தலைநகரக் குற்றம்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 27 in the series 23 டிசம்பர் 2012

குடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் கண்டது. இளம் இந்தியா கோபக்கனலைக் கக்கிக்கொண்டிருக்க , அரசு இயந்திரமோ தன் பாட்டுக்குத் தடியடியையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் , தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வித்தையையும் காட்டிக்கொண்டிருக்கிறது. இளைய இந்தியாவின் அரசியல் பிம்பமும் , அன்னை போன்றஅடைமொழிகளில் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களும் இருபத்து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு ஆறுதலுக்குக்கூடத் திருவாய் மலர்ந்தருளவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

அதிகார மையம் நினைப்பது போல, இந்தப் போராட்டமும் எவ்வளவோ நடப்பதில் இதுவும் ஒன்று என்று ஆகிவிடாமல் இருக்க என்னதான் செய்யவேண்டும் ? கற்பழிப்பு என்பது இந்தியாவில் இதுதான் முதல் முறையாக நடந்தேறியிருக்கிறதா என்ன ? ஒவ்வொரு நாளும் இந்தப் புனித தேசத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊடகங்களின் கவனம் பெற்று சிலவும் கவனம் பெறாமல் பலவும் என நடந்தேறிக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன . இந்த நாட்டில் நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையில் புழுங்கும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ன ? பின் ஏன் இந்த கற்பழிப்புச் செய்தி மட்டும் ஆங்கில ஒளிஊடகங்களின் நேரடி ஒளிபரப்பு பெற்ற சிறப்புச் செய்தியாய் ஆகிவிட்டது ? பெண்கள் இந்தியாவின் தலை நகரில் மாத்திரம்தான் பாதுகாப்பாக இல்லையா ? இல்லை இந்தப்போராட்டம் பெண்கள் இந்தத் தேசத்தின் தலை நகரில்கூடப் பாதுகாப்பாக இல்லை என்பதாலா ?

பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதென்றால், பெண்கள் , பெண்குழந்தைகள் மட்டுமல்ல … பெண் சிசுக்களேகூடக் கர்பப்பையில் பாதுகாப்பாக இல்லை என்பதுதானே உண்மை ? நிலைமை இப்படி இருக்கும்போது பெண்களுக்கு நியாயமாக வாழும் உரிமை பற்றிப் பேசுவது எவ்வளவு சரியாக இருக்கும் ? நல்ல வேளை ! பஸ்ஸில் கற்பழிப்பு நடக்கிறது என்ற செய்தி மட்டும் கொஞ்சம் முன்னால் தெரிந்திருந்தால் , சில ” ஸ்மார்ட்டான ” ஊடகங்கள் கேமெராவோடு போய் ” எங்கள் சானலில்தான் முதன்முதலில் காட்டப்படுகிறது என்ற பெருமையோடு திரும்பத்திரும்ப படம் காட்டியிருப்பார்கள் . போரானாலும் , கொலையானாலும் , கற்பழிப்பானாலும் இந்த நேரலை விற்பனையாளர்கள் தங்களை தேசத்தின் மனசாட்சி என்று வேறு கூறிப் பெருமைப்பட்டுக்கொள்வார்கள் . உண்மையான குற்றவாளிகளைவிட இந்த நேரலைக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?

பாதுகாப்பு என்பது மக்களால் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதா ? அல்லது பாதுகாப்பான வாழ்க்கைக்கான சூழலை கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையா ? பின் ஏன் பெண்கள் பாதுகாப்பிற்காக கராத்தே குங்க்ஃபு போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி சில அமைப்புகள் இந்தச் சோகச் சூழலில் அறிவுறுத்துகின்றன ? சமீபத்திய இந்தக் கொடூரத்திற்கு மாட்டிக்கொண்டிருக்கிற ஆறு பேர் மட்டுமே காரணமா ? இந்தக் குற்றவாளிகளுக்கு எங்கிருந்துதான் இப்படி ஒரு ஈனமானச் செயலைச் செய்யத் துணிவு வருகிறது ? நம்முடைய சமூகத்திலிருந்துதானே அவர்கள் இந்தத் தைரியத்தைப் பெறுகிறார்கள் ? நமது வட்டங்கள் , மாவட்டங்கள் என்று தொடங்கி சின்ன தலைவர்கள் பெரிய தலைகள் என்று நீளும் இந்த அரசியல் பலம் பெற்ற தலைகள் செய்த கொலைகள் , கையாடல்கள் , திருட்டுகள், கடத்தல்கள் மற்றும் கற்பழிப்புகள் பதிவுபெற்றும் கூட அவர்களுக்கெதிராக இப்படி ஒரு எழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருக்கிறதா நம் தேசம் ? அப்போதெல்லாம் கொதித்தெழாத நாம் அந்தத் தலைகளின் அடிவருடிகளை மட்டும் தூக்கிலடச் சொல்கிறோமே ? எந்தக் குற்றத்தைச் செய்துவிட்டும் மாட்டிக்கொள்ளாது நம் வரிப் பணத்தில் பூனைப் படைகளின் பாதுகாப்போடு சைரன் வைத்த கார்களில் பவனிவரும் தலைகள் எந்தத் திஹாரிலிருந்தும் தங்களை வெளிக்கொண்டு வந்துவிடும் என்ற இந்த அடிவருடிகளின் நம்பிக்கை ஊற்றை அல்லவா நாம் அழுத்தி மூடவேண்டும் ?

இது நடக்காத வரையில் , தற்காலிக எழுச்சிப் போராட்டங்களை நாமே மறந்துவிடுவோம் . எதையாவது சொல்லி அரசு நம்மைக் கட்டுப்படுத்திய பின் இன்னொரு நீசத்தனமான குற்றம் நம்மைத் தாக்கும் வரை நம் கோபம் அடங்கியே இருக்கும். சமுதாயக் காயங்களுக்குத் தேவை எதிர்வினைகளல்ல . தீர்வு மட்டும்தான்.

— ரமணி

Series Navigationசீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

ரமணி

Similar Posts

Comments

  1. Avatar
    pon kandhasamy says:

    1.இருபத்து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு … இருபத்து மூன்று வயது.
    2.நேரலை விற்பனையாளர்கள் தங்களை தேசத்தின் மனசாட்சி…சரியாக சொன்னாலும் இவர்கள் காட்டும் போராட்டத்தின் உண்மைத்தன்மை குறைவு பட்டு விடுமா?
    3. நம்முடைய சமூகத்திலிருந்துதானே அவர்கள் இந்தத் தைரியத்தைப் பெறுகிறார்கள் ? ..பட்டியல் தப்பித்த அரசியல் குற்றவாளிகளையுடன் முடிவு பெறவில்லை.பெண்களை மோசமாக சித்தரித்த விளம்பரங்கள்,படங்கள் ,கலாசாரம் இவையும்தானே.
    4.இப்போராட்டத்தின் நேர்மறையான அம்சம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அரசு தலைவர்களுக்கும்,அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படுத்தியள்ளது கவனத்துக்கு உரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *