காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் வழியே இல்லாமல் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துவிடுகிறது. நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் மட்டும் கண்டெடுத்துக் கொண்டால் அதிலிருந்து எப்படியும் மீண்டு தப்பித்து வந்துவிடலாம். சுழட்டியடித்த சுனாமியும் ஒரு நேரம் அடங்கித்தானே ஆகவேண்டும்….
ஆசிரியர்களுக்கான ஓய்வறையினுள் நீண்ட மேசையின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், முன் நெற்றி வழுக்கையாக, நெற்றி நிறைய திருநீறு பட்டையாகப் போட்டுக் கொண்டு இடையில் அழகாக குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டு நடு நாயகமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் மயில்வாகனனாக இருக்கும் என்பதும் சொல்லாமலே புரிந்தது. அவரும் மாலுவைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடைய பயணம், குடும்பம் எல்லாம் பற்றிய சம்பிரதாயமான விசாரிப்புகளை முடித்துவிட்டு பின்பு அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொறுமையாக்க் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர், பின்பு அவளையும் அழைத்துக் கொண்டு பள்ளியின் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் (ஆட்டோ) கிளம்பினார். தில்லைராஜன் ஐயாவின் வார்த்தைகளுக்கு உள்ள மரியாதையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பேச்சிலிருந்து தாங்கள் சந்திக்கப்போவது ஐஏஎஸ் கோச்சிங் செண்ட்டரில் பணி புரியும் ஒரு நபரைத்தான் என்பதும் புரிந்தது.
மாலுவை வரவேற்பறையில் உட்கார வைத்துவிட்டு அலுவலக அறையினுள் சென்றவர் கொஞ்ச நேரம் சத்தமே இல்லாமல் இருந்தார். அரை மணி கழித்து ஒருவர் வந்து சார் உள்ளே வரச் சொன்னார் என்று சொன்னவுடன் அதற்காகவே காத்திருந்தவள் போல உடனே எழுந்து உள்ளே போனாள். மயில்வாகனன் அவர் எதிரில் உட்கார்ந்திருந்ததால் சரியாக முகம் தெரியவில்லை.
“சார், மே ஐ கம் இன்” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றவள், “யெஸ், கம் இன் ப்ளீஸ்”: என்ற குரல் வந்த பக்கம் ஆர்வமாகப் பார்த்தாள். பார்த்த அந்த நொடியில் ஏதோ தன்னையறியாத ஒரு பரவசம் உடல் முழுவதும் பரவியது. அவருடைய பார்வையிலும் இருந்த வித்தியாசம் அவருக்கும் ஏதோ ஒரு உணர்வு தோன்றியிருக்கலாம் என்று எண்ணச் செய்தது. இது எதையும் உணராதவராக, மயில்வாகனன்
“சார், இவங்கதான், மிஸ்.மாலதி. நான் சொன்னேனே, தில்லைராஜன் சார் அனுப்பியவர்கள். ஐ ஏ.எஸ் படிக்க விரும்பி வந்திருக்கிறார்கள். இவருக்கு வேண்டிய உதவியை நீங்கள்தான் செய்ய வேண்டும், முடிந்தபோது ஐயாவையும் நீங்கள் தொடர்பு கொண்டால் நன்றாக இருக்கும் ” என்று சொல்லிவிட்டு, தான் விடைபெறுவதாகவும், வேறு எந்த உதவி வேண்டுமென்றாலும் தன்னை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தன் கைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
தன்னை முத்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் மாலதியைப் பற்றி மெல்ல விசாரித்தார். ஏனோ அவரைப் பார்த்தவுடன் தன்னுடைய நிலையை, தன் எதிர்பார்ப்பை என்று எதையும் மறைக்காமல் சொல்லத் தோன்றியது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அனைத்தையும் பொறுமையாக, கவனமாகக் கேட்டுக் கொண்டவர், மிகவும் அக்கறையுடன் பதில் சொன்னது அவளுக்கு ஆதரவாகவும் இருந்தது. சம்பிரதாயமாக அவளைப்பற்றி பேசியவர் அவள் வந்த காரியத்திற்கு வந்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதில் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறாள் என்பதைக் கண்டறியும் பொருட்டு சில கேள்விகளை முன் வைத்தவர், அவள் பதிலில் இருந்த தெளிவையும், கண்களில் தெரிந்த உறுதியையும் கண்டு, நம்பிக்கை மேலிட மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்பில் அவளுக்கு அனுமதி பெற்றுத் தர முடியும் என்று அவர் சொன்னது வயிற்றில் பால்வார்த்தது போன்று இருந்தது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது. முழுநேர பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க அவளுடைய விருப்பம் குறித்தும் அறிந்து கொண்டவர், அதைப்பற்றி பேச ஆரம்பித்தபோது, கண்கள் மலர கவனித்துக் கொண்டிருந்தாள்.
”See, Selection will be based on the performance in the screening test,, followed by Group Discussion and Personal Interview. If you are selected, Coaching Programme Schedule:, Monday to Friday – 10.00 am to 5.00 pm, All you need to do is, getting ready for the screening test which is going to be held by next Monday. Be prepared for that.. ok..?” என்று படபடவென நுனி நாக்கு ஆங்கிலத்தில் பொரிந்து கொட்டினார். கண் கொட்டாமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் வாயில் ஏனோ வார்த்தைகள் வெளியில் வர மறுத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போனது போல இருந்தது.
“என்ன ஆச்சு, நான் சொன்னது விளங்கியதா, பதிலையேக் காணோமே..” என்றார் முத்து.
மௌனம் கலைய மெல்ல பேச ஆரம்பித்தாள். ஏனோ அதிகம் பேச முடியாமல் தவித்தாலும் முத்து அவள் கேட்பதற்கு முன்னமே அவளுக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் புரிந்தது, தில்லைராஜன் ஐயா தன்னைப் பற்றிய முழு தகவலும் அளித்திருக்கிறார் என்பது. அதனால் அவளாகக் கேட்டுப் பெற வேண்டிய தேவையும் அதிகம் இல்லாமல் போனது. அரசு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கிக் கொண்டு இலவசமாக கோச்சிங் வகுப்பிலும் படிப்பதற்கான ஏற்பாடும் செய்து கொடுத்தார். அதோடு நிற்காமல், அங்கு கோச்சிங் செண்டரிலேயே பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர தனிப்பயிற்சி வகுப்பிற்கான ஆசிரியை பணியும் வாங்கிக் கொடுத்தார். மாலை ஆறு மணி முதல் எட்டு மணிவரை டியூசன் எடுத்துவிட்டு அருகிலேயே இருக்கும் அரசு பெண்கள் விடுதியில் சென்று தங்கிக் கொள்வதில் சிரமம் இருக்காது, என்றும் சொன்னார். இவ்வளவு எளிதாகத் தம் எண்ணம் நிறைவேறுவதற்கான வழி பிறக்கும் என்று கனவிலும் நினைக்காதலால், அந்த நொடியில் தில்லைராஜன் ஐயாவும், முத்து சாரும் அவளுக்கு தெய்வங்களாகவே காட்சியளித்தனர். இரவு தன் அறையில் ஓய்வெடுக்கும் போது முத்து சாரைச் சுற்றியே நினைவு வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஏதோ பலகாலம் முன்னமே அவருடன் பழகியிருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது.
இந்த ஓராண்டு காலமாக சலனமில்லாமல் படிப்பு, பணி என்று வாழ்க்கை அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. முத்துவும் அவளிடம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு ஆதரவாக இருந்தது ஒரு பாதுகாப்பாகவே உணர்ந்தாள். ஏதோ விட்ட குறை தொட்ட குறையாகவே அவருடைய நட்பு தொடர்வதாக எண்ணினாள். அவ்வப்போது திருப்பூருக்குச் சென்று சின்னம்மாவையும், பரமுவையும் பார்த்து வந்து கொண்டிருந்தாள். அடிக்கடி வர முடியவில்லையே என்று பரமு மிகவும் வருந்தினாலும் படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் நாட்டம் செல்லக் கூடாது என்று கவனமாகத்தான் இருந்தாள். ஆனால் இதெல்லாம் உடன் பயிலும் அன்புச்செல்வன் அவளிடம் வந்து அப்படி ஒரு கேள்வியை எழுப்பும் வரைதான் தாக்குப் பிடித்தது. இத்தனைக்கும் அவள் அவ்வளவு எளிதாக வளைந்து கொடுக்கக்கூடியவள் அல்ல என்றாலும் இந்த விசயத்தில் மட்டும் ஏனோ மனது கொஞ்சம் கலங்கத்தான் செய்தது. தன் நிலை உணராதவள் இல்லை அவள். படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று இருந்தவளுக்கு இப்படி ஒரு எண்ணம் எங்கு, எப்படி ஆரம்பித்திருக்கும் என்று யோசிக்கவும் முடியவில்லை. இத்தனைக்கும் வகுப்பில் எப்போதும் இருவருக்கும் ஏட்டிக்குப் போட்டியாகத்தான் இருக்கும். தான் எந்த கருத்தைச் சொன்னாலும் அதற்கு நேர்மாறாக ஏதேனும் சொல்வதோடு அதில் ஏதேனும் தப்பும் கண்டுபிடித்து, வம்புக்கு இழுக்கவில்லையென்றால் அவனுக்குப் பொழுது போகாது. நல்ல வசதியான வீட்டுப் பையனாக இருந்ததால் வாழ்க்கையின் இருண்ட பகுதியையே பார்க்காதவன் போல சுகவாசியாக இருப்பவன். மிகவும் திமிர் பிடித்தவனாக இருக்கிறானே என்று ஆரம்பத்தில் நினைப்பதுண்டு. படிப்பில் மகா கெட்டிக்காரன் என்பதால் அந்தத் தலை கனம் அதிகம் உண்டு. முதல் இடத்திற்கு இருவரும் சரியான போட்டியாக இருப்பதால் எலியும், பூனையுமாகவே இருந்து வந்தனர். அவளை எப்போது பார்த்தாலும் சீண்டிவிட்டு, அழகிய அவளுடைய முகம் கோபத்தில் ரோசாவாக சிவந்து போவதை ஓரக்கண்னால் திருட்டுத்தனமாக இரசிப்பவன்.
ஆனால் கொஞ்ச நாட்களாக அவளிடம் அதிகம் மல்லுக்கட்டாமல் நட்புடனும், அனுசரனையுடனும் பழகியது வித்தியாசமாக இருந்தது. ஏனோ இதுதான் அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவனுடைய அந்த நெருக்கமான பழக்கம் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தாமல் இல்லை. இதற்கான காரணம் விரைவிலேயே புரிந்தது. ஒருமுறை தில்லைராஜன் ஐயா தம் சொந்த வேலையாக தங்கள் கோச்சிங் செண்ட்டருக்கு வந்தபோது அன்புச்செல்வன் அவரிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தெரிந்தது அவன் அவருக்கு நெருங்கிய உறவு என்பது. அந்த சமயத்திலிருந்துதான் அவன் மாலு மீது தனிப்பட்ட அக்கறையைக் காட்டுகிறான். இதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் மட்டும் மிகத்தெளிவாகத்தான் இருந்தாள், அவள்.. ஆனாலும் அன்புச்செல்வனின் அந்த குறும்புத்தனமும், திருட்டுப் பார்வையும், அன்பான பேச்சும், யதார்த்தமான பழக்கமும் அவன்பால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈர்ப்பது அறிந்தும் அவளால் தடை செய்ய முடியவில்லை. ஆனால் இதனால் தன் படிப்பிற்கோ, அல்லது தன்மானத்திற்கோ பிரச்சனை ஏதும் வராமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் வந்துவிட்டது.
ஆரம்பக்கட்டத் தேர்வில் இருவருமே நல்ல மதிப்பெண்களுடன் தேறியிருந்தனர். அடுத்த கட்டத் தேர்விற்கு கடுமையாக உழைக்க வேண்டிய தருணத்தில் மனம் அலைபாய்வதை கட்டுப்படுத்த வேண்டியும் இருந்தது. அன்று மதிய உணவு இடைவேளையின் போது அன்புச்செல்வனுடன் தனிமையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவளை கவனித்த முத்து அவள் அருகில் வந்து நின்று மெல்லிய குரலில் அழைத்ததைக்கூட உணராமல் இருவரும் சுவாரசியமாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த பரந்த உலகில் தங்கள் இருவரைத் தவிர வேறு எவருமே இல்லாதது போல அந்த இருவரும் தங்களின் உலகினுள்ளேயே சிறகடிக்கத் துவங்கியிருந்தனர். ஏற்கனவே பல முறை இதனை கவனித்திருந்தாலும், இது நட்பு முறை பழக்கம்தானே என்று எண்ணியிருந்தவனுக்கு இன்று ஏதோ வித்தியாசமாகப்பட்டது. சற்றும் தாமதிக்காமல்,
“மாலதி, கூப்பிடுவது காதில் விழவில்லையா.. அப்படி என்ன அரட்டை. போய் படிக்கிற வழியைப் பார்க்க வேண்டியதுதானே.. “ என்று சிடுசிடுத்தார்.
முதல் முறையாக முத்துவின் கோபத்தைக் கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் யார் தம்மைக் கண்டிப்பதற்கு என்ற எண்ணமும் தலை தூக்கியதோடு, தேவையில்லாமல் ஏன் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோபமும் வந்தது! “கம் டு மை ரூம்” என்று அதட்டிவிட்டுப் போனவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்!
தொடரும்
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9