This entry is part 7 of 7 in the series 11 அக்டோபர் 2026

பாலமுருகன்.லோ

“லைட்டை அணைடி, அம்பிகா,” என்றான் பாஸ்கர்.

“ஏங்க, இருங்க. மேஜை மேல தண்ணி வச்சிருக்கேன். ஒரு மொடக்கு குடிச்சுட்டு லைட்டை அமுத்துறேன்,” என்றாள் அம்பிகா.

“சரி சரி, உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். அதான் சொன்னேன்.”

“ஏன், அதை லைட்டைப் போட்டுக்கிட்டே பேசக்கூடாதா? என்ன?”

“அப்படி இல்லடி. ஹால்ல இருந்து இந்த ரூமை யாராவது பார்த்தா, ‘இன்னும் லைட்டு எரியுது, என்ன பேசுறாங்க இவங்க?’ன்னு தோணுமா இல்லையா?”

“போங்க, நீங்களும் உங்க யூகமும். யாரும் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க. அதுவும் போக, நமக்குக் கல்யாணம் ஆகி பல வருஷம் ஆச்சு. என்ன, இப்பத்தான் கல்யாணம் ஆன மாதிரி நினைப்பு மனசுல!”

“சரி, என்ன சொல்ல வந்தீங்க? விரசா சொல்லுங்க. இப்பவே மணி பதினொன்னு ஆகுது. காலையில சீக்கிரமே எழுந்து வீட்டு வேலையைப் பார்க்கணும். எங்காவது ஒரு நாள், ‘இந்தாடி, நான் உன்கூட ஒத்தாசையா ஏதாவது வேலை செய்றேன்’ன்னு வந்திருக்கீங்களா? இல்லையே. நல்லா குறட்டை விட்டுத் தூங்கத் தெரியும், ஆறரை மணி வரைக்கும்.”

“ஏண்டி, இந்த நேரத்துல என்னை வம்புக்கு இழுக்குற? சரி, சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன்.

“அம்பிகா, என் தம்பி புள்ளைங்க இருக்காங்க இல்ல…”

“ஆமாம், நம்ம வீட்டுலதான் இரண்டும் இருக்குதுங்க. அதற்கென்ன இப்போ?”

“நல்ல வாழ்வாங்கன்னுதான் நினைச்சு என் தம்பிக்குப் கல்யாணத்தை முடிச்சு வச்சேன். ஆனா பாரு, இப்படி இரண்டு பேரும் அல்பாயுசுல போவாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல.”

“நல்ல வேளை இந்த இரண்டையும் கூட்டிக்கிட்டு போகல. இல்லேனா என்ன ஆயிருக்கும்? மொத்தமா குடும்பத்தோட போயிருப்பாங்க எல்லாரும்,” என்றான் பாஸ்கர்.

“சினிமா போனது குத்தமா?” என்றாள் அம்பிகா.

“இல்லடிம்மா, சினிமா போனது குத்தமில்ல. குறிப்பா, விமலா வண்டியில உட்காரும்போது ஜாக்கிரதையா உட்காரணுமுல்ல. சுதாகரும் சரி, அவ விமலாவும் சரி, தலைக்கவசமெல்லாம் போட்டிருந்தாங்க. ஆனா என்ன, விமலாவோட உடுப்பு ஓடும் சக்கரத்துல மாட்டி, ரெண்டு பேரையும் விழவைத்துவிட்டது.

“எப்படி தொழிற்சாலையில் உடுப்பு இப்படித்தான் போடணும், சரியான விதிமுறைகள் பின்பற்றினாதான் இயந்திரத்தை ஓட்ட முடியுமுன்னு ரூல்ஸ் வச்சிருக்காங்களோ, ஹெல்மட்டை எப்படி கட்டாயமாக்கினாங்களோ, அப்படி இருசக்கர வண்டி ஓட்டுபவர்களும் சரியா உடுப்பு அணிஞ்சிருக்கணுமுன்னு ஒரு ரூல்ஸ் இருந்தா நல்லாத்தான் இருக்கும்.”

“நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கு. இப்ப பாருங்க, அவங்க, அதுவும் குறிப்பா விமலா, ஒழுங்காக உடுப்பைப் பறக்கவிடாமல் இருந்திருந்தா, இன்னேரத்துக்கு இந்தப் புள்ளைங்களோட ஆடிப் பாடி விளையாடிட்டிருந்திருக்கலாம்.”

“ஆமாம்டி, அதையேத்தான் நானும் சொல்ல வந்தேன். நீ முந்திக்கிட்ட. இல்ல, ஏற்கனவே நமக்கு மூணு, இப்ப இந்த இரண்டு சேர்ந்தா அஞ்சு புள்ளைங்க ஆகிடும்.”

“ஏண்டி, நம்ம அஞ்சு பேருக்கே கண் முழியெல்லாம் பிதுங்கி வெளியே வந்துடும்போல! மாசம் வாங்குற சம்பளம் பத்தல. என்ன பண்ணணுமுன்னு தெரியல. இதுல வேற அவன்பாட்டுக்கு வீடு மேல கடன் வாங்கி வச்சிருக்கான்.”

“ஏங்க, அதான் இன்சூரன்ஸ் இருக்கே?” என்றாள் அம்பிகா.

“எங்க, அவனுங்க இந்த ரூல்ஸ் அந்த ரூல்ஸுன்னு நாள் கடத்தாம ஒழுங்கா கொடுத்தாங்கன்னா பெருசு, பார்ப்போம். இந்தப் பசங்களை நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு. கூடவும் வச்சுக்க முடியல, வெளியவும் விடமுடியல. என்ன செய்யறதுன்னு தெரியலேன்னுத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சுகிட்டு இருந்தேன். இதைப் பத்தி பேசணுமுன்னுத்தான் உன்ன லைட்டை அமுத்தச்சொன்னேன்.”

“அட, இப்பவாவது சொன்னீங்களே! ஏன், நீங்கதான் பார்த்துக்கணும். பாவம் அதுங்க.”

“ஏண்டி, நான் இல்லேன்னு சொல்லல. ஏன் உனக்குத் தெரியாதா? என்னத்தான் இரத்தபந்தம் இருந்தாலும், வாயும் வயிறும் ஒண்ணு இல்லேல. குறைஞ்சது இன்னும் பதினைந்து வருஷம் நாம இதுகளையும், நம்ம புள்ளங்களையும் சேர்த்துப் பார்க்கணும். அம்மா அப்பா கூட இருந்தாலாவது கொஞ்சம் அனுசரணையா இருக்கும். அவங்களும் உயிரோடு இல்ல.

“என்ன, எனக்கு இருக்கிற முன்கோபத்துக்கு அந்தப் புள்ளைங்களை எங்காவது ஒரு சுடுசொல் சொல்லிடுவேனோன்னு எனக்குப் பயமா இருக்குடி.

“நம்ம புள்ளைங்கன்னா, ‘அப்பா இப்படித்தான் ஏதாவது கத்துவாரு, அப்புறம் மறந்துடுவாரு’ன்னு நினைச்சுக்குவாங்க. ஆனா, என் கவலையெல்லாம் அந்த ரெண்டு புள்ளைங்களும் என்னை ஒழுங்காகப் புரிஞ்சுக்கலேன்னா, அப்புறம் தேவையில்லாமல் மனஸ்தாபம்தான் உண்டாகுமுல்ல நம்ம மத்தியில.

“அதுங்க மனசுல, ‘ஏன் இந்தப் பெரியப்பா இப்படி நம்மள நடத்துறாரு?’ன்னு நினைச்சுட்டா அவ்வளவுதான். நாம இவ்வளவு கஷ்டப்படுறது எல்லாம் வீணாகிடுமில்ல? எல்லாத்தையும் யோசிக்க வேண்டியிருக்கு அம்பிகா. இப்பெல்லாம் படுத்தா தூக்கம் வரமாட்டேங்கிறது.

“ரொம்பச் சின்ன குழந்தைகளா இருந்துட்டா பரவாயில்லை. அந்த ரெண்டுக்கும் புரிஞ்சுகிடற வயசு. அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.”

“ஏண்டி, இப்படிப் பண்ணினா எப்படி? நாளை காலையில அதுங்க ரெண்டையும் கூப்பிட்டு, நம்முடைய ரெண்டையும் கூப்பிட்டு, ஹால்ல உட்காரச் சொல்லிப் பேசிட்டா என்ன?”

“ஏங்க, இது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. நாளை காலையில வேணாம், சாயந்திரமா மாத்திக்கங்க. அதுங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுக்கிற நேரம். நாமும் கொஞ்சம் பதட்டமில்லாம பேச முடியும்.”

“ஆமாடிம்மா, நீ சொல்றதுலயும் ஒரு நாயம் இருக்கு. நாளை சாயந்திரமே பேசிக்கலாம். சரி, இப்ப படுக்கலாமா?” என்றான் பாஸ்கர்.

“சின்ன விஷயமுன்னு சொல்லிப் பார்த்தா மணி ஒண்ணு ஆகுது. இதுதான் சின்ன விஷயமா? சரி, மீதியெல்லாம் நாளை பேசிக்கலாம். சும்மா குறட்டை விடாம தூங்குங்க. ஏற்கெனவே ரொம்ப லேட்டாயிடுச்சு. தலை வேற வலிக்கும், உங்க குறட்டை சௌண்டு அதிகமாச்சுன்னா, அப்புறம் என் தூக்கமே போயிடும்.”

“சரிச் சரி, படுப்போம். நாளை பேசலாம்,” என்று இருவரும் படுக்கையில் படுத்து உறங்கினர்.

அடுத்த நாள் எப்போதும் போல விறுவிறுப்பாக ஆரம்பித்தது. பிள்ளைகள் ஸ்கூலுக்குக் கிளம்பின, பாஸ்கரும் ஆபீஸுக்குக் கிளம்பினான். அம்பிகாவோ அவளது அன்றாட வேலையில் மூழ்கியிருந்தாள்.

சாயந்திரம் நாலு மணி அளவில் பிள்ளைகள் ஸ்கூலிலிருந்து வந்துவிட்டார்கள். வழக்கம்போல் விளையாட்டு நால்வருக்கும் இடையில், பெரியம்மாவிடமிருந்து தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டனர்.

பாஸ்கரும் ஆபீஸில் இருந்து அன்று சீக்கிரமே வந்துவிடவே, சூடாக ஒரு கப் காபி குடித்த பின் நான்கு குழந்தைகளையும் கூப்பிட்டு ஹாலில் உள்ள சோபாவில் அமரச் சொன்னான் பாஸ்கர்.

“என்னப்பா? என்ன பெரியப்பா?” என்று புள்ளைங்க கேட்டுக்கிட்டே வந்து சோபாவில் அமர்ந்தனர்.

“இல்லடா கண்ணுகளா, உங்க நால்வர்கிட்டேயும் கொஞ்சம் பேசணும். அம்மாடி வைஷாலி, உமா, உங்க ரெண்டு பேருக்கும் அப்பாவைப் பத்தி நல்லாவே தெரியும். அதனால், இது வந்து விஷால் மற்றும் வந்தனாவுக்கு முக்கிய சில விஷயங்களைப் புரியவைக்கலாமுன்னு தோணுச்சு. அதான் நானும் உங்க அம்மாவும் ஏன் உங்களிடமே பேசக்கூடாதுன்னு நினைச்சு, உங்களை இப்படி வரச்சொன்னோம்.”

“என்ன பெரியப்பா, சொல்லுங்க,” என்றான் விஷால். அதற்கு வந்தனா ஊம் கொட்டினாள்.

“இல்லடாமா, பெரியப்பா இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதீங்க. நான் நம்ம நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

“பெரியப்பா, இதுவரைக்கும் நீங்க என்னன்னு சொல்லலையே? என்னன்னு சொன்னாதான் தெரியும்,” என்றான் விஷால்.

“கண்ணா, கண்ணம்மா, நான் இவங்களுக்கு எப்படியோ அப்படித்தான் உங்களுக்கும். நீங்க என்ன வேணுமுனாலும் என்கிட்டையோ, இல்ல உங்க பெரியம்மாகிட்டையோ கேட்கலாம்.”

“இதுதான் எங்களுக்குத் தெரியுமே பெரியப்பா,” என்றனர் விஷாலும் வந்தனாவும்.

“என்ன சொல்ல வரேன்னா, அப்பா அம்மா நினைப்பு உங்களுக்கு அடிக்கடி வரும். அதை நான் இல்லேன்னு சொல்லல. ஆனா, அவங்களை நினைச்சு நீங்க ஏங்கிப் போயிடக் கூடாது. நாம ஒரு உண்மையை மனசார ஒத்துக்கிடணும். இப்ப அவங்க நம்மக்கூட இல்லேங்கிறது நிதர்சனம். இதை நாம எல்லாரும் ஏத்துக்கிடணும்.”

“சரிப் பெரியப்பா, அதானே உண்மையும் கூட. இப்ப அப்பாவும் அம்மாவும் இல்லேங்கிறது நாங்க ஏத்துக்கிறோம்.”

“நல்லது. இதை எப்படி மனசார ஏத்துக்கிறீங்களோ, அதுபோல உங்க பெரியப்பாவையும் பெரியம்மாவையும் மனசார ஏத்துக்கிடணும்.

“எங்க ரெண்டு பேருக்கும் எப்பவாவது கோபம் வரும், ஏதாவது வெடுக்குன்னு பேசிடவும் செய்வோம். ஆனா, உண்மையில எங்க மனசுல ஒண்ணும் இல்லேங்கிறதப் புரிஞ்சுக்கணும்.

“வைஷாலி, உமா எப்படியோ, அப்படித்தான் நீங்க ரெண்டு பேரும். இதை ஏன் அழுத்திச் சொல்றேன்னா, ஒரு நாள் நீங்க சொல்லிடக் கூடாது பாரு, ‘பெரியப்பா எங்கள வேற மாதிரி நடத்துனீங்க’ன்னு. அதனாலத்தான்.”

“ஏன் பெரியப்பா, இதை நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா? எங்களுக்கும் புரியும். மனுஷங்கன்னா கோபதாபமெல்லாம் வரும், போகும். அதையெல்லாத்தையும் மனசுல போட்டுப் பூட்டிக்கிட்டாதான் பிராப்ளமே. நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. நாங்க உங்களைப் புரிஞ்சுகிட்டு நடந்துகிடுவோம்,” என்றனர் விஷாலும் வந்தனாவும்.

பாஸ்கரும் அம்பிகாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்தனர். கண்களிலிருந்து கண்ணீர் மெல்லக் கசிந்தது பாஸ்கரிடம்.

அம்பிகாவிடமும் பாஸ்கரிடமும் புன்னகை மலர்ந்தது.

– ✍️

Series Navigationமூங்கை