(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை
E. Mail: Malar.sethu@gmail.com
25.நோயாளியா வாழ்ந்து புகழ் பெற்ற ஏழை…..
வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது ஒடம்புக்கு முடியலையா…? அடடா…..என்ன பண்ணுது…ஜலதோஷமா..இதுக்கே நீங்க இப்படி இருக்குறீங்களே…இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா…? வாழ்நாள் முழுவதும் ஒருத்தர் நோயாளியாவே இருந்தாரு…ஆனாலும் அவரு அதைப் பொருட்படுத்தாம கடுமையா ஒழைச்சு முன்னேறிப் புகழ் பெற்றாரு… அவரைப் பத்தித்தான் போனவாரம் ஒங்கக்கிட்ட கேட்டேன்… என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா…? இல்லையா….?
சரி ‘வாட்’ அப்படீன்னா…என்ன? அதாவது தெரியுமா? இதுக்கு விடை சொல்லிட்டீங்கன்னா நான் முதல்ல கேட்ட கேள்விக்கு விடை கெடச்சுரும்.. என்னது வாட்டுங்கறது வாட் வரியா…?ஆஹா….ஹா….இங்க பாருங்க இதுக்குப் பதில நானே சொல்லிடறேன்…வாட் என்பது மின்சாரத்தை அளக்கக்கூடிய அளவுங்க..மின்சாரத்தை அளவிட்டுக் கணக்கிடக்கூடிய அளவீட்டு முறையக் கண்டுபிடிச்சவருடைய பேரையே அவ்வளவீட்டுக்கும் வச்சிட்டாங்க… ஆமாங்க அவரு பேரு ஜேம்ஸ்வாட்.
ஜேம்ஸ்வாட்டின் கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக்கு அடிப்படையா அமைந்த முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். ‘நீராவி’ என்ற இயற்கை சக்தியை மனிதகுல முன்னேற்றத்திற்குரிய சக்தியாக மாற்றித் தந்தவர் இந்த ஜேம்ஸ்வாட்தான். ஜேம்ஸ்வாட் கண்டுபிடித்த ‘Steam Engine’ என்ற நீராவி இயந்திரம் உலகின் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவியாக அமைந்தது.
வறுமையும் கல்வியும்
இத்தகைய பெருமைக்குரிய ஜேம்ஸ்வாட் 1736-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் Greenock எனும் ஊரில் பிறந்தார். ஜேம்ஸ்வாட்டினுடைய குடும்பம் ஏழ்மையான குடும்பம். அப்போது ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தை அடிக்கடி ஆக்கிரமிப்பு செய்ததால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஸ்காட்லாந்தின் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பல குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டன. அவ்வாறு வறுமைக்குள்ளான குடும்பங்களில் ஜேம்ஸ்வாட்டின் குடும்பமும் ஒன்றாகும். அவருது குடும்பம் வறுமையால் தள்ளாடியது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டுக்கு வரைவது என்றால் கொள்ளை ஆசை. ஆனால் வரைவதற்கு தாள் வாங்கி தரக்கூடாத முடியாத அளவுக்கு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதனால் ஜேம்ஸ் வாட் தனது வீட்டின் தரையில் ஆசை தீர வரைந்து வரைந்து பார்ப்பார். வட்டங்களும், சதுரங்களும், முக்கோணங்களும் கொண்ட கணிதத் தொடர்பான படங்களையே அவர் அதிகமாக வரைந்தார்.
ஜேம்ஸ் வாட் பிறந்ததிலிருந்தே உடல் நலமின்றியே இருந்தார். அவர் எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் ஜேம்ஸ்வாட்டின் நிலை மிகவும் மோசமாகும். அந்த சமயங்களில் அவரது அன்னையார் அவரைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. அடிக்கடி உடல்நலம்பாதிகப்ப்டதால் வாட் ஒழுங்காகப் வாட்டால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால் அவர் தனது அன்னையாரிடத்திலேயே பாடங்களைப் படித்தார்.
பள்ளிக்கு சென்ற நாட்களில் ஜேம்ஸ்வாட்டிற்கு ‘geometry’ என்ற கணிதப் பகுதியினை அதிக ஆர்வத்துடன் கற்றார். அவர் பிந்நாளில் பொறியியலில் சிறந்து விளங்குவதற்கு அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ஜேம்ஸ்வாட்டின் அரிய கண்டுபிடிப்பு
இவருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்பேது அவரது தாயார் காலமானார். இவரது தந்தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாட்டின் தந்தையர் அறிவியல் கருவிகள் செய்வது குறித்து வாட் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர் தனது துன்பத்தையும் பொருத்துக கொண்டு வாட்டை இலண்டனுக்கு அனுப்பினார். லண்டன் சென்ற வாட் மிகுந்தஆர்வத்துடன் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
அதன் பின்னர் ஜேம்ஸ்வாட் 1764-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்குத் திரும்பி வந்தார். அங்கு அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் மக்கள் உடல் உழைப்பினால் மட்டுமே பொருள்களை உற்பத்தி செய்தார்கள். ஒருசில இயந்திரங்கள் மட்டுமே வழக்கத்தில் இருந்தன. அவ்வியந்திரங்களும் மனிதர்களாலேயே இயக்கப்பட்டது.
ஒவ்வொரு வேலையைச் செய்யவும் மக்களுக்குக் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் ஆற்றல்கள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு ஆற்றல் தேவை என்ற தவிப்பு மனித குலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனித குலம் தேடி வந்த அந்த ஆற்றல் நீராவிதான் என்பதை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்து உலகுக்குக் கொடுத்தார்.
தாமஸ் சவேரி என்பவர் ஜேம்ஸ்வாட்டிற்கு முன்பாகவே 1698-ஆம் ஆண்டு நீராவியின் மூலம் தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார். தாமஸ் நியூக்கோமன் என்ற ஆங்கிலேயர் அந்தக் கருவியில் சில மாற்றங்களைச் செய்து அதனைவிடச் சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார். ஆனால் அந்த நீராவி இயந்திரங்கள் எல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்கே ஆற்றல் கொண்டவையாக இருந்தன என்பது நோக்கத்தக்கது.
இந்நிலையில் கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் வாட் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் இருந்த நீராவி இயந்திரத்தில் பழுது ஏற்படவே பல்கலைக்கழ நிர்வாகம் ஜேம்ஸ்வாட்டை அவ்வியந்திரத்தில் உள்ள பழுதினை நீக்கித் தருமாறு கேட்டுக் கொண்டது.
அதனைப் பிரித்துப் பார்த்த ஜேம்ஸ்வாட் அந்தக் கருவியில் அதிகமான குறைகள் இருப்பதை உணர்ந்தார். குறிப்பாக தாமஸ் நியூக்கோமான் உருவாக்கியிருந்த அந்த இயந்திரம் அதிகமான ஆற்றலை வீணாக்கியது.
அறிவியல் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை ஆற்றலும் ஜேம்ஸ் வாட்டிற்குக் கைகொடுக்க தாமஸ் நியூக்கோமான் உருவாக்கி இருந்த நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தார்.
மேலும் 1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றார். ஜேம்ஸ்வாட செய்த அந்த மாற்றங்களால் நீராவி இயந்திரத்தின் ஆற்றல் பன்மடங்கு பெருகியது. ஜேம்ஸ்வாட் அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார். “பசி நோக்கார் கண் துஞ்சார்; எவ்வவத் தீமையும் பாரார்; கருமமே கண்ணாயினார்” என்பதற்கேற்ப புதிய முறையில் நீராவி இயந்திரத்தை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
இளம் வயது முதலே அவர் உடல்நலத்தில் பலவீனமாக இருந்ததால் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஜேம்ஸ்வாட் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். அவரால் நீராவி இயந்திரத்தை உருவாக்கும் வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. “ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி தாளாது உஞற்று பவர்” என்ற வள்ளுவரின் கூற்றிற்கேற்ப ஜேம்ஸ்வாட் நோயையும் பொருட்படுத்தாது முயன்று உழைத்தார். உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மிகவும் ஆற்றல் வாய்ந்த நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
“அளவு கடந்த கஷ்டத்தை
அனுபவிக்கிறாய் என்று
வருத்தம் அடையாதே…..!
உனக்காக எல்லையில்லாத
சந்தோஷம் காத்திருக்கும்
கவலைப்படாதே….!”
என்பதற்கேற்ப நோயினால் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ்வாட் அதனையும் தாங்கிக் கொண்டு தன்னுடைய முயற்சியில் முன்னோக்கிச் சென்றதால் தமது முயற்சியில் உலகம் வியக்க வெற்றி பெற்றார். தனக்கு உடம்புக்குச் சுகமில்லைன்னு ஜேம்ஸ்வாட் பேசாம இருந்திருந்தார்னா அவருனால இத்தகைய அரிய கண்டுபிடிப்பக் கண்டுபிடிச்சிருக்க முடியுமா…? சொல்லுங்க…முடியாதுல்ல..
இப்ப கஷ்டம்னா அது நிரந்தரமில்லை. அது தற்காலிகந்தான்னு நெனச்சுக்குங்க.. பிரச்சனைகளோ, துன்பங்களோ வந்துவிட்டதேன்னு புலம்பாதீங்க…வருத்தப்படாதீங்க.
பிற கண்டுபிடிப்புகள்
ஜேம்ஸ்வாட் நீராவி இயந்திரத்தை மட்டுமல்ல வேறுபல கருவிகளையும் கண்டுபிடிச்சாரு. பத்து வாட்ஸ், இருபது வாட்ஸ் அப்படீன்னு நாம சொல்றோம்ல. இந்த மின் அளவீட்டு முறையக் கண்டுபிடிச்சவரும் ஜேம்ஸ்வாட்தான். ஜேம்ஸ்வாட் மின் அளவீட்டு முறையைக் கண்டுபிடிச்சதாலே அவரோட பெயரையே வைத்து அவரை அறிஞர்கள் பெருமைப்படுத்தினர். ‘Horsepower’ (குதிரைத்திறன்) என்ற அளவு முறையைப் பற்றிக் உலகமே சொல்லிக்கிட்டு இருக்குதுல்ல… அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் ‘Horsepower’ என்ற அளவீட்டு முறை என்பது நோக்கத்தக்கது.
மேலும் ஜேம்ஸ் வாட் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் ‘centrifugal governor’ என்ற கருவியையும், ‘pressure age’ என்ற அழுத்தமானியையும் கண்டுபிடித்தார். எதிரிடை இயக்கத்தை (Reciprocal Motion) ஒரு சுழல் இயக்கமாக (Rotary Motion) மாற்றுவதற்கான பல்லிணைப்புத் தொகுதிகளையும் 1781 –ஆம் ஆண்டில் வாட் கண்டுபிடித்தார். இந்தச் சாதனத்தின் மூலம் நீராவி எஞ்சினின் பயன்பாடுகள் வெகுவாகப் பெருகின. 1790 – ஆம் ஆண்டில் அழுத்த அளவி (Pressure Guage) ஒன்றைக் கண்டு பிடித்தார். பொருளளவு, விசை வேகம், தொலைவு முதலியவற்றினைப் பதிவு செய்து அதனைச் சுட்டிக் காட்டும் கருவி (Indicator) ஒன்றையும் ஜேம்ஸ்வாட் கண்டுபிடித்தார். நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் (Throttle-Valve) ஒன்றையும் வாட் கண்டுபிடித்தார்.
செல்வந்தராதல்
இவ்வாறு பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஜேம்ஸ்வாட் மேத்யூ போல்டன் என்ற பொறியாளருடன் கூட்டு சேர்ந்து நீராவி இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் அதிக லாபம் ஈட்டித் தந்ததால் வறுமையில் வாழ்ந்த ஜேம்ஸ்வாட் மிகபபெரிய செல்வந்தரானார். இவ்வாறு மனித குலத்திற்குப் பெரிதும் பயனுள்ள பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சு மனித குல வளர்ச்சிக்கு அடிததளமா விளங்கி, உலகின் தொழில் வளர்ச்சிக்குத் தனது மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த ஜேம்ஸ் வாட் இங்கிலாந்தில் 1819-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 19-ஆம் நாள் தமது 83-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகளால உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். கடைக்குச் சென்று பத்து வாட்ஸ் பல்ப், பதினைந்து வாட்ஸ் பல்ப் தாங்கன்னு உலகத்துல ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளுக்கேற்ப மின்விளக்குகளை வாங்கிக்கிட்டுத்தான் இருக்காங்க… அவங்க அப்படி வாங்கறபோதெல்லாம் வாட் வாட் என்று ஜேம்ஸ்வாட்டோ பெயரைச் சொல்லிக்கிட்டே இருக்கறாங்க. “பேருக்கு வாழ்வதைவிட நல்ல பேரோட வாழ்றது” எவ்வளவு சிறப்புப் பாருங்க…. உலக மக்கள் அத்தனை பேரும் ஜேம்ஸ்வாட்டோட பேரைச் சொல்லும்போது அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உள்ளுணர்வு நம் உள்ளத்தில் தோனுதுல்ல….
“விதைகள் கீழ்நோக்கி
எறியப்பட்டால்தான்
விருட்சங்கள் மேல்
நோக்கி வளரும்….
விழும்போது விதையென விழு…….!
எழும்போது விருட்சமாய் எழு…….!”
இந்தக் கவிதையை மனசுல வச்சுக்கோங்க…மனசுல ஒரு ஊற்றுப் பிறக்கும்.
பாத்துக்குங்க….. “வறுமையாளனாகப் பிறப்பது தவறு இல்லை. ஆனால் வறுமையாளனாக இறப்பதுதான் தவறு”. “இயலாமை தவறன்று; முயலாமைதான் தவறு”. இதை ஒவ்வொருவரும் உணரணும். ஜேம்ஸ்வாட் வறுமையில பிறந்து நோயோடயே போராடினாலும் தனது இலட்சியத்தை அடைந்தார். வறுமையாளராவே இறக்கல. மிகப்பெரிய செல்வந்தராகித்தான் இறந்தார். இதையெல்லாம் பாக்குறப்போ நம்மோட துன்பங்கள் எல்லாம் பெரிசாத் தெரியாது… துன்பங்களையும் துயரங்களையும் தூக்கித் தூர எறிங்க…இலக்கை வரையறுத்துக்கோங்க.. தெளிவா இலக்கை நோக்கிப் பயணமாகுங்க…..அப்பறம் என்ன….நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்….இது உண்மை.
வீட்டிலோ வறுமை…படிப்பின் மீது ஆர்வம்…இருவர் படிக்க வேண்டும். தானும் தங்கையும் படிக்க வேண்டும்…என்ன செய்வது…இப்படிப்பட்ட சூழலில் ஒரு வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையில் சேர்ந்து தனது சகோதரியைப் படிக்க வைத்து அவள் படித்து முடித்த பின்னர் தான் படித்தார்….ஒரு பெண்மணி… அவர் படிக்க இடம் கேட்டபோது ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகம் அவருக்கு இடம் கொடுக்கலை….என்னங்க அப்படிப் பாக்குறீங்க… இது உண்மைங்க…..
அவரை ஒளி மங்கை, வைர மங்கை, இருளுக்கிடையே ஒளியைக் கண்டவர் என்றெல்லாம் உலகம் புகழ்ந்தது…யாரு தெரியுதுங்களா…? அவரப் பற்றி இன்னுமொரு குறிப்புத் தர்ரேன்…இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்…சொல்லுங்க பார்ப்போம்….என்ன மலைச்சுப் போயிட்டீங்க…அந்த ஏழை யாருன்னா கேக்குறீங்க..அடுத்தவாரம் சொல்றேன்…. (தொடரும்…………..26)
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25