This entry is part 2 of 10 in the series 4 அக்டோபர் 2026

பாலமுருகன்.லோ

“கடவுளே, ஏனப்பா எங்களோட வாழ்வில மட்டும் இத்தனைப் போராட்டம்? ஒண்ணா, ரெண்டா? தொடர்ந்து போராட்டமாவே இருந்தா! ஒருத்தனால எவ்வளவுதான் சமாளிக்க முடியும்?

எங்களையும்தான் எங்க பெத்தவங்க வளர்த்தாங்க, நாங்களும் அப்படியே வளர்ந்துட்டோம். ஆனா இப்ப இருக்கிற இளசுங்களை, குறிப்பா இந்த அடலசெண்ட் ஏஜுல இருக்கிறவங்களை வளர்ப்பது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்குது.

இப்ப நினைச்சுப் பார்த்தாலும் ஆச்சர்யமாத்தான் இருக்கு. முப்பத்தைந்து, நாற்பது வருடம் முன்னர் நம்மை பெத்தவங்க நம்மள நடத்திய விதத்தையும், இப்ப நாம நம்ம புள்ளைங்ககிட்ட நடந்துகிற விதத்தையும் பார்த்தா, நாமதான் பரிதாப நிலையில இருக்கிறோம் என்ற ஒரு பலத்த யோசனையில் மூழ்கியிருந்த சிவாவிற்கு,

எங்க வீட்டுக்காரிகிட்ட கேட்டா ஏதாவது நல்ல விதமா பதில் வரும் என்று எண்ணி, அவளிடத்தில் கேட்டான் மனதில் இருப்பதை.

வள்ளி உடனே பதில் அளித்தாள்.

“ஏங்க, எந்த காலத்துல இருக்கீங்க? காலம் பழைய மாதிரி இல்ல. இப்ப இருக்கிற உலகத்துக்கு ஏத்த மாதிரி நாமும் ஓடணும். இல்ல, நாம் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோமுன்னு பேசினேங்கன்னா சரிப்பட்டு வராது” என்றாள் வள்ளி.

“இல்லடி, எனக்கென்னவோ பயமாவே இருக்கு. இந்த வயசு படிக்க வேண்டிய வயசு…”

“ஏங்க, என்னங்க பேச்சு? படிக்க வேண்டிய வயசுல அவ படிச்சுட்டுத்தானே இருக்கா. என்ன புதுசா மாத்தத்தைப் பார்த்திங்க அவளிடத்தில? அப்படி என்ன பண்ணீட்டா நம்ம வைஷாலி?”

“இல்லடி, வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. எனக்கு ஒண்ணு புரியவே இல்ல. நீயோ ஒரு பொண்ணு, உனக்கு நான் படுற அதே பயம், வேதனையெல்லாம் இல்ல?”

“ஏங்க, எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டே இருந்தா இப்படித்தான். நெருப்புன்னா சுடவாப்போறது. புள்ளைங்களைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணுமுங்க. அவங்ககிட்ட இத செய்யாத, அதைச் செய்யாத. இங்க போகாத, அங்க போகாதன்னு எப்பப் பாத்தாலும் சொல்லிக்கிட்டே இருந்தா! அதுங்களுக்கு சளிப்பு தட்டீடுங்க.”

“பின்ன என்ன பண்ணச் சொல்லுற? அவ இழுக்கிற இழுப்புக்கு நம்மையும் ஓடச்சொல்லறையா? எல்லாம் தெரிஞ்சுத்தான் பேசுறையா நீ?” என்றான் சிவா.

“ஏங்க, நானொண்ணும் யோசிக்காம சொல்லுல. அவ எங்கப் போறா, யாருக்கிட்ட பழகுறான்னு ஒரு கண்ணு வச்சுக்கிட்டேத்தான் இருக்கேன்.”

“வள்ளி, இப்பெல்லாம் குரூப்பு ஸ்டேடிசுன்னு வாரக் கடைசியில சனி கிழமையினா போதும் போறா, இரவு அங்கேயே தங்குறா. காலையிலத்தான் வீட்டுக்கு வர்றா வைஷாலி.

“என்னையும் கேட்க விட மாட்டேங்கிற, நீயும் அவகிட்ட கேட்க மாட்டேங்கிற.

“ஏண்டி, உண்மையைச் சொல்லணுமுன்னா, எனக்கு அடி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு இப்பெல்லாம். ஒவ்வொரு வாரமும் அவ வீட்டைவிட்டு வெளியே போயிட்டு வரவரைக்கும் என் வயித்துல புளியைக் கரைக்குது.”

“நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம். நம்ம பொண்ணு ஒண்ணும் தப்புத்தண்டாவுல இறங்க மாட்டா. நீங்க வேணுமுன்னா பாருங்க, அவ கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டா.”

“ஏண்டி, நீதான் மெச்சிக்கணும் இந்தக் காலத்து புள்ளங்களை. சரி, நீ சொல்லுற மாதிரி நான் ஒண்ணும் அவகிட்ட கேட்கல இதைப்பத்தி. எல்லாம் உன் சமாச்சாரம், நீயே பாத்துக்கோ, என்ன?”

“சரி, இப்ப நான் என் வேலையைப் பார்க்கிறேன். இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசினா ஒரு விமோச்சனம் கிடைக்குமுன்னு தோணுனதால பேசினேன். ஆனா? நீ என்னடானா, அவ வழியிலேயே போயி அவளை நம் வழிக்கு கொண்டு வரணுமுன்னு சொல்லுற. அம்மாவாச்சு, பொண்ணாச்சு, இடையில இந்த அப்பாவுக்கு என்ன வேலை?” என்று சொல்லி ஹாலில் வந்து உட்கார்ந்தான் சிவா.

வீட்டு வாசலில் வைஷாலியின் வண்டி வந்து நின்றது. வண்டியிலிருந்து அவள் இறங்குவதற்கு முன்னர், வண்டியின் பின் இருக்கையிலிருந்து ஒரு பையன், அவளுடைய ஒத்த வயது இருக்கும் அவன், இறங்கினான் முதலில். பின் வைஷாலி வண்டியிலிருந்து இறங்கினாள்.

சிவாவிற்கு இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு இருப்புக்கொள்ளல. “வள்ளி, வள்ளி”ன்னு கூப்பிட ஆரம்பித்தான்.

“ஏங்க, இப்படி கத்துறீங்க? எங்க வெளியிலவா இருக்கேன்? சமையல்கட்டுலதான் இருக்கேன். கொஞ்சம் மெதுவாத்தான் கூப்பிட்டா என்னவாம்?”

“அடியே, வாடி சீக்கரம், வந்து இந்தக் காட்சியைப் பாரு” என்றான்.

“என்ன காட்சி? என்ன, அவ வந்துட்டாளா? அதான் வண்டி சத்தம் வச்சே கண்டுபிடிச்சிடலாமே! என்னவாம்?” என்று பேசிக்கிட்டே ஹாலுக்கு வந்தவள், தன் மகளுடன் வந்த பையனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்தாள். பின் சுதாரித்துக்கொண்டு கணவனிடம்,

“ஒண்ணும் பேசாதிங்க, காரியத்தைக் கெடுத்திடாதீங்க. கண்டதையும் பேசி…” என்றாள்.

“அம்மா, அப்பா” என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தனர் வைஷாலியும் அந்தப் பையனும்.

இருவரும், “வாம்மா வைஷாலி, காலேஜு முடிந்ததா?” என்று கூறிக்கொண்டே அந்தப் பையனைப் பார்த்தனர்.

“ம்மா, அப்பா… என்ன இப்படி வாய் அடைச்சுப்போய்ப் பார்க்கிறீங்க? இவனா? இவன் பெயர் வர்கீஸ். ஒரே கிளாஸ். எம்மா, அப்பா, இவன்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட்டு” என்றாள்.

இவர்களும் உடனே, “வாப்பா, வந்து இப்படி உட்காரு” என்றனர்.

உடனே வள்ளி, வர்கீஸிடம், “ஏம்பா தம்பி, நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸா?” என்றாள்.

வர்கீஸிடமிருந்து, “ஆமாம் ஆண்டி” என்ற பதில் வந்தது.

“இந்த ஊராப்பா?” என்றாள் வள்ளி.

“இல்ல ஆண்டி, சொந்த ஊர் கேரளாவில் கொச்சி” என்றான்.

“அப்படியா! அப்ப இங்க காலேஜு ஹாஸ்டலுல தங்கித்தான் படிக்கிறையா?”

“ஆமாம் ஆண்டி” என்றான் வர்கீஸ்.

“எப்பா, இவளுக்கும் படிப்புல ஏதாவது சந்தேகமுன்னாச் சொல்லிக்கொடுப்பா!”

“அதுக்கென்ன ஆண்டி, கட்டாயம் சொல்லித்தாரேன். இன்னும் ஒரு வருஷம் இருக்கு காலேஜு முடிக்க. அப்புறம் எனக்கு எங்க வேலை கிடைக்குமுன்னு தெரியல, இவளுக்கு எங்கு வேலை கிடைக்குமுன்னு தெரியல” என்றான்.

“என்னப்பா, பெரிய தூரம்?” என்றார் சிவா. “ஒரு நாட்டுல இருந்தா இன்னைக்கு கூப்பிட்டா நாளை வந்திடலாம். அவ்வளவுதானே. வெளிநாட்டில் வேலை என்றால் தான் யோசிக்கணும்” என்றார் சிவா.

“ஆமாம் அங்கிள், நீங்க சொல்லறது சரித்தான்” என்றான்.

“அங்கிள், ஆண்டி, உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு விஷயம் பேசத்தான் இங்க நான் வந்தேன்” என்றான் வர்கீஸ்.

இதை கேட்டவுடன் வள்ளியும் சிவாவும் தங்களது கண்களை விரித்து அவனைப் பார்த்தனர். ஒரு நிமிடம் ஏதும் பேசவில்லை. ஒரே மௌனம் நிலவியது அந்த ஹாலில்.

பின் மெதுவாக இருவரும் எச்சிலை முழுங்கிய பின்,

“என்னப்பா விஷயம்? ஏதாவது உதவி வேணுமா?”

“இல்லைங்க, உதவியெல்லாம் வேணாமுங்க.”

“என்னோட லைஃப்பைப் பத்தி இல்ல, எங்க லைஃப்பைப் பத்தி” என்று வைஷாலியின் பக்கம் திரும்பினான். வைஷாலி அவனைப் பார்த்து ஒரு மெள்ளப் புன்னகையை உதிர்த்தாள்.

சிவாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே அவனைப் பார்த்து, “இருப்பா, நான் இப்ப வந்துடறேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்” என்று சொல்லி, வீட்டினுள் இருக்கிற ரெஸ்ட் ரூமுக்கு வந்து, தன் தலையைத் தன் கையால் குத்திக்கொண்டான்.

“இதுக்குத்தான் நான் முன்னமே சொன்னேன். யாருக்கேட்டா என் பேச்சை? இப்பப் பாரு பூதாகாரமா வெடிக்குது. அப்பவே நாம இவளை ஒழுங்கா கண்காணிச்சிருந்தா, இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, தண்ணீரை முகத்தில் நாலு, ஐந்து முறை ஊற்றிய பின் முகத்தைத் துடைத்துக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

“ஆண்டி, அங்கிள், வைஷாலி என்கிட்ட ஒண்ணு சொன்னா?”

இருவரும், “என்னச் சொன்னா எங்க பொண்ணு? உடனே சொல்லுப்பா?” என்றனர்.

“இல்ல, இங்க இந்த வீட்டில் இவளைப் பத்தி ஏதோ ஒரு பயத்துலேயே இருக்கிறீங்கன்னு சொல்லுறா.”

“என்ன? பின்ன இருக்காதா? பொட்டப்புள்ளையாப் போயிட்டா. வெளியில போயிட்டு வீட்டுக்கு வர வரைக்கும் பயமாத்தான் இருக்கும்.”

“ஏம்பா, இதெல்லாம் உனக்கு ஒரு குழந்தை பிறந்து, அதை வளர்த்து, வெளியே போயிட்டு வரும்போது புரியும்” என்றனர் இருவரும்.

“ஆண்டி, அங்கிள், தப்பா நினைச்சுக்காதீங்க. காலமும் வேகமா சுத்துது. நீங்க அனுபவிச்சுத் தெரிஞ்சுகிட்டதை நாங்கப் பார்த்தே தெரிஞ்சுகிடறோம்.”

“என்னப்பா சொல்லுற?”

“இல்ல, நீங்க பயப்பட வேண்டாம். அவ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு அவளுடைய சிநேகிதி வீட்டுக்குத்தான் போயி குரூப் ஸ்டெடிஸ் பண்ணுறா. இதைச் சொல்லறதுக்குத்தான் நான் இங்க வந்தேன்” என்றான்.

இருவர் வயித்திலும் பாலை வார்த்தது போல இருந்தது.

மீண்டும் பேச ஆரம்பித்தான் வர்கீஸ்.

“இதையும் சொல்லிட்டு இன்னும் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணுமுன்னுத்தான்” என்று இழுத்தான் பேச்சை வர்கீஸ்.

தூக்கி வாரிப்போட்டது வள்ளிக்கும் சிவாவிற்கும்.

“அதுவந்து, கடைசி செமஸ்டரில் இருக்கிறோம். அடுத்து வேலைத்தான். யாருக்கு எங்கன்னு தெரியல. ஆனா…”

“என்னப்பா ஆனா!”

“இல்ல அங்கிள், நாங்க ரெண்டு பேரும் வரும் காலங்கள்ல ஒண்ணா இருக்கணுமின்னு நினைக்கிறோம்.”

“யாருப்பா? ஒண்ணும் புரியலையே எங்களுக்கு. புரியும்படிச் சொல்லுப்பா” என்றனர்.

“இல்ல, உங்கப் பொண்ணு…”

“எங்கப் பொண்ணுக்கு என்னப்பா?”

“காதலுன்னு சொல்ல முடியாது. நல்ல நட்பாகத்தான் பழகினோம் காலேஜுல. ஆனா, இப்ப நாலு வருஷம் முடியப் போகுது. பிரியும் நேரம் வரும்போதுதான் மனசுல ஒரு சிறிய வலி வருது.

“ஆண்டி, அங்கிள், நாங்க பீச்சு, பார்க், சினிமான்னு எங்கும் சுத்துனது இல்ல. காலேஜுல பார்த்துக்கிறதோட அவ்வளவுத்தான்.

“இப்ப உங்க பொண்ணு என்னோட பெட்டர் ஹாப்பா வந்தா, என் வாழ்க்கை நல்லா இருக்குமுன்னு நினைக்கிறேன். இதைப்பத்தி அவளிடத்துல கேட்டேன். அவ எங்க அப்பா, அம்மாதான் ஒரு முடிவு எடுக்கணுமுன்னு சொல்லீட்டா. அதான் அவளோட இங்க உங்க வீட்டுக்கு வந்தேன்” என்றான்.

“ஏம்பா, நாங்க வேற, நீங்க வேற…”

“அங்கிள் என்ன சொல்ல வறீங்க? ஜாதி மதமா?”

“ஆமாம் அங்கிள், நாங்க வேற மதம் தான். ஆனா உங்க பொண்ணை நல்லப் பார்த்துப்பேன். உங்களுக்கு ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும். உங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு நல்லாவேப் பார்த்துப்பேன் அவளை” என்றான் வர்கீஸ்.

“இல்லப்பா, நாங்க அதுக்கு சொல்லுல. உங்க அப்பா அம்மா?”

“அவங்க என் விருப்பத்துக்கு எதிராக நிற்க மாட்டாங்க. கவலையில்லை. இப்ப உங்க பதில் மட்டும் இருந்தா போதும்.”

“தம்பி, சர்வ சாதாரணமா சொல்லிட்டீங்க. இதுல எவ்வளவு சிக்கல் இருக்கு தெரியுமா? ஒரே மதமா இருந்தாக்கூட சில நேரத்துல சரியா அமையறதில்ல. பத்து பொருத்தமும் பார்த்துக் கட்டின கல்யாணமெல்லாம் கடைசியில நடுவீதிக்கு வந்த கதையெல்லாம் இருக்குப்பா. இதையெல்லாம் எடுத்தமா, கவுத்தமானு பேசிட முடியாது. இதுல நீங்க வேற மதம். அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

“முதல்ல சொந்தக்காரங்க வாயைக் கட்டணும். அப்புறம் ஊர் வாயை அடைக்கணும். இதெல்லாம் என்ன உடனே நடக்குற காரியமா?”

“சரிப்பா, பார்ப்போம்” என்றனர் இருவரும்.

வர்கீஸும், “நீங்க ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க, நாங்க காத்திருப்போம்” என்று சொல்லிவிட்டு வைஷாலியைப் பார்த்தான் வர்கீஸ். அவளும் அதை ஆமோதிக்கிற மாதிரி ஒரு விதத்தில் தலையை அசைத்தாள்.

இதைப் பார்த்த வள்ளி, “கண்டிப்பா, இதை இப்படியே விட்டுட முடியாது. நாம சிவாகிட்டச் சொல்லி முதலில் இவருக்குப் புரியவைக்கணும்” என்று நினைத்தாள்.

இதற்குப் பிறகு வர்கீஸ் அவர்களது வீட்டைவிட்டு வெளியேறினான்.

இரவு உணவு நேரம் வந்தவுடன் மூவரும் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன் வைஷாலி அவளுடைய படுக்கை அறைக்குச் சென்றாள்.

இவர்கள் இருவரும் அவர்களது அறைக்குச் சென்றனர். வள்ளி உள்ளே வந்தவுடன் கதவைச் சாத்தினாள். சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஃபேனின் ஸ்விட்சை அமுத்தினாள். பின் தண்ணிய கொஞ்சம் குடித்துவிட்டு, மெத்தைக்கு வந்து அமர்ந்தாள்.

“ஏங்க, என்னங்க?” என்றாள் வள்ளி.

“என்னடி?”

“இல்ல, ஏதாவது யோசிச்சிங்களா?”

“எதப்பத்திடி சொல்லுற?”

“நம்மப் பொண்ணைப்பத்தித்தான்.”

“என்னத்த சொல்லச் சொல்லுற? இது ஒத்து வருமா? முதல…”

“ஏங்க, நீங்க ஒண்ணு யோசிங்க. நம்ம பொண்ணுக்கு அம்மா, அப்பா முக்கியமுன்னு தோனுனதுனால நம்மலிடமே முடிவெடுக்கும் பொறுப்பை கொடுத்துட்டா.

“ஏங்க, அவ ஆசைப்படுறா. நீங்க கவனிச்சீங்களா அவ முகத்தை?”

“ஆமாம் கவனிச்சேன். அதுகென்ன இப்போ?”

“இல்ல, இந்தக் காலத்துல பெத்தவங்களுக்கு தெரியாம ஓடிப்போயி கல்யாணம் செய்யறவங்க மத்தியல இவங்க ரெண்டு பேரும் வித்தியாசமா தெரியல.

“நாம ஏன் ஒரு தடையா இருக்கணும் அவ கல்யாணத்துல?” என்றாள்.

“அப்படியா சொல்லுறா?” என்று சுவரில் மாட்டியிருந்த மரியம் மளிகை தினக் காலண்டரைப் பார்த்தபடி இருந்தான் சிவா.

அந்தப் படத்தில், “தட்டுங்கள், திறக்கப்படும்; கேளுங்கள், கொடுக்கப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது.

-பாலமுருகன்.லோ✍️

Series Navigationதாத்தாவின் வீடு  = வாசிப்பு அனுபவ பகிர்வுஐந்து சதவீதம்