அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 24 in the series 25 அக்டோபர் 2015

refugeesஒருவன் தன் தாய்நாட்டை இழப்பதைப்போல் துன்பம் வேறு எதுவும் இல்லை என்று கிரேக்க அறிஞர் யூரிப்டஸ் கி.மு.431 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். அக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணை இழப்பது அல்லது பிரிவது என்பது துயரங்களில் எல்லாம் கொடிய துயரமே. பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மரபுகளையும் நேசித்து அவற்றோடு ஒன்றாய்க் கலந்துவிட்ட மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல மிகப்பெரிய துயரத்தை தரக்கூடியதாகும்.
இவ்வாறான சோகமும் கொடுமைகளும் எந்தெந்த நாடுகளில் உருவாக்கப்படுகிறது. அல்லது உருவாகிறது என ஆய்வு மேற்கொண்டால் அனைத்தும் மூன்றாம் உலக ஏழை நாடுகளிலும் பெட்ரோல் வளமிக்க நாடுகளில் மட்டுமே. இவற்றின் உச்சகட்ட கொடுமைக்கு ஆளான கண்டங்களில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளே. அகதிகள் உருவாகக் காரணம் உள்நாட்டுப்போர்களும், சண்டைகளும் தான். எனினும் உள்நாட்டுப்போர்களும், இனப்படுகொலைகளும் நடக்கும் நாடுகள், வளர்ந்த நாடுகள் ஆதிக்கத்தில் இருந்தவையே. பங்காளதேசத்தில் தொடங்கி சிரியா வரை சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகள்.
அகதிகளை உருவாக்கும் சதியை சற்று ஆழமாக நோக்கினால் அதற்கு விடை புரியும். காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஐரோப்பிய அமெரிக்க நாட்டவர்களே. தங்களது ஆளுமையின் கீழ் இருந்த நாடுகளில் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி அங்கிருந்த மக்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்தனர். அவர்களின் மனதில் வெறுப்புணர்வை விதையை ஆழமாக தூவி விட்டு வெளியேறினார்கள். இந்த காலனியக்கத்தின் பிதாமகன்களாக அமெரிக்கா, போர்ச்சுகீசியர், பிரஞ்ச், பெல்ஜியம், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்களே. இவர்களின் துண்டாடும் நிகழ்ச்சிக்கு பலிகடா ஆனவர்கள் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் தீராப்பகை உண்டாவதற்கு காரணமானவர்கள்.
இவற்தைத்தவிர சில ஏழைநாடுகளிலும், வளமிக்க பெட்ரோல் பூமியிலும் அமெரிக்கா தலைமையில் இராணுவ ஆட்சியை நடத்தி, அந்த நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆயுதங்களை விற்பனை செய்து அதன்பின்னர் பாதுகாப்புத்தருகிறேன் என க் கூறி அங்குள்ள இயற்கை வளங்களை சுரண்டுவது அவர்களின் கைவந்த கலைகளில் ஒன்று.
1990 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஏறத்தாழ எழுபது இலட்சம் பேர் ஆய்விலும் வளர்ச்சிக்கான பணிகளிலும் வேலை செய்கின்றனர். இதில் சுமார் 15 லட்சம் பேர் ஆயுதப்படை தொடர்பான ஆராய்ச்சி என்பது வேதனையாக தகவல்.
இவை ஒருபுறமிருக்க சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைக்கழிக்கப்படும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் காலனி நாடுகளில் செயல்படுத்தும் பெரும் திட்டங்களுக்குப் பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் பலியாகி வருகின்றனர். ஏழைநாடுகளின் இடைத்தரகர்களாக செயல்படும் பிரதம மந்திரி, முதல்வர், ஆளுநர் ஆகியோர்களுக்கு ஒரு சில ரொட்டித்துண்டுகளை தூக்கி எறிந்துவிட்டு பெரிய பன்னாட்டு கம்பெனிகள் நிறுவுவதற்கு ஏழை மக்களை அரசு இயந்திரங்கள் அடித்து வெளியேற்றுகிறது. இவற்றைத்தவிர சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தங்க நாற்கரச்சாலைகள், ஆடம்பர பூங்காக்கள், விமானநிலையம், ஆறுகளை தூய்மைபடுத்தும் திட்டம், மெட்ரோ புகைவண்டித் திட்டம், ஷாப்பிங் மால்கள் , அணைகள், கனிம வளங்களுக்காகத் தோண்டப்படும் சுரங்கங்கள், ஆற்று மணலை அரசே ஏற்று நடத்துவது என அடுக்கிக்கொண்டே போகலாம். மேற்கூறிய திட்டங்களுக்கு அடித்துவிரட்டப்படுவது விவசாயிகள் மற்றும் ஏழைக்குடிசை வாசிகள் தான். இவ்வாறாக வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு முதலாளித்துவத்தின் கோரமுகம் நிற்பதற்கு கூட இடமும், ஒருவேளை உணவுக்கு இழப்பீடும் தரவில்லை என்பது யதார்த்த உண்மை. வளர்ச்சி என்பது தேவைகளில் ஒன்றுதான். ஆனால் இவ்வளர்ச்சி யாருக்கு போய்ச்சேருகிறது. அரசியல் வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே.
அகதி என்ற வார்த்த அஸ்தமாகவேண்டும் என்பதே அனைவரின் அறைகூவலாக இருக்கவேண்டும். இஸ்லாமியவாதி, ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி, புர்கா, 9ஃ11 பயங்கரவாதம், மாட்டிறைச்சி அரசியல் ஆகிய விமர்சனங்கள் பல்வேறு நாடுகளில் பலரை அகதிகளாக்கி கொண்டு வருகிறது. இவ்வார்த்தைக்குப்பின்னர் அகதி என்ற பயங்கரம் மறைந்து கொண்டுள்ளது. உலக அளவில் மத்திய கிழக்கிலுள்ள அகதிகளிலே 34 சதவீதம் சிரியா நாட்டைச்சேர்ந்தவர்கள். 12 சதவீதம் ஆப்கானிஸ்தான், 12 சதவீதம் எரித்திரியா நாட்டினரும், 12 சதவீதம் ஆப்கானியர்களும், 5 சதவீதம் சோமாலியர்களும், 5 சதவீதம் நைஜீரியர்களும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அலைகின்ற அகதிகளை மனிதாபிமானம் முறையில் துருக்கி, லெபனான், ஜோர்டான், ஈராக், எகிப்து, போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதே வேளையில்அகதிகளுக்கு முக்கிய காரணம். வல்லரசு நாடுகளின் ஆதிக்கம். பிறநாடுகளின் வளங்களைச் சுரண்டுதல், எண்ணெய் வளங்களைச் சுரண்டுதல், தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் பொம்பை அரசுகளை ஊக்குவித்தல், ஜனநாயக வாதிகள் வல்லரசுகளுக்கு ஆடமாட்டார்கள் என்பதால் அங்கு எதேச்சாரிகள், சர்வாதிகாரிகள், மன்னர்கள், இராணுவத்தினரை ஆட்சியில் அமர்த்த வல்லரசு நாடுகள் முழுக்கவனம் செலுத்துகின்றன. பின்னர் மன்னர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே நுழைந்து அங்குள்ள வளங்களைச் சரண்டுபவர். இந்த வல்லரசுகள் ஜனநாயகம் என்று ஓயலாமல் ஓலமிடுவார்கள். வல்லரசுகளின் சுகபோகமும், அரபு மன்னர்களின் சுகபோகமும் அகதிகள் பிரச்சினைக்கு முக்கிய காரணிகளாத் திகழ்கின்றன.
பசு ஆடை போர்த்திய பாசிசம்
பசு ஆடை போர்த்திய புலி என்ற பழமொழியை இனிமேல் பசு ஆடை போர்த்தி வரும் பாசிசம் என மாற்றம் செய்யவேண்டிய கால கட்டம். இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்ற ஆங்கியேரின் சட்டதிட்டனை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு மாறியுள்ளது பாசிசம். நாங்கள் மாட்டிறைச்சியை உண்பதில்லை. எனவே நீங்களும் உண்ணக்கூடாது என்ற சகிப்புத்தன்மையைற்ற போக்கு நிலவிவரும் காலச்சூழ்நிலையில் அது வளர்ந்து வளரந்து மாட்டிறைச்சி உண்பவர்களையும், அதை விற்பனை செய்பவர்களையும் கைது செய்வோம் என மத்தியில் ஆளும் அரசு ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளது. அப்படி யாராவது மாட்டிறைச்சி வைத்திருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்கூட அவர்களை அடித்துக்கொல்வோம் என வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்கு அதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் அளவுக்கு நிலைமை வலுவடைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21 ஆவது பிரிவு தனிமனித சுதந்திரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தாம் விரும்புகின்ற உணவை உண்பதும் இந்தச் சுதந்திரத்தில் அடங்கும். அப்படியானால் ஒருவரது உணவுப் பழக்கத்தை அரசால் முடிவு செய்ய இயலுமா? முயலும் என்கிறது மத்திய அரசு. ஜைனர்களின் பண்டிகையை முன்னிட்டு யாருமே இறைச்சி சாப்பிடக் கூடாது என்று தடை விதித்தும் விநாயக சதுர்த்தியின்போதும் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மாட்டிறைச்சி அரசியலால் ஒரு சில பகுதிகள் அகதிகளாக்கப்பட்டு வெளியேறி வருகிறார்கள்.
தமிழரும் அகதியும்
தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேறியுள்ளனர். இக்குடியேற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும், வணிக நோக்கம் கொண்டதாகவும் இருக்கும். முன்பு நிலவிய சமுதாயங்களில் எல்லாரும் ஓர் குலம் என்ற எண்ணம் நிலவியதால் தமிழர்களுக்குச் சிக்கல்கள் ஏதுமில்லை. அண்மைக்காலத்தில் மொழி அடிப்படையில் தேசியம் வேரூன்றியபோது பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
தமிழர்கள் குறித்துக் கட்டுரைகள் வெளிவரும் போது அவை உணர்ச்சியின் வடிவமாகத்தான் காணப்படுகின்றனவே தவிர உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற உள்ளுனர்வு கொண்டனவாக இல்லை. தமிழக மன்னர்கள் வெற்றிபெற்ற பூமியில் பண்டைக்காலத்தில் குடியேறிய தமிழர்களும் உண்டு. மன்னர்கள் அழைத்துச் சென்றவர்கள், கூலி வேலைக்குச் சென்றவர்கள் என்று பல நிலைகளிலும் தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழுமம் தமிழர்கள் அந்தந்த சூழலுக்கேற்ப வகையில் காணப்படுகின்றனர். சில நாடுகளில் எதிர்த்துப்போராடுகின்றனர். இவ்வகையில் இலங்கையில் அரசியல் அடிப்படையில் தனிநாடு கேட்டுப் போராடுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு மாநில உணர்வு மக்களிடையே அதிகரித்துவிட்டது. வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்களை வெளிநாட்டவர் போன்று கருதுகின்றனர். பல அரசியல் கட்சிகளும் இந்த உணர்வுகளுக்குத் தூபம் போட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன.
தேசிய இனத்தவர்களான கிரேக்கர்கள், போலந்துக்காரர்கள், யூதர்கள், அராபியர்கள், ஜெர்மானியர்கள், ஈரானியர்கள் ஆகியோரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சிறுபான்மை இனக்குழுக்களாக வாழ்ந்துவருவதைப்போல தமிழர்களும் சிறுபான்மை இனக்குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
மற்ற நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் மக்களுக்கும் சிறுபான்மையோராகக் காணப்படும் பல இனக்குழுவினருக்கும் பல வகையிலும் பிணக்குகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இனக்குழுக்கள் இத்தகைய சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றன.
இஸ்ரேலில் வாழும் அராபியர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்கள் என்று பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது அமெரிக்காவில் வாழும் நீக்ரோக்கள் அமெரிக்கர்களை விடவும் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுவதைப்போன்றதாகும்.
கேரளமும் தமிழகமும்
கேரளத்தில் பெரும்பான்மையோர் மலையாளிகளாகவும் சிறுபான்மையினர் தமிழர்களாகவும் வாழ்வதால் இவ்விரு பிரிவினர்களின் உறவு முறைiயில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிறுபான்மையினரைப்பற்றி லூயிஸ் விர்த் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். சிறுபான்மையர் என்பார் உடலியல் அல்லது பண்பாட்டு வேறுபாட்டின் காரணமாகப் பிறருடன் சரிசமமாக நடத்தப்படாமல் ஒதுக்கப்படும் குழுவினர் என்று கூறுகின்றார்.
கேரளத்தில் வாழும் மலையாளிகளுடன் தமிழர்கள் தொடர்பு கொள்ளும்போது பலவகையிலும் தாங்கள் மலையாளிகளுடன் ஒற்றுமை கொண்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். மலையாளிகளைப் போன்று உணவு, உடை, சமயச் சடங்குகள் முதலியவற்றை தமிழர்கள் பின்பற்றுகின்றனர். நெற்றியில் திருநீற்றுக்குரியை மலையாள முறையில் போட்டுக்கொள்கின்றரன். முடியலங்காரம், மொழி ஆகியவற்றிலும் தமிழர்கள் மலையாளப்பண்பாட்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர். கேரளத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் கேரளத்தின் பாரம்பரியமான சேலையையும் தங்கள் நெற்றியில் சந்தனத்தை பூசி வருவதும் மாற்றங்களில் ஒன்று.கேரளத்தில் வாழும் தமிழர்கள் சிலர் தங்கள் பண்பாட்டைத் துறந்து மலையாளப் பண்பாட்டிற்குத் தாவிவிட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தங்களுடைய தாய்மொழி மலையாளம் என கூறுகின்றனர். தமிழர்களுள் ஒரு சாதிப்பிரிவினர் சிறிது நாளில் கேரளத்திலிருந்தே மறைந்து மலையாளிகள் ஆகிவிடுவர். இதனை முழுத் தன்மயமாக்குதல் என்று கூறுகின்றோம்.
இவ்வாறாக அகதி என்ற மூன்றெழுத்தில் தங்களுடைய கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியம் என அனைத்தையும் துறக்கும் வேளையில் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக் கடிக்க வராண்டா என்ற பழமொழி தற்பொழுது உண்மைதான் என பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் குழந்தைக்கு கொடுக்க கூடிய தாய்ப்பாலுக்கும் விலைபேசும் முதலாளித்துவம் வெகுவிரைவில் நம்மை ஆட்டிப்படைக்கலாம். உலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் அகதிகள் ஆண்டாக கொண்டாடி உலகமயம், தாரளமயம், தனியார்மயம், தன்மயமாக்கத்தை சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்போம். வாழ்க கோக், வாழ்க பெப்சி, வாழ்க அகுவாபினா, வாழ்க் பிட்சா, வாழ்க செல்போன், வாழ்க் பேஸ்புக், வாழ்க ட்விட்டர். அடுத்த காலனி ஆதிக்கத்திற்கு அறைகூவல் விடும் விதமாக அகதிகள் ஆண்டாக அனைவரும் அந்நிய கலாச்சாரத்தில் கேக் வெட்டி கொண்டாடி வரவேற்போம்.
வைகை அனிஷ்

Series Navigationகவிதைகள் – நித்ய சைதன்யாஅவன், அவள். அது…! -7
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    இதன் மூலம் தாங்கள் சொல்ல வரும் கருது என்னவோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *