ஏற்புரை

0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

jeyakanthan

1.

 

பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய்

மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள்.

அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன்

நானா…?

என்னைப் போல் ஒருவனா….?

அந்நியனா….?

விரையும் காலத்தின் புன்முறுவல்

ஒரு கணம் உறையவைக்கிறது.

மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன்.

2.

அன்புக்குரியவர்களே

ஆளுமை நிறைந்தவர்களே….

ஆனாலும் ஒலிபெருக்கி மூலம்

விரயமாக்கப்படும் வார்த்தைகளை எண்ணிக்

கலங்கும் மனது.

அவையெங்கும் இறைபடும் வார்த்தைகளின் மேல்

காலடிகள் அழுந்தப் பதிந்து,

அரைத்து மிதித்து உடைத்து நசுக்கி

எத்தித்தள்ளிப்போகும் காட்சி யென்றுமே

நிலைகுலையச் செய்வது.

என்றுளதோ மீட்சி.

3.

என்னைப் பார்ப்பதற்கென்றே வந்திருப்பவர்கள்

ஒவ்வொருவரும் அட்சர லட்சம்போல்.

இன்று நான் பேசாதுபோனாலும், இல்லை,

இத்தனை நாளுமுரைத்த மொத்தத்திற்காகவும்

கட்டிய தம் கைகளில் தட்டலைத் திரட்டிவைத்திருப்பவர்கள்….

’கமான், கமான் கரவொலி எழுப்புங்க’ ளென்று

குதிரைப்பந்தயக் கூப்பாடாய்

முழக்கமிட்ட தொகுப்பாளினியைப்

பார்த்து அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை.

நல்லவேளை, பதிவுசெய்த கரவொலிக் குறுந்தகடைப்

பயன்படுத்தவில்லை!

4.

காலம் சாட்சியாக அமர்ந்துகொண்டிருக்கிறேன்.

என் வாழ்வின் பரிமாணங்கள்

அல்லது பரிணாமங்கள்

அரங்கில் பார்வையாளர்களாய்.

அடையாளங்கண்ட என் கண்கள்

கையசைத்த நேரம்

மனதிலோர் மடைதிறந்துகொள்கிறது!

5

விடைபெறும் நேரம்…

’அன்பை மட்டுமே பேசப் புகுந்தேன்.

அன்பால் மட்டுமே வாழ்ந்திருந்தேன்.

அன்பையே பொதிந்து தந்தேன்

என் அத்தனை வரிகளிலும்.

அறிவின் துணையோடு முன்னேறினேன்

என்றென்றும்

உண்மையுரைத்தேனல்லாமல்

புண்படுத்த எண்ணியதேயில்லை….’

 

இன்னும் என்னென்னவோ சொன்னேன் –

இரண்டே வார்த்தைகளில்:

 

நன்றி. வணக்கம்.

 

v

[* சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தேறிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80வது பிறந்தநாள் விழாவுக்குப் போயிருந்தேன். அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதை இது ]

 

 

Series Navigation
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *