந்ததாகவும், இயேசுவைக் கொலை செய்யும் திட்டத்தை ஏரோது செயல்படுத்தியதாகவும் மத்தேயு கூறுகிறார். ஆனால் லூக்கா கூறுகிறார், சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது. அப்படியானால், இயேசுவின் பிறப்பு மத்தேயு கூறுவதை விட பதினான்கு வருடங்கள் பிந்தி நடந்திருக்க வேண்டும். வரலாற்று ஆவணங்களில் இப்படிப்பட்ட தவறுகள் இருக்குமா? சில தெய்வீக இயலாளர் கூறுகின்றார்கள், “பிழைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட உத்திகள் உபயோகப்பட்டிருக்கலாம்” என்று. ஆனால் ஏன் மத நூல்களில் மட்டும் ‘இப்படிப்பட்ட உத்திகள்’ உபயோகிக்கப்பட வேண்டும்?
மத்தேயு, ஏரோது இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் யோசேப்பும், மரியாளும் குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் இக்கதைகளுக்கு சரித்திர மதிப்பை அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்குகிறது.
இயேசுவைப் பற்றிய முக்கியமான அத்தியாயங்களுள் நுழையும் போது நமக்கு சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இயேசுவின் மரண நாள் வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டிருந்தாரானால் கூட அவருடைய துல்லியமான மரண தேதி இன்னதென்று யாருக்கும் தெரியாது. போதகர்களின் மாநாடுகள் ஒரு செயற்கையான தேதியை நிர்ணயித்தன. ஒரு வெள்ளிக்கிழமையின் போதே சிலுவை மரணம் நினைவு கூரப்படுகிறது. ஆனால் எந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு வருடத்துக்கும் வேறுபடுகிறது. புனித வெள்ளி வசந்த கால நாட்சமநிலைக்கு முன்னால் கொண்டாடப் படுவதில்லை. ஆனால் வசந்த கால நாட்சமநிலை முடிந்தவுடன் முழுநிலவின் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இந்தப் பண்டிகையானது சூரியன் நட்சத்திரக் கூட்டங்களினிடையே (ராசிகளிடையே) இருக்கும் நிலையின் அடிப்படையிலும், நிலவின் நிலைகளின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. இப்படித் தான் சிலை வழிபாட்டுக்காரரின் கடவுளான ஆஸ்டிராவின் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது. ஆஸ்டிரா என்ற பெயரிலிருந்தே ஈஸ்டர் என்ற பெயர் வந்தது. இப்படிப் பட்ட விஷயங்களால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்கிறோம், பிற மதப் புராணக் கதைகளுக்கும் இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.
ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஒரிஜன், இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதியான செல்சசுக்கு பதில் அளிக்கும் போது வரலாற்று ரீதியில் இயேசுவின் உண்மைத் தன்மையை நிறுவ முற்படாமல் கிரேக்க- ரோமக் கடவுள்களை விட இயேசுவின் கதை நமப முடியாத தன்மையில் அமைந்தது அல்ல என்று விடையளிக்கிறார். நான் ஒரிஜினின் சொந்த வார்த்தைகளையே தர விரும்புகிறேன், நான் செல்சசுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் எதுவும் இல்லை. இதன் மூலமாக கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறியப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆதாரங்கள் இல்லாத நிலையில் வெறுங் கோட்பாட்டின் அடிப்படையிலான வாதங்களை ஒரிஜன் செல்சஸ் முன்வைக்கிறார். 1. பிற மதத்தாரின் புராணங்கள் உண்மை என்று கருதப் படுகிற போது இயேசுவின் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? 2. இயேசுவின் கதை உண்மை இல்லையென்று கருதினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லை என்று அர்த்தப்படுகிறது. செல்சசின் பகுத்தறிவு வாதத்துக்கு முன்பு சொத்தையான வாதம் ஒன்றை ஒரிஜன் முன் வைக்கிறார். அதாவது இயேசு என்ற கற்பனையை ஏற்றுக் கொள்ளாதது பிற மதத்தவர் மற்றும் யூதரின் புராணங்களை ஏற்றுக் கொள்ளாததற்கு சமமாகும் என்று கூறுகிறார். இயேசு உண்மையில்லை என்றால் அப்பொல்லோ உண்மை இல்லையென்றும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லையென்றும் கூறுகிறார். நமக்கு புராணக் கதைகள இருக்குமானால் அதனோடு இயேசு என்ற கற்பனையையும் சேர்த்துக் கொள்வதால் என்ன நட்டம் என்று ஒரிஜன் கேட்கிறார். இயேசு என்ற கற்பனைக்கு ஆதரவாக வாதாடியவர்களால் இதைவிட சொத்தையான, பலவீனங்களை ஒப்புக் கொள்ளும் வாதம் ஒன்றை முன் வைக்க முடியாது.
இனி ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஜஸ்டின் மார்ட்டியர் அவநம்பிக்கையாளர்கள் முன் இயேசுவுக்கு ஆதரவாக வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். கடவுளின் முதல் பிறப்பான அந்த வார்த்தை பாலுறவு இல்லாமல் உருவாக்கப்பட்டது. அவரே நமது குருவான இயேசு. அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிப்போனார். இதை நாம் சொல்லும் போது ஜுபிட்டரின் மகன்களைப் பற்றி சொல்லப் படுவதை விட அதிகமாக சொல்லி விடவில்லை, என்கிறார். பிற மதத்தவரின் புராணங்களுக்கும், இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசமில்லை, எனவே பிற மதத்தவரின் கதைகள் எவ்வளவு உண்மையோ அதே அளவு இயேசுவைப் பற்றிய கதைகளும் உண்மையே என்று ஜஸ்டின் மார்ட்டியர் நிரூபிக்க விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது வாதங்களை தொடரும்போது பிற மதத்தவரின் கதைகளுக்கும், தான் போதிக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை உணர்கிறார். அவர் தொடர்கிறார், ஜுப்பிட்டருக்கு எத்தனை புதல்வர்கள் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். மெர்க்குரி, ஏஸ்குலாப்பியஸ், ஹெர்குலிஸ், பெர்சியஸ், பெலரபோன் முதலியவர்கள் மனிதர்களாகப் பிறந்து பெகாசசின் குதிரைகள் வழி மேலுலகத்துக்குப் போனவர்கள். ஜஸ்டின் மார்ட்டியர் கேட்க விரும்பும் கேள்வி இது தான். ஜுபிட்டருக்கு ஆறு மகன்கள் இருக்கும்போது யெகோவாவுக்கு ஒரு மகன் இருக்கக் கூடாதா?
சீசர், அலெக்ஸாண்டர் முதலியோர் வாழ்ந்ததை நிரூபிக்க வரலாற்றுச் சான்றுகளோ நம்பத் தகுந்த ஆதாரங்களோ காட்டப் படுகின்றன. ஆனால் ஜஸ்டின் மார்ட்டியர் இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றிய விளக்கத்திற்கு புராணங்களை துணைக்கு கூப்பிடுகிறார். ஜஸ்டின் மார்ட்டியருடைய விருப்பம் என்னவென்றால் அக்கால தேவர்களில் இயேசுவுக்கு முக்கியமான இடம் தரப்பட வேண்டும் என்பதாகும்.
தங்கள் விவாதங்களுக்கு உதவுவதற்காக பழைய ஏற்பாட்டில் பல குளறுபடிகளை கிறிஸ்தவ மத சார்பாளர்கள் செய்தார்கள். கிழக்கத்திய புத்தகங்களில் இருந்து மாட்டுக் கொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையையும், சுற்றி நின்று உற்றுப்பார்க்கும் மிருகங்களையும் இரவல் வாங்கிய கிறிஸ்தவர்கள் இது ஏற்கனவே முன்குறிக்கப்பட்டது என்று கருதுவதற்காக ஆபகூக் நூலில் ஒரு குளறுபடியை செய்தார்கள். கர்த்தாவே! வருஷங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்(ஆப 3:2) என்று இருந்ததை கர்த்தாவே! மிருகங்களின் நடுவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும் என்று மாற்றினார்கள். இது போன்ற பொய் வாதங்களின் அடிப்படையிலேயே கிறிஸ்தவ மதம் எழுப்பப்பட்டு இருக்கிறது, இதிலிருந்தே கிறிஸ்தவ மதம் எத்தனை சதவீதம் உண்மையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நாம் வாதங்களை தொடரலாம். ஆபிரகாம் லிங்கனின் நண்பர்களும், சமகாலத்தைச் சேர்ந்தவர்களும் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியிருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் தோழர்களோ இயேசுவைப் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களாகத் தான் இருக்கிறார்கள். மத்தேயு யார்? மாற்கு யார்? யோவான், பேதுரு, மரியாள், யூதாஸ் இவர்களெல்லாம் யார்? அப்படி யாரும் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாம் அவர்களை புதிய ஏற்பாட்டு நூற்களைத் தவிர வேறு எங்கேயும் பார்க்க முடிவதில்லை. பேதுரு ரோமுக்கு புதிய கொள்கையுடன் போனால் வரலாற்றாசிரியர்கள் ஏன் பேதுருவைப் பற்றி எழுதவில்லை? பவுல் மார்ஸ் மேடையிலிருந்து தனது விசித்திர சுவிசேஷங்களை பிரசங்கித்திருந்தால் ஏன் ஏதென்ஸ் வரலாற்று நூற்கள் பவுலைப் பற்றி எதுவும் கூறவில்லை? பவுலும் பேதுருவும் உண்மையிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால், அது ஒரு ஊகம் மட்டுமே. அவர்கள் இருந்ததை தெளிவுபடுத்தக் கூடிய எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயேசுவின் அப்போஸ்தலர்களைப் பற்றிய நிச்சயமின்மை, இயேசுவைப் பற்றிய நிச்சயமின்மைக்கு கொண்டு செல்கிறது.
இயேசுவுக்கு பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் உண்டு என்பதும் புராணங்களின் போக்கில் அமைந்த கற்பனை என்றே கூறலாம். ஏழு, மூன்று, நாற்பது என்ற எண்களைப் போன்றே பன்னிரெண்டு என்ற எண்ணும் சூரியக்கடவுளின் அனைத்து புராணங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அவை பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. யாக்கோபின் பன்னிரெண்டு மகன்கள், இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள், ஒரு வருடத்தின் பன்னிரெண்டு மாதங்கள், சொர்க்கத்தின் பன்னிரண்டு தூண்களும், பன்னிரண்டு வாசல்களும் இன்னும் இவை போன்ற பிறவும் பன்னிரண்டு என்ற எண்ணின் ஆதிக்கத்தைக் குறிக்கின்றன. உலகின் பெரும்பாலான மதங்களில் பன்னிரண்டு என்னும் எண் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு சிஷ்யர்களில்லாத தேவ இரட்சகர்கள் மிகக் குறைவு. புதிய ஏற்பாட்டின் ஒருசில பகுதிகளில் இயேசு உலகத்தில் சுவிசேஷத்தை பரப்புவதற்காக எழுபது பேரை அனுப்பினார் என்று கூறப்படுகிறது. இது இன்னொரு கற்பனையாதாரத்திலிருந்து வந்தது. அந்தக் காலத்தில் உலகில் எழுபது நாடுகள் இருந்ததாகக் கருதப்பட்டன. எழுபது அறிஞர்கள் எழுபது தனித்தனி அறைகளில் அமர்ந்திருந்து பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்ததாக ஒரு பாரம்பரியக் கூற்று உண்டு. அதனால் அவர்களின் மொழிபெயர்ப்பு செப்டுவாஜின்ட் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் கற்பனையே. இவற்றுக்கு ஆதாரம் இல்லை. ஆதித் திருச்சபைப் பிதாக்களில் ஒருவர் மட்டும் எழுபது அறைகளையும் சொந்தக் கண்ணால் பார்த்ததாக சாதிக்கிறார். மொத்தத்தில் அவர் மடடும் அப்படிக் கூறுகிறார். அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களுள் பெரும்பாலோர் காட்சிகளில் அவ்வளவாக வருவதில்லை. பேதுரு, பவுல், யோவான், யாக்கோபு, யூதாஸ் ஆகியோரே நிகழ்வுகளை மொத்தமாக ஆக்கிரமிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலராக இருந்தால் நமக்கு மொத்தம் பதினாலு அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். யூதாஸை விட்டுவிட்டு மத்தியாவை சேர்த்துக்கொண்டால் சீடர்களின் எண்ணிக்கை பதின்மூன்று.
ஆதிகால புராணக்கதைகள் பலவற்றில் நாற்பது என்ற எண் வருகிறது. யூதர்கள் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்ததும், இயேசு நாற்பது நாள் உபவாசம் இருந்ததும், மோசே கடவுளோடு நாற்பது நாட்கள் இருந்ததும் இந்தக் கதைகளில் சில. இவை உண்மையாகக் காட்சியளிக்கவில்லை. செயற்கைத்தனமாக காட்சியளிக்கின்றன. லிங்கனின் வரலாற்றை எழுதியவர்களும், சாக்ரடீசின் வரலாற்றை எழுதியவர்களும் எண்களில் ஆர்வம் செலுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் கதை எழுதவில்லை. வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
மட்டுமல்லாமல் லிங்கனின் சமகாலத்தவர் பலரும் லிங்கன் இருந்தார் என்பதற்கு சாட்சி கொடுக்கிறார்கள். அவரது காலத்திலிருந்த வரலாற்றாசிரியர்களும், அரசியல்வாதிகளும் அவரோடு தொடர்பு கொண்டிருந்தார்கள், இல்லையேல் கேள்வப்பட்டு இருந்தார்கள். ஆனால் இயேசுவின் சமகாலத்தவர்களான பல எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும் இயேசுவைப் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை என்பதை விளக்க முடியவில்லை. ஆபிரகாம் லிங்கன் தனது சமகாலத்தவரின் கவனத்தை ஈர்த்திருப்பாரானால் இயேசுவால் ஏன் அது முடியவில்லை? இயேசுவைப் பற்றி புறமத எழுத்தாளர்களும், யூத எழுத்தாளர்களும் அநேகங் காரியங்களைக் கேள்விப்பட்டும் ஒன்றும் கூறவில்லையென்பது பகுத்தறிவுக்குத் தகுந்ததாகக் கருதப்படுகிறதா? அவர்கள் எல்லாரும் இயேசுவுக்கெதிராய் சதியில் ஈடுபட்டிருந்தார்களோ? இந்த முழு மௌனத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அதிசயங்களைச் செய்கிற இயேசுவை அவர்கள் எப்படி அறியாமல் இருந்திருக்க முடியும்? காரணம் இது தான். அவர்களுக்கு இயேசுவைப் பற்றித் தெரியாது. ஏனென்றால் இயேசு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரல்ல. இந்த பூமியில் அப்படிப்பட்ட யாரும் பிறக்கவில்லை.
இப்பொழுது ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை ஆய்வு செய்யும் அம்மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆபிரகாமின் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய யாரும் ஆபிரகாம் லிங்கன் எங்கு பிறந்தார் என்றோ, எங்கு வாழ்ந்தார் என்றோ குறிப்பிடவில்லை என்றால் அவர்கள் ஆபிரகாம் லிங்கனை மிகைப்படுத்துகிறார்கள் என்று அம்மாணவன் கருத இடமுண்டு. நாமும் அது போன்ற நிலையில் தான் இருக்கிறோம். பல மாமனிதர்களின் பிறந்த தினமும், பிறந்த இடமும் நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களைப் பற்றிய பிற ஆதாரங்கள் அவர்களின் இருப்பைக் குறித்த சந்தேகங்களை நீக்கி விடுகின்றன. ஆனால், இயேசுவைப் பற்றிய எந்த தெளிவான ஆதாரமும் இல்லை. இயேசுவின் சமகாலத்தவர்களாய் கருதப்படும் சுவிசேஷ ஆசிரியர்கள் கூட இயேசுவைப் பற்றி எந்த தெளிவான விவரமும் கொடுக்கவில்லை.
ஆனாலும், நாம் ஆய்வைத் தொடருவோம். ஆபிரகாம் லிங்கனைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை நம்மால் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இயேசுவைப் பற்றிய செய்திகளை ஒப்புமைப்படுத்தி சரிபார்ப்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்தவர், விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர், கொலை செய்யப்பட்டவர் என்பது போன்ற செய்திகளை சரிபார்த்து விடலாம்.
இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இப்படிப் பட்ட தகவல்களை நாம் சரிபார்க்க முடியாது. வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் இப்படிப் பட்ட தகவல்கள் ஏற்கத் தகுந்தன அல்ல. இவை புராணக்கதைகளின் பாற்பட்டவை ஆகும். இப்படிப் பட்ட தகவல்கள் இயேசுவின் கதைக்கு உண்மைத் தன்மையை அளிப்பதைவிட சிதைப்பதிலேயே அதிக வேகத்துடன் செயல்படுகின்றன.
அதுபோலவே இயேசு ஒரு கடவுள் என்கிற தகவலையும் நம்மால் சரிபார்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நபர் கடவுள் தன்மை பெற்றவரா இல்லையா என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? இயேசு ஒரு அபூர்வ மனிதராக இருக்கலாம். ஆனால் எல்லா அபூர்வ மனிதர்களும் கடவுளாக முடியுமா? இயேசு தான் கடவுள் என்று கூறியிருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் தங்களைக் கடவுள் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள்கள் என்பதற்கு நிரூபணங்கள் என்ன?
சாதாரண மனிதரான இயேசு இருந்திருக்கலாம், இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் கன்னிக்குப் பிறந்த கடவுளை நம்புவதை விசுவாசம் என்ற பெயரால் நியாயப்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான இறுதி வாதமாக விசுவாசம் முன்வைக்கப்படுகிறது. இதே விசுவாசத்தின் அடிப்படையில்தான் முகமது தான் கூறுவதை நிரூபிக்கவும், பிரிஹம் யங் தனது வெளிப்படுத்தலை முனவைக்கவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட குறுக்கு வழிகளைத் தவிர கன்னிக்குப் பிறந்த மனிதனின் இருப்பை நிரூபிக்கக் கூடிய வழியில்லை. இப்படிப்பட்ட விசுவாசம் சுதந்தரமானதல்ல. இக்காலத்தில் வாளாலும், பிற்காலத்தில் நரகத் தீயாலும் அது பாதுகாக்கப்படுகிறது.
ஆபிரகாம் லிங்கன் தம் மரணத்தைக் குறித்து முன்னறிவித்து இருந்தாலோ, தனது தோழர்களிடம் நான் ஆகாயத்தில் தோன்றும் வரை நீங்கள் என்னைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருந்தாலோ, நான் பரலோகத்தில் உங்களுக்கு சிங்காசனங்களைத் தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாலோ, தனது தோழர்களிடம் நீங்கள் எனது பெயரால் விஷத்தைக் குடிப்பீர்கள் என்று சொல்லியிருந்தாலோ, நீங்கள் எனது பெயரில் எதைக் கேட்டாலும் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தாலோ அப்படிப்பட்ட லிங்கனின் இருப்பைப் பற்றி நமக்கு சந்தேகம் எழுவது இயல்பு. ஆனால் இதைப் போன்ற பல மொழிகள் இயேசுவின் வாயிலிருந்து வெளிவந்துள்ளன. என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கப்படும். எந்த மனிதனும் இப்படிப்பட்ட நடக்காத விஷயங்களை யாரிடமும் நடக்கும் என்று சொல்லி சத்தியம் பண்ணுவதில்லை. இப்படிப் பட்ட வெற்றுப் பேச்சுகள் ஒரு மனிதனைக் கடவுளாக்குவதுமில்லை. இயேசு தனது சத்தியத்தைக் காப்பாற்றினாரா? அவர் தன்னைப் பின்பற்றுபவர்கள் தம் பெயரால் எதைக் கேட்டாலும் கொடுப்பாரா? இதற்கு ஒரு சொத்தை பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எது நல்லது என்று அவர் கருதுகிறாரோ அதை அவர் கொடுப்பார். இதை விட ஒரு சத்தியத்திலிருந்து நழுவ சிறந்த வழியுண்டா? இதை அவர் சொல்லக் கருதியிருப்பாரானால் ஏன் முதலில் இன்னொரு விஷயத்தைச் சொன்னார்? அவர் சொல்லக் கருதியதை ஏன் அவர் சொல்லவில்லை? இப்படிச் சொல்வது தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நிறைவேறாத எதிர்பார்ப்புகளை உண்டாக்கும் என்பதை அவர் ஏன் உணரவில்லை? குறைந்த வாக்குறுதிகளை அளித்து விட்டு அதிகமாகச் செய்வது, அதிகமான வாக்குறுதிகள் கொடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட எவ்வளவோ மேலானது. இப்படிப் பட்ட நிறைவேற்றாத ஒரு சத்தியத்தை இயேசு செய்தார் என்பது அவரது இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. புராணங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். இயேசு தான் கொடுத்த சத்தியத்துக்கு மதிப்பளித்திருந்தால் இவ்வுலகத்தில் துன்பம் இருக்காது, அனாதைகள் இருக்க மாட்டார்கள், குழந்தையிழந்த தாய்மார்கள் இருக்க மாட்டார்கள், கப்பல் விபத்துகள் நிகழ்ந்திருக்காது, வெள்ளப் பெருக்கு இருக்காது, பஞ்சம் இருக்காது, வியாதி இருக்காது, ஊனமுற்ற குழந்தைகள் இருக்க மாட்டார்கள், மனவியாதி இருக்காது, யுத்தங்கள் இருக்காது, குற்றங்கள் இருக்காது, தவறுகள் இருக்காது. எத்தனை ஆயிரம் பிரார்த்தனைகள் பூமியின் முகத்தைப் புண்ணாக்கும் தீமைகளுக்கு எதிராக நடந்திருக்கிறது? பின் ஏன் இத்தனை அதிருப்தி? இயேசுவைப் பின்பற்றுபவர்களால் மலைகளை நகர்த்த முடிந்ததா? விஷங்களைக் தீங்கின்றி குடிக்க முடிந்ததா? பாம்புகளை கையில் பயமின்றி எடுக்க முடிந்ததா? இயேசு செய்ததாகச் சொல்லப்பட்ட அற்புதங்களை விட பெரிய அற்புதங்களைச் செய்ய முடிந்ததா? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்ட எத்தனையோ மதஸ்தர்கள் அப்படிப்பட்ட போதனைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் எத்தனை பிரச்சினைகள் வந்தன?
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் தன் தாய் எவ்வளவு கண்ணீரோடு முழங்காலில் நின்றார்கள் என்றும், எப்படிப்பட்ட விசுவாசத்தை இயேசுவின் உதவும் தன்மை மீது வைத்திருந்தார் என்றும், பட்டினியாய் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று இயேசு கூறியதன் மீது வைத்திருந்த விசுவாசத்தைப் பற்றியும் கூறுகிறார். அவர்கள் ஜெபிக்கும் போது அவர்கள் சுமை குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்தது. ஒரு கல்லோ, மரக்கட்டையோ கூட அவர்கள் கண்ணீரினால் கசிந்துருகி விடும். அந்த நாட்களை எண்ணும் போது என் மனது வலிக்கிறது என்று ஹோலியாக் எழுதுகிறார். ஒருநாள் அவர் அருட்திரு. கிரிபேஸ் என்ற பாதிரியாரிடத்தில் சென்றார். அவாpடம் கேட்டார், நாம் விசுவாசத்தோடு எதைக் கேட்டாலும் அது கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?. மேலும் ஹோலியாக் எழுதுகிறார், அந்த போதகரின் நைந்து போன துணியும், அரைப்பட்டினித் தோற்றமும், வசூலாக வேண்டிய பணத்திற்கு காத்திருக்கும் நிலையும் அவர் தனது வருமானத்திற்கு விசுவாசத்தை சார்ந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போது உணர்த்தவில்லை. பிரார்த்தனையால் எல்லா உதவியும் கிடைக்குமென்றால் எந்த சபைக்கும் தேவைகள் இருக்காது, எந்த விசுவாசியும் வறுமையாளராய் இருக்க மாட்டார் என்று அப்போது எனக்கு உறைக்கவில்லை. தனது கேள்விக்கு அந்த பாதிரியார் அளித்த பதிலைப் பற்றி அவர் எழுதுகிறார். அவர் பல வார்த்தைகளால் அதை விளக்கினார். இயேசு கொடுத்த உறுதிமொழியின் கூட ஒரு வார்ததை சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் தமது விசுவாசிகளின் நன்மைக்கானதை அளிப்பார் என்றார். அப்படியானால் இயேசு ஏன் தான் உறுதிமொழியளிக்கும் போது இவ்வார்த்தையைக் கூறவில்லை? இயேசு ஒரு உறுதிமொழியின் அரைப்பகுதியை மட்டும் கூறிவிட்டு, தன்னிடம் கோரிக்கை வைத்து நம்பிக்கையிழந்தவர்களிடம் அடுத்த அரைப்பகுதியை உபயோகப்படுத்துவாரா? ஆனால் அவர் சொன்னார், என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்குச் செய்வேன். அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேனே என்கிறார். அவர் தாம் மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைக் கூறாமல் வேறு எதையோ கூறினாரா? உண்மை என்னவென்றால் சுயநினைவோடு இருக்கும் மனிதன் இப்படிப்பட்ட அசாதாரணமான, சாத்தியமில்லாத சத்தியங்களைச் செய்வதில்லை. இயேசு இப்படிக் கூறுவதாக இருக்கும் தகவல், அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என்ற கூற்றுக்கு வலு சேர்க்கிறது.
ஹோலியாக்குக்கு உண்மை புரிந்த போது அவர் பரலோகத்திற்கு விண்ணப்பங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அவர் அந்த செயலை வெற்றுக் கிணற்றில் வாளியை விடுவது போனறது என்பதை உணர்ந்து கொண்டார். தனது உதவிக்காக பிற இடங்களை நாடினார். இந்த உலகின் முன்னேற்றம் எதில் இருக்கிறது என்றால் மனிதர் பரலோக உதவியை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வதில் தான் இருக்கிறது. பிரார்த்தனை அல்ல, சுயமுயற்சியே அறியாமை, அடிமைத்தனம், வறுமை, ஒழுக்கக்குறைவு போன்ற அனைத்திற்கும் மருந்தாக இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இல்லாத இயேசுவையும், சாத்தியமில்லாத சத்தியங்களையும் காட்டி மனுக்குலத்தின் வளர்ச்சயை தள்ளிப்போட மட்டுமே திருச்சபையால் முடிந்ததேயொழிய அதை நிறுத்தி விட முடியவில்லை. இதுவே மனிதனின் இயல்புக்குக் கிடைத்த வாழ்த்தாகும். மேலும் பயத்தால் அடக்கி வைக்கப்பட்டு மவுனத்திலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்த மனித இனம் விரைவில் இது போன்ற மாயைகளிலிருந்து விடுதலை பெற்று விடும் என்பதற்கு இப்போதைய நிலைகள் உறுதியளிக்கின்றன.
——————————————-
- மானுடம் போற்றுதும்
- இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34
- நம்பிக்கை ஒளி! (4)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8
- இயேசு ஒரு கற்பனையா?
- அக்னிப்பிரவேசம் -7
- கொசுறு பக்கங்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா
- ‘பாரதியைப் பயில…’
- தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.
- சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி
- தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
- வைதேஹி காத்திருந்தாள்
- ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்
- கவிதைகள்
- பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்
- மணலும், நுரையும்
- மீட்சிக்கான விருப்பம்
- தபால்காரர்
- தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்
- மரப்பாச்சி இல்லாத கொலு
- “தீபாவளி…… தீரா வலி….. !”
- ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
- லூப்பர் ( ஆங்கிலம் )
- பேரரசுவின் திருத்தணி
- கற்பனைக் கால் வலி
- மனிதாபிமானம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.
- சிறுவன்
- முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
- மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு