மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

This entry is part 22 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

மாலையாகிவிட்டது. வானம் மேகமூட்டமாக இருந்தது. பெரும் மழை வரப்போவதற்கு அறிகுறியாக காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் இடி முழக்கமும், அவ்வப்பொழுது மின்னல் வெளிச்சமும் மழையின் வருகையை பறைச்சாற்றிக் கொண்டிருந்தன.

அந்த தெருவிலேயே மிகப் புதுமையாக, கலைத்திறனுடன் விளங்கிய கட்டிடம் மிதிலாவிலாஸ்! அதன் மாடியில் படுக்கையறையில் மேஜையின் அருகில் நின்றபடி இளம் பெண்ணொருத்தி போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு சற்றுத் தொலைவில் வாசற்படியருகில் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருந்த திரைச்சீலையை கையால் ஒதுக்கிப் பிடித்தபடி அந்த வீட்டு வேலைக்காரி ராஜம்மா யஜமானி போனை வைத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பப் போகும் நிமிடத்திற்காக பொறுமையுடன் காத்திருந்தாள். இதோடு ராஜம்மா இங்கே வருவது இது நான்காவது தடவை. கீழே டிராயிங் ரூமில் ஒருத்தர் யஜமானிக்காகக் காத்திருப்பதை தெரிவிக்க வேண்டும். மேஜை அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்ணின் ஒற்றைக் கல் வைர மூக்குத்தி பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. அவள் அக்கம் பக்கத்தில் எதையும் கவனிக்காததுபோல் போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் குரல் அவளைப் போலவே நளினமாக இருந்தது.

“மிசெஸ் மாதுர்! நீங்க அவசரப்பட்டு ஆவேசமாக நடந்துக் கொள்ளாதீங்க. மகளுடன் சண்டை போடாதீங்க. அவளுடைய காதல் விவகாரம் உங்களுக்குத் தெரியாதது போலவே இருங்கள். ……. தெரியும். உங்களுடைய வேதனை எனக்குப் புரிகிறது. ஆமாம்… நிஷாவின் தந்தை வயது ஒற்றவன் என்று சொன்னீங்க. ஆமாம். முகுந்த் வீட்டு பார்ட்டியில் உங்களுடைய குடும்ப நண்பர் என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தீங்க. எனக்கு நினைவு இருக்கிறது. நோ.. மிசெஸ் மாதுர்! நீங்க இப்படி தளர்ந்து போகாதீங்க. ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர் செல்ஃப். உங்களால் இந்தப் பிரச்சினையை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.”

அவள் குரல் மேலும் நயமாக ஒலித்தது. “மிசெஸ் மாதுர்! இந்த உலகில் இரண்டு நபர்களுக்கு இடையே காதல் எப்போ, எதற்காக மலரும் என்று சொல்லவே முடியாது…. அடடா! கொன்று விடுவேன் என்று உங்கள் கணவர் மகளை மிரட்டி இருக்கக் கூடாது. நானும் அபிஜித்தும் இன்று இரவு கட்டாயம் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். நீங்க பதற்றமடைந்து மகளை கோபித்துக் கொள்ளாதீங்க. நோ மிசெஸ் மாதுர்! குடும்ப கௌரவத்தை விட உங்களுக்கு உங்கள் மகள் நிஷா முக்கியம். நானும் நிஷாவுடன் பேசுகிறேன்.”

ராஜம்மா திரைச்சீலையை விட்டுவிட்டாள். யஜமானியம்மாள் .சிநேகிதியுடன் ஏதோ குடும்பப் பிரச்சினையை அந்தரங்கமாக பேசிக் கொண்டு இருக்கிறாள். இந்த உரையாடல் இப்போது முடியப் போவதாகத் தெரியவில்லை. அந்த வீட்டில் வேலைக்காரர்களுக்கு யஜமானியிடம் எப்போது பேச வேண்டும் எப்போது பேசக்கூடாது என்று நன்றாகத் தெரியும் இந்த ஒழுக்கம் தவறினால் வீட்டை விட்டு வெளியே போக வேண்டியதுதான். வேண்டுகோள் விடுப்பது, மன்னிப்புக் கேட்டுக்கொள்வது எதுவும் சாத்தியம் இல்லை. இனியும் காத்திருப்பதில் பிரயோஜனம் இல்லை என்பது போல் ராஜம்மா பின்னால் திரும்பி கீழே இறங்கி வந்தாள்.

அங்கே எளிமையாக, அதே சமயத்தில் கலை ரசனையுடன் அமைந்திருந்த விசாலமான டிராயிங் ரூமில், ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் மழை வரப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். நிசப்தமாக, நிச்சலனமாக இருந்த அவனை திடீரென்று பார்க்கும் போது, அந்த டிராயிங் ரூமில் சோபாக்கள், பூந்தொட்டிகள், பீரோக்களுக்கு இணையாக அலங்காரமாக நிறுத்து வைக்கப்பட்ட சிற்பம் போல் தென்பட்டான்.

ராஜம்மா மடியில் சொருகியிருந்த சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை எடுத்து வாயில் போட்டு மென்றுகொண்டே “இதோ பார் தம்பி! அம்மா போன் பேசிக் கொண்டு இருக்காங்க. இப்போதைக்கு அந்தப் பேச்சு முடியாது போல் இருக்கு” என்றாள் கணீரென்ற குரலில்.

அவன் இயற்கையின் அழகை ரசிப்பதை விட முடியாதது போல் மெதுவாக தலையைத் திருப்பி ராஜம்மாவின் பக்கம் பார்த்தான். அவன் வயது பதினெட்டு இருபதுக்கு நடுவில் இருக்கலாம். அவன் உடலில் இளமை இப்போதுதான் தன் ஆளுமையை நிலைநாட்டத் தொடங்கியிருந்தது. களையான முகம். செதுக்கியது போல் இருந்த உதடுகளை விட சுறுசுறுப்பாக இருந்த அவன் கண்கள்தான் வசீகரமாக இருந்தன. உயரமாக இருந்ததால் வயதுக்கு மீறிய கம்பீரம் தென்பட்டது. முகத்தில் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. அந்த வயது பையன்கள் நினைப்பது போல் “இந்த உலகம் இயங்குவதே எனக்காகத்தான். யாரையும் லட்சயப்படுத்த வேண்டியதில்லை” என்பது போல் அவன் தோற்றம் இல்லை. உலகத்தைப் புரிந்துகொண்டவன் போல், இந்த உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்று தெரிந்தவன் போல் காட்சி தந்தான். ராஜம்மாமாவை நேராகப் பார்த்தான்.

ராஜம்மா மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு “நீ இன்னும் அரை மணி நேரமாவது காத்த்திருக்கணும் போலிருக்கு” என்றாள்.

அவன் பதில் சொல்லவில்லை. சுவர் கடியாரத்தைப் பார்த்தான்.

ராஜம்மா வெற்றிலையை மென்றுகொண்டே “உட்கார் தம்பீ! எவ்வளவு நேரம்தான் அப்படி நின்றுகொண்டு இருப்பாய்? நீ வந்ததுமே உன்னை உட்காரச் சொல்லிச் சொன்னேன் இல்லையா? வந்தவர்களை உட்காரச் சொல்லவில்லை என்றால் அய்யாவுக்குக் கோபம் வரும். நீ நின்று கொண்டிருந்ததை அய்யா பார்த்துவிட்டால் என் வேலை போய் விடும்” என்றாள். அவன் கால்வலியைவிட தன்னுடைய வேலை பத்திரமாக இருக்கணும் என்ற தவிப்பு அந்தக் குரலில் வெளிப்பட்டது. இந்த வீட்டு யஜமானர்கள் தங்களுடைய வேலை தாமதம் ஆனாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் விருந்தாளிகளை உபசரிப்பதில் கொஞ்சம் குறை ஏற்பட்டாலும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

அவன் மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பினான். காற்றின் வேகம் மேலும் அதிகரித்திருந்தது. திரும்பவும் மணியைப் பார்த்துக்கொண்டான். கையில் இருந்த ஃபைலை டீபாய் மீது வைத்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

“தம்பீ! புறப்பட்டுவிட்டாயா?” ராஜம்மா கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. நிற்கவும் இல்லை.

“தம்பீ! உன்ன பெயரையாவது சொல்லு.” ராஜம்மா எழுந்துகொண்டு தன் பாரித்த உடலை தூக்கிகொண்டு வாசலுக்கு வருவதற்குள் அவன் கேட்டைத் தாண்டி விட்டான்.

“அய்யோ ராமா! பெயரையாவது சொல்லாமல் போய் விட்டானே?” என்று புலம்பியபடி உள்ளே திரும்பி வந்தாள். டீபாய் மீது கிடந்த பைலை பார்த்துவிட்டு “இங்கே வைத்துவிட்டு போனால் முடிந்து விட்டதாமா? அம்மாவிடம் கொடு என்று சொல்ல வேண்டாமா? வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் என்று பயம் போலும்” என்று முணுமுணுத்தபடி பைலை எடுத்துக் கொண்டாள். அவள் மாடிக்குப் போன போது யஜமானி அம்மாள் மேஜையின் முன்னால் அமர்ந்துகொண்டு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள்.

“யாரோ பையன் ஒருவன் உங்களுக்காக வந்து அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு போனான்” என்று சொல்லிக் கொண்டே பைலை எடுத்து மேஜைமீது வைத்தாள்.

“யாராம்?” கடிதம் எழுதுவதில் மூழ்கியிருந்த அவள் பைல் பக்கம் பார்க்கவில்லை.

“யாரோ தெரியாது. பெயர்கூட சொல்லவில்லை.”

“சரி ராஜம்மா” என்றாள் அவள்.

ராஜம்மா போகப் போனவள் நின்றுவிட்டாள். “அம்மா! டீ எடுத்துக்கொண்டு வரட்டுமா?”

“எடுத்துக் கொண்டு வா.”

ராஜம்மா ஓசைப்படுத்தாமல் அங்கிருந்து போய்விட்டாள்.

அதற்குள் போன் ஒலித்தது. அவள் வலது கையால் எழுதிக் கொண்டே இடது கையால் போனை எடுத்தாள். “மைதிலி ஸ்பீக்கிங்” என்றாள்.

“மைதிலி!” மறுமுனையிலிருந்து மிருது கம்பீரமான குரல் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டதுமே அவள் முகத்தில் ஒருவிதமான ஒளி பரவியது. வலது கையிலிருந்த பேனா தன்னறியாமல் கீழே நழுவியது. “ஊம்” என்றாள் பின்னால் சாய்ந்துகொண்டே.

“என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”

“அப்பாவுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

“நான் அனுப்பி வைத்த பையனைப் பார்த்தாயா? பேசினாயா? அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“பையனா? யாரு?”

“போனில் சொல்லியிருந்தேனே? அவனிடம் பைலை கொடுத்து அனுப்பினேன்.”

“அந்தப் பையனா? அவன் என்னைச் சந்திக்கவே இல்லை. நான் மிசெஸ் மாதுரிடம் போனில் பேசிக் கொண்டிருந்த போது வந்திருக்கிறான் போலும். போய் விட்டான். மிசெஸ் மாதுர் தன் மகள் நிஷாவப் பற்றி ரொம்ப கவலையில் இருக்கிறாள். தந்தை ஒத்த வயது இருப்பவனைக் கல்யாணம் செய்து கொள்வதாக அடம் பிடிக்கிறாள்.”

“மைதிலி! நான் உன்னை அந்தப் பையனை பார்க்கச் சொல்லி இருந்தேன்.”

“சாரி.”

“மைதிலி! இந்த விஷயத்தில் நீ எனக்கு ஏமாற்றம் அளித்துவிட்டாய்.”

‘சாரிதான் சொல்லி விட்டேனே. அவன் அவ்வளவு சீக்கிரமாக கிளம்பிப் போய் விடுவான் என்று நினைக்கவில்லை.”

மறுமுனையில் மௌனம்தான் பதிலாக வந்தது.

“அபீ! ப்ளீஸ்!”

“ஓ.கே. விசிட்டர்ஸ் வந்திருக்கிறார்கள். அவர்களை உட்கார வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அப்புறமாகப் பேசுகிறேன்.”

“கொஞ்சம் முன்னாடியே வருகிறாயா? மிசெஸ் மாதுர் வீட்டுக்குப் போகணும்.”

“மைதிலி! இன்று மாலை எனக்கு பனிஷ்மென்ட் தருகிறாயா?”

“அபீ! அவள் உன் கம்பெனி ப்ராடக்டுகளை பிரமோட் செய்கிற முக்கியமான நபர்களில் ஒருத்தி என்பதை மறந்து விடாதே.”

“ஓ.கே. ஓ.கே.” அவன் போனை வைத்துவிட்டான்.

போனை வைத்து விட்ட பிறகும் அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவள் மனதில் இனம் புரியாத திருப்தி பரவியிருந்தது.

ராஜம்மா டீயைக் கொண்டு வந்து அவள் எதிரில் வைத்தாள். “ராஜம்மா! வந்த பையனை உட்காரச் சொல்லிச் சொன்னாயா இல்லையா? அவ்வாறு ஏன் சீக்கிரமாக போக விட்டாய்?” கோப்பையை கையில் எடுத்துக் கொண்டே கேட்டாள்.

“அட ராமா! உட்காரச் சொல்லி ஒரு தடவை இல்லை பத்து தடவை சொன்னேன். அந்தப் பையன் உட்காரவே இல்லை. கொஞ்சம் கூட பொறுமை இல்லாதவன் போல் தென்பட்டான். அப்படியும் உங்களுக்காக நாலு தடவை மாடிக்கு வந்து பார்த்தேன். நீங்க போனில் பேசிக் கொண்டிருந்தீங்க” என்று நீட்டி முழக்கினாள்.

“சரி விடு’ என்றாள்.

ராஜம்மா போய் விட்டாள்.

மைதிலி டீ கோப்பையுடன் வராண்டாவுக்கு வந்தாள். காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. மரம், செடிகள் ஆடிக் கொண்டிருந்தன. அவ்வப்பொழுது ஓரிரண்டு தூறல் விழுந்து கொண்டிருந்தது. மைதிலியின் புடவைத் தலைப்பு காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. மைதிலி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். மனம் அமைதியாக இருந்தால்தான் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை ரசிக்க முடியும்.

அதற்குள் திடீரென்று மறுபடியும் போன் ஒலித்தது. அபியாகத்தான் இருக்க வேண்டும். மைதிலி இரண்டே எட்டில் போய் போனை எடுத்தாள். ”மைதிலி!” மறுமுனையில் அபிஜித் அழைத்தான்.

“நீயாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.” சொல்லும்போதே மைதிலியின் குரலில் சந்தோஷம் வெளிப்பட்டது.

அதைக் கேட்டது அவன் சிரித்தான். “போனை எடுத்துக் கொண்டு வராண்டாவுக்கு வா. சீக்கிரம் வரணும்.”

“என்ன விஷயம்?” பதற்றத்துடன் கேட்டாள்.

“வாயேன்.” அவன் குரல் பொறுமையின்றி ஒலித்தது.

மைதிலி சட்டென்று கார்ட்லெஸ் போனை எடுத்துக் கொண்டு வராண்டாவுக்கு வந்தாள். “வந்துவிட்டேன்” என்றாள்.

‘நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பால்கனி அருகில் சென்று எதிரே இருக்கும் பஸ் ஸ்டாண்ட் பக்கம் பார்.”

அவன் சொன்னதை அப்படியே செய்தாள். பால்கனி அருகில் சென்று பஸ் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தாள்.

“பார்த்தாயா?”

“பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“அங்கே என்ன தெரிகிறது?”

“காய்கறி வண்டி, பிச்சைக்காரன்.”

“இன்னும்?”

“பஸ்ஸுக்காக காத்திருக்கும் மக்கள்.”

“அவர்களிடமிருந்து சற்று விலகினாற்போல், சாதாரண பிரேம் மூக்குக்கண்ணாடி அணிந்தபடி ஒரு பையன் நிற்கிறான் பார்த்தாயா?’

மைதிலி பார்த்தாள். பதினெட்டு இருபது வயதுக்கு நடுவில் மதிக்கலாம். காற்றுக்கு அவனுடைய அடர்த்தியான கிராப் தலைமுடி அலை பாய்ந்து கொண்டிருந்தது. மெயின் ரோட்டுக்கு வரப்போகும் பஸ்ஸுக்காகக் காத்திருப்பது போல் அவன் அந்தப்பக்கம் திரும்பி நின்றிருந்தான். மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த அவன் முகம் பக்க வாட்டில் தென்பட்டுக் கொண்டிருந்தது. அதைத் தவிர மைதிலிக்கு அவனிடம் எந்த விதமான தனித்தன்மையும் தென்படவில்லை.

“சரியாக பார்த்தாயா?”

“பார்த்தேன். பக்கவாட்டில் முகத் தோற்றம் தெரிகிறது.”

“அவன்தான் சித்தார்த்.”

மைதிலி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“மைதிலி! இந்தப் பையன் விரைவிலேயே நம் விளம்பரப் பிரிவில் மிக உயர்ந்த பதவியை அடையப் போகிறான்.”

“அதில் எனக்கு சந்தேகமே இல்லை.”

“எப்படிச் சொல்கிறாய்? நீதான் அவனிடம் பேசவே இல்லையே?”

“கடந்த காலத்தில் நீ ஜோசியம் சொன்ன நபர்கள் எல்லோரும் நீ சொன்னதை விட ஒரு படி மேலாகவே உயர்ந்துவிட்டார்கள்.”

“இவன் அவர்கள் எல்லோரையும் மிஞ்சி விடுவான். ரொம்ப திறமைசாலி.”

“புரிகிறது. இல்லை என்றால் நான் பார்த்தாகணும் என்று இவ்வளவு பிடிவாதம் பிடித்திருக்க மாட்டாய்.”

“தாங்க காட்! நீ அவனைப் பார்க்கவில்லையே என்று ஏமாற்றமாக இருந்தது. அவனை அப்பாயின்ட் செய்வதாக ஆர்டர் டைப் செய்யச் சொல்கிறேன்.” அவன் பாதியிலேயே நிறுத்திவிட்டான்.

மைதிலி பஸ் ஸ்டாப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பஸ் வந்தது. ஏற்கனவே கூட்டமாக இருந்த பஸ் நின்றது. மக்கள் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். கீழே இருந்தவர்கள் எப்படியாவது பஸ்ஸில் ஏறி கம்பியைப் பிடிக்க வேண்டும் என்று அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ ஏறி கம்பியைப் பிடித்துக் கொண்டுவிட்டான். ஒரு கால் புட் போர்டின் மீது பதிந்திருந்தது. இன்னொரு காலும், கையும் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தன. காலில் இருந்த ஹவாய் செருப்பு கீழே விழுந்து விட்டது. பஸ் புறப்பட்டு விட்டது. ஹவாய் செருப்பின் அடிப்பாகம் தேய்ந்து ஓட்டையாக்கி விட்டிருந்தது. ஸ்ட்ராப்பில் போட்டிருந்த சேப்டி பின் கழண்டு விட்டது போல் இருந்தது.

“மைதிலி!” அபிஜித் அழைத்தான்.

“ஊம்.”

“அவனுடைய நிலைமையைப் பார்த்தாய் இல்லையா? ஹி நீட்ஸ் மனி. ஐ நீட் டாலென்ட்! எங்கள் இருவருக்கும் பரஸ்பர தேவை இருக்கு. அவனுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மீது கையெழுத்துப் போடுகிறேன் டியர். வைத்து விடட்டுமா? ஓ.கே.”

“மாலையில் சீக்கிரமாக வந்துவிடுவாய் இல்லையா?”

“வேறு வழி இல்லையே? மிசெஸ் மாதுர் என்னுடைய ப்ராடக்ட் சீப் பிரமோடர் இல்லையா?” சிரித்துக் கொண்டே போனை வைத்து விட்டான்.

மழையின் வேகம் அதிகரித்தது. மைதிலி வராண்டாவுக்கு வந்தாள். அவர்களுடைய வீட்டு கேட்டிற்கு சற்று வலது புறத்தில் நேர் எதிரில் ஆறு மாடி கட்டிடம் இருந்தது. அதன் மேல் பாகத்தில் “மைதிலி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற எழுத்துக்கள் இருந்தன. அதன் விளக்குகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இரவு நேரத்தில் பளிச்சென்று தெரியும். மைதிலி அந்த கட்டிடத்தை கண்குளிர பார்த்தாள். எட்டு வருடங்களுக்கு முன்னால் ஆபீசுக்காக இந்த பில்டிங்கை கட்டிய பிறகு அபிஜித்திற்கும், தனக்கும் எந்த நிமிடம் வேண்டுமானாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு இந்த இடம் முழுவதும் மேடும் பள்ளமுமாக புதற்காடு போல் இருந்தது. அபிஜித் அதை வாங்கி பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்தான். அவனுடைய கூட்டாளிகள், நண்பர்கள் வாங்கிக் கொண்டதால் போஷ் ஏரியாவாக மாறிவிட்டது. பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் காலனியாக உருவாகியது. காலனி ஆரம்பிக்கும் இடத்தில் தெருவை ஒட்டி பஸ் ஸ்டாப்பும், அதன் பக்கத்தில் நாலைந்து சின்ன சின்ன கடைகளும் இருந்ததால் யாருமே அந்த பிளாட்டை வாங்குவதற்கு முன் வரவில்லை. அபிஜித் தானே அந்த இடத்தை ஆபீசுக்காக எடுத்துக் கொண்டான். வீட்டிற்கு எதிரே ஆபீஸ் கட்டிடமும், அதற்குள் மற்ற பிரிவுகளும் வந்து விட்டன.

மைதிலி எதிரே இருந்த ஆபீஸ் கட்டிடத்தைப் பார்த்தாள். இங்கே தான் நின்று கொண்டால், அந்த பக்கம் அபிஜித் ஆபீஸ் பால்கனிக்கு வந்தால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். முன்பு ஆபீசுக்கும் வீட்டிற்கும் இருபது கி.மி. தொலைவு இருந்தது.

மழையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது. எதிரே பார்க்கில் உள்ள குழந்தைகள் கத்தி கூச்சல் போட்டுக்கொண்டு மழையில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சிரிப்புச் சத்தம் காற்றில் அலையலையாய் மிதந்து வந்து கொண்டிருந்தது. மைதிலி ஒரு நிமிடம் உலகத்தையே மறந்தவள் போல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றின் வேகத்தில் மழையின் சாரல் தன்மீது விழுவதை கூட உணரவில்லை.

மழையில் ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள் வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் போல் காட்சி தந்தார்கள். அபிஜித்திற்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப விருப்பம். குழந்தைகளுக்காகவே இந்த பார்க்கை ஆர்கிடெக்ட் இன்ஜினியரை அருகில் வைத்துக் கொண்டு ரொம்ப அழகாக, வித விதமான விளையாட்டுகள் இருக்கும் விதமாக உருவாக்கினான்.

மைதிலியின் அடிமனதில் எங்கேயோ மறைந்திருந்த அமைதியின்மை புகைபோல் கிளம்பி மேலே வந்து கொண்டிருந்தது. அவளுடைய எண்ணங்களுக்கு இடையே புகுந்து பெருமூச்சாக வெளியேறியது.

தனக்கும் அபிஜித்திற்கும் திருமணமாகி பதினெட்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் குழந்தை இல்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த பிரஸ்தாபனையை அவன் என்றுமே தங்களுக்கு இடையில் கொண்டு வந்தது இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை இருவரும் உணர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். இந்த துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தார்கள். ஆனால் மருத்துவ சாஸ்திரம் தங்களிடம் கருணை காட்டவில்லை. விதியை மௌனமாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று இருவருக்கும் புரிந்துவிட்டது. சில விஷயங்களில் கொடுப்பினை இருக்காது. அவ்வளவுதான். வாழ்க்கைத் துணைக்கு மிகவும் பிரியமான, அபூர்வமான சந்தோஷத்தை நம்மால் தர முடியவில்லையே என்ற வருத்தம் இருவருக்கும் இருந்தது. எவ்வளவுதான் ஒதுக்கித் தள்ளணும் என்று நினைத்தாலும் மைதிலியின் மனதில் சில சமயம் இந்த வருத்தம் அலையாய் பொங்கி எழும்.

இந்த ஒரு வருத்தத்தை மட்டும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமல் அவரவர் மனதிலேயே புழுங்கிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஐந்து வருடங்களாக அபிஜித் வியாபாரத்தை மேலும் அதிகப்படுத்தியதால் வேலை மும்முரத்தில் மூழ்கிவிட்டான். அவன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது போல் லாபங்கள் வந்து குவியத் தொடங்கின. இத்தனை பிசியாக இருந்த போதிலும் அவன் மைதிலியை விடுமுறை நாட்களில் எங்கேயாவது அழைத்துப் போவது வழக்கமாக வைத்துக் கொண்டான். எப்போதும் சந்தோஷமாக, சிரித்தபடி இருப்பது அவன் சுபாவம்.

ஓய்வாக இருப்பதை விரும்பாமல், சந்தடியாய் இருக்கும் இடத்தைத் தேடித் போகும் போது மனைவியையும் கூட அழைத்துப் போய்க் கொண்டிருந்தான். தனக்கு அதிர்ஷ்டத்தை, அன்பை, சகல வசதிகளை தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்த அபிஜித்தின் உண்மையான சந்தோஷம் எது என்று தெரிந்தும் கூட அதை கொடுக்க முடியாத தன்னுடைய இயலாமையை நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.

கடந்த மூன்று வருடங்களாக பேக்டரி ஆனிவர்சரி அன்று கருணை இல்லத்துக்குச் சென்று அங்கே இருக்கும் அநாதை குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு உடைக்கும், உணவுக்கும், மருந்துக்கும், விளையாட்டு பொருட்களுக்கும் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து வருகிறான். அந்த செக்கை அவள் கையால் கொடுக்க வைப்பான்.

பேக்டரி ஆனிவர்சரி நாளும் தங்களுடைய திருமண நாளும் ஒன்றாக இருப்பது முதலில் தனக்கு சந்தோஷமாக இருந்து வந்தது. ஆனால் போகப் போக வேதனை சூழ்ந்துக் கொள்ளத் தொடங்கியது. அபிஜித்துக்கு அந்த சந்தோஷத்தை தர வேண்டியது தன்னுடைய கடமை. தன்னால் அது முடியாமல் போகிறது. எத்தனையோ முறை அவள் இதைப் பற்றிய பேச்சை எடுக்க முயன்ற போது அபிஜித் உடனே, “மைதிலி! நம் தொழிலாளர்கள் நூற்றி ஐம்பது குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் நமக்கு சொந்தம் இல்லையா? கருணை இல்லத்தில் இருக்கும் சிறுவர், சிறுமியர் நம்முடைய குடும்பம் இல்லையா? நமக்கு என்று தனியாக வேண்டுமா சொல்லு. மனதை விசாலமாக வைத்துக் கொண்டால் இந்த உலகத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லோரும் நம்முடையவர்கள்தாம்” என்பான்.

மைதிலி அவன் கண்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் வேதனையைத் தேடுவாள். ஆனால் அவன் கண்களில் உண்மையிலேயே அப்படி எதுவும் இருக்காது. களங்கமற்ற மனதிற்கு, திருப்தியான வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக அவை இருக்கும்.

“உனக்கு இன்னும் இதைப் பற்றிய எண்ணம் இருக்கிறது என்றால் அது என்னுடைய தவறுதான். நான்தான் கொஞ்சம் பிசினெஸ் விவகாரங்களை குறைத்துக் கொண்டு கொஞ்ச நேரமாவது உன்னுடன் கழிக்கணும்” என்றான்.

“வேண்டாம் வேண்டாம்.” மைதிலிதான் அவனைத் தடுத்துவிட்டாள். அவன் பிசியாக இருந்தால் இந்த வெறுமை நினைவுக்கு வராது என்று அவள் நம்பினாள். அதனால் மைதிலி தொழிலாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களது நலனை விசாரித்து தெரிந்து கொண்டாள். அவர்களைக் கொண்டு கோ ஆபரேடிவ் சொசைடி திறக்கச் செய்தாள். அதன் மூலமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாள். மாதர் சங்கத்து தலைவியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒரு நிமிடம் கூட ஒய்வு இல்லாத படி வாழ்க்கையை மாற்றிக் கொண்டாள்.

“அம்மா! அய்யா வந்துவிட்டார்.” ராஜம்மா வந்து சொன்னாள்.

மைதிலி எண்ணங்களிலிருந்து மீண்டவளாக திரும்பிப் பார்த்தாள்.

ஏற்கனவே அபிஜித்தின் குரல் மாடி படியில் கேட்டுக்கொண்டிருந்தது. “மைதிலி!” அழைத்துக் கொண்டே வந்தான்.

“ஊம்!” எதிரே வந்தாள்.

“மைதிலி!” ஏதோ சொல்லப்போனவன் நின்றுவிட்டான். “மழையில் நனைந்தாயா?”

“இல்லை இல்லை. சும்மா இரண்டு தூறல் போட்டது” என்று படுக்கை அறைக்குள் போகப் போனபோது அவன் கை அவள் தோளில் பதிந்தது.

“புடவையை மாற்றிக் கொண்டு சீக்கிரமாக வந்து விடுகிறேன்” என்றாள்.

ஏற்கனவே அவன் அவள் தோளைப் பற்றி தன் பக்கம் இழுத்துக் கொண்டான். தூறலில் நனைந்ததில் ஓரிரண்டு கேசக்குழல்கள் நெற்றில் ஒட்டிக் கொண்டிருந்தன. அன்று மலர்ந்த பூ போன்ற முகம். அந்தக் கண்களில் இருந்த கருநிழல்கள் அவன் பார்வைக்கு எங்கே பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து மாயமாய் மறைந்து விட்டன. மைதிலியின் இதழ்களில் அழகான முறுவல் மலர்ந்தது.

அபிஜித் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாக மனைவியின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு படுக்கை அறைக்கு அழைத்து வந்தான். மைதிலி நகரப் போனபோது தோளில் கையைப் பதித்து நாற்காலியில் உட்கார வைத்தான். தானே போய் டவலை எடுத்து வந்து அவள் முகத்தை ஒற்றினான்.

“என்னை சீக்கிரமாக வரச் சொல்லிவிட்டு நீ அந்த விஷயத்தையே மறந்து போய் விட்டாய் என்றால்..” தாழ்ந்த குரலில் சொன்னான்.

“மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

‘மழையில் நனைந்து கொண்டிருந்தாய். இருந்தாலும் அந்த கவனம் இல்லை. உனக்கு எந்த விஷயத்தில் சுயநினைவு மறந்து விடுமோ எனக்கு தெரியும்.”

மைதிலி மௌனமாக இருந்து விட்டாள்.

பார்க்கில் குழந்தைகள் விளையாடும் சத்தம் அறைவரையிலும் கேட்டுக் கொண்டிருந்தது.

அபிஜித் மனைவியின் மோவாயைப் பற்றி மென்மையாக உயர்த்தினான். “மைதிலி! உனக்கு நான் போதவில்லையா? இன்னும் யாரோ வேண்டுமா?”

வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தாள்.

“நமக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் தவறு என்னுடையது தான் என்று தோன்றுகிறது. குழந்தைகள் பிறந்த பிறகு மனைவியர் மாறிவிடுவார்கள். கணவன் மீது இருக்கும் அன்பு குறைந்து விடும் என்று சுரேஷ் எப்போதும் புலம்பிக் கொண்டிருந்தான். நமக்கு கல்யாணம் ஆன புதிதில் நான் ரொம்ப பயந்து கொண்டிருந்தேன். மைதிலி! கடவுளுக்கும் என்னுடைய பயம் புரிந்து விட்டது போலும். உன்னிடம் இருக்கும் அன்பை என்னால் யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. அதான் கடவுள் இந்த விதமாக முடிவு செய்திருக்கிறார்.”

மைதிலியின் கை மெதுவாக உயர்ந்தது. அவன் தலை மீது படிந்தது. அடுத்த நிமிடம் அவன் முகம் அவள் முகத்திற்கு அருகில் வந்தது. பதில் அளிப்பது போல் அவன் நெற்றியில் அவள் இதழ்கள் பதிந்தன.

அந்த ஸ்பரிசம் அவனுக்கு இதமாக, மனதை ஊடுருவிக் கொண்டு போவது போல் இருந்தது. “தாங்க்யூ” என்றான்.

ராஜம்மா ட்ரேயில் காபி கோப்புகள், கெட்டில் கொண்டு வந்து வைத்தாள்.

அபிஜித் மனைவியை விட்டுவிட்டு கிராப்பை சரி செய்து கொண்டு கோட்டைக் கழற்றும் சாக்கில் தொலைவுக்கு நகர்ந்தான்.

ராஜம்மா போய்விட்டாள். அபிஜித் டையைக் கழற்றிக் கொண்டிருந்த போது மைதிலி காபி கோப்பையை எடுத்து வந்தாள். அவன் அந்த கோப்பையை பெற்றுக் கொண்டு, மனைவியின் தோளைச் சுற்றிலும் கையை போட்டு கட்டில் அருகில் அழைத்து வந்து உட்காரவைத்து அவள் உதட்டருகில் கோப்பையை வைத்தான்.

‘”நான் எடுத்து வருகிறேன்” என்று எழுந்துகொள்ளப் போனாள்.

“இரண்டு பேரும் இதை பகிர்ந்துகொள்வோம்.” அவன் குரல் நயமாக இருந்தது.

இருவரும் காபி குடித்தார்கள்.

“நாம் மிசெஸ் மாதுர் வீட்டுக்குப் போகணும்.” அவள் நினைவுப்படுத்தினாள்.

“நான் ரெடி” என்றான்.

“பத்து நிமிடங்களில் வந்து விடுகிறேன்” என்றாள்.

மைதிலி டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றாள். அபிஜித் ஜன்னல் அருகில் வந்து நின்று கொண்டான்.

Series Navigationதிருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]மரபு மரணம் மரபணு மாற்றம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *